'அதிகாலை வேளையில் அடிக்கடி அந்த உருவம், கனவில்வந்து பாடாய்ப் படுத்துகிறது. முன்னர் பார்த்திராத கோலத்தில், விலங்கினதும் பெண்ணினதும் கலவையானதொரு தோற்றத்தில் அது தோன்றி மறைகிறது. உருவத்தில் பெண்ணின் முகம் சற்றுத் தெளிவாகத் தெரியும்போது, அந்த விம்பம் தன் தாயின் சாயலையொத்து இருப்பதை சயந்தன் உணர்ந்தான். அம்மாவின் கால்களுக்கு இடையே தொங்கும் சேலைப் பகுதியைப் பதித்து ஏணையாக்கி, அதற்குள் தான் இருப்பது போலத் தோன்றிய தருணங்களில் மூச்சு முட்டி அவனுக்கு விழிப்பு வந்துவிடும்...

அம்மாவின் மடியில் தான் இருந்ததைப் போன்று, வரிச்சித்திரத்தில் தாய்விலங்கும் குட்டியும் இணைந்திருந்ததைச் சயந்தன் அவதானித்தான். அந்த வரிவடிவம் கங்காரு என்னும் மிருகத்தின் உருவம் என அறிந்ததும், தான் பார்த்த கோட்டுச் சித்திரத்துக்கு முடிந்தவரை முழுமையான உருவம் கொடுத்து யோசித்தான்.....'

இந்த வரிகளை வாசிக்கும் போது கங்காருவுடனும் சயந்தனுடனும் சேர்ந்து,  உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃபுரொய்ட் (Sigmund Freud )உம் ஞாபகத்தில் வரக் கூடும். கனவுகளுக்கு அர்த்தம் சொன்னவர்தான் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இந்த உளநோய் மருத்துவர்.

இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை பிணியாளருடன் உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.

இலங்கையின் யுத்த களம் தந்த அதிர்ச்சிகளின் விளைவாகக் குறைமாதத்தில் பிறந்தவன் சயந்தன். அவனது இன்கியூபேட்டராக அன்னையின் மடியே இருந்தது. தாயின் மடிச்சேலையில் அமர்ந்து வாசமுணரும் மிகவும் சிறிய வயதில் தாயை யுத்த களத்தின் எறிகணை வீச்சில் பறிகொடுத்தவன். 'தாயைத்தின்னி' என்று தந்தையால் உள்மனதில் உணரப்படுபவன்.

தாயகத்தில் , கோட்டுச் சித்திரமாக கங்காரு மடி சுமக்கும் குட்டியைப் பார்த்து , தனது தாய்மடியின் நினைவில் ஏங்குபவன். அதே கங்காரு தேசத்துக்கு அகதியாய் தந்தையுடன் படகில் வந்திறங்குபவன். 

அவனது மனநிலை விசித்திரமானது. சிறுவனான சயந்தனை அடிக்கடி வாட்டும் கனவுதான் ஆரம்ப வரிகள். கனவுகளை மொழிபெயர்த்த சிக்மண்ட் ப்ராய்ட் இவ்வாறு கூறுகிறார்.

'வெளிப்படுத்தப் படாத உணர்ச்சிகள் ஒருபோதும் இறக்காது, அவை உயிருடன் புதைக்கப்படுகின்றன, பின்னர் அசிங்கமான வழிகளில் வெளிப்படும்....'

'கனவுகள் நேற்றைய மிச்சத்திலிருந்து கட்டமைக்கப்படுகின்றன...’

'கனவுகள் மிகவும் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் போது, அவை பெரும்பாலும் மிகவும் ஆழமானவை...'

‘கங்காரு’ ஒரு சாதாரண சிறுகதையாக தோன்றக்கூடும். ஆனால் ஆழ்ந்த உளவியல் சார்ந்தது. இந்த உளவியலின் அடிப்படையில் சயந்தனை நோக்கினால் , தந்தையுடன் அகதியாக அவுஸ்திரேலியாவில் வந்திறங்கியதன் பின்னான சயந்தனின் விநோத நடைமுறைகளுக்கான காரணத்தினை எளிதாக உணர முடியும்.

