புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும். இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம், ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.
இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத் தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.
கதைக்களங்கள் வெறும் புறவய சித்தரிப்புகள்தானே என மேலோட்டமாகக் கடந்துவிட முடியாதபடி, அவற்றால் உருவாகும் தாக்கமே கேள்விகளின் திறவுகோலாக அமைவதால், குறையாக உறுத்துவதில்லை. மாறாக வாசகரின் சிந்தனையைத் தூண்டி அகத்தேடலுக்கும், புறத்தேடலுக்கும் களம் அமைக்கும் வழி காட்டியாகவே அமைகிறது. வாசிப்பின் முடிவில், வாசகர் தமது உணர்வு வெளிப்பாட்டை தானாகச் சென்றடைதலே ‘ஆசி’யின் எழுத்தின் சிறப்பம்சம் எனவும் உணரப்படும். அதுவே படைப்பாளியின் வெற்றி.
அவ்வாறான சிறப்புப் பெற்ற புனைவுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், இனபேதத்தின் வடிவங்களையும், இனமதமொழி சார்ந்த மனிதப் படுகொலைகளையும் மூலச்சரடாகக் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றை இனம் காணலாம். தலைமுறை தாண்டிய காயங்கள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, விலாங்குமீன்கள், எதிரியுடன் படுத்தவள், தூதர்கள், அசைல், நரசிம்மம், கிழக்கும்மேற்கும், யாவரும் கேளிர், மைனாக்கள், சூக்குமம் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
சிரிய அதிபரின் ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டங்கள், பின்னாளில் ஒரே மதத்தின் உட்பிரிவுகளான சுனி, ஷியா முஸ்லிம்களின் முரணாகவும், தீவிரவாதிகளின் பட்டறையாகவும் உருமாறின. ஆதிக்க நாடுகளின் அனுசரணையுடன் பெரும் உள்நாட்டுப் போராக தோற்றம் பெற்றது. கணக்கற்ற உயிரிழப்புகளும், அண்டை நாடுகளுக்கான அகதிகள் இடம்பெயர்வுமாக பல லட்சங்கள் தாண்டிய அவலமும் அண்மைய வரலாறு. பிஜியின் கரும்புத் தோட்டங்களுக்கும், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கும் இந்தியாவிலிருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்ட இந்திய மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களும், ஒடுக்குமுறைகளும் சில நூற்றாண்டுகள் கடந்த வரலாறு. இலங்கையின் இன ஒடுக்குமுறைகளும், இறுதிப்போரும், அகதி வாழ்வும் எமது தாயக வரலாறு. இவையெல்லாம் ஆசியின் படைப்புகள் சிலவற்றின் கதைக்களங்கள். இப்படைப்புகளின் இறுதியில் பல கேள்விகள் உருவாவதும், பதில் சொல்ல வேண்டிய கடப்பாடுகளை வாசகரிடம் தோற்றுவித்தலும் அறிவுசார் இலக்கியரசனைக்கு உரியது. இதில் 'தலைமுறை தாண்டிய காயங்கள்' மனதில் பதிந்ததும் அல்லாமல் சில பதற்றங்களையும் ஏற்படுத்தியது. காரணம் உள்ளார்ந்த உணர்வு நிலைகளின் ஒத்திசைவும் சில முரண்களும். தொடரும் உரையாடல் இச்சிறுகதையின் மனதுக்கு வலி தரும் அழுத்தமான பகுதி.
"உங்களை அவர் 'அவுஸ்திரேலியன்' என்று சொன்ன போது அதை நீங்கள் மறுத்திருக்க வேண்டாமா...? நெஞ்சை நிமித்தி, நான் ஸ்ரீலங்கன் என்று சொல்ல வேண்டாமா...? நீங்கள் உங்கள் அடையாளத்தை இழப்பது சரியல்ல" - ஹறூத் நின்று நிதானித்துச் சொல்லி முடித்த பின், என்னை நிமிர்ந்து பார்த்தான்.
