- சக்கரம் போலிருக்கும் Wheel of Life

Gustav Vigeland என்ற சிற்பியின் கற்பனையிலும் கைவண்ணத்திலும் உருவான இருநூறுக்கும் அதிகமான சிற்பங்களினால் Vigeland Park நிறைந்து போயிருக்கிறது. Bronze, granite, cast iron என வெவ்வேறு வகையான உலோகங்களில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த அழகான சிற்பங்களை நிறுவுவதற்கு இருபதுக்கும் மேற்பட்ட வருடங்கள் எடுத்திருக்கின்றன. அப்படியாக இதனைக் கட்டியமைப்பதற்கு மிகுந்தளவில் காலமும், பணமும், மனித வலுவும், சிருஷ்டிப்புத் திறனும் தேவைப்பட்டிருந்திருந்தும்கூட, பல்லாயிரக்கணக்கான கண்களுக்கு Vigeland Park இலவச விருந்து படைப்பது அதிசயம்தான்.

இங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான சிற்பங்கள் பெற்றோர் பிள்ளைகள் இடையிலான குடும்பமயமான தருணங்களையும் ஆண்கள், பெண்கள் இடையிலான உறவுகளையும் சித்தரிக்கின்றன. பிள்ளைகளைத் தோளில் காவுதல், கையில் பிடித்துக் கூட்டிச்செல்லல், அவர்களை ஆற்றுபடுத்தல் போன்ற நாளாந்தக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்களுடன், பிள்ளையை முதுகில் சுமந்தவண்ணம் தவழுதல் போன்ற சில விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் இங்குள்ளன. அத்துடன் காலவரையற்றவையாக இந்தச் சிற்பங்கள் இருக்கவேண்டுமென்பதால் சிற்பங்கள் யாவும் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமானவையாக இருக்கின்றன. இங்கிருக்கும் சில தமிழர்கள் இதனை தூஷணப் பார்க் என அழைப்பார்களாம்.

                               - Vigeland Park சிற்பம் -

Circle of life என்பதுதான், Vigeland Park இன் கருப்பொருளாகும். ஜனனத்துடன் ஆரம்பிக்கும் வாழ்க்கைப் பயணம், வளர்ச்சியடைதல், துணை தேடல், சந்ததியைத் தோற்றுவித்தல் எனத் தொடர்ந்து, முடிவில் மரணத்தில் நிறைவடைகின்றது. ஆயினும் மரணமென்பது ஒரு முடிவல்ல, உடல்தான் அழிகிறதென ஆன்மீகரீதியாகவோ அல்லது சக்திக்கு அழிவில்லை என விஞ்ஞானரீதியாகவோ circle of life என்பதற்கு நாங்கள் பொருள் கொள்ளமுடியும். மேலும், மகிழ்ச்சி, கோபம், துக்கம், வேதனை எனப் பல்வேறு உணர்வுகள் கலந்த ஒரு கலவையாகவும், கனவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், ஏக்கங்கள் என வேறுபட்ட அனுபவங்களை விதைக்குமொரு பாதையாகவும் மனித வாழ்க்கைப் பயணம் இருக்கிறது என்பதையும் இந்தச் சிற்பங்கள் பிரதிபலிக்க வேண்டுமென Gustav Vigeland விரும்பியிருந்தாராம். அதுமட்டுமன்றி மனித வாழ்வில் சுமைகளையும் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது என்பதையும் இந்தச் சிருஷ்டிப்புக்கள் எடுத்துக்காட்டுகின்றன. 1924இல் சிற்பியால் plaster cast மாதிரியாக உருவாக்கப்பட்டிருந்த, குறிப்பிடத்தக்களவு யதார்த்தமான The Angry Kid என்ற சிற்பம், 83 செமீ உயரமுள்ள bronze sculpture ஆக இங்கு செதுக்கப்பட்டிருக்கிறது. Picture Postcard இல் இடம்பெறுமளவுக்கு மிகப் பிரபல்யமான இந்தச் சிற்பம் சில தடவைகள் களவாடப்பட்டுமுள்ளதாம்.

