புனைவிலக்கிய எழுத்தும், ரசனைகளும் இன்றைய இலக்கிய உலகின் முக்கிய பேசுபொருள். புனைவின் கலைத்தளமும் அதன் புரிதலும் வாசகரின் ரசனைக்குரியது மட்டுமன்றி வேறுபடக் கூடியதுமாகும். இதனால் சிறுகதைகள், நாவல் முதலான கலைப் படைப்புகள் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது இயல்பானது. இலத்திரனியல் சாதனங்களும், சமூக ஊடகங்களும் மலிந்துவிட்ட  இக்காலத்தில் யாதும் ஊரே என்பது போல், எல்லோரும் எழுத்தாளர்களே. அனைவரும் மனங்கவரும் வண்ணமோ புலன்களில் பதியும் வண்ணமோ எழுதுவதில்லை என்பது உண்மைதான். எனினும் இதுதான் இலக்கியத்தின் இலக்கு  என்ற முடிவை எடுக்கும் திறன் கொண்டவர்கள் யார்...?, எனும் வினா வாசகர் மனதில் உருவாவது இயல்பானதே. எனது மனதிலும் அவ்வினா உண்டு. இவ்வினாவுக்கு மூலகாரணமாக அமைந்தவர், இன்றைய தமிழ்இலக்கிய உலகின் பெரும் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்கள்.  அவரது இணையத்தளத்தில் சமீபகாலத்தில் வெளியான வாசகர் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியாக கீழ்வரும் கருத்துகள் கூறப்பட்டிருந்தன. கேள்விகள் அவரது  இலக்கிய ரசனை பற்றியதும், எழுத்தாளர் முத்துலிங்கத்தின் புனைகதைகளின் ரசனை பற்றியவையும் ஆகும்.

மார்ச் 2, 2021 அன்று, அவரது இணையத்தளப் பதிவொன்றில்  'எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச் சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவா். அவர் எனக்கு அணுக்கமானவா்தான்' என்ற, ஜெயமோகனது சமீபகால கருத்தானது இலக்கிய மதிப்பீடுகளுக்கும், அவரது இளமைக்கால கருத்துகளுக்கும் முற்றிலும் மாறானது அல்லவா...?என்ற வாசகரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், 'இளமையில் இலக்கிய அழகியல் சார்ந்த அளவுகோல்களை மதவெறி போல் பற்றிக் கொண்டிருந்ததாகவும்,  இன்று தனது பார்வை விரிந்திருப்பதாகவும்..., தான் சொல்வது தீர்ப்பு அல்ல, ஒரு பார்வை தான்' என்ற பொருள்படப் பதில் கூறியிருந்தார். இந்தக் கூற்று எனக்கு மிகுந்த விருப்பையும், திருப்தியையும் அளித்தது. அதுவரை அவரது இலக்கியக் கருத்துகள் சிலவற்றின் மீது  கொண்டிருந்த மனவிலக்கத்தில் இக்கூற்று ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியது. இது வரவேற்க வேண்டிய மனமாற்றமும் கூட. ஒரு வாசகர் என்ற முறையில் அவருக்கு அணுக்கமானவராகவே என்றும் தொடர விரும்புகிறேன். அதே சமயம் வேறு சில தளங்களிலும் இம்மனமாற்றம் ஏற்படுமா என்ற ஆவலையும் கொண்டிருக்கிறேன்.