"ஹறூத், உன் தாத்தா துருக்கியரா அல்லது ஆர்மேனியனா...?"
"இதிலென்ன சந்தேகம். ஆர்மேனியன்!"
"உன் தாத்தா துருக்கியர் இல்லையென்றால் நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழன்.
உங்கள் மூதாதையர்கள் கிறிஸ்தவத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்ட முதன்மையானவர்கள் என்று நீ பெருமைப்படுகிறாய். எனது இனத்துக்கும் மனித நாகரீகத்தைப் பரப்பி வாழ்ந்த பெருமை உண்டு. நான் ஸ்ரீலங்காவில் பிறந்து வாழ்ந்த தமிழ் ஈழன். தமிழினம் படுகொலை செய்யப்பட்டுள்ளது பற்றி, மனித உரிமைகள் பற்றி வாய்கிழியப்பேசும் உலக சமூகம் மௌனம் சாதிக்கிறது. அந்த மௌனத்தைக் குலைப்பதற்கு, தாத்தாக்கள் சுமந்த வலிகளைச் சொல்லி பிள்ளைகளை வளர்க்கவேண்டுமென்ற உன் கருத்தை ஏற்கிறேன்" - என் குரல் நெகிழ்ச்சியில் உடையலாயிற்று...!
அண்மையில் இக்கதையை சற்று ஆழமான உணர்வலைகளுடன் மீளவாசித்தேன். நாம் யார், எமது தாயகம் எது என்ற கேள்வி இன்றைய காலகட்டத்தில் சற்று அதிகமாகவே மனதை அலைக்கழிக்கிறது. அது மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வாழும் நம் உறவுகள் தங்களை யாராக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற பெறுமதியான கேள்வியும் மனதில் சிக்குண்டது. ஜேர்மனியராக, கனேடியராக, ஆஸ்திரேலியராக, ஆங்கிலேயராக, பிரான்சியராக வாழ்ந்தாலும் மனமெல்லாம் நிறைந்தது தாயகமே என அழுத்திக் கூறுவார்கள். ஆனால் அடுத்த தலைமுறை கூறுமா? தமிழர்களுக்கென ஒரு தாயகமும், உரிமையுள்ள நிலப்பரப்பும் உண்டா? என்ற கேள்வி இப்போது எழுகிறது. அப்படி ஒன்று இருந்ததா? என இனிவரும் காலங்களில் இலங்கைத் தமிழர்கள் மறைக்கப்பட்ட வரலாற்றை திருப்பிப் பார்க்கும் சந்தர்ப்பங்களும் வெகுதூரமில்லை என்றே தோன்றுகிறது. இத்தனை சந்தேகங்களையும் எனக்குள் எழுப்பியது இந்தக் கதை.
இக்கதையில் லெபனானில் வாழும் ஆர்மேனியனான ஹறூத் ஆப்பிரஹாமியன், இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் நடந்த தனது இனத்தவர்களின் மனிதப் படுகொலைகளை இன்னும் மறக்காதவனாக இருக்கிறான். கிறிஸ்தவமதத்தினை நாலாம் நூற்றாண்டிலேயே அரச மதமாக்கிய பெருமை கொண்ட ஆர்மேனியாவின் பெரும்பகுதிகளை, துருக்கி ஒட்டோமான் பேரரசு போரினால் கையகப் படுத்தியதும், பல நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்சியின் கீழ் சிக்குண்டிருந்து கொடுமைகளை அனுபவித்ததும் வரலாறு கூறும். 1915ம் ஆண்டளவில் அங்கு வாழ்ந்த இருபது இலட்சம் ஆர்மேனியர்களில் பதினைந்து இலட்சம் பேர் துருக்கியரால் படுகொலை செய்யப்பட்டதும், அதிலிருந்து தப்பி நடைப்பயணமாகவே ஹறூத்தின் தாத்தா லெபனானுக்கு வந்ததும், அவர் சொல்லி அவன் அறிந்தது. அது இனப்படுகொலைதான் என பிரான்ஸ் அரசாங்கத்தினால் 2011ல் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் கொண்டாடி மகிழ்பவன். இந்தக் கதாபாத்திரம் மட்டுமல்ல லெபனானில் வாழும் பல ஆா்மேனியா்களின் வன்ம மனோநிலையும் இதுவென்பது புனைவு கலக்காத நிஜம் என்பது கதாசிரியர் கூற்று.
