
[பெண்கள் சந்திப்பினூடாக இடம்பெற்ற நினைவுப் பகிர்தலில் எனது உரை. - நவஜோதி ஜோகரட்னம்- ]
லண்டனில் ‘விம்பம’ நடாத்தும் இலக்கியக் கூட்டங்களின் போதுதான் கலாவை நான் முதன் முதலில் சந்தித்தேன். முதற்சந்திப்பின்போதே ‘பூங்கோதை’ எனத் தனது எழுத்துலகப் பெயரைக்கூறி தன்னை அறிமுகஞ்செய்து அன்பாகப்பேசி அழகு சேர்த்த பாங்கு என்னைக் கவர்ந்தது. பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமே எமது உறவு தொடர்ந்து நீடித்தது.
இலக்கிய விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் தவிர சொந்த விடயங்கள் எதுவும் எமக்கிடையில் பரிமாறப்படுவதில்லை. இருந்தும் 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் பாமுகம் பா ரிவியில் நான் தயாரித்து வழங்கும் ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை மேற்கோள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தேன். பூங்கோதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டார். அவ்வேளைகளில் தான் அவர்பற்றிய சிறு விபரங்களை அவருடன் உரையாடிப் பெற்றுக்கொள்ள முடிந்தது. மிகவும் நல்ல தகவல்களோடு அந்த நேர்காணலை என்னுடன் மேற்கொண்டார். அந்த வேளையில்தான் தனக்கு இரு மகன்மார் இருக்கிறார்கள் எனக் கூறினார். எனக்கும் இரு மகன்மார் உள்ளனர் எனக்கூறி நாமிருவரும் ஒருவித ஒற்றுமையில் பூரிப்படைந்தோம். அத்தோடு கலா ஆசிரியைக்குரிய பண்போடு எனது இளைய மகனின் ஓவியத்தை ‘It's so beautiful well done to his artistic hands!’ என்று பாராட்டியிருந்தமையை என்னால் மறக்க முடியவில்லை.
2022 ஆம் ஆண்டு கலா இலங்கை சென்றிருந்தவேளை சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இலங்கைப் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதனை எனக்கு அனுப்பிவிட்டு ‘என்ர பேட்டி Sri Lankan Sunday Observer’ இல் வந்திருக்கு முடிஞ்சால் வாசியுங்கோ... என்பதையெல்லாம் நான் எப்படி மறப்பது? வாசித்திருந்தேன். பெண்கள்குறித்த சுயமரியாதையை வலியுறுத்தும் பல வியடயங்கள் அதில் பரவியிருந்தமையை அவதானித்தேன்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ‘விம்பம்’ ஒழுங்கு செய்திருந்த கிறிஸ்மஸ் நிகழ்ச்சியிலும் வந்து கலந்து மகிழ்வுடன் சென்றிருந்தார். அவ்வேளையில்தான் அவர் தனக்கு மார்புப் புற்றுநோய்; வந்து மீண்டதாகவும், மீண்டும் புதிதாக உருவெடுத்த தனது தலைமயிர் கூட மிகவும் கறுப்பாகி, அடர்த்தியாக வளர்ந்திருப்பதைக் காட்டி மகிழ்ந்திருந்தார். உண்மையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கோ எல்லையில்லை. இருந்தும் கடந்த சிலவருடங்களாக அவரைப்பாதித்த அந்தநோய் குறித்த எதுவித தகவலும் அறியாது இருந்திருக்கின்றேனே என்ற ஒருவித குற்ற உணர்வு என்னைத் தட்டிக்கொண்டது உண்மைதான். அவருடைய நேர்மறை ஆளுமை அவரை மீட்டிருக்கிறது என்றுதான் நான் நம்பினேன்;. ஆனால்...
இன்று என் நம்பிக்கை பொய்த்துப்போய்விட்டதே! கலா இறுதிவரை மிக மகி;ழ்வான ஒரு பெண்போல தன்னை அலங்கரித்துக் காட்சி தந்தவர். அவரின் வித்தியாசமான உடை அலங்காரங்கள் எனக்குப் பிடித்தமானதொன்;று. எதனையும் ரசனைக்குள் அடக்குவது என் இயல்பான குணம். அழகாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டு சமூகமளித்திருந்தமையை நான் அவதானித்திருக்கிறேன். அவர் ஒருநாளுமே மனங்கலங்கி நின்றதை நான் பார்த்ததில்லை. ஆனால்...