ஜூலை 12,2021 அன்று,  'முத்துலிங்கமும் ஈழப்போரும்' என்ற தலைப்பிலான வாசகர் கடிதப் பதிலொன்றில் 'அ. முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் முதன்மையானவர், பிற எவரும் அவரை விடப் பல படிகள் கீழேதான்’  என்றவர் தொடர்ந்து, 'முதன்மைப் பண்பாடுகளுக்கு இடையேயான முரண்பாடு, புலம் பெயர்ந்தவர்கள் அங்கிருக்கும் பண்பாடுகளுடன் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும், சிக்கல்களுமே அவர் கதைகளில் உள்ளன. பொதுவாக இரு பண்பாடுகள் உரசிக் கொள்ளும் முனைகள் இலக்கியத்துக்கு முக்கியமானவை. கீழைத்தேய, ஆசிய பண்பாட்டுக்கும் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்கப் பண்பாடுகளுக்கும் இடையேயான முரண்பாடே அவரது பேசுபொருள். ஆனாலும் அவர் அதை எளிய வேடிக்கையாக ஆக்குவதில்லை. தீர்ப்புகளையும் சொல்வதில்லை' என்ற பொருள்படக் கூறியிருந்தார். 'ஒருவரை முதன்மையானவர் எனச் சொல்வதற்கு பிற எவரும் பலபடிகள் கீழேதான் என சொல்ல வேண்டுமா' என்ற மற்றுமோர் வாசகர் கேள்விக்கு ஜூலை 23,2021 அன்று 'அ.முத்துலிங்கத்தின் கலை ' என்ற தலைப்பின் கீழ் பின்வரும் தொனியில் பதிலளித்திருந்தார். 'தனது சொற்களை கொஞ்சம் மாற்றிக் கொள்வதாக கூறிய அவர் அ. முத்துலிங்கம் எழுதும் கதைகளின் கலைத்தளம் பிறர் எழுதும் கதைகளின் கலைத்தளங்களை விட பல படிகள் மேலானது. அதுவே இலக்கியத்தின் இலக்கும் கனவும்' என்று கூறியிருந்தார். இந்தக் கூற்றினை உறுதிப்படுத்த 'விருந்தாளி' என்னும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதையில் உள்ள பூடகமான இலக்கியத்தின் உச்ச நிலையை உதாரணமாகக் கொள்கிறார். இந்தக் கூற்று சில கேள்விகளின் உற்பத்திப்புள்ளியாக அமைந்திருக்கிறது. அதை இறுதியில் பார்க்கலாம்.

இலக்கு ஒன்றைக் கொண்ட இயம்பலே இலக்கியம் என்பதாகக் கொண்டால், அது கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்குவதோடு அறிவினை மேம்படுத்தும் ஆற்றலினையும் நிச்சயமாகக் கொண்டிருக்கும்.  அத்துடன் இலக்கியம் என்பதன் எல்லைகளையும், இலக்கணங்களையும் வகுப்பது இயலுமான ஒன்றல்ல. இன்று போற்றப்படுவது நாளை இன்னொரு புள்ளியை நோக்கி நகரக் கூடியது. மானுடத்தை எவ்வகையிலேனும் மாண்புறச் செய்யும் இலக்கியத்தைப் படைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளும், கலைத்தளங்களும் இருக்கக் கூடும். இதில் மேலானது, கீழானது என்ற ஒப்பிடுதலை விட இருப்பதை ரசித்தலும், பாராட்டுதலுமே உகந்ததாகத் தெரிகிறது. ஞானபீட விருது பெற்ற அகிலனின் 'சித்திரப்பாவை' கூட எதிர்நிலையான விமர்சனங்களையும் சந்தித்தது. ஜெயமோகனின் கூற்றுப்படி இன்றைய ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் முத்துலிங்கம் மிக முக்கியமானவரும் புகழ்பெற்றவரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அபூர்வ திறமைகளைப் பாராட்டுவது மிகச் சிறந்த விடயம். ஆனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் இப்பாராட்டு, திறமை மிகுந்த வேறு இலக்கியவாதிகளுக்கு மன உளைவைத் தரக்கூடியதாக அமையக் கூடாது. இவ்வாறான திறமைகளைக் கொண்ட இன்னும் பலர், சந்தர்ப்பங்கள் சரிவர அமையாமல் புகழ்பெறாதிருக்கக் கூடும். ஏனெனில் எல்லோரது எழுத்துகளும் எல்லோராலும் வாசிக்கப்படுவதில்லை. திறமையான எழுத்துகள் இனம்காணப்படுவதும் இல்லை. பல சமயங்களில் பிரபலமானவர்களின் தளங்களில் அறிமுகப்படுத்தும் வரை.

இச்சந்தர்ப்பத்தில் எழுத்தாளர்  அ.முத்துலிங்கத்தின் புனைவிலக்கியத்துடன் பல தளங்களில் ஒற்றுமை கொண்ட மற்றுமோர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவின் படைப்புகளைப் பற்றிச் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்னும் பலர் இருக்க ஏன் அ.முத்துலிங்கம், ஆசி. கந்தராஜா ஆகிய இருவரையும் எடுத்துக் கொண்டேன் என்பது அவர்களிடையே உள்ள அறிவு, உலக அனுபவம், படைப்புகளின் ஒற்றுமை, புனைவுகளில் காணக் கிடைக்கும் உலக வியாபகம் ஆகிய பன்முனைகளில் தங்கி உள்ளது. இது புலம்பெயர் வாழ்வு அவர்களுக்கு அளித்த வரம்.புதிதான கருப்பொருள்களும், கதைத்தளங்களும் புதையல்களைப் போல கிடைக்கின்றன. இவர்கள் இருவரும் தனிமனிதர்களாகவும், படைப்புலகம் சார்ந்தும் பல ஒற்றுமைகளைக் கொண்டவர்கள்.