   - பிள்ளையை முதுகில் சுமக்கும் சிற்பம் -

Granite ஆல் ஆன நூறு மீற்றர் நீளப் பாலத்துடன் Vigeland Park ஆரம்பிக்கிறது. இந்தப் பாலத்தின் இரு கரைகளிலும் ஆண், பெண், குழந்தைகள் என 58 bronze சிலைகள் உள்ளன. அதற்கப்பால் கிட்டத்தட்ட 14 மீற்றர் உயரமான தூண் ஒன்றில் ஒன்றையொன்று அணைத்தபடி இருக்கும் வெவ்வேறு வயதுள்ள 121 மனித உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

சக்கரம் போலிருக்கும் Wheel of Life உடன் Vigeland Park முடிவடைகிறது, ஒருவருடன் ஒருவர் கைகோர்த்தபடி இதிலிருக்கும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளின் சிலைகள் நித்தியத்தைக் காட்டும் வகையில் சக்கர வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் வியக்கத்தகு கருப்பொருளை இந்தச் சிற்பம் சுருக்கமாகக் கூறுகிறது என்கிறார்கள்.

இந்தச் சிற்பங்களை மட்டுமன்றி, Vigeland Parkஇன் வடிவமைப்பையும் Gustav Vigeland தானே செய்திருக்கிறார். ஆனால், பொதுமக்களுக்காக Park திறந்துவைக்கப்பட்டபோது அதைப் பார்ப்பதற்கு அவருக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை. அவர் வடித்த சிற்பங்களைக் கொண்டிருக்கும் நூதனசாலையும் Park அருகேயுள்ளது.

                               - துருவப்பயண மரக்கப்பல் -

அதற்குப் பின்னர் துருவங்களை ஆராய்வதற்கென மேற்கொள்ளப்பட்ட கடல்பயணம் தொடர்பான விடயங்களைக் காட்சிப்படும் Fram Museum க்குச் சென்றிருந்தோம். மிகவும் குளிரான Arctic மற்றும் Antarctic பகுதிகளை ஆராயச்சென்றவர்களும், உதவிக்காக அவர்கள் கூட்டிச்சென்ற நாயும் அங்கு எப்படி உயிர்வாழ முடிந்தது என்பது பற்றிய விளக்கக்காட்சி அங்கிருந்தது. அந்தப் பயணத்துக்காக அவர்கள் பயன்படுத்தியிருந்த Fram என்ற மரத்திலான வலுவான கப்பலும் அங்கு வைத்திருக்கப்பட்டிருந்தது. அத்துடன் அதற்குள் சென்று, அந்த ஆய்வாளர்கள் எதிர்கொண்டிருந்த சிரமங்களைப் பார்வையாளர்கள் விளங்கிக்கொள்ளவும் வசதிசெய்யப்பட்டிருந்தது.

அடுத்ததாக Hovedøya என்ற சிறுதீவைப் பார்ப்பதற்காக அங்கு கொண்டுபோய் எங்களை விட்டுவிடுவதற்காக எங்களுடன் பத்மநாதனும் மியூசியத்துக்கு வந்திருந்தார். அங்கு காட்சிப்பட்டிருந்த வரலாறுகளையும் விபரங்களையும் வழமைபோல் சங்கி வரிவரியாக வாசித்துக்கொண்டிருந்தா. அதனால் எங்களுடன் மினக்கெடாமல் போகும்படி பத்மநாதனை அனுப்பிவிட்டு, அவற்றில் கவனத்தைச் செலுத்த நானும் முயற்சித்தேன். ஆனால், அவை எனக்கு ஆவலைத் தரவில்லை. சங்கிக்கு மட்டும் ரிக்கற் வாங்கியிருக்கலாம் என நினைத்துக்கொண்டு, நான் வெளியே போய் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன் எனவும், மியூசியத்தைப் பார்த்துமுடித்ததும் வெளியில் வந்து என்னைச் சந்திக்கும்படியும் சங்கிக்குச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். ஒரு மணி நேரத்தின் பின் வெளியில் வந்த சங்கிக்கு அதனருகே இருந்த மற்ற இரண்டு மியூசியங்களையும் பார்க்க நேரமில்லையே எனக் கவலையாக இருந்தது. சரி hiking செய்யவும், மியூசியங்கள் பார்க்கவும் அக்காமாருடன் இன்னொரு முறை வரலாமென அவவைச் சமாதானம் செய்துவிட்டு அந்தப் பயணத்தின் முக்கிய கர்த்தவான Fridtjof Nansen போட்டிருந்த அதே சுவற்றர் போன்ற ஒரு சுவற்றரை சங்கிக்காக வாங்கிக்கொண்டு பஸ்சில் Hovedøya சென்றோம்.