குறைமாதமாக , தாயின் மடியமர்ந்து அவளின் உடல் வெப்பம் உணர்ந்து மார்பில் பால் குடித்து வளர்ந்த தானும் , கங்காருவின் அடைப்பப் பையினுள் பால் உண்டு முழுவளர்ச்சி காணும் கங்காருக் குட்டியும் ஒன்றே என்ற விநோத எண்ணத்தின் வயப்படுகிறான். அதுவே சிந்தனையாக முழுமனதிலும் வியாபித்து , தன்னையே கங்காருவாக உணர்ந்து விநோதமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறான்.

இந்தக் கதை இந்த உளவியலை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறதா ? இல்லை.

சில சிறுகதைகள் சிறுகதைகளே அல்ல. ஒரு நாவலாக விரிந்து எழும் அளவிற்கு சம்பவக் கோர்வைகளையும் அனுபவங்களையும் விஞ்ஞான அறிவியலையும் அக உணர்வுகளையும் ஒன்று சேர தன்னகத்தே விரித்து, பிரமாண்டமான வியாபகத்தைக் கொள்வன.

இவ்வகையான உணர்தலைத் தரக்கூடிய கதைகளாக இனம் காண்பவற்றில், பூங்கனியியல் தொழில்நுட்ப விஞ்ஞானியான பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்களின் கதைகள் எப்போதுமே மனதில் இடம்  பிடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை . 'கங்காரு' சிறுகதையும் ஆசியின் படைப்பு. 

அத்துடன் சிறுவர் உளவியலை பாதிக்கும் கல்விமுறை அழுத்தங்கள் , பாலியல் துஷ்பிரயோகம் , யுத்த நிலைமையின் சீரழிவுகள், புலம்பெயர்வின் கலாசார சிக்கல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வேறும் பல கதைகளை எழுதியுள்ளார். உதாரணமாக ,

தேன்சுவைக்காத் தேனீக்கள்,
மறுக்கப்படும் வயசுகள்,
நீலமலை இளவரசி,
கையது கொண்டு மெய்யது பொத்தி,
நரசிம்மம்
ஒட்டுக்கன்றுகளின் காலம் .

உலகெங்கும் இருபதிற்கு மேற்பட்ட நாடுகளில் தனது புலமைசார் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஆசியின் கதைகளின் கருவும் கதைக்களங்களும் மிகப் பரந்தவை.

ஆசி பற்றி அவரது முன்னைய படைப்புகளின் முன்னுரைகளில் மிகப் பிரபல இலக்கிய ஆளுமைகள் கூறிய கருத்துகள் இங்கு நினைவு கூரப்பட வேண்டியவை.

‘ கறுத்தக் கொழும்பான் ’
 எஸ். பொ. அவர்களின் முன்னீடு கூறுகிறது :

'மண்பற்றுள்ள எவனும் தான் பிறந்த மண்ணையே தனது வாழ்க்கையின் மையப்புள்ளியாகக் கருதுவான். எனது எழுத்து வாழ்க்கையில் எண்பதுகளில் பூண்ட அஞ்ஞாத வாசத்தினாலும் ஆபிரிக்காவில் ஏற்பட்ட புதிய அநுபவங்களினாலும் , மதர்ந்து தொண்ணூறுகளிலே மீண்டும் எழுத்துப் பணியைத் தொடங்கிய போது, மெய்யாகவே நான் இழந்து போன ஈழவாழ்க்கையின் திருக்கோலங்கள் என் மனசிலே வலம் வந்தன, இழப்பின் வலிகள். அந்த வலிகள் என்னை பாடாய்ப் படுத்தின '....

அதே நூலின் முன்னுரையில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுவதும் இதனையே வேறோர் தொனியில் வழிமொழிகிறது.

'தன்னைப் பற்றிய உண்மையை எழுதுபவன் உலகைப் பற்றிய உண்மையை எழுதுகிறான். உலகை சரியாக எழுதுபவன் தன்னைப் பற்றி எழுதி விடுகிறான் என ஒரு கூற்று உண்டு. ஆபிரிக்கா அரேபியா ஆஸ்திரேலியா என உலவும் இந்தப் பெரும் பயணியின் கட்டுரைகள் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் என்றே ஒலிக்கும் விந்தையை இப்படித்தான் புரிந்து கொள்கிறேன் '.....