ஆர்மேனியர்கள் அகதிகளாக வந்து உலகின் பல்வேறு தேசங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்கென ஒரு சிறிய தேசமாவது இன்றும் (2021) எஞ்சி உள்ளது. ஹொலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளை அரங்கேற்றிய ஹிட்லரின் நாஜி வதைமுகாம் காலங்களில், எவ்வாறோ தப்பிய யூதர்கள் பூகோளமெங்கும் பரந்தாலும், இன்று அவர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட தேசமாக இஸ்ரேல் உள்ளது. தாய் யூத இனத்தைச் சார்ந்தவராக இருந்தால், அவர் யூதராக உரிமை கோர முடியும். ஆசியின் 'எதிரியுடன் படுத்தவள்' சிறுகதையானது, பாலஸ்தீனியரை தந்தையாகவும், தாய்வழியாக யூதத்தையும் சார்ந்து நிற்கும் தன் மகனுக்கான யூதஇன அடையாளத்தைக் கோரி ஜெருசலேமில் போராடும் அவீவாவின் கதையைக் கூறுகிறது.
இந்தப் படைப்புகளை வெறும் கதைகளாக மட்டுமே அணுக முடியவில்லை. இனவேற்றுமையும், ஒடுக்குமுறையும் உலகளாவிய ரீதியில் எத்தனை மனித உயிர்களை காவு கொண்டுள்ளது என்பதை எண்ணிப் பார்ப்பது மிக அதிர்ச்சிகரமான அனுபவத்தையே தரும். ஜனநாயக முகமூடிகளை பூட்டிக் கொள்ளும் ஆதிக்க நாடுகள் கூட இந்த வேற்றுமைகளுக்கு விதிவிலக்கானவை அல்ல. இவற்றையெல்லாம் இலங்கைத் தமிழரின் இன்றைய பிரச்சனைகளுடன் ஒப்பிடாது சில கதைகளை வாசிப்பது சாத்தியமில்லாமலே இருக்கிறது.
எமது தாயகமாக நாம் கருதும் இத்தேசம், சுதந்திரத்தின் பின் நீண்ட, எழுபதாண்டு கால தமிழின உரிமைப் போராட்டத்தைக் கண்டது. இலக்கண, இலக்கிய நயங்கள் நிறைந்த மூத்த மொழி, பாரம்பரிய பிரதேசம், தனக்கென உன்னதமான கலாசாரம் என முக்கிய அம்சங்களை கொண்டிருந்த போதும் இந்நாட்டின் தேசிய இனமாக மனப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளோமா என்பது கேள்விக்குரியது. இந்தியா ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்களைக் கொண்டிருந்தாலும், இந்த இனத்துக்கு மட்டுமே உரிமையுள்ள ஒரு தனியான தேசம் எதுவும் இல்லை. மாநில அதிகாரங்களை மட்டுமே கொண்டது. உலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்கள் இத்தகைய இழிவுகளைச் சந்திக்க உரிமையுள்ள நிலம் ஒன்று இன்மையே முக்கிய காரணமாகிறது என நினைக்கும் போது விரக்தி கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
இலங்கை அரசின் பிரித்தாளும் கொள்கையினாலும், திட்டமிட்ட நில அபகரிப்புகளினாலும், கலாசார சீரழிப்புகளாலும் தமக்குள் பல்வேறு குழுக்களாக பிரிந்தும், பிரதேசவாதம் கூறியும் இயங்கும் தமிழர்களே இன்று அதிகம். பாதுகாப்பற்ற சூழ்நிலையால் வாய்மூடி மௌனிகளாகும் சராசரி மனிதர்களும் இந்த நிலைக்குக் காரணமென்பதை மறுக்க முடியாது.
