நண்பர்களே! நாம் பலருடன் பழகுகின்றோம். சிலரை நம் நண்பர்களாகக் கொள்கின்றோம். பல வழிகளிலும் உண்மை நட்புடன், எம் நண்பர்களின் இடுக்கண் காலங்களில் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்கின்றோம். சில காலங்களின் பின் , எம்மிடமிருந்து பல பயனுள்ள உதவிகளை உரிய காலத்தில் பெற்றுப் பயனடைந்த சிலர், தம் இன்னல்கள் தீர்ந்து சுகமாக வாழும் காலத்தில், தாம் இன்னல் பட்டிருந்த காலத்தில் தமக்குதவிய நண்பர்களின் உதவியின் உயர்வை , அதனால் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்து விடுவார்கள்.

இது என்றாலும் பரவாயில்லை. இவர்களின் இன்னல்களை யார் அகற்றிவைத்தார்களோ , அவர்கள் இன்னலுற்று நெருக்கடியான நிலையில் இருக்கையில் , தமக்குதவிய அவர்களின் இக்கட்டான நிலைமையைத் தெரிந்தும், இவர்கள் அவர்களைக் கண்டும் காணாததும் போல் இருந்து விடுவார்கள். அவர்களுடன் கதைத்தால் , எங்கே அவர்கள் ஏதேனும் உதவி கேட்டு விடுவார்களோ என எண்ணி விலகி விடுவார்கள்.

இது இன்று நேற்று நடப்பதல்ல. காலங் காலமாக இப்பேர்ப்பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து வந்துள்ளார்கள் - வாழ்ந்து வருகின்றார்கள்- வாழ்ந்து வருவார்கள். இதை ஒளவையாரின் ஓர் சங்ககாலப் பாடல் மூலம், என் தந்தையார் மிக அழகாக விளக்கியுள்ளார்.

அதனை இன்றிங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.


புள்ளும் பூவும்  (மாணவர் தமிழ் விருந்து - பக்கம் 157-160)

புலமை, புலவனின் உள்ளப் பெருக்கு. புலமை பெருகி வாழ்கின்ற உள்ளத்திலேயே, தெளிவும் இனிமையும் சேர்ந்து வாழ்கின்றன. அறமும், அன்பும், புலமை உள்ளத்தின் ஊற்றுக் கண்கள். ஒளவையாரின் புலமை உள்ளம் அமுத சுரபி போன்றது. மக்களின்வாழ்வை வழி வழியாக மலர்த்தி வளம் படுத்துகின்ற சிறப்பு, ஒளவையாரின் புலமைக்கே உரியதாகும். மக்களுடன் உயிர்க்குயிராய் கலந்து நிலவுகின்ற பண்புகளில், நட்பே மேலானது. உலகின் நன்மைக்குக் காரணமாய் நின்றுலவுவது, உண்மை நண்பர்களின் வாழ்வேயாகும்.

இன்பத்தில் மட்டும் அன்றித் துன்பத்திலும் பங்கு பற்றி வாழ்கின்ற பண்புதான் உண்மை நட்பாகும். பலர், இன்ப காலத்தில் மட்டும் ஒருவரோடு ஒருவர் உறவு கொண்டு, துன்ப காலத்தில் பிரிந்து விடுகின்றார்கள். தன்னலங்கருதி வாழ்கின்ற மக்களினம், பெருகாமல் தடுக்கும் படைக்கலமாக உண்மை நட்பு விளங்குகின்றது. செல்வம் பெருகிய காலத்தில் ஒருவருடன் நட்புப் பூண்டவர்கள் , செல்வம் சுருங்கி வறுமை வந்தவுடன், அவரை விட்டு நீங்குகின்ற செயலை , ஒளவையாரால் பொறுக்க முடியவில்லை.

உண்மை நட்பின் தன்மையை மக்கள் உள்ளத்தில் பதித்து வாழ்விக்க வேண்டுமென்ற விருப்பம், ஒளவையாரின் உள்ளத்தைக் கவர்ந்தது. கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் பயன்படக் கூடியதாக ஒளவையார் தமது எண்ணத்தைப் பாடுகின்றார். " பாட்டென்றால் பண்டிதர்க்கே" என்ற கொள்கை ஒளவையாரிடம் கிடையாது.

"அற்ற குளத்தில் அறுநீர்ப்-
பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்- அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் - போலவே
ஒட்டி உறுவார் உறவு."

இந்தப் பாட்டில் ஒளவையார் இயற்கையோடு அமைந்த தம்புலமைத் தெளிவைத் தெரிவிக்கின்றார். குளத்தில் நீர் நிறைந்து கிடக்கின்ற போது மீன்கள் வாழ்தலையும், அந்த மீன்களை உண்டு வாழ்கின்ற பறவைகள், குளக்கரையிலேயே கூடுகள் கட்டி இருத்தலையும் ஒளவையார் கண்டார். இங்ஙனம் தான் கண்ட இயற்கை நிகழ்ச்சியுடன், மக்கள் வாழ்க்கை நிகழ்ச்சியொன்றைப் பொருத்திச் சிந்திக்கின்றார்.

