“தங்க வேலாயுதபுரம்” – “அங்குதான் காணி வாங்கி இருக்கின்றேன். காட்டு தொங்கல். யானைகள் அலைந்து திரியும் காட்டு தொங்கல்”.

கிட்டத்தட்ட ஐந்து வருட காலத்தின் பின் இவனுடன் மீண்டும் பயணிக்கின்றேன்.

இந்த நான்கைந்து வருடங்களில் இவனில் எவ்வித மாற்றத்தையும் கண்டேனில்லை. அண்மையில் கூட முல்லை நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்று கண்ணீர் வடித்து விட்டு வந்திருந்தான்: “இடத்தை விட்டு வெளியே வரவே மிகுந்த கஷ்டப்பட்டு போனேன். இரண்டு மணி நேரம் குடும்பத்தாருடன் ஆட்டோவில்… அவ்வளவு சனம் அப்பிப்போய் இருந்தது”. கேட்டிருந்தேன்: “மற்ற நினைவேந்தல் தினங்களுக்கு நீங்கள் செல்வதில்லையா?

“இல்லை. மாவீரர் நாள்தான் என்னை உலுக்கி பிடிக்கும் தினம். எனது அருமை தோழர்கள் - இதயத்தை வருடும் எனது நண்பர்கள் - தங்கள் இன் உயிரை வந்த இந்த பெருநாள் - அடடா எப்படிப்பட்ட தோழர்கள்! எப்படிப்பட்ட வாழ்க்கை அது…”.

ஆனால் ‘காணிக்குச் சென்று வருவோமா’ என்பதே அவனது முதல் கோரிக்கையானது. ஒருவேளை தான் மிக அண்மையில் வாங்கி போட்டிருந்த அந்தக் காணியை எனக்குக் காட்ட அவன் ஆசைப்பட்டிருக்க கூடும் - அல்லது அவனுக்கே அங்கே செல்ல வேண்டிய ஒரு தேவையும் எழுந்திருக்கலாம். இருந்தும் இவை அனைத்தும் நான் சம்பந்தப்படாதது. ஆனால் உடனடியாக ஒப்புக் கொண்டேன். ‘காட்டு தொங்கல்’ என்ற பதத்தால் நான் பெரிதும் கவரப்பட்டேன்.

‘கடல் குளிப்பு’ என்று ஏற்கனவே நிச்சயித்திருந்த அன்றைய தினத்தை மாற்றி இவனுடன் புறப்பட்டேன்.

திருக்கோயில் மரத்தடியில் முகத்துவார இறாலை அரைக் கிலோ கொள்வனவு செய்தான். பின்னர் ஒரு பெரிய மரத்தடியில் ஆட்டோவைக் கொண்டு போய் நிறுத்தினான். அது ஆலமரம்தான். விசாலித்து கிளைகள் பரப்பி மதர்த்து நின்றது. கீழே அருமையான நிழல். வசதியாக ஓர் துண்டை பாயை போல் விரித்து மென் தூசி போல் இருந்த இந்த மண் தரையில் அமர்ந்து தனது உணவு பொட்டலத்தை பிரிக்க தொடங்கினான். “நீங்கள்?” எனக்கென கையோடு வாங்கி வந்திருந்த மரக்கறி ரொட்டிகளை நினைவு படுத்தினான்.

இதுவும் ஒரு காட்டுப் பிரதேசம்தான். ஆனால் இங்கே மரங்கள் அடர்த்தியாக இருக்கவில்லை. ஏதோ அங்கொன்று இங்கொன்றாய் இரண்டொரு பனைமரங்கள். பாலைவன சாயல் எங்கும் ஓடிக் கொண்டிருந்தது. புதர்கள் - ஆளுயரத்துக்கு. பெரிய பெரிய கற்கள் வேறு. தூரத்தே தொலைவில் ஓர் ஏரியும் அதனை அடைய மைதானம் போன்று அமைந்து கிடந்த இந்த வெளியைக் கடந்தாக வேண்டும்.

இதுவும் யானைகள் கண்டபடி அலைந்து திரியும் பிரதேசம்தான். சாணம் போட்டிருந்தது. ஆங்காங்கே. இந்நேரம் வந்தாலும் வரக் கூடும்.

குறுக்கலும் பள்ளமும் நிறைந்த மண்பாதை – சில இடங்களில் ஆட்டோ கஷ்டப்பட்டே மேலே ஏறியது. மூன்றடி பாதை அது.

