தந்தையர்தினக் கவிதை!


தந்தையர் தினமதினில் நாமெம்
தந்தையர்நினைவுகளைமீட்டிடுவோம்
சிந்தையில் அவரெமக்காய் பட்டிட்ட
சிரமங்களெண்ணிவணங்கிடுவோம்

தோளில்தூக்கி உயர்வினை நாட்டியும்
துன்பங்கள் நீக்கிநல்வழி காட்டியும்
பாரிலெம்மைச் பலசிறப்புகள் கண்டிட
பாதைபோட்ட தந்தையரை மறவோம்

அப்பாவினன்பதுவெளித்தெரியாது
ஆழ்மனதில் புதைந்து கிடப்பது
எப்போதுமெம் உயர்வை விரும்புவது
என்றுமெம் மனதில் அழியாதிருப்பது

கந்தைசுற்றி வாழ்ந்திட நேரினும்
கல்வியைதம்பிள்ளைகட்குவழங்குவர்
விந்தைமனிதரிந்த அப்பாக்களை
வாழ்வில் என்றுமே போற்றிடுவீர்

தந்தையர்தினமதில்தந்தையைநினை
தந்தையினுழைப்பின்உயர்வையுணர்
முந்தையதலைமுறையிதையறியும்
மனதிலிதைநம்பிள்ளைகள்கொள்வீர்

தந்தையினன்பினில்தன்னலமில்லை
தன்பிள்ளைகள்சிறப்பேமனதிலுண்டு
சிந்தையை மகிழ்விக்கும் நினைவுகள்
சிரத்தையுடன் என்றுமே போற்றிடுவீர்

தன்னலம் துறந்து தம்மக்களுக்காய்
தளர்வின்றியே நாளும் உழைத்திடும்
மனநலம் கொண்டிட்ட நண்பர்களே
தந்தையர் தின நல்வாழ்த்துகள்

தம்மக்கள் வளர்ச்சியை நாளும்கண்டு
தம்முள் மகிழ்ந்திடும் தந்தையர்கள்
அம்மக்களிடம்தம்மன்பினைமறைத்து
அதட்டலாய் நடித்திடுவர் புரிந்திடுவீர்

தந்தையர்தினவாழ்த்துகளையின்று
தனயர்கள் புதல்விகள் கூறிடுவீர்
எந்தையரின்றி நாமில்லையே யவரை
ஏற்றியும் போற்றியும் வணங்கிடுவீர்

தந்தையர் தினமாம் இன்றிங்கு
தந்தையை நானும் நினைந்தேன்
மைந்தன் எனைநன்றே வளர்த்தவர்
முந்தைய நினைவுகள்சில மீட்டினேன்

சிந்தையில் நிறைந்தவர் என்தந்தை
சங்கதிகள் பலவறிந்தேன் பின்நாளில்
எந்தையின் தோளினில் கிடந்தவன்
எழுத்தினில் கண்டேன் அவர்குணம்

செந்தமிழ் சூழலில் பிறந்தவன்
செம்மொழி என்றாரன்றே தந்தை
பைந்தமிழ் புலவர் மார்பினிலன்று
பிள்ளையிவன் துயில் கொண்டான்

தெள்ளுதமிழ்ப் புலவர் தாலாட்டில்
தமிழினைக் கேட்டே வளர்ந்தவன்
அள்ளுதமிழ் சுவையினை ஊட்டியவர்
அருந்தமிழ் அறிவினைத் தந்திட்டார்

வஞ்சனை செய்திடு வோரும்
வழிப்பறி செய்திடு வோரும்
விஞ்சிய வீரர்கள் ஆகிடலோ
விழித்தெழுந்து போராடு என்றார்

தனித்தமிழ் என்றே முழங்கினார்
தண்டமிழ் பெயரினைச் சூட்டினார்
இன்பத்தமிழின்தலைவன் முருகனின்
இளஞ்சேய்எனும்பெயரையளித்தார்

பிஞ்சு வயதினில் ஊக்கமுடனெனை
படிக்க வைத்தார் அகல்விளக்கை
விஞ்சுபுகழ் வரதராசனார் நாவல்
வாழ்வினில் இன்றும் வழிகாட்டுதே

மேடைப் பேச்சினை பழக்கினார்
மேதினியில் ஆளுமை ஊட்டினார்
காடையரை எதிர்த்திட வித்திட்டார்
கேண்மையை மதித்திடக் கூறினார்