ஒருவரிடம் செல்வம் நிறைந்துள்ள காலத்தில் பலர், அச் செல்வரின் வீட்டையே தங்களுடைய வீடாகக் கொண்டு, அவரின் செல்வத்தை நுகர்ந்து வாழ்கின்றார்கள். குளத்தில் நிறைந்திருந்த நீர் வற்றுகின்றது. நீர் வற்ற வற்ற நீரில் வாழ்ந்த மீன்களும் குறைந்து விட்டன. நாளடைவில் குளத்தில்உள்ள நீர் முற்றாகவற்றி விட்டது. பறவைகளுக்கு உணவாகிய மீன்கள் அற்றுப்போயின. பல நாட்களாகக் குளத்தைச் சுற்றிக் குடியிருந்த பறவைகள் எல்லாம் குளத்தை விட்டுப் பறந்து சென்றன.

ஒருவரிடத்தில் உள்ள செல்வம் குறைகின்றது. அவரின் செல்வத்தை நுகர்ந்து அவரையே துணையாகக் கொண்டு வாழ்ந்த நண்பர்களும் அவரை விட்டு விலகிச் செல்கின்றார்கள். நீர் அற்ற குளத்தைப் பறவைகள் விட்டுச் செல்கின்றன. செல்வம் அற்ற நண்பனை அவனின் நண்பர்கள் விட்டுச் செல்கின்றார்கள். குளத்தை விட்டுச் சென்ற பறவைகள் தம் நலத்தையே கருதுகின்றன. நண்பனை விட்டுச் சென்ற நண்பர்களும் தம் நலத்தையே கருதுகின்றார்கள்.

இங்ஙனம் தம் பயன் கருதி ஒருவருடன் நட்புக்கொண்டு, பயன் இல்லாவிடின் அவரை நீக்குகின்ற பண்பு அருவருக்கத் தக்கது. மீன் கொத்திப் பறவைகளுக்கும், பொய் நண்பர்களுக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. தம் பயன் கருதி நட்புக் கொள்கின்றவர்கள் மிகக் கொடியவர். அவர்களின் உறவை நம்ப வேண்டாம் என ஒளவையார் மிக வற்புறுத்திக் கூறுகின்றார்.

அற்றகுளத்தில்அறுநீர்ப்பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்

என்ற பாட்டுத் தொடர்களைப் படித்துப் பாருங்கள்.

" அற்றகுளம்", " அறுநீர்ப் பறவை" என்னும் மொழிகளில் ஒளவையாரின் உள்ளத் துடிப்பைக் காண்கின்றோம். நீர் அற்ற குளத்தைச் சிறிதும் பற்றின்றி விட்டுச் செல்கின்ற பறவையின் கொடிய உள்ளத்தை, நன்றி மறந்த உள்ளத்தை ஒளவையார் வெறுக்கின்றார்.

அறுநீர்ப் பறவை = நீரைக் கருதி வாழ்ந்த பறவை.

அறு பறவை = மீண்டும் திரும்பியும் பாராது நெடுந் தொலைவிற்குச் செல்கின்ற பறவை.

உற்றுழி = தமக்குப் பயனுள்ள போது நட்புச் செய்தல்

தீர்வார் = சிறிதும் நன்றி உணர்ச்சி இல்லாமல் , தமக்கு உதவி செய்த நண்பனை வறுமையில் வருந்த விட்டுச் செல்கின்றவர்கள்.

தீர்தல்= பற்றுவிடுதல்.

குளம் - உவமானம்
நண்பன்- உவமேயம்

குளத்தில் உள்ள நீர்=உவமானம்.
நண்பனிடத்தில் உள்ள செல்வம்- உவமேயம்.

நீர் அற்ற குளத்தை விட்டுச் செல்லும் பறவை= உவமானம்.
செல்வம் அற்ற நண்பனை விட்டுச் செல்லும் நன்றி மறந்தோன்= உவமேயம்.

இனி அக் குளத்திலேயே உண்மை நட்பின் பண்பையும் ஒளவையார் பார்க்கின்றார்.

குளத்தில் உள்ள நீர் பெருகி உயர, உயர அக் குளத்தில் வாழ்கின்ற கொட்டி, ஆம்பல், நெய்தல் என்பனவும் நீர் மட்டத்திற்கு. மேலே தங்கள் இலைகளையும் மலர்களையும் உயர்த்தி வளருகின்றன. குளத்தில் உள்ள நீரின் உதவியால் தாமும் வளர்ந்து தளிர்த்து மலர்ந்து வாழ்கின்றன.