அச்சிறிய கிராமத்தை நெருங்கி கொண்டிருந்தோம். திடீரென எம் முன்னால் ரூபவ் பாதையை முழுதுமாய் மறித்தாற் போல் ஓர் ஆட்டு கூட்டம். ஒதுங்க முடியாது. தாண்டவும் முடியாது. அப்படி ஆடுகள். ஒரு நாற்பது ஐம்பது இருக்கும். கூட்டம் கூட்டமாய் முழு பாதையையும் மறைத்தாற்போல் திமு திமுவென்று துள்ளலும் ஓட்டமுமாய் எம்முன்னால் ஓடிக் கொண்டிருந்தன.

அவற்றை நடத்திக் கொண்டிருந்த ஓர் ஆட்டிடையன் ஒரு இளைஞன். ஓர் கட்டை காற்சட்டையையும் கையில் தடியுடனும் முதுகில் பையுடனும் எங்களை ஓரமாக தாண்டும்படி நட்புடன் எங்களுக்கு சைகை செய்தான்.

ஓரமாவது, மண்ணாவது. ஆட்டுக் கூட்டம் தான் அப்படி அப்பி போய் பாதை முழுவதும் இறுக அடைத்தவாறு ஓடிக் கொண்டிருந்ததே. நான்கு கடா ஆடுகள் வேறு கூட்டத்தின் நடுவே தமது முடிகளை சிலுப்பி திமிறியப்படி ஓடிக்கொண்டிருந்தன. அவை ஏனையவற்றை விட உயரமாயும் பிடறி மயிரை அடிக்கொருதரம் சிலுப்பி சிலுப்பிக் கொண்டும் ஓடுபவனவாக இருந்தன.

இவன் வேகத்தை குறைத்து ஆட்டோவை மெதுவாக அந்த ஆடுகளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவற்றின் பின்னால் மெதுவாக சென்றான். தாண்டும் எண்ணமே இவனுக்கில்லை என்பது புரிந்தது. ‘கவலைப்படாதே நண்பா. நாங்கள் பின்னாலேயே வருவோம்’ என்று ஆட்டு இடையனை நோக்கி இவன் சத்தம் வைத்தான்.

ஒரு புள்ளியில் வைத்து அந்த ஆடுகள் தம்பாட்டில் திரும்பி வல புறமாய் பிரிந்த ஓர் பாதையில் கும்பலாய் பாய்ந்து ஓடத் தொடங்கின.

அதிசயமாக இருந்தது எனக்கு. யாருமே அவற்றை அப்படி பிரிந்து ஓடச் சொல்லவில்லை. இந்த இடையனோ ஆட்டுக் கூட்டத்தின் இறுதியில்தான் ஆடுகளின் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தான். அப்படி என்றால் அவற்றை வழிநடத்தியது யார்? ‘பழக்கம்தான்’ என்றான் என் ஆட்டோ நண்பன். ஆடுகள் சென்று முடிந்ததும் மேய்ப்பவன் எம்மிடம் நன்றி தெரிவித்து கையை மிகுந்த நட்புடன் ஆட்டினான். அவனது கண்களில் நட்பும் நேசமும் பொங்கி வழிந்தது. அடடா. அருமையான இளைஞன் இவன். ஆட்டோ நண்பன் கூறியபடி காட்டு தொங்கலிலேயே அவனது காணி அமைந்து கிடந்தது. பக்கத்து காணியில் அருமையாக வெண்டி நட்டிருந்தார்கள். அந்த காணியை ஒட்டியப்படி ஓடிய வேலியிலேயே இவனது காணியும் அமைந்து கிடந்தது.

செம்மண் - அப்படி கொழித்திருந்தது. அத்தோட்டத்தில் கத்தரி செடிகள் வெண்டி, சோளம் என வரிசை வரிசையாக பயிரிட்டிருந்தார்கள். இதற்கு ஏற்றாற்போல் அந்த காணிக்காரன் வெயிலுக்கு ஏற்ற ஒரு தொப்பியும் முழங்கால்வரை மடித்து விடப்பட்ட நீள கால்சராயும் டீ ஷேர்ட்டும் அணிந்து ஒரு கறுத்த தடித்த குழாயில் நீரை பாய்ச்சி அந்த பயிர்களுக்கு அடித்துக் கொண்டிருந்தான்.