ஆசி. கந்தராஜாவின் புனைவுகளில் பெரும்பாலானவற்றை நான் வாசித்திருக்கிறேன். மற்றும் அவரது புனைவுக் கட்டுரைகள், டயறிக் குறிப்புகள், பிரபலங்களுடனான நேர்காணல்கள் பலவற்றையும் வாசித்திருக்கிறேன். அ.முத்துலிங்கத்தின் படைப்புகளில் விதந்துரைக்கப்பட்ட பல  புனைவுகளையும் வாசித்திருக்கிறேன். அவற்றுள் 'மகாராஜாவின் ரயில்வண்டி' சிறுகதைத் தொகுப்பில் உள்ள இருபது கதைகளும், வேறு தொகுப்புகளில் இருந்து  அக்கா, குங்கிலியக்கலய நாயனார், ஞானம், சிலம்பு செல்லப்பா, வம்சவிருத்தி, பூமாதேவி, ஒட்டகம், கொழுத்தாடு பிடிப்பேன், மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை ஆடுகள், தளுக்கு, எந்த நேரத்திலும் பறிபோகும் வேலை, ஐந்துகால் மனிதன், புவியீர்ப்புக் கட்டணம், ஆட்டுப்பால் புட்டு, கடவுச்சொல் முதலான இன்னும் பல சிறுகதைகளையும், அவரின் நாட்குறிப்புகள், கட்டுரைகள் சிலவற்றையும் படித்திருக்கிறேன். தொடர்ந்து கொண்டும் இருக்கிறேன்.  இருவரும் இளமையில் எழுத ஆரம்பித்தவர்கள். தமது தகைமைசார் கல்வி, உயர்தொழில் நிமித்தம் ஏற்பட்ட பளுவினால் இடையில் எழுத்துலகில் இருந்து அஞ்ஞாதவாசம் செய்தவர்கள். நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமாக புலம்பெயர்ந்து வாழ்பவர்கள். பல்வேறு தேசங்களில் பணிநிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள்.  தாயகத்தின் மண்வாசனை, சொல்வழக்கு, பாரம்பரியங்களை தமது எழுத்தில் கொண்டு வந்தவர்கள். அதேசமயம்  தாம் சென்று வாழ்ந்த அந்தந்த தேசத்து மனிதர்களின் கலாசாரத்தையும், விழுமியங்களையும் எமது கலாசாரத்துடன் ஒப்புநோக்கி முரண்புள்ளிகளையும், ஒத்திசைவுகளையும் உள்வாங்கி தமது படைப்புகளின் கருவாக்கியவர்கள். இருவரும் ஏனைய பண்பாடுகளைப் பற்றி தீர்ப்புகளையோ கேலிகளையோ முன்வைக்காது, அதை வாசகருடைய விருப்பாக எண்ணியவர்கள். இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள். இந்த அனுபவங்கள் அவர்களது எழுத்தார்வத்துக்கு கிடைத்த வரமென்றே கூறலாம். இருவரும் மிக எளிமையான, யாவரும் புரிந்து கொள்ளக் கூடிய எழுத்துநடை கொண்டவர்கள். நகைச்சுவை, அங்கதம் இருவருக்குமே கைவந்த கலை. இவர்களின் புனைவுகளால் வாசகர் ஈர்க்கப்படுவதற்கும் இந்த உணர்வும் அது அள்ளி வழங்கும் புன்னகையும் காரணமாகின்றது. அ.முத்துலிங்கத்தின் புனைவுகளில் அதிக அங்கதமும், ஆசி.கந்தராஜாவின் புனைவுகளில் நேரடியான நகைச்சுவையும் அதிகம் காணப்படுகின்றன. இரண்டுமே ரசிப்புக்கு உரியவை. ஈழப்போர் உச்சம் பெற்ற காலகட்டத்தில் இங்கு வாழாததால், போரின் நேரடிக் களநிலைமைகளைத் தம் எழுத்தில் தவிர்த்தவர்கள்.அதுவும் நியாயத்தின் பாற்பட்டதுதான்.