யுத்த சூழ்நிலையைக் காரணம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களும், போராளிகளும் மட்டும் புலம் பெயரவில்லை. தமது பொருளாதார நலன்களுக்காக போராட்டத்தை கொச்சைப்படுத்தி புலம்பெயர்ந்தவர்களும் பெருந்தொகையினர். ஆனாலும் தமது தவறுகளையும், குற்ற உணர்வையும் மறைக்க, அங்கிருந்து தமிழ்ப்பற்றுடன் முழங்கும் கோஷங்களுக்கும் குறைவென்பதில்லை. வாய்ப்பேச்சு வீரர்களாகவே பெருந் தொகையானோர் இருக்கிறார்கள் என்பதும், தமது அகதி அந்தஸ்து நிலைபெற வேண்டும் என்பதற்காக, தாயகத்தில் பிரச்சனை நீடிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கு உடையவர்களாகவுமே இருக்கின்றனர் என்பதும் தெளிவு. இது தமிழர்களின் பொய்முகங்களை வெளிக்காட்டும் 'அசைல்' கதையின் பின்புலம். உண்மையான அக்கறை கொண்ட சிலரால் இலங்கைத் தமிழர் பிரச்சனை சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றது என்பதையும் மறுக்க முடியாது. எனினும்,
'தலைமுறை தாண்டிய காயங்கள்' கதையில் கூறப்பட்டதை ஒத்து, சிரியா தனது துருக்கிய எல்லையின் பாதுகாப்பிற்கு, சிரியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்கள் அடங்கிய துருப்புக்களையே அதிகம் பயன்படுத்துவது போல சர்வதேசமும் எமது பிரச்சனையை தமது சுயலாபத்துக்காகவும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் அரசைத் தம் கட்டுக்குள் வைத்திருக்கவுமே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துகிறது என்பதும் யதார்த்தநிலை.
உலகெங்கணும் சிறுபான்மை மக்களுக்கான ஒடுக்கு முறைகள் ஒத்ததாகவே இருந்தபோதும், அதற்கான வன்மங்களை நாம் சுமந்தே திரிதலும், துருக்கியருக்கு துன்பம் நேரும் போது கொண்டாடி மகிழும் ஹறூத் போல பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மனிதாபிமானம் சார்ந்ததுதானா? என்ற கேள்வி நியாயமாக எழவே செய்யும். இவ்வாறான கருத்தை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழ் பேராசிரியரிடம் ஆர்மேனியன் ஹறூத், கேட்ட ஒரு கேள்வி சிந்திக்க வைப்பது.
"சமீபத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களின் இனக்கொலை பற்றிய சரியான தகவல்களை உங்கள் மகனுக்குச் சொல்லி வளர்த்திருந்தால், உங்கள் கேள்விக்கு அவன் பதில் சொல்லியிருப்பான்'"
"தாத்தாக்கள் சுமந்த வலிகளைச் சொல்லி பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்ற உன் கருத்தை ஏற்கிறேன்" என்கிறார், உடைந்த உள்ளத்துடன் பேராசிரியர்.