நீர் தடித்த அந்த குழாயில் நிரம்ப நிரம்ப வேக வேகமாக நீர் வீழ்ச்சி போல பீய்ச்சி கொட்டி எம்மையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த வெயிலில் இவ்வளவு இதமான நீரா? காணிக்காரனின் உடல் முழுவதும் அப்படியே நனைந்து இருந்தது. இங்கு அடிக்கும் இந்த வெயிலுக்கு ஒருவேளை இது ஒரு வகை சந்தோசத்தை அவனுக்கு கொடுக்கக்கூடும். “அவர்கள் புது கிணறு தோண்டி உள்ளார்கள்”- இவன் விளக்கமளித்தான். இவனை கண்டவுடன் காணிக்காரன் வெளியேறும் நீரை பற்றி சிறிதும் கவலைபடாமல் குழாயை அப்படியே நிலத்தில் போட்டுவிட்டு யானைக்காக கட்டப்பட்டிருந்த அந்த மின்சார வேலியை தாண்டி இவனிடம் வந்தான். இருவரும் நட்புரிமையுடன் ஏதேதோ கதைப்பதில் ஈடுபட்டிருந்தனர். நான் வெறுமனே ஆட்டோவில் அமர்ந்திருந்தேன். வெளியே வெயில் சுத்த மோசம்.

வேலியில் இப்போது மின்சாரம் பாயவில்லையாம். இதனால்தான் பக்கத்து காணிக்காரன் இப்படி வேலியைப் பற்றி பிடித்தப்படி உயர்த்தி குனிந்து இந்த பக்கமாய் வந்தானானம். இருவரும் ஏதேதோ கதைத்தப்படி காணியை சுற்றி நடக்க தொடங்கி விட்டனர்.

காணி இரண்டொரு ஏக்கர்களில் பிரமாண்டமாய் விரிந்து கிடந்தது. புற்களையும் புதர்களையும் மரங்களையும் யந்திரம் கொண்டு வழித்து தள்ளி இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு பெரிய மைதானம் போன்று காணி இப்போது காட்சி அளித்தது. தண்ணீர் இருந்தால் நிச்சயம் பயிர்கள் இங்கேயும் செழித்து விளையவே விளையும். அப்படிப்பட்ட செம்மண். பக்கத்து காணிக்காரனிடம் தண்ணீர் பெற்று கொள்ளலாம். “ஆரம்பத்தில் அவனிடம் எடுக்கலாம். ஆனால் அதன் பிறகு எமக்கென நாம் ஓர் கிணறை தோண்டியாகத்தான் வேண்டும்” ஆட்டோகாரன் உறுதியாக என்னிடம் தெரிவித்தான்.

இவனுக்கு ஆட்டு கிடாய் ஒன்றையும் எழுப்பும் எண்ணம் உண்டாம். ஆனால் சிறுத்தைகள் தொல்லை பெரிதாய் இங்கே இருக்கும் போல என்றான்.

இருவரும் காணியை சுற்றி நடந்து வந்தப்பின் ஆட்டோகாரன் என்னிடம் தான் பொறுக்கிய விளாம்பழம் ஒன்றை நீட்டி பிடித்தான். பக்கத்துக் காணிக்காரன் கேட்டான்: “பாரம் இருக்கிறதா? யானை சாப்பிட்ட பின்னாலும் இப்படித்தான் முழுசாய் இருக்கும். ஆனால் அப்படி என்றால் ஒரு சிறிய ஓட்டை இருக்கும்”. பிறகு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய என்னை பார்த்து: “கவனம் காணி முழுவதும் காட்டுமுள்” என்றான்.

எனது பார்வை அவனது வெறுங்கால்களை நோக்கிப் பாய்வதை அவன் அவதானித்து விட்டு மேலும் கூறினான்: “வெறுங்கால்தான். ஆனால் எமக்கு இது பழக்கமாகி விட்டது” “மரக்கட்டைகளாகி விட்டன கால்கள்” – தன் காலைப் பார்த்து கொண்டான். அவை உண்மையில் மரக்கட்டைகள் போலவே இருந்தன – கறுப்பாய் தடித்து.

இது முடிய ஓர் சிறிய வீட்டை அடைந்தோம் - கோழி வாங்க. இங்கும் யானைக்காக மின்சாரத்தைப் பாய்ச்சி வேலிகளை நட்டிருந்தார்கள். வேலியில் குனிந்துதான் செல்ல வேண்டியிருந்தது. இங்கும் இப்போது மின்சாரம் பாயவில்லையாம். பொழுது சாய்ந்தவுடன் மின்சாரம் பாய்ச்சத் தொடங்கி விடுவார்களாம்.