தேசங்கள், கலாசாரங்கள் சார்ந்த தகவல்களிலும், புறவயமான  சித்தரிப்பின் யதார்த்தங்களிலும் அதீத திறமைகளைக் காட்டும் இவர்கள் அகவய உணர்வுகளின் உருவாக்கலை பெரும்பாலும் வாசகருக்கே உரித்தாக்குகின்றனர்.    படிமங்களும், குறியீடுகளும் பெரும்பாலும் அனிச்சையாக நிகழ்வனவன்றி இவர்களது புனைவுகளில் வலிந்து புகுத்தப் படுவதில்லை.  உருவாக்கப்படும் நுண்ணுணர்வுகளின் எல்லைகள் வாசகரின் உள்வாங்கலையும், உணர்வின் தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டதால் அதன் கலைத்தளம் மாறுபட்ட உச்சங்களைத் தொடக்கூடியதாக அமையும். இது அவரவர் படைப்பின் வெற்றியாகக் கொள்ளப்படும்.  பல்வேறுபட்ட பண்பாடுகளின் மதிப்பீடுகளும், அவற்றின் நுண்மைகளும் இருவருக்கும் பொதுவானவை. இருவருடைய கதைகளும் அதன் முடிவுப்புள்ளியில், வாசகனுக்கு உலகத்தை மேலும் ஒருபடி உணர்ந்ததான திருப்தியைத் தருகின்றன. இருவரது படைப்புகளிலும் காமம், பாலுணர்வு,உடல் சார்ந்த வர்ணனைகள் தமது எல்லை தாண்டாது கட்டுப்பாட்டுக்குள் உலாவுகின்றன. வசவு வார்த்தைகளும் அவ்வாறே. பல சந்தர்ப்பங்களில் புனைவுக்கு அவசியமான ரம்மியத்தை அவை தருகின்றன. தகவல்களைத் கதையினூடு தருவதில் இருவரும் சமநிலை கொள்கிறார்கள். தனது கதைகளில் தொன்மங்களைத் துணைகொள்வதில் அ.முத்துலிங்கம் மிகச் சிறப்பான பார்வையைத் தருகிறார்.  விஞ்ஞான ரீதியான விளக்கங்களில் ஆசி. கந்தராஜா தனது துறைசார்ந்த நிபுணத்துவத்தை வியப்புக்குரிய வகையில்  வெளிப்படுத்துகிறார். முக்கியமாக நிஜமும், நிழலும் கலந்த தனித்துவமான புனைவுக் கட்டுரைகளில்.

 ஆசி.கந்தராஜாவின் 'கள்ளக்கணக்கு' என்ற சிறுகதைத்தொகுதி தமிழக அரசின் பரிசு பெற்ற படைப்பாகும். ரசனைக்கும், அறிவுக்கும் விருந்தாகும் வண்ணம் பல்வேறு நாடுகளின் களங்களில் மலர்ந்த கதைகளைக் கொண்டது. இதற்கான சிறப்பான முன்னுரையை அ.முத்துலிங்கம் அவர்களே எழுதியிருந்தார்.

இந்த இரு எழுத்தாளர்களுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளை உய்த்தறியும் அளவிற்கு வேற்றுமைகளை என்னால் இனங்காண முடியவில்லை. அது எனது புரிதலில் குறைபாடாக இருக்கலாம். அல்லது வேற்றுமைகள் இல்லாதிருக்கலாம்.
இருவரினதும் கதைகளில் காணும் சிறுவர் உலகமும், பெண்களின் அகஉலகும், முதுமையின் உணர்வுகளும் புலம்பெயர் அகதிகள் மனோநிலையும், கலாசார முரண்பாடுகளை எதிர்கொள்ளும் புள்ளிகளும், சிக்கல்களும் பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன.  