பாதிக்கப்பட்டவர்களே அதன் வலியை அறிவர் என்பது நிஜம். மரணித்தவர்களை விட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொண்டுள்ள மாறாவடு அதைவிட அதிகமானது. வலிகளைக் கூறி வளர்க்க வேண்டும் என்பது நியாயமாகவே இருந்தாலும், கடந்த கால வரலாற்றில் அது எவ்விதத்திலும் எமது உரிமைகளைப் பெற்றுத் தரவில்லை. வலி கூறி மட்டுமே வளர்க்கப்பட்ட ஒரு இளைய பரம்பரையின் போராட்டம் பெரும் உயிரிழப்புகளுடன் இறுதியுத்தத்தில் மௌனித்தது. போரிலும், புலம் பெயர்விலுமாக மக்கள் தொகையிலும் நலிவுறும் எமது சமுதாயம் இன்று எதிர்நோக்கும் இன்னல்கள் முன்பை விட உக்கிரமானவை. ‘ஆசி’யின் 'தூதர்கள்' குறுநாவலில் வரும் இலங்கையின் பெரும்பான்மை இன கதாபாத்திரங்கள் போன்று, இறுதியுத்தத்தின் பின், முன்பு நடுநிலையாளர்களாக இருந்த சிங்கள மக்கள் பலரும், மாறுபட்ட ஆதிக்கப் போக்குடையவர்களாக மாறிவிட்டதை வேதனையுடன் அவதானிக்கலாம். ஏனைய தேசங்களிலும் பெரும்பான்மை மக்களுக்கு அது இயல்பான ஒன்றுதான் என ஆறுதல் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
காரணம் எதுவாக இருப்பினும், இற்றைக்கு மூன்று தசாப்தங்களின் முன், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இருந்து இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டதை நம்மில் பெரும்பாலானோர் கண்டிக்கவில்லை என்பது நினைவில் கொள்ள வேண்டியது. அவரவர்க்கு உரிய நியாயங்களும், தர்மங்களும் அனைத்து தரப்பினருக்கும் இருக்கக் கூடும். ஆனால் வெளியேற்றப் பட்டவர்களில் அப்பாவி மக்களும் அடங்குகிறார்கள். அவர்களும் பாதிக்கப்பட்ட மக்கள்தான். அதுபோல சிங்கள மக்களுக்கும் பல்வேறு நியாயங்கள் இருக்கக் கூடும். மூன்றாம் தரப்பாக நின்று சீர்தூக்கிப் பார்த்தால் மட்டுமே இவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் அடுத்த சந்ததியினரில் பெரும்பான்மையானவர்கள் தமது தாய்மொழி, தாயகம் என்பவை பற்றிய ஆழமான உணர்வுகள் ஏதுமின்றியே இருப்பது வெளிப்படை. மொழி முக்கியத்துவம் பெறாத கலாசாரமும், பாரம்பரியமும் அங்கு கடைப்பிடிக்கப் படுவதும் வியப்பானதல்ல. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. புலம்பெயர் தேசத்தில் அந்நாட்டுக்குரிய மொழியை ஏற்று, தமிழர் கலாசாரத்தை பின்பற்றுவது, மொழியுணர்வு அல்லது இனஉணர்வு சார்ந்ததுதான் என்று வாதிக்கப்படலாம் எனில், தாய்நாட்டின் பெரும்பான்மை இனத்தின் ஆட்சிக்குரிய மொழியை ஏற்று தமிழர் கலாசாரத்தை பின்பற்றுவது தவறென வாதிட முடியுமா? சமயரீதியாகக் கூட இந்துசமயத்துக்கும், பௌத்தத்துக்கும் ஒரு வரலாற்றுப் பிணைப்பு இருக்கத்தானே செய்கிறது. ஆனால் இங்கு வித்தியாசம் காண்பது, அரசின் சமரசமான, சமத்துவமான அன்பு வழியாலன்றி அடக்குமுறை, எதேச்சாதிகாரம் என்பவற்றால் ஆள நினைப்பதுதான்.