- 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி -

Hovedøya தீவில் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தேவாலயத்தின் ஒரு பகுதி, உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பன அங்கிருந்தன. பின்னர் துறைமுகத்தையும் பார்த்துவிட்டு, மாலை 5 மணிக்காவது வீட்டுக்குப் போகவேண்டுமென அவசரப்பட்டு ரெயின் ஏறினோம்.

ஓஸ்லோவுக்கு வருகிறோம், உங்களையும் சந்திக்க விரும்புகிறோம் என மாமாவின் மகன் சிறீகரனுக்குக் கூறியபோது, “வாங்கோ, எங்கடை வீட்டிலை நிற்கலாம், மகளும் பேரனும்கூட அந்த நேரம் வீட்டிலை இருப்பினம். எங்கடை வீட்டிலை தங்கிறது உங்கடை உரிமை, தங்க வைத்திருக்கிறது எங்கட கடமை.” என அன்புடன் வரவேற்றிருந்தார். அவரின் மனைவி ரதி அவரைத் திருமணம் செய்வதற்காக 87 இல் யாழ்ப்பாணத்திலிருந்து நோர்வேக்கு சென்றபோது எங்களின்̀ வீட்டில் ஒரு வாரத்துக்கு அதிகமாகத் தங்கியிருந்தை நான் மறந்துபோய் விட்டேன். ரதி சொன்ன பின்னரே எனக்கு அது நினைவுக்கு வந்தது. அந்த நேரம் வெள்ளவத்தையில் இராமகிருஸ்ணா ரோட்டில் கடற்கரைக்கு அருகிலிருந்த வீட்டில் இன்னொரு குடும்பத்தினருடன் நாங்கள் வாடகைக்கு இருந்திருந்தோம். என் சகோதரி ஒருவரையும், ரதியையும் நோர்வேக்குப் அனுப்பி வைப்பதற்காக என் அம்மா உட்பட யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு சின்னப் பட்டாளமே வருகிறது என்றதும் இடவசதிக்காக பெரிய குசினிக்கும் அதற்கும் பக்கத்திலிருந்த சிறிய அறைக்கும் இடையிலிருந்தம் சுவரை அகற்றிப் பெரியதொரு அறையாக்கியிருந்தார் விஜே. அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியமில்லையென நான் அதை விரும்பவில்லை, ஆனால் ஒருவருக்கு உதவிசெய்வதற்கு எவ்வளவு உச்சம் போகமுடியுமோ அதுவரை போவது அவரின் வழமை. அந்த வீடு அவரின் நண்பரின் வீடென்பதால் அப்படி அவரால் செய்ய முடிந்திருந்தது. அதைப் பற்றி நன்றியுடன் அவ குறிப்பிட்டபோது, அந்த நன்றி எனக்கல்ல என்பதில் எனக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தது.

நாங்கள் அங்கு சென்றபோது அவர்களின் மருமகளும் அங்கு வந்து எங்களுக்காகக் காத்திருந்தா. நோர்வேயியன் தமிழரின் வாழ்க்கை பற்றி அவவுடன் நிறையவே பேசினோம். பின்னர் பத்மநாதன் ஒழுங்குசெய்திருந்த சந்திப்பொன்றுக்கு அவவே எங்களைக் கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிட்டா.

 தொடரும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.