எனதருமை சிறிய தமக்கையார்(தமிழ்) அமரர் செல்வி தமிழரசி வேந்தனார் அவர்களின் 70 ஆவது பிறந்ததினமின்று. தனது 26 வயதில் , 29.06.1979 இல் இயற்கையெய்திய எனதருமை சின்னக்கா "தமிழ்"( தமிழரசி) உடனான என் நினைவலைகள் சிலதை, இங்கு அவரைத் தெரிந்த உங்களில் சிலருடனும் , எனது குடும்பத்தை அறிந்த சிலருடனும் பகிர்ந்து கொள்கின்றேன். தமிழ் தமிழ் என நாள்தோறும் நானழைத்த என் சிறியதமக்கை. எல்லோரையும்,அனுசரித்து பொறுமையாய் நடந்திடும் என்னருமைத் "தமிழ்".

மூத்த மகள் என, என் மூத்த தமக்கையாரிடம் எம் பெற்றோர் காட்டிய அதீத அன்பு..  மூத்த மகன் என ,என் தாயார் ,என் அண்ணனிடம் காட்டிய பாசம்.. இளையவன் - சின்ன மகன் - தன்னைப்போன்ற உருவமும் குணமும் கொண்டவன் என, என் தந்தை என்னிடம் கொண்ட அளவிலாத பாசம், தாயாரிற்கோ தன் கணவரைப் போன்றவன் என்று என்னில் ஒரு பற்று..

இந்தப் பின்னணியில், அண்ணா பிறந்து ஒன்றரை வருடங்கள் இடைவெளியில் பிறந்த என் சிறிய தமக்கை தமிழ், தனக்கு உரிய பாசம் , அக்கறை,தன் பெற்றோர்களிடம் இருந்தும், தன் உடன் பிறப்புகளிடமிருந்தும் கிடைக்கவில்லையே என்ற ஒரு ஆதங்கத்தை தன்மனதில் கொண்டிருந்தார்.

என்னிலும் 5 வயது மூத்தவரான அவர் , நான் தன்னை சின்னக்கா என அழைக்கவேண்டும் என விரும்பினார். ஆனால் நான் மற்றவர்கள் கூப்பிடுவது போலவே, அவரை தமிழ் , தமிழ் என்றே அதட்டலாகக் கூப்பிடுவேன். ஒருநாளைக்கு நூறு தடவைக்கு மேல் " தமிழ்" தமிழ் என்று அழைத்து, அவரைக் கொண்டு வேலை வாங்குவேன். அவர் இறந்த பின்னும், பல நாள்கள், தமிழ் தமிழ் என , என்னையறியாமலே நான் வீட்டில் கூப்பிடுவதுண்டு. ஏன் அவர் இறந்து 12 வருடத்தின் பின் ,நான் மணமுடித்த எனது மனைவி கலையரசி(கலா) உடன், இலண்டனில் தனிக்குடித்தனம் செய்கையில் , ஆரம்ப காலங்களில், எனது மனைவியை என்னை அறியாமலே, தமிழ் -தமிழ் என அழைத்ததுமுண்டு.

தமிழுக்கும் எனது அண்ணாவிற்கும் மிகவும் இறுக்கமான பாசப் பிணைப்பு இருந்து வந்தது. அதுவும் எனது தமையனார் கொழும்பு மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் இருக்கையில், தமிழ் களனி வித்தியலங்காரா பல்கலைக் கழகத்திற்கு 1974 சென்று, 1978 வரை அங்கு தனது பட்டப் படிப்பை படித்தார். அப்போது வெள்ளவத்தையில் வசித்துவந்த அவர் , மொறட்டுவையில் இருந்து தனது தமையன், தன்னிடம் ஒவ்வொருநாளும் வந்து செல்லவேண்டும் என்று அன்புக் கட்டளையிடுவார்.