சிறு தோப்பு போன்ற வீடு அது.

நாற்பது கோழிகள். ஆடுகள். பின் வீட்டருகே சடைத்து விசாலித்திருந்த பிரமாண்டமான ஒரு மரம். அதனடியில் ஒரு பசு மாட்டையும் இழுத்துக் கட்டி இருந்தார்கள். ஒரு சோளக் கட்டையும் அது திண்பதற்காக அதனிடம் போட்டிருந்தார்கள். வாட்ட சாட்டமான கொழுத்த மாடு அது.

மெதுவாய், சோள கட்டைக் கடித்து தின்று அசை போட்டுக் கொண்டு நின்றது அது. வீட்க்ச் சுற்றி கோழிகளின் பட்டாளம். கோழிகளை வீட்டுக்காரன் கூவி அழைத்து ஒரு பிடி அரிசியை அள்ளி வீசினான். கோழிகள் தூசி பறக்க வந்து அரிசியைப் பிடுங்கின. வீட்டுக்காரன் அவற்றில் ஒன்றைத் தேர்ந்து வேறெங்கோ பராக்கு பார்ப்பவன் போல் பார்வையை வேறு திசையில் ஒட்டிக் கொண்டே எதிர்பாராது வெடுக்கென குனிந்து இருந்தவற்றில் தடித்தது போலிருந்த ஒரு கோழியின் கால்களைப் பற்றி அதனை அப்படியே தலைகீழாக உயர்த்தி “ஹா… பாரமே இல்லையே…” என்று வருத்தப்பட்டான். ஆட்டோ ஓட்டியும் கோழியை தூக்கிப் பார்த்துவிட்டு “ஆம்… பாரமே இல்லைத்தான்…” என்று என்னிடம் தந்தான். நானும் அதன் முரட்டு கால்கள் இரண்டையும் பிடித்து உயர்த்தி நிறை பார்த்தேன். கோழி இறக்கைகளை அடித்து திமிறியது. ‘சொந்தக்காரன் மூவாயிரத்துக்கு குறைவா கொடுக்கப்படாது” என்று சொல்லி இருக்கின்றான்.

அங்கிருந்து கிளம்பி அடிக்கும் இந்த வெயிலில் முள் வேலி ஒன்றைக் குனிந்து அடைத்தப்படி மூவர் இருந்த அந்த சின்ன வீட்டை அடைந்தோம். வீட்க்ச் சுற்றிலும் கரிய கரிய மெல்லிய தூசு மண். கிட்டத்தட்ட அது ஈயம் கலந்தாற்போல் தோன்றியது. அங்கும் உயர்ந்த மரங்கள் நிமிர்ந்து நின்றன. வீட்டின் முன்னால் காய்கள் குலை குலையாக காய்த்துத் தொங்கிய ஒரு கட்டை மாமரம். அதன் நிழலில் ஓர் ட்ரக்டர். வேலி சரிசெய்து கொண்டிருந்த மூவரில் ஒருவன் இளைஞன். கிழவர் தொய்ந்திருந்த இடங்களில் வேலியை கட்டி இறுக்கி கொண்டிருந்தார். அலங்கோலமாய் உடை உடுத்தியிருந்த ஓர் இளைஞன் இரு தடிகளை நடும் பொருட்டு வட்ட வடிவில் காய்ந்த அந்த மண்ணில் நீரை ஊற்றினான். ‘சிமிண்டு போட்ட மாதிரி இறுகி போய் கிடக்குது’ என அவன் சலித்து கொண்டான்.

ஆட்டோ ட்ரைவர் முதியவரிடம் கேட்டான்: “எனது காணியிலும் வேலி பிடித்தாக வேண்டி இருக்கிறது…”.