அ.முத்துலிங்கத்தின் 'எந்த நேரத்திலும் பறிபோகும் வேலை' கதையில் புலம்பெயர் தேசத்தில் வளரும், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையின் வளர்ச்சியையும், மனநிலையையும் அதன் பேரனின் கண்களூடாகக் காட்டுகிறார். 'பூமாதேவியில்' ஒரு பெண்குழந்தையின் மனரீதியான வளர்ச்சியின் வேகத்தை தந்தையின் ஏக்கத்தினூடு தருகிறார். அக்கா, ஒட்டகம், அம்மாவின் பாவாடை , கொம்புளானா, ஐந்தாவது கதிரை கதைகளினூடு பெண்களின் மறைக்கப்பட்ட மனச்சிக்கல்களைச் சொல்லுகிறார். கடவுச்சொல், கடன் ஆகிய கதைகளில் முதுமையின் மனவேண்டுதல்களைக் கூறுகிறார். 'நாளை' என்ற சிறுகதை  அனாதைகளான சிறுவர்களின் அகதிவாழ்வின் அவலத்தைக் கூறுகிறது. 'விருந்தாளி' புலம்பெயர்வாழ்வில் தாய்மொழி என்பதன் மீதான உயரிய மனஒட்டுதலைக் கூறுகிறது. இவற்றில் பல புலம்பெயர் தேசமொன்றின் களத்தில் உருவாக்கப் பட்டவை.  

ஆசி. கந்தராஜாவின் கதைகள் இதே விடயங்களை தனக்குரிய நடையில் சொல்கின்றன. 'மறுக்கப்படும் வயதுகள்' கதை, ஒரு சிறுமியின் குழந்தைப் பருவத்தை, குழந்தையாக வாழவிடாத புலம்பெயர் பெற்றோரின் மனநிலை முரண்பாடுகளை அலசுகிறது. அவளுடைய வயதை ஒத்த ஆஸ்திரேலிய சிறுமிகள் பார்க், கானிவேல் என அனுபவிக்க தமிழ்ச்சிறுமியோ டியூஷன், டான்ஸ் கிளாஸ் என தன் இளம்பருவத்தைத் தொலைக்கிறாள். 'தேன் சுவைக்காத் தேனீக்கள்' சிறுகதை, குடும்பப் பொறுப்புகளையும் சேர்த்தே சுமப்பதால், போட்டிப்பரீட்சையில் தோல்வியுறும் தாயற்ற யப்பானிய சிறுமியின் தற்கொலை பற்றிக் கூறுகிறது. இயந்திரமயமான அவ்வுலகில் அவளது மரணமும் பத்தோடு பதினொன்றாகப் பதியப்படுகிறது.

'காதல் ஒருவனைக் கைப்பிடித்து' கதையில் மணமான ஈரானியப் பெண் ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்ளும் கலாசாரமாற்றங்களின் விளைவுகளைக் கூறுகிறார். இந்துமதியாகிய நான்,நரசிம்மம், அடிவானம், வெள்ளிக்கிழமை விரதம், துர்க்காதாண்டவம் ஆகிய கதைகளில் பெண்ணின் மனஆழம், ஓர்மம், வீரம்,வன்மம்,நவீனசிந்தனைகள் வெளிக் காட்டப்படுகின்றன. ஒட்டுக்கன்றுகளின் காலம், கல்யாண கெமிஸ்றி ஆகிய கதைகளில் புதிய நாட்டின் கலாசாரத்தை ஏற்கவும், மறுக்கவும் முடியாத புலம்பெயர்வாழ்வில் தமிழர்களின் மனச்சிக்கல்களைக் கூறுகிறார்.

முதுமையின் கோலங்களை விளக்கும் ஆசியின் 'பாவனை பேசலன்றி' குறுநாவல் மற்றும் கோபுர தரிசனம், அந்திமம் கதைகள் கூறும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவை   மனதினால் மட்டுமே உணரப்படக் கூடியவை.

இனப்படுகொலை, இன வன்முறைகளின் தாக்கமும், அதன் விளைவுகளான அகதி வாழ்வின் அவலங்களும் ஆசி கந்தராஜாவின் பல கதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தலைமுறைதாண்டிய காயங்கள், கையது கொண்டு மெய்யது பொத்தி,எதிரியுடன் படுத்தவள், யாவரும் கேளிர் ஆகிய படைப்புகள் அதில் சில. இதில் 'தலைமுறை தாண்டிய காயங்களில்', "தாத்தாக்கள் சுமந்த வலிகளைச் சொல்லி பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்ற உன் கருத்தை ஏற்கிறேன்...'' என ஆர்மேனியனான ஹறூத்திடம் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் பேராசிரியர் கூறும் சொற்களில் உள்ள வலிகள், சொல்லாத பல உணர்வுகளின் கலைத்தளத்தினை வடிவமைக்கக் கூடியவை.