நான் எனது மேற்படிப்புக்காக 1978 இல் கொழும்பு வந்தேன். அப்போது அண்ணா , தமிழ் , நான் மூவரும் கொழும்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 1978 ஆடி மாதம் தொடங்கி , 1979 பங்குனி வரை ஒன்றாக வாழ்ந்தோம். மிகவும் இனிமையான காலமது. அப்போது தமிழ் ,சிலசமயம் எனக்கும் அண்ணாவிற்கும் இடையில் ஏதும் பிணக்குகள் வருகையில், ஓர் தாய் போன்று அக்கறையுடன் , எம்மைச் சாந்தப்படுத்தி , அமைதியடைய வைத்துவிடுவார்.

அவர் தனது பட்டப்படிப்பை முடித்து , யாழ் சென்று , தனது முதுமாணிப் படிப்பிற்கான ஆயத்தங்களை மேற்கொண்டார். அக் காலத்தில் கொழும்பிலிருந்து வாரவிறுதி நாள்களில், அடிக்கடி என் அம்மாவைக் காண யாழ் செல்லும் நான் ,அங்கு நிற்கும் சில நாள்போதுகளில் , சற்றுச் சோர்ந்து காணப்படும் தமிழைப் பார்த்து , "என்ன நீ வேலைக்குக் கள்ளமடிக்கின்றாய்" எனச் சீண்டுவதுண்டு.

ஆனால் அவரின் நோயின் தொடக்கத்தை, அதன் பாதிப்பை நாம் உணரவில்லை. அவரிற்கும் அது தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட அவர் , யாழ் பொது வைத்தியசாலையில் Apr 1979 அனுமதிக்கப் பட்டார். அப்போதுதான் அவரின் நோயின் தீவிரத்தை நாமறிந்தோம் .

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக, அவரை இந்தியா அழைத்துச் செல்ல முயற்சிகள் செய்தும் ,அவர் உடல்நிலை பிரயாணத்திற்கு உகந்ததல்ல என வைத்தியர்கள் கூறியதால் , எம்மால் அவரை இந்தியா கொண்டு செல்ல முடியவில்லை

இறுதியில் மானிப்பாய் தனியார் வைத்தியசாலையில் அவரை அனுமதித்தோம். 29.6.1979 அன்று , மிகவும் சோர்ந்திருந்த அவர் , திடீரென மிகத் தெளிவாகக் கதைத்தார். என் கையைப் பற்றி , உனக்கேன் இரண்டு அக்கா, ஒரு அக்கா போதும். நன்றாகப் படி, கோபப்படாதே. என்றெல்லாம் தெ‌ளிவாகக் கூறிய என்னருமைச் சின்னக்கா , அவ்வாறு கதைத்து இரு மணிநேரத்தில், இறைவனடி சேர்ந்து விட்டார்.

தமிழ் மறைந்து 44 வருடங்கள் ஆகின்றன. அதன்பின் அண்ணா - அம்மா என என் சொந்தங்களையும் இழந்தேன்.

தந்தை தொடர்ந்து தம்பி சிறிய
தமக்கை பின்னர் அண்ணன்
பாசமிகு மிகு அன்னையென
பிரிந்தனர் உலகினை விட்டே
இறந்தவர் நினைவுகளில் நானும்
இடையிடையே ஆழ்ந்திடு கின்றேன்
மறந்து இவரைவாழ முடிந்திடுமோ
மனதினில் பல நினைவலைகள்
சின்ன வயதினில் ஒன்றாயன்று
சீருடன் வாழ்ந்த இனியகாலங்கள்
என்னவென்றுசொல்வேன்நானுமென்
எண்ணங்களிலவர் வாழ்வாரென்றும்.

தமிழை அடிக்கடி நினைப்பேன் . அவரின் பொறுமையை நினைந்து வியக்கின்றேன். கடந்த 32 வருடங்களாக , என் மனைவியைக் காண்கையில், அவரில் என் தமிழை - தமிழின் அடக்கம் - ஆதரவு - பொறுமை- அனுசரனை எல்லாவற்றையும் கண்டு வருகின்றேன்.

தமிழ் என் நினைவுகளில் என்றும் வாழ்வாள் .

நினைவுகள் அழிவதில்லை.
நெஞ்சினில் நிலைத்திருக்கும்.
தமிழின் நினைவுகளும் என் மனதில் அழியாதென்றும் நிலைத்திருக்கும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.