குளத்தில் உள்ள நீர் குறையத் தொடங்கியது. நீர் குறையக் குறையக் கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் தமது வளர்ச்சியில் குறைந்தன. நீர் முற்றாக வற்றியது. கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் தாமும் குறைந்து குள மண்ணுடன் ஒட்டி விட்டன. குளம் நீர்ப்பசையும் இல்லாது வரட்சி கொண்டது. கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் தங்கள் இலையும் தளிரும் பூவும் உலர்ந்து சருகாகத், தாமும் தம்மை வளர்த்த குளத்துடன் ஒட்டி, உலர்ந்து கிடந்தன.

இந்த நீர்ப் பூக்களின் பண்பைப் பார்க்கப் பார்க்க, ஒளவையாரின் புலமை உள்ளம் புதிய ஒளி பெற்றது. உண்மை நண்பரின் உயர்ந்த பண்பை , உலக மக்களுக்கு உணர்த்துதற்கேற்ற உவமானம் கண்டு விட்டேனென்று உயிர் தளிர்த்தார்.

நண்பனிடத்தில் செல்வம் நிறைந்தது. அவன் தன்னுடைய நண்பர்கள் எல்லார்க்கும் உதவினான். தான் பெற்ற செல்வத்தால் தன்னைச் சேர்ந்தோரையும் செழிப்பித்தான். நண்பர்களும் உள்ளம் மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.

காலப் போக்கில், உற்றவர்க்கெல்லாம் உதவிய நண்பனின் செல்வம் சுருங்கி விட்டது. அவனின் வாழ்வு வறுமைத் தீயால் எரிந்தது. தமக்கெல்லாம் உதவிய நண்பனின் வறுமையை எண்ணி அவனின் நண்பர்கள் உயிர் துடித்தார்கள். அவன் அடைந்த வறுமைத் துன்பத்தைத் தாமும் அவனுடன் கலந்து அனுபவித்தார்கள். செல்வக் காலத்தில் தம்மையெல்லாம் தாய் போலக் காப்பாற்றிய நண்பனின் அல்லலைக்கண்டு, அகம் உருகினார்கள்.

இப் பெருஞ் சால்பைக் கண்ட ஒளவையார் பாடுகின்றார். எமக்குக் கூறுகின்றார்.

அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும்
போலவே ஒட்டி உறுவார் உறவு.

இந்தப் பாட்டுக் தொடர்களில் ஒளவையாரின் ஆர்வக் குரலைக் கேட்கின்றோம்.

"அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே"

என்ற குரல் உலகமெல்லாம் ஒலிக்கின்றது. படித்துப் பாருங்கள். போலவே என்ற சொல்லில் எவ்வளவு ஆர்வம் எழுச்சி கொள்கின்றது.

"ஒட்டி உறுவார் உறவு"

என்ற தொடரில் வலியுறுத்தல் நிகழ்கின்றது. ஒட்டி என்ற சொல் பிரியாமை என்ற கருத்துடன், வருந்துதல் என்ற கருத்தையும் தருகின்றது. உறுவார் என்ற சொல்லின் பொருளாற்றல் இப் பிறப்பு மட்டுமன்றி இனி எத்தனை எத்தனை பிறவிகளை எடுத்தாலும், அங்கெல்லாம் பிரியாமல் ஒன்றுபட்டு வாழ்வார் என்ற எண்ணத்தை நிலை நாட்டுகின்றது. உறவு என்ற சொல், இன்பத்தில் மாத்திரமல்ல , துன்பத்திலும் துணையாக நிற்கின்ற பண்பே உயர்ந்தது - உண்மையானது , முடிந்த முடிபு என்பதை நிட்சயிக்கின்றது.

கொட்டி ஆம்பல் நெய்தல்- உவமானம்.

பிரியாத உண்மை நண்பர்- உவமேயம்.

குளத்திலே நாமெல்லாம் என்றும் காண்கின்ற நீரையும், புள்ளையும், பூவையும் துணையாகக் கொண்டு உயர்ந்த பண்பாட்டை எம் உள்ளத்திலே உருப்படுத்திய ஒளவையாரின் புலமை உள்ளம், ஆயிரம் ஆயிரம் ஊழி சென்றும் அழியாத அமரத்தன்மை வாய்ந்ததாகும்.
( வித்துவான் வேந்தனார் தினகரன்- 18.09.1955).


நண்பர்களே இக் கட்டுரை மூலம் ஒளவையின் தமிழுள்ளத்தையும் வேந்தனாரின் இலக்கிய நயப்பு உள்ளத்தையும் காண்பதோடு , உற்றுழித் தீர்வார் உறவல்லர் என்ற நன்றி மறந்த சுயநலமிக்கவரை ,இவர்கள் இதயம் எவ்வளவு வெறுக்கின்றது என்பதையும் காணக் கூடியதாக உள்ளது. இது கவியுள்ளங்களின் குமுறல். "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்"
என்ற பாரதியின் நெஞ்சக் குமுறலுடன் விடை பெறுகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.