இலக்கியத்தில் நாம் உணரும் கலைத்தளம் என்பது எழுத்தாளருக்கும், வாசகரின் ரசனைக்குமான உறவுச் சிக்கலாகும். முத்துலிங்கத்தின் 'விருந்தாளி' கதையில் தொழில்நிமித்தம் ஆபிரிக்க நாடொன்றில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர் தன் தாய்மொழியில் யாருடனும் உரையாட முடியாத தனிமையில் ஏங்குகிறார். அவரிடம் ஓரிரவு மட்டும் தங்கிய ஜெகன் எனும் அகதித் தமிழருடன் ஆசைதீர தமிழில் உரையாடி , விருந்திட்டு, இசை கேட்டு மகிழ்கிறார். அந்த மகிழ்வைக் கொண்டாட அவர் உயர்ரக 'வைனை' அருந்த விரும்புகிறார். அகதித் தமிழருக்கும் கொடுக்கிறார். இருவரும் அதன் சுவையில் மெய்மறக்கின்றனர். அடுத்தநாள் காலை புறப்படும் அகதி, ஈழத்தமிழர் தனக்கு உபசரித்த உயர்ரக வைனை விதந்துரைத்து தனக்காக இந்த உயரிய மரியாதையைச் செய்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன் என உருக்கமாகக் கூறுகிறார்.

 'வைனை' ஈழத்தமிழர், தான் அருந்துவதற்காகவே வேலைக்காரனிடம் கொண்டு வரச்சொல்கிறார். ஜெயமோகனின் கூற்றுப்படி அகதித் தமிழருக்காக அல்ல. அகதி மனிதருக்கும் வைன் கொடுக்கப்படுகிறது. ஜெயமோகன் அவர்களது ஜூலை 23,2021 திகதி பதிவின்படி,  இந்தக் கதையில் அவரால் உணரப்படும் 'வைன்' மூலமாக விரியும்  கலைத்தளத்தின் உயர்வு, ஈழத்தமிழரின் 'தனது மகிழ்வுக்காக' என்ற சுயநலத்தால் சற்றே அடிபட்டுப் போவதாக எனக்குத் தோன்றுகிறது. இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால் புனைவிலக்கியம் என்பதும் அதில் காணும் கலையின் மேன்மை என்பதும் மாறுபடக் கூடிய புரிதல்களைக் கொண்டதாக இருக்கலாம் என்பதற்காகவே. நான் இந்த கருத்தைச் சொல்வது 'இலக்கியத்தின் கலைத்தளம்' என்ற ஜெயமோகனின்  வகைமைப்படுத்தலின் கீழ் ஒத்துக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால் அந்த இலக்கியம்  வாசகருக்குத் தரநினைப்பது என்ன என்று ஒரு வாசகியாக எனது வகைமைப்படுத்தலின் கீழ், அது வாசகரின் பெறுதலையும், புரிதலையும் அடிப்படையாகக் கொண்டது.   இந்த இருவரைப் போன்ற  மற்றவர்களும் இலக்கியத்திற்காக மாபெரும் சேவை செய்தவர்களே.

உலகளாவிய அனுபவம் எனும் பேரதிர்ஷ்டம் எல்லா எழுத்தாளர்களுக்கும்  வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்களாக உருவாவதும் இல்லை. இவர்களைப் போன்றவர்களால் இலக்கியம் மேலும் வளம் பெறுகிறது. கலை மனதைத் தொடுகிறது. கலையினூடாக காட்டும் அறிவு மூளையைத் தூண்டுகிறது. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கதையாக்க இவர்களால் முடிகிறது. ஒப்பிடுவதற்கு அவசியங்கள் இல்லை.அதனால் புனைவு இலக்கியத்தில் மேலானது கீழானது என்ற வகைப்படுத்தல்கள் தேவையற்றவை என எண்ணுகிறேன். நுண்ணுணர்வின் அழகியலையும், வாழ்வியலின் அறிவியலையும் உணர வைக்கும் எழுத்துகளை எதிர்காலத்திலும் சுவைக்கக் காத்திருக்கிறோம்.  நுண்மையும், அறிவும் நிறைந்த வாழ்க்கையை நல்ல எழுத்தாளர்கள்  அழகும், ரசனையும் நிறைந்ததாகச்  செய்வார்கள்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.