2023 ஆம் ஆண்டு லண்டன் ‘விம்பம்’ நடாத்திய இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் முருகபூபதி அவர்களுடன் சென்றிருந்தேன். மீண்டும் கலாவுடன் நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்றிப் பேசும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. முருகபூபதி - கலா - நான் மூவரும் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர் எழுத்தாளர் முருபூபதி அவர்கள் எங்கள் இருவர் குறித்தும் அழகான கட்டுரை ஒன்றை எழுதியமையையும் நினைவிலிருந்து என்னால் தவிர்க்க முடியவில்லை.
அவரது கட்டுரையிலிருந்துதான் கலாவின் குடும்பப் பின்னணியை என்னால் அறிய முடிந்தது. கலாவின் தந்தையார் வேலாயுதம்பிள்ளை துணைவி புவனேஸ்வரி பற்றியும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமியாக நீர்கொழும்பில் தான்பார்த்த பூங்கோதை தற்போது ஆளுமையுள்ள பெண்ணாக – எழுத்தாளராக - சமூகச் செயற்பாட்டாளராக - தாயைப் போன்று ஒரு ஆசிரியையாக லண்டனில் மீண்டும் சந்திப்பதைப்பற்றி அவர் குறிப்பிட்ட வரிகள் என்னைக் கட்டிப் போட்டன. தாயார் புவனேஸ்வரி வாகன விபத்தில் அகால மரணம் எய்திய அவரது செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலம் எல்லாவற்றையும் கடந்து போகும் என எண்ணினேன். இலக்கிய உலகில் மிக நெருக்கமான என்தந்தை அகஸ்தியர் மற்றும் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்களை எப்படியெல்லாம் பதிவாக்குவாரோ - அதே போன்று பூங்கோதை குறித்தும் பலவiயான செய்திகளை உள்ளடக்கி இலக்கிய உலகில் பதிவாக்கிய முருகபூபதி அவர்களின் இதயம் நெகிழ்ந்த அவரது பணி பாராட்டுக்கு உரியதாகும்.
பூங்கோதை 1989 ஆம் ஆண்டில் லண்டனுக்குப் புலம்பெயர்ந்ததாக அறியமுடிகின்றது. South Bank University சுகாதாரம், சமூக விஞ்ஞானம் ஆகிய கற்கை நெறிகளில் B.SC (Hons) பட்டத்தையும், பின்னர் Metropolitan University கலைமானிப்பட்டத்தையும் தொடர்ந்து Roehampton University இல் கல்விக் கொள்கை சார்ந்தும் தனது கல்வியை வளர்த்துக் கொண்டேயிருந்தவர் என அறிந்திருந்தேன்.
பூங்கோதையின் ‘நிறமில்லா மனிதர்கள்’ கதைத் தொகுப்பு இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பாகும். சிறுகதைகளுடன் கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு என இவரின் இலக்கிய சேவை விரிந்துள்ளது. இவரது ஒரு குட்டிக் குரங்கின் கதை’ என்ற சிறுவர் மொழிபெயர்ப்புக் கதைக்கு 2025 ஆம் ஆண்டின் அரசு இலக்கிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடவேண்டிய விடயமாகும். 2004 ஆம் ஆண்டு ‘ஐரோப்பிய நாடுகளில் உங்கள் ஆரோக்கியம்’ என்கின்ற ஆரோக்கியம் சார்ந்த ஒரு விழிப்புணர்வு நூலையும் வெளியிட்டுள்ளார்.
மார்பகப் புற்றுநோயினால் பூங்கோதை பல சவால்களை எதிர்கொண்டு வந்திருக்கிறார். அதன் தாக்கத்தின் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் அவர் முகங் கொடுத்த தகவல்களையும் நூலாக்கி அதன் வெளியீடு இடம்பெற்றவேளை நான் சமூகமளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தும் மீனாள் நித்தியானந்தன் அவர்கள் அந்நூல் குறித்து நம்பிக்கையான பல பயனுள்ள கருத்துக்களை முன்வைத்ததாக என்னால் அறியமுடிந்தது.