இருபது வயதுகளின் முன்பாதியில் புலமைப் பரிசிலில் ஜேர்மனி சென்று, உயர்கல்வியில் Ph.D முடித்து இன்று பேராசிரியராக அவுஸ்திரேலியாவில் வாழும் ஆசி அவர்களும் தனது தாயகமண் மீதான ஈர உணர்வுகளுக்கு விதிவிலக்கானவர் அல்ல. எந்தப் படைப்பிலும் தனது தாயகத்துடனான தொப்புள் கொடி உறவைக் கதை மாந்தரினூடாக நிதந்தோறும் புதுப்பிப்பவர்.

யுத்தகாலத்தின் நேரடிச் சாட்சியாக வாழாதவர் என்பதால் , சமூக ஊடகங்களூடாக கிடைத்த உண்மைத் தரவுகளின் அடிப்படையில் அக்காலகட்டத்தின் வலிமிகும் பின்விளைவுகளை வெளிப்படுத்த நினைப்பவர். அவ்வாறான ஒரு பாத்திரப் படைப்பே சயந்தன்.

யுத்தமொன்றினால் வரும் உறவுகளின் இழப்பு, மானுட மனமொன்றில் ஏற்படுத்தும் பெரும் பாதிப்புகளை விளக்குவதற்கான ஒரு குறியீடு சயந்தன் . யுத்தத்தினைக் காரணமாக வைத்து புலம்பெயரும் பொருளாதார அகதிகளின் பிரதிநிதியாக சயந்தனின் தந்தை.

 'கள்ளக்கணக்கு' சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரையில் எழுத்தாளர். அ.முத்துலிங்கம் கூறுகிறார்:

'இந்தக் கதைகளில் எனக்கு இருக்கும் ஈர்ப்பு என்னவென்றால் இவை தனியே விஞ்ஞானம் பற்றிப் பேசுபவை அல்ல. பல்வேறு நாட்டு மக்களின் வாழ்க்கை கலாசாரம் வரலாறு போன்றவற்றிலும் எங்களுக்குப் பரிச்சயம் ஏற்பட வைக்கின்றன.....'

சிறுகதையைப் பற்றி பலபேர் பலவிதமாகச் சொல்லி இருக்கின்றார்கள். ஒரு சிறுகதையில் இருந்து, சிறுகதையைக் கழித்தபின் எது மிஞ்சுகிறதோ அதைத்தான் நாம் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறோம்....'

அந்த கண்ணோட்டத்தின் கீழ் 'கங்காரு' எனும் இக்கதையில் இருந்து நாம் வீட்டுக்கு எடுத்துச்செல்வதென்ன?

இங்கு எழுத்தாளர் எடுத்தாண்ட பரப்புகளில் முதன்மை பெறுவது யுத்தத்தின் மூலமான சிறுவரின் உளப்பாதிப்பு. அகதி வாழ்வின் அவலம். நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்கள் மனித வாழ்வியலிலும் உடலியலிலும் சூழலிலும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் தரும் மாற்றங்கள். இவற்றில் பல்தேசியக் கம்பனிகளின் இலாபநோக்கம் கொண்ட பங்கு.

அவுஸ்திரேலிய ஆதிவாசிகளிடமிருந்து பாரம்பரிய பிரதேசங்களைக் களவாடிய ஆங்கிலேய ஆதிக்க வர்க்கத்தினர் , அதே பூர்வகுடிகளின் மேல் பிரயோகிக்கும் மறைமுகமான குயுக்தி மிகுந்த அடக்குமுறை. ஆக்கிரமிப்பாளர்களாக வந்தாலும், இன்று அகதிகளாக தம்தேசம் வந்தடைந்தோரை சிக்கலான நடைமுறைகளுக்கு உள்ளாக்கும் மனவியல்.

வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு மிகக் கனதியான விடயங்கள்.

ஆசி புனைகதையாளராக தன்னை நிலைநிறுத்தும் போதெல்லாம் , தன் உயர் கல்விநிலை சார்ந்த விஞ்ஞான அறிவினையும் சமூகத்தின்முன் வைப்பதைக் கடமையெனக் கொண்டுள்ளார். அதுவும் பாமரனுக்கும் புரியும் எளிய மொழிநடையில்.