கதையில் விரும்பத் தக்க விடயங்களாக ஹறூத்தின் தாய்நாட்டுப் பற்றும், மொழிப்பற்றும், வரலாற்றை மறந்திடாத மனமும் இருக்கும் அதே சமயம் நெருடலாக இருப்பது பின்னாளில் துருக்கியினரிடம் கொண்டுள்ள வன்மம். அது நியாயமானதுதானே என வாதிடுவோரிடம் இன்னொரு கேள்வி எழுப்பப் படலாம். யூத இனத்தினை அழித்த ஜேர்மனியிடம் அழிவிலிருந்து தப்ப எம்மவர்கள் தஞ்சம் புகுந்ததும், தமது பூர்வ குடிகளான அபோர்ஜினிய மக்களை வதம் செய்த ஆஸ்திரேலியா, கனடா முதலான நாடுகளை இன்று பல்லினமக்களை அரவணைத்துக் காக்கும் சமத்துவ நாடாக எம்மவர்கள் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் வாழ்வதும் எவ்வாறு? 'கிழக்கும் மேற்கும்', ‘விலாங்குமீன்கள்’ ஆகிய கதைகள் இந்தப் பின்னணியில் படைக்கப்பட்டவை. ஒரு நாட்டினதும், மக்களினதும் பின்னாள் மனமாற்றங்கள் தந்த நல்விளைவுகளே இவை எனில், அந்த மனமாற்றத்தை இலங்கை அரசும் என்றாவது ஒருநாள் காணக்கூடும் என காத்திருத்தலும் நியாயமானதுதான்.
யூதப்படுகொலையின் பின் உலகமெங்கும் சிதறி ஓடிய யூதர்கள், இரண்டாம் உலகயுத்தத்தின் பின் வல்லரசுகளின் அனுசரணையுடன் தமக்காக இஸ்ரேலை உருவாக்கியதும், அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டதும் வரலாறு. தம்மை வதைத்த ஜேர்மனை பழிதீர்க்காமைக்கு, ஏற்கனவே அந்நாடு போரினால் சிதைவுண்டும் பிரிவுண்டும் இருந்தது ஒரு காரணம். வெற்றி கொண்ட நேசநாடுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்ததால், அன்றைய சந்தர்ப்பங்கள் பழிவாங்கலுக்கு தேவையற்றதாகவும் இருந்தது. எனினும் அழிவைப் புறந்தள்ளி மீண்டு, தமது முன்னேற்றத்துக்கான வியூகத்தை திட்டமிட்டு எய்துவதில் யூதர்கள் பெருவெற்றி கண்டார்கள்.
இக்கதையின் முன்னைய உரையாடலொன்று கூறுவது போல, மனித நாகரீகத்தைப் பரப்பி வாழ்ந்த பெருமை கொண்ட தமிழினத்தின், சாபக்கேடான இந்நிலையில் இருந்து மீள்வதற்கான வழிகளையும், யூதர்கள் போல நாம்தான் கண்டறிந்தாக வேண்டும். இன்று நாம் இழந்திருக்கும் அந்த அரசியல் சாணக்கியம் எமது இனத்தின் முன்னோர்களிடம் இருந்ததல்லவா..?
'எரிற்றியர்களும் இலங்கைத் தமிழர்களும்' என்ற ஆசியின் புனைவுக் கட்டுரையின் சாராம்சப்படி...
'எரிற்றியா தனிநாடாவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் இலங்கை ஈழப் பிரச்சனையிலும் உண்டு. இலங்கையின் தமிழ்ப் பகுதிகள் எவ்வாறு 1832ம் ஆண்டு பிரித்தானியரின் நிர்வாக வசதிக்காக, சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டனவோ, அவ்வாறே ஆட்சி வசதிக்காக 1952ம் ஆண்டு பிரித்தானியர்களால் எரிற்றியாவும் எதியோப்பியாவும் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. இருந்தும் பல போராட்டங்களின் பின் 1993ஆம் ஆண்டு மே மாதம் எதியோப்பியாவில் இருந்து பிரிந்து எரிற்றியா சுதந்திரம் பெற்றது. இதன் மூலம் பிரித்தானியர் செய்த பிழைகள் நேர் செய்யப்பட்டு, எரிற்றிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது. எனினும் சமீபத்தில் (March 2021), இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கை அரசுக்கு எதிராக, ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்துக்கு எதிராக, (இலங்கைக்கு ஆதரவாக) எரிற்றியா வாக்களித்ததைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்….'