கல்வியின்சிறப்பைக்கூறிவைத்தார்
கரவுதைப் பந்துகள் ஆட வைத்தார்
செல்வம் கல்வியே அழியாதென்றார்
சொல்பொருள்நயம் கற்க வைத்தார்

தமிழர்பழம்பெருமைகள்பகர்ந்திட்டார்
தாழ்தமிழரின்நிலை காட்டிவைத்தார்
அமிழ்தினும் இனியநம் மொழியின்
அருமைபெருமையெலாமுரைத்தார்

மழலைகள்நூல்கள்வாங்கித்தந்தார்
மார்பில்கிடத்திகதைகள்சொன்னார்
குதலைமொழிகவிதைகளெழுதினார்
குழந்தையெனையிருத்திப் பாடினார்

மேடைபேச்சுகளுக்கழைத்துச்சென்று
மன்றில்தன்னருகேயிருத்திவைத்தார்
மடியிலிருத்திதன்னிளமைக்கதை
மகிழ்வுடன் கூறிப்புரிய வைத்தார்

வாங்கினில்குப்புறக்கிடக்கையிலே
வாடாமுதுகில்படடாவென்பார்
சவாரிசெய்திடும்செல்லப்பிள்ளைக்கு
சுவையாய்க்கதைபலவேசொல்வார்

முற்றவெளிக்குக் கூட்டிச் செல்வார்
மாட்டுவண்டில்சவாரிகாட்டிமகிழ்வார்
விற்கும்போளியும்பாலும்தந்து
விருப்புடனதோளில்தூக்கித்திரிவார்

சிறீலங்காபுத்தகசாலைசெல்வோம்
சிறந்தநூல்கள்வாங்கித்தருவார்
அலங்காரப்படத்துடன்பலநூல்கள்
அவற்றினைவாசிக்கஊக்கம்தருவார்

என்னைப்போலிவன்உருவமென்பார்
என்பேச்சைக்கேட்டுதன்போலென்பார்
இன்பத்தமிழின்இளையோன்முருகன்
இவனின்பெயரைச்சூட்டி யழைத்தார்

அப்பாவின்அணைப்பில்ஒன்பதாண்டு
அவர்தோளில்மார்பில்வளர்ந்தேன்
தப்பாமலவர்தந்ததமிழறிவினால்
தமிழில்சிறிதுஅறிவினைப்பெற்றேன்

தந்தை யூட்டிய தமிழறிவினால்
தமிழ்ப்பேரன்பர்நூல்களைபதித்தேன்
எந்தையின் எழுத்துகள் பலதையும்
ஏற்றமுடன்நன்னூல்களாக்கிவிட்டேன்

பிறந்ததன் பயனதுவே ஆனதோ
பிழையின்றிஎன்பணியாற்றிவிட்டேன்
சிறந்தவரென்தந்தையதையுலகறியும்
சிந்தையில்நினைத்ததைமுடித்தேன்

தந்தையர் தினத்தினில் நானும்
தக்கவென்தந்தையைநினைந்தேன்
மைந்தர்கள் இருவரின் தந்தையாய்
மதிப்பிட்டேன் தந்தையென் வளர்ப்பை

அந்நியநாட்டினில்அல்லல்களிடை
அப்பனாய்முடிந்ததைவிதைத்தேன்
அறுவடைக்காலமென்னும் காணலை
அதுவோர்நாள்வந்திடும் தன்னாலே.

தன்னலம்துறந்துதம்மக்களுக்காய்
தரணிதன்னில்நாளும்உழைத்திடும்
தந்தையர்நண்பர்கள்உங்களுக்கு
தந்தையர்தினநல்வாழ்த்துகள்.

தம்மக்கள்வளர்சியைநாளும்கண்டு
தம்முள்மகிழ்ந்திடும்தந்தையர்கள்
அம்மக்களிடம்தம்மன்பினைமறைத்து
அதட்டலாய்நடித்திடுவர் புரிந்திடுவீர்

தந்தையர்தினவாழ்த்துகளைஇன்று
தனயர்கள் புதல்விகள் கூறிடுவீர்
எந்தையரின்றி நாமில்லையே யவரை
ஏற்றியும் போற்றியும் வணங்கிடுவீர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.