ஓர் இளம் நங்கை மூவருக்குமாய்த் தேநீரை ஓர் தூக்கு சட்டியில் தம்ளர்களுடன் சுமந்து வந்தாள். இள வயதினனின் சகோதரியாக இருக்க வேண்டும். மூவரும் தேநீரை ஊற்றி மெதுவாக பருக ஆரம்பித்தார்கள். ஆட்டோ நண்பன் என்னை ஆட்டோவிலேயே இருத்தி விட்டு வீட்டை நோக்கி நடந்தான். மிதி அடிகளை கழற்றி வைத்துவிட்டு பின் வீட்டுக்குள் சென்று மறைந்தான். அவனது நடவடிக்கைகள் ஏதோ வீட்டினுள் ஐக்கியம் பூண்டு புழங்கிய ஓர் நபருடையது போல இருந்தது. சற்று நேரம் கழித்து என்னையும் வந்து அழைத்தான். நான் மெதுவாக சென்று ட்ரக்டரின் முன்னால் இருந்த மாமர நிழலில் போடப்பட்டிருந்த இரண்டொரு பிளாஸ்டிக் நாட்காலிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்தில் அதே இள நங்கை எனக்கும் தட்டில் தேநீரை ஏந்தி வந்தாள். அவள் பின்னால் ஆட்டோக்காரன் தனது தேநீரை சுவைத்தப்படி வந்தான். இப்போது வீட்டு சொந்தக்காரியும் வெளியே வந்து அப்படியே தரையில் அமர்ந்து ஏதேதோ கதைக்க தொடங்கி விட்டாள். பின் மடியில் எங்கோ மறைத்து சுருட்டி வைத்திருந்த ஓர் இரண்டாயிரம் ரூபாயை ஆட்டோ காரனிடம் நீட்டி பிடித்தாள்.

செல்லும் போது ஆட்டோ நண்பன் கூறினான்: “லாரியில் மரக்கறி மூட்டைகளை ஏற்றி அனுப்பி விட்டு எனக்கு கோல் எடுப்பார்கள்…மார்க்கெட்டில் போட்டு பணத்தை பெற்று இவர்களுக்கு அனுப்பி விடுவேன்… ஆயிரக்கணக்கில் நடக்கும் இந்த வியாபாரம்…”.

இருபுறமும் வயல்கள் இருக்க ஆட்டோ இப்போது அந்த மூன்றடி குறுகிய அந்த மண்பாதையில் மீண்டும் சிரமப்பட்டு ஏறி இறங்கி குலுக்கல்களுடன் செல்ல துவங்கி இருந்தது. வயல் வரம்புகளில் இப்போது பல்வேறு விதமான கொழுத்த நாரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் வண்ண நாரைகள் ஓர் ஐந்து கிலோ அளவில் பெரிதானவை. நான் அதிசயத்துடன் அவற்றை பார்த்தவாறே வந்தேன். திடீரென ஆட்டோகாரன் கூவினான்: “அந்தா இருக்கு… நான் சொன்ன ‘கறிமுசா’ ”.

கறுப்பு நிறத்தில் நீள நீள வளைந்த சொண்டுகளை உடைய வெள்ளை நாரைகள் அவை. அவையும் மேயந்து கொண்டிருந்தன. புழுக்களை தேடி குனிந்து அவ் ஈர மண்ணை அவை கால்களால் கிளறின. இரண்டு மூன்று இருக்கும். இவன் ‘கறிமுசா’ பற்றி ஏற்கனவே என்னிடம் சொல்லி இருந்தான். நான் வேறு விதமாக அவற்றை கற்பனை செய்து வைத்திருந்தேன்.

பழுப்பு நிறத்துடன் அவலட்சணமாய் இறக்கைகள் அற்றதுவாய் கட்டை கூர் சொண்டு நாரைகளையே நான் ‘கறிமுசா’நாரைகள் என்று கற்பனை செய்து வைத்து இருந்தேன். இவையோரூபவ் நடுத்தர உருவம் கொண்ட வெண்ணிற பறவைகள். நிறை வேறு ஒவ்வொன்றும் ஒன்றரை கிலோ இருக்கும். அவற்றின் சொண்டுகள் மாத்திரமே நீளமாயும் வளைந்தும் கருமையாகவும் காணப்பட்டன. இந்நாரைகளைக் கண்டவுடன் ஆட்டோகாரன் அடைந்த உற்சாகம் சொல்லி மாளாது.

“ஓர் இருபத்தைந்து கறிமுசாவை அப்படியே சுட்டுரூபவ் ஒரு பெரிய தாச்சியில் பொரித்து எடுப்போம்”.

“அப்போது பொறுப்பாளராக இருந்தவரின் காலும் நொண்டி… குரலும் கரகரத்த முரட்டு குரல்” ஆட்டோகாரன் அவரை போலவே பேசி காட்டினான்: “தம்பி ஓர் நாலைஞ்சு கறிமுசாவை சுட்டு வாங்கோவன்…”

“ஆர்டர் கிடைத்ததும் மிகிழ்ச்சியில் துள்ளி பாய்ந்து கிளம்பி விடுவோம் - துப்பாக்கியோடு…”.

“மகிழ்ச்சிதானே…”.