இந்தக் கதையில் இலங்கைத் தேசத்தின் இனப்பிரச்சனையானது ஏதோ ஒருவகையில் யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் மனிதசமுதாயத்திற்கு ஏற்படுத்தும் மனஉளைச்சல் மற்றும் மனப்பிறழ்வுகள் நிலையினை சயந்தன் எனும் பாத்திரப் படைப்பினூடாகக் கூறுகிறார்.

 இவ்வகையான யுத்தத்துக்குப் பிந்தைய உளச் சீர்கேடுகள் மனிதரை மட்டுமல்ல மிருகங்களையும் கூட தாக்குகின்றன என்பதை, எழுத்தாளர் ப.தெய்வீகனின் 'ரம்போ' எனும் அருமையான சிறுகதையொன்று கூறுகிறது. இங்கு நடத்தை மாற்றத்தினால் பாதிக்கப்படுவது, ஈராக்கின் யுத்தத்தில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த அவுஸ்திரேலிய இராணுவப் பிரிவைச் சேர்ந்த 'ரம்போ' எனும் நாய்.

ஆசியின் 'கங்காரு' கதையில், அதன் வாழ்க்கை வட்டத்தினையும், கங்காருக் குட்டி 'பலாக் கொட்டை' அளவில் குறைமாதமாக வெளியேறி தன் 'தாய் காட்டும் வழியில்' அடைப்பப் பையேறி மீதி வளர்ச்சியைக் காணும் விநோத படிமுறையினை கதையின் போக்குடன் இணைக்கிறார்.

அத்துடன் புரோயிலர் கோழி வளர்ப்பைப் போன்று சதைப்பிடிப்ப்பான கங்காரு இறைச்சியினை விற்பனைக்காக பெறும் நோக்கத்துடன் , அவை தாயின் அடைப்பப் பையை அடைய முதல் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு ஆய்வுகூடமோன்றில் செயற்கையாக உணவூட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன. 

இந்த ஆய்வுகூடம் சட்ட விரோதமானது.

அகதியாய் வந்து இங்கு வேலை செய்யும் சயந்தனுக்கு இந்நடைமுறை பிடிக்கவில்லை. சயந்தனின் ஆழ்மனச் சிக்கலையும் கங்காருவின் வாழ்க்கை வட்டத்தையும் இங்கு தன் புனைவு மொழியால் இணைக்கிறார் ஆசிரியர். கங்காருக் குட்டிகளின் இயற்கையான வளர்ச்சிப் படிமுறையினை விரும்பிய சயந்தன் என்ன முடிவினை எடுக்கிறான் என்பது சுவாரசியமானது.

கதையின் நிறைவு வரிகள்...

'ஆய்வுகூட மையத்தின் வாசல் கதவு உடைக்கப்பட்டு இன்கியூபேட்டர்கள் சிதைக்கப்பட்டு உள்ளன. கங்காருக் குட்டிகளைக் காணாது நிர்வாகம் திகைக்கின்றது. இவ்வளவு நடந்தும் பொலிசார் அழைக்கப்படவில்லை. CCTV கமராவில் மனிதன் பாதி மிருகம் பாதி கலவையான தோற்றத்தில் மங்கலான உருவமொன்று பதிவாகி இருந்தது’

புதிய பரிமாணத்தினைத் தொட்டு நிற்கும் இக்கதையில் , புனைவு நிஜம் என்னும் மூலச்சரட்டின் இரு அந்தலைகளும் சந்திக்கும் இடமானது இயற்கையோடு இணைந்து இயைந்த, ஒடுக்குதல்களற்ற ஆரோக்கியமான இயல்பு வாழ்வினை வேண்டி நிற்கின்றது.

கங்காருவின் மடிபோல உவமிக்கப்பட்ட தாய்மடியை , யுத்தத்தில் பறிகொடுத்த அவலமும் அதன் காரணமான ஏக்கமும் வாழ்க்கையின் இயற்கையான வளர்ச்சிநிலைகளில் சயந்தனுக்கு ஆர்வத்தை வளர்ப்பது உருக்கமாக உணர்த்தப்பட்டு உள்ளது.

இயற்கையின் மீது மனிதனால் தொடுக்கப்படும் பிரகடனப்படுத்தப் படாத போர்களென, விஞ்ஞானமும் அதன் தொடர்ச்சியான விகாரங்களும் பிறழ்வுகளும், பூகோளத்தின் சமநிலையைப் பாதிப்பதை அண்மைய காலம் உணர்த்தி வருகின்றது.

