- தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் சிற்பம் -

Fløyen மலையின் அழகுடன் எங்களின் அடுத்த நாள் ஆரம்பமானது. மலையின் இயற்கை அழகைக் கண்குளிரக் கண்டு களித்துவிட்டு, University Museum of Bergenக்குள் காலடியெடுத்து வைத்த எங்களை வாசலிலிருந்த சிற்பம் அதிசயிக்க வைத்தது. தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் காட்சி மிகத் தத்ரூபமாக அங்கு வடிக்கப்பட்டிருந்தது. அந்தத் தாயின் பார்வையிலும் முகத்திலும் அத்தனை பரிவு, அன்பு, கரிசனை, பெருமை என உணர்ச்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பால்குடித்துக்கொண்டிருப்பது போலவிருந்த அந்தப் பச்சிளங் குழந்தையும் அவ்வாறே நிஜம்போல அழகாயிருந்தது. மனித வாழ்வின் இயற்கையான ஒரு தருணத்தைக் காட்டும். அற்புதமான அந்த சிருஷ்டிப்பைவிட்டு என் கண்களை அகற்றுவது சிரமமாகவிருந்தது. அதன் அழகைப் படத்துக்குள் அடக்கலாமா எனப் பல கோணங்களில் நின்று முயற்சித்துப் பார்த்தேன், இருப்பினும் சிலையிலிருந்த உயிர்ப்பைப் படங்களில் கொண்டுவர முடியவில்லை. மானுடவியல், தொல்லியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், எனப் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்பான கலை மற்றும் கலாசார வரலாறுகளைக் கூறும் இவ்வாறான வியத்தக்க பொருள்கள் நிறைந்திருந்த அந்த அருங்காட்சியகத்தைச் சூழ்ந்திருந்த தாவரவியல் பூங்காவும் செழிப்பும் அழகும் மிகுந்ததாக அமைந்திருந்தது.

                             - Lyderhorn மலை -

பின்னர், கமலினியின் வீட்டிலிருந்து நடைதூரத்திலிருக்கும், Lyderhorn என்ற மலையில் ஏறுவதற்காகச் சங்கியும் கமலினியின் இரண்டு மகன்மாரும் சென்றனர். ஏறுவதில் எந்தப் பிரச்சினையுமிருக்காது என்ற நம்பிக்கையுடன் சென்ற, hikingஇல் மிகுந்த விருப்புக்கொண்ட சங்கி, முடிவில் 396 மீற்றர் உயரமான மலையின் உச்சிக்கு 1400 மீற்றர் தூரம் நடந்துபோனதில் மிகவும் களைத்துப் போயிருந்தா. ஆனால், மலை ஏறுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்த மற்ற இருவருக்கும் அது பெரிய விடயமாக இருக்கவில்லை. அன்றிரவு கமலினியின் மகளின் குடும்பத்தினரைச் சந்தித்திருந்தோம். கமலினியின் மூன்று வயதுப் பேரப்பிள்ளை தமிழிலும் நோர்வேயியன் மொழியிலும் அழகாகக் கதைத்தான். அவனுக்காகக் கமலினி செய்திருந்த முறுக்கில் சிலவற்றை எங்களுக்கும் அவ தந்திருந்தா. எங்களின் கீரனும் அவற்றை மிகவும் விரும்பிச் சாப்பிட்டான்.  

                    - ஆணொருவர் உறங்கும் சிற்பம் -

Bergenஐ விட்டுவிலக முதல், உலகின் செங்குத்தான ரயில் பயணங்களில் ஒன்றான Flåm ரயில் பயணத்துக்குச் செல்லவேண்டுமெனத் திட்டமிட்டிருந்த சங்கி, அதற்கான செலவு ஒருவருக்கு 800 டொலருக்கு மேலாகும் என அறிந்துகொண்டதும் வேண்டாமென்று விட்டுவிட்டா. எனினும் சங்கியின் விருப்பத்தை முன்கூட்டியே தெரிந்திருந்த கமலினி, அவவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அந்தச் செலவு ஒருவருக்கு 100 டொலர் ஆகும்வகையில் நீண்ட தூரம் எங்களைக் காரில் கூட்டிச்செல்ல முன்வந்தா. அஜனும் அவரின் தாய்க்குத் துணையாக வந்திருந்தார்.

                  - Flåm ரயில் பயணத்தின்போது -

மலைகளின் இடையேயான சுரங்கப்பாதைகளின் ஊடாகவும், நீர்வீழ்ச்சிகளுடன் கண்ணுக்கு எட்டிய தூரம் முழுவதும் பச்சைப் பசேலென இயற்கை அழகு கொட்டிக்கிடந்த காட்சிகள் நிறைந்த வழியூடாகவும் Flåmக்குக் காரில் பயணித்த அந்தப் பயணம் மனதுக்கு ரம்மியமானதாக இருந்தது. விசேடமாக வீதியருகில் இருந்த, 116 மீற்றர் உயரமான Tvindefossen என்ற அழகான நீர்வீழ்ச்சி மனதைக் கொள்ளைகொண்டது. நாங்கள் Flåmஐச் சென்றடையவும், அங்கிருந்து Myrdalக்கு ரெயின் புறப்படவும் நேரம் சரியாக இருந்தது. ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டோம். அதுவரை வந்த பாதையில் அகம் மகிழ்ந்திருந்த எங்களுக்கு, இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான காடுகள், பனி படர்ந்த மலை உச்சிகள், கண்கவர் நீர்வீழ்ச்சிகள், உலகிலேயே மிக நீளமான நுழைகளி என ஒரு மணி நேரமாகத் தொடர்ந்து தரிசிக்கக் கிடைத்த Flåm முதல் Myrdal வரையான 20 கிமீ ரெயில் பயணம் fairyworld ஒன்றிலிருப்பது போன்ற உணர்வைத் தந்தது. மீண்டும் அதே ரெயினில் திரும்பி Flåmக்குப் பயணம்செய்தபோதும்   வார்த்தையில் சொல்லமுடியாதளவுக்கு நிறைவாகவும் அருமையாகவும் இருந்தது. (அந்தப் பயணம் எப்படியிருக்குமெனப் பார்க்கவிரும்புவார்கள் கீழுள்ள இணைப்பில் அதனைப் பார்க்கலாம்: https://youtu.be/BcsxfHmDJ2g)