‘ஆபத்தான தனது மார்பகப் புற்று நோயிலிருந்து மிகவும் துணிச்சலுடன் வெற்றிகரமாக மீண்டு வந்த தனது அனுபவங்களை ஆங்கில நூலில் வடித்துக் காட்டியுள்ளமை உண்மையில் சிறப்பு. ‘The Other Side of the World Finding light in the Darkness of Cancer’ (Kala.V.Pillai. 2024) என்ற ஆங்கில நூலைத்தான் வெளியிட்டுள்ளார். எது வரினும் நம்பிக்கையோடு இருங்கள்! என்பதையே இந்நூல் வலியுறுத்தி வெளிச்சம் காட்டுகின்றது. புற்றுநோய்க்குள்ளான சகல நோயாளிகளுக்கும் உள்ள சோதனைகள், சிகிச்சைகள், Intensive Chemotherapy, anti hormone therapy, Infusion, Radiation therapy, Lumpectomy, Mammogram, Oncologist, Immunosuppressive Medication என்று எல்லாக் கட்டங்களையும் இவர் தாண்டியிருக்கின்றார்.
‘சவாலான நிலையில் என் போராட்டத்தில் எவ்வாறு வெற்றி கண்டேன் என்ற தன் அனுபவம், புற்றுநோயால் தனிமையில், முடங்கிக்கிடக்கும் மற்றவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் இந்த நூலைத் தான் எழுதியதாக இந்நூலில் தெரிவிக்கும் கலா அவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, தனிமையில் நோயால் துயருறும் அனைவருக்குமாகவே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது’ என்கின்றார். தனது அனுபவங்களை நூலில் வடித்து வெளியில் வந்திருக்கும் கலாவின் அனுபவக்குறிப்புகள் பாராட்டுக்குரியன. நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும் இந்நூலை தமிழ் பெண்ணான கலா அவர்கள் எதிர்கால நோக்கோடு ஆங்;கிலத்தில் விவரித்திருப்பது எல்லோருக்கும் பயனுள்ளதாகும். என்று ‘லண்டன் எழுத்தாளர்களின் வளர்ச்சி’ குறித்த எனது கட்டுரை ஒன்றில் முன்பே இவரது நூல் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால்...
கலாவின் குரலை நான் இறுதியாகக் நான் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கேட்டிருந்Nகுன். அதாவது ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் நாம் பல நாடுகளிலிருந்தும் ஒன்றுகூடிய வேளை அவர் தன் கருத்தை முன்வைத்துப் பேசிய போதுதான். அவர் தனக்கு சிறிது ஜலதோஷம் இருப்பதாகச் சாதரணமாகத்தான் கூறியிருந்தார். அங்கிருந்த பெண்கள் நாங்கள் எவருமே இத்தகைய ஒரு கொடுமையான செய்தி காத்திருக்கின்றது என்று அறிந்திருக்கவில்லை.
மார்கழி 8ஆம் திகதி என் வாழ்வின் முக்கிய தினமாக கடந்த 30 வருடங்களாக என் இதயத்தால் வழிபடும் ஒருநாள். என் அன்புத்; தந்தை அகஸ்தியர் அவர்களும் பாரிஸ் நகரில்; தன் சிந்தனையை நிறுத்தி எம்மை விட்டுப் பிரிந்த தினம். அவருடைய ‘அஸ்தி’ இன்றும் ‘பெயர் லாஜ்சேஸ் செமிற்றியில்’ பாதுகாக்கப்படுகின்றது. அகஸ்தியரின் பேர்த்தியான சுஜீனா பாரிஸ் சென்று அவரில்லம் சென்றிருக்கும் செய்தியை அன்றே அவர் எனக்கு அறியத்தந்தார். வாரிசுகள் இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ந்தேன்.
அடுத்த செய்தி ஹொலன்டில் இருந்து எனது நண்பியும் எழுத்தாளருமான பவானியிடமிருந்து வந்தது. அன்றைய தினமான டிசம்பர் 8ஆம் திகதி கலாவின் சிந்தனையும் நிறுத்தப்பட்டு எம்மை விட்டுப் பிரிந்த சோகமான செய்திதான் அது. உண்மையில் அதிர்ந்து போனேன். என்னைச் சற்று உலுப்பியே விட்டுது. என் வாழ்வில் அன்பான இலக்கிய நண்பியாகத் திகழ்ந்த பூங்கோதை என்ற எழுத்தாளர் கலாவும்... அவர் என் நெஞ்சில் என்றும் இருப்பார். அவரின் நல்ல நினைவுகளோடு வாழ்க்கையை நம்பிக்கையோடு முன்னெடுப்போம்! இதுவும் கடந்து போகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.