இயன்றளவில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்கும் படைப்பாகவும் இதனை இனங்காணலாம்.

இக்கதை, கங்காருவைப் போலவே திண்மையான பாய்ச்சலுடன் எழுதப்பட்டிருப்பினும், எழுத்தின் கலைத்துவம் வெளிப்படும் சில இடங்கள் ரசனைக்குரியன.

//கடல் அலைகள் உக்கிரமாக சீறி எழுந்து கீழே விழும்போது, கனவில் காணும் உருவம், தசைநார்கள் முறுக்கேறித் திரண்ட தன் பின்னங் கால்களை உதைத்து மேலே எழும்புவது போன்ற தோற்றத்தைக் கண்டு பிரமித்தான்//....

அழகிய விவரிப்பு.

தமக்காக ஒரு நிலம் வேண்டும் என்ற ஈழத்தமிழரின் தீராத அபிலாஷையின் வடிவமாகவும் , காணி நிலம் வேண்டுதல் அல்லது 'காணிபிடித்தல்' என்னும் அடங்காத மண்ணாசையின் மேல் வடக்கு மக்கள் கொண்ட பேரவாவின் வடிவமாகவும் கீழ்காணும் வரிகள்...

//கடலில் வந்த அகதிகளை நவ்ரு தீவில் விட்டார்கள். இந்த தீவில்தான் அகதிகளுக்கான முகாம்களை அவுஸ்திரேலிய அரசு அமைத்திருக்கிறது.

தீவு என்றாலும் இது ஒரு தனிநாடு. இப்படியான ஒரு தீவை தமிழர்கள் வாங்கினால் என்ன? என்ற தோரணையில் சயந்தனின் அப்பா கண்களை அலையவிட்டார்.//

நியாயமான ஆசைதான்.

முதல் வாசிப்பில் அக உணர்வுகளைத் தட்டி எழுப்பாத அல்லது சில சம்பவங்களுக்கான காரணம் புரியாத சில கதைகள் , மறுவாசிப்பின் போது பெரும் பிரமிப்பைத் தருகின்றன.

இலங்கை எழுத்தாளர் பிரமிளா பிரதீபனின் ' விரும்பித் தொலையுமொரு காடு' , கானகத்தினை இல்லறத்திற்கான குறியீடாக உருவகித்த மொழியாளுமை நிறைந்த படைப்பு. 

அவ்வாறே  கதாநாயகனின் குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணம் புரியாத ஒரு கதை , எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஒரு கோப்பை காப்பி'. 

இங்கு புறச்செயல்களால் பரந்த மனதுடையவனாகத் தோன்றும் கதாநாயகன் , மறைமுகமாக ஆணாதிக்க மனதினை கொண்டிருந்ததால்தான், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தான் என்பது எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் அக்கதைக்கு எழுதிய விமர்சனப் பார்வயின் பின்தான் புரியாத வாசகருக்கு சில தெளிவுகளைத் தந்தது.

அது போலவே முதல் வாசிப்பில் இயந்திரத் தனமான கதையாக சிலருக்கு தோன்றக் கூடிய 'கங்காரு' சிறுகதையும், மறுவாசிப்புகளின் போது கங்காருவின் பின்னங்கால்கள் மற்றும் வால் போலவே பலமான தாக்கங்களைத் தரக்கூடியது.

பணச்சடங்கு சிறுகதைத் தொகுப்பின் அணிந்துரையில் படைப்பாசிரியர் பற்றி நாஞ்சில் நாடன் கூறுவது போல ,

'புனைவோ அபுனைவோ கட்டுரையோ கதையோ வாசிப்பின் ஈர்ப்பைக் காப்பாற்றும் படைப்புமொழி, உத்தி , தொனி யாவுமே வெற்றிக்கான ஆயுதங்கள் என்பதறிவோம். ஆசி கந்தராஜா திறல் மிகுந்த வில்லாளியாகவும் விறல் கொண்ட சொல்லாளியாகவும் இருக்கிறார்.....'

என்பதை வாசகரும் நிச்சயமாக வழிமொழிவர். 

ஆசி கந்தராஜாவின் 'கங்காரு' சிறுகதை இணைப்பு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.