                          - Kjosfossen நீர்வீழ்ச்சி  -

அந்த ரெயில் பயணத்தின் உச்சக் காட்சியாக, hourglass வடிவம் கொண்ட 225 மீற்றர் உயர Kjosfossen நீர்வீழ்ச்சி அமைந்திருந்தது. அந்த அற்புதத்தைப் பயணிகள் அனுபவிக்க வேண்டுமென்பதற்காக அந்த இடத்தில் ரெயின் சற்று நேரம் தரித்துப் போவதே வழமையாக இருக்கிறது. அதுதான் சுற்றுலாப் பயணிகள் நோர்வேயில் அதிகமாகப் பார்க்கும் இடம் என்கிறது புள்ளிவிபரங்கள். அந்த ரெயினில் எங்களுக்கருகில் இருந்தவரும் அதைப் பார்ப்பதற்காக Sweedenஇலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார். ரெயினிலிருந்து இறங்கி அந்த அழகான நீர்வீழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்த எங்களுக்குத் திடீரெனப் பாட்டுக் கேட்டது. குரல் வந்த திசையில் திரும்பியபோது சிவப்பு உடையிலிருந்த பெண்ணொருவர் நோர்வேயியன் இசையில் பாடியபடி நடனமாடிக் கொண்டிருந்தார். அத்தனை உயரத்தில் வெவ்வேறு இடங்களில் அந்தப் பெண் தெரிந்ததால், அது puppet ஆக இருக்குமோ என நாங்கள் வியந்தோம். பின்னர் இணையத்தில் அது பற்றித் தேடியபோது, ஆண்களைக் கவர்வதற்காக அழகான பெண் ஒருவரைப்போல உடையணிந்து, Huldra என்றொரு கவர்ச்சியான வன உயிரினம் வருவதாக ஸ்கண்டநேவிய நாட்டுப்புறக் கதைகளில் உள்ளதாம் என்றும், அதைப் பிரதிபலிக்கும் வகையில் நீர்வீழ்ச்சி அருகே அந்த நடனம் நிகழ்வதாகவும், அப்படி அங்கு நடனமாடுபவர்கள் நோர்வே ballet school சேர்ந்த மாணவர்கள் என்றும் அறிந்தோம்.

மூன்றரை நாள்களாக Bergenஇன் அழகில் வியந்து மனதை அதில் பறிகொடுத்த காலம் நிறைவுக்கு வந்தது. பயணத்தில் கழியும் நேரத்தை மீதப்படுத்துவதற்காக, அன்றிரவு ரெயினின் நித்திரைசெய்தபடி பயணம்செய்யும் படுக்கைகளில் ஒஸ்லோவை நோக்கிப் பயணித்தோம். ரெயின் ஸ்ரேசனிலிருந்து மாமாவின் மூன்றாவது மகனின் வீட்டுக்கு நாங்கள் செல்வதற்காக மகாஜனாவில் ஒன்றாகப் படித்த பத்மநாதனை கமலினி ஒழுங்குசெய்திருந்தா. வேண்டிய உதவிகளைச் செய்யலாமென பத்மநாதன் எனக்குக் கூறியிருந்தபோதும், காலை 6:30க்கு அந்த ரெயின் ஒஸ்லோவைப் போய்ச்சேர்ந்து விடுமென்பதால், காலையில் எழுந்து அவசரமாக ஓடிவந்து எங்களைக் கூட்டிச்செல்லும்படி அவரைக் கேட்க எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் கமலினி எங்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்திருந்தா. Stavanger இலிருந்து Bergen கூட்டிச் செல்வதற்கு, பின் அங்கிருந்து ஒஸ்லோக்குக் கூட்டிச்செல்வதற்கு என எல்லாவற்றுக்குமே அவ முன்நின்றபோது நான்தான் வேண்டாமென மறுத்திருந்தேன். அத்தனை நல்ல உள்ளம் அவவுக்கு!

ஒஸ்லோ ஸ்ரேசனில் ரெயின் நின்றபோது எந்தப் பெட்டியில் வருவோமென பத்மநாதனுக்குச் சொல்லவில்லையே என நான் சங்கிக்குச் சொல்லியபடி திரும்பியபோது,  நம்பமுடியாத அதிசயமாக யன்னலுக்கூடாகத் தெரிந்த பத்மநாதனைப் பார்த்ததும். எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. மாமாவின் மகன் சிறீதரன் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிட்ட பத்மநாதன், குளித்துச் சாப்பிட்டுவிட்டு தயாராக இருங்கள், 9 மணிக்கு வந்து vigelandsparkenக்குக் கூட்டிச் செல்கிறேன் என விடைபெற்றார்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.