இது உணா்த்தும் பாடம், எமக்கான உரிமைப் போராட்டங்கள் வெல்வதற்கான சூக்குமங்களையும் நாம்தான் கண்டறிந்தாக வேண்டும் என்பதே.
தமிழர் வரலாற்றின் கலாசாரச் சுவடுகளும், யுத்த அழிவின் சான்றுகளும் திட்டமிட்டே மறைப்புக்கும், அழிப்புக்கும், திரிபு படுத்தல்களுக்கும் உள்ளாகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் நமககு மீட்சியைப் பெற்றுத் தரப் போவதில்லை என்பதும் அதைவிட உண்மையானது. சர்வதேசத்தின் தலையீடுகள் அவர்களின் நலனுக்கானதே தவிர எமக்கானவை அல்ல. ஆதலால் விடியலொன்று தோன்றும்வரை, வரலாறு மறக்கப்படாது நினைவூட்டப்படலும், ஆவணச் சான்றுகளைப் பாதுகாப்பதும் மிகமிக அவசியமானது. அதற்கான பெரும் கடப்பாடு உலகெங்கும் பரந்திருக்கும் இளையதலைமுறையினருக்கு உரியது.
ஆர்மேனியனான ஹறூத் என்ற கதாபாத்திரத்தின் இனஉணர்வும், தாய்நாட்டுப் பற்றும் மனதுக்கு உவப்பானது. அதே சமயம் உரிமைகளுடன் வாழ முடியாதபடி தாய்நாட்டில் இனங்கிளிடையே பெருகி வரும் மனப்பிறழ்வுகள் தமிழருக்கு வலி தருவதாகும். சில நாடுகளில் பல்லின கலாசாரங்கள் பெருகி வருதல் போன்று இங்கும் அனைவருக்குமான சமத்துவநிலை பேணும் காலம் ஒன்றை எதிர்காலம் தர வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் தமிழர்களிடையே மலிந்திருக்கும் சமூகப் பாகுபாடுகளும், அரசியல் வேற்றுமைகளும் களையப்பட வேண்டும். முன்னுதாரணமாக இருந்தால் மட்டுமே நாம் ஏனைய இனங்களிடம் அதனை எதிா்பாா்க்கும் தகுதியுடையவா்களாகவும் ஆவோம்.
இயற்கையின் பாரபட்சமற்ற நியாயத்தராசில் எந்தவொரு செயலுக்கும் சமமானதும், எதிரானதுமான விளைவுகள் நிகழ்ந்தே வந்திருக்கின்றன. அதிகாரப்போட்டியும், ஆக்கிரமிப்பும் நிறைந்த இந்த உலகில் அதற்கான சந்தர்ப்பங்களும் தோன்றாது போகாது, என உறுதியுடன் நம்புவோம்.
சூட்சுமங்கள் நிறைந்த மனிதவாழ்வில் இலங்கைத் தமிழினத்துக்கு எதிரான சக்கரவியூகத்தை உடைப்பதற்கு இனி ஒரு அபிமன்யு தோன்ற வாய்ப்புகள் இல்லாவிடினும், 'ஆசி'யின் நரசிம்மர்களாவது தோன்றக் கூடும். இங்கு இக்குறியீட்டின் பொருள் உருவங்களின் சேர்க்கையல்ல. தர்மத்தினை நிலைநாட்டும் வண்ணம், அன்பினால் இணைந்த இதயம் கொண்ட இனங்களின் சேர்க்கை என்பதாகட்டும்.
'தலைமுறை தாண்டிய காயங்கள்' கதையை வாசிக்க: https://kantharajahstory.blogspot.com/2021/01/blog-post_87.html#more
* 'காலம்' சஞ்சிகை டிசெம்பர் 2021இதழில் வெளியான தனது இந்தக் கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழுக்காக அனுப்பி வைத்துள்ளார் கட்டுரையாளர் ரஞ்ஜனி சுப்ரமணியம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.