“குண்டடி பட்டுத்தான் அவரது குரலும் காலும் அப்படி போய் விட்டது…”

“அவருக்கு ஒரு காதலி. அவள் பெண்கள் அணியில். முகாமில் இருந்தாள்… எனக்கென்ன… ஓர் பதினைந்து வயது… சிறுவன்… என்னை அவரின் பின்னால் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மிதித்து கிளம்பி விடுவார் – அவளை பார்க்க…”.

“அப்படியே காட்டு வழியில் செல்வோம்… அவர் எக்கி எக்கி உதைப்பார்… சைக்கிளை…”

“பெண்கள் முகாமுக்குள் நாங்கள் யாரும் செல்ல முடியாது… சைக்கிளை ஓர் பெரிய மர நிழலடியில் நிறுத்தி விட்டு அவளை தனியே அழைத்து பேசி கொண்டிருப்பார்… நான் தூரத்துக்கு சென்று இருப்பேன்… அவர்கள் கதைப்பதை கேளாதபடி…”.

“என்ன பேசுவார்களோ – எனக்கு தெரியாது. பின் நான் ஏறி வந்து விடுவேன்…”.

“அவள் அரசியல் துறையில் இருந்தாள்… பின்னர் கரும்புலியாகி விட்டாள்…”.

“கரும்புலியாவது அங்கே எளிதான விடயம் இல்லை. முதலில் தலைவரின் அனுமதி பெற வேண்டும்… உங்களின் குடும்ப நிலவரம்… ஏன் இயக்கத்தில் சேர்ந்தீர்கள்… பின் ஏன் கரும்புலியாக தீர்மானித்துள்ளீர்கள் - சகலதையும் கடிதத்தில் எழுதி எழுத்து மூலமாய் சமர்ப்பித்தாக வேண்டும். அப்போதே இயக்கம் தீர்மானிக்கும். “ஓம் இவள் கரும்புலியாகும் தகுதி உள்ளவள்தான் என்று”.

“ஒரு போராட்டத்தில் அவள் பீரங்கிகளை உடைத்தெறிந்து விட்டு வீர சாவடைந்தாள்…”

“இவளுடன் இன்னும் ஓர் பத்து பன்னிரெண்டு பேரும் வீர சாவடைந்தார்கள்… இல்லை… அவள் இறந்த பிறகுதான் இவரும் இறந்தார் - ஓர் சுற்றி வளைப்பில் பிடிபட்டு…”.

“அது ஒரு காலம். கடந்த காலம்”.

என்னிடம் கேட்டான்: “உங்கள் ஊரில் சிங்களம் ,முஸ்லீம், தமிழர்கள் - மூவினத்தாரும் இப்போது கலந்துதான் இருக்கின்றார்களா…”.

நான் கூறினேன்: “இல்லை… தனித்தனியாக இருப்பார்கள்… ஆனால் இப்போது முன்பு போல் குரோதங்கள் இல்லை… குறைவு. “வித்தியாசம் உண்டு. ஆனால் குரோதங்கள் இல்லை…” என்று கூறினேன்.

இவன் கூறினான்: “ஆம். எம்மை ஆளும் அரசியல் வாதிகள்தான் ஒரு குரோத சுவாத்தியத்தை இங்கே கட்டி எழுப்புகிறவர்கள்… அவர்களுக்கு ஏற்றாற் போல் இந்த ஊடகங்களும் செல்வந்தர்களும் இருக்கின்றனரே…”.

“எனது விருப்பம் மூவின மக்களும் இங்கு கூடி வாழ்வது என்பதே” என்றான் ஆட்டோ ஓட்டி.

இவனது வரலாறை ஒருதரம் எண்ணி பார்த்தேன்… இவைர இவனது புதிய வார்த்தைகள்… இவை எவ்வளவு தூரம் நிலைத்து நிற்கும் என்பதெல்லாம் நான் அறியாதது… ஆனாலும் இது ஒரு திருப்பு முனை என்பதை மாத்திரம் உணரத் தலைபட்டேன். கர கரத்த அவனது குரல் என் நினைவில் தட்டியது: “தம்பி ஓடிப்போய் ஓர் நாலைஞ்சு கறிமுசாவை சுட்டு வாருங்கோ…” “சைக்கிளை எக்கி எக்கி மிதித்தப்படி அவர் காட்டுவழியே செல்வார்… நான் பின்னால் பேசாது உட்காந்திருப்பேன்… நாங்கள் காட்டு வழியே தனித்து மௌனமாய் செல்வோம்…”.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.