- கல்வட்டம் ('ஸ்டோன்ஹெஞ்ச்' - Stonehenge) -

எங்களின் குடும்பப் பெறுமானங்களில் அறத்துக்கு அடுத்ததாக கல்வி மிகவும் முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது. பட்டம்பெற்றால்தான் புத்திசாலியா, படிப்பிருந்தால் மட்டும் போதுமா என வைக்கப்படும் தர்க்கங்களில் உண்மை இருந்தாலும்கூட, கல்வித் தகமை எப்போதும் என்னை ஈர்த்திழுப்பதுண்டு. எனவே, இலங்கையிலிருந்து பெறாமகள் ஒருவர் இங்கிலாந்துக்குப் படிக்கப்போகிறார் என்பது எனக்குப் பெரிய விடயமாகத் தெரிந்தது. அதனால், அனுமதி கிடைத்தபோதே, அவவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வேன் என அவவுக்குச் சொல்லியிருந்தேன்.

பேராதனையில் நிகழ்ந்த என் பட்டமளிப்புக்கு யாழ்ப்பாணத்திலிருந்த என் பெற்றோர் வராததால் எனக்கேற்பட்டிருந்த வருத்தம், இலங்கையிலிருந்து லண்டனுக்கு அவவின் பெற்றோர் போவது சாத்தியமில்லை என்பதால் நானாவது அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதலை எனக்குத் தந்திருக்கவும்கூடும். எதுவோ அந்தப் பட்டமளிப்பு விழாவுக்காகக் கடந்த ஒக்ரோபரில் லண்டனுக்குப் பயணமாகியிருந்தேன்.

கற்றல் செயல்பாட்டின் அறுவடையைப் பரவசத்துடன் கொண்டாடும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றை ஐரோப்பிய நாடொன்றிலும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் London South Bank University வளாகத்துக்குள் கால்பதித்தேன். பட்டமளிப்பு நிகழவிருந்த அந்த மண்டபத்துக்குள் செல்வதற்குப் பல வாசல்கள் இருக்கின்றன என்பது மண்டபத்தின் அளவை எதிர்வுகூறப் போதுமானதாக இருந்தது. என் ரிக்கற்றில் குறிக்கப்பட்டிருந்த வாசலைத் தேடி உள்நுழைந்த என்னை முதலில் ஏமாற்றமே வரவேற்றது. அந்தப் பென்னம்பெரிய மண்டபம் வெறிச்சோடிப் போயிருந்தது. பட்டம் பெறவிருந்த சில மாணவர்கள்கூட நிகழ்வுக்குச் சமூகமளிக்கவில்லை என்றால் பாருங்களேன்.

பட்டமளிப்பு என்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத இப்படியானவர்களைப் பற்றிப் பின்னர் இரண்டு சினேகிதிகளிடம் அலட்டிக்கொண்டபோது, ஐரோப்பாவில் அதுதான் வழமை என்றார் அங்கிருப்பவர், இலங்கையில் மருத்துவப் பட்டம் பெற்ற அவரின் பட்டமளிப்பிலும் அவரின் பெற்றோர் கலந்துகொள்ளவில்லையாம் என்றார் இங்கிருப்பவர். எனக்கு வியப்பாக இருந்தது. பிள்ளை ஒருவர் பட்டம்பெறும்போது ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வேண்டாமா? இருப்பினும், இலங்கையிலிருக்கும் சிலரின் FB பதிவுகளைப் பார்க்கும்போது இப்போது நிலைமை மாறிவிட்டதோ என எண்ணவும் தோன்றுகிறது.

ரொறன்ரோவில் பட்டமளிப்பு விழாவுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை எங்களில் பலர் அறிந்திருக்கிறோம். வட அமெரிக்கா முழுவதுமே பல்கலைக்கழகக் கல்வியின் நிறைவு மட்டுமன்றி, ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலைக் கல்விப் பூர்த்திகூட கொண்டாடப்படுகிறது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வில் ஒருவரின் சார்பில் இருவர் மட்டுமே இங்கு பங்குபற்றலாம், ஆனால் கலந்துகொள்வதற்குப் பணமெதுவும் செலுத்தவேண்டியதில்லை. அங்கோ எத்தனைபேரும் பங்குபற்றலாம், ஆனால் பணம்செலுத்த வேண்டும். அதுதான், வித்தியாசத்துக்குக் காரணமோ என்னவோ.

அன்றிரவு பெறாமகள் திவ்வியாவை இரவுணவுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவவின் விருப்பப்படி பிரியா உணவகத்தில் பிட்டும் மீன்குழம்பும் சாப்பிட்டோம். எங்கு போனாலும் பிட்டுக்கு ஒரு தனி மவுசுதான். பின்னர் புராதான காலத்தில் கட்டப்பட்ட லண்டன் பாலத்தினதும், லண்டனின் பிரபல்யத்துக்கும் செல்வச்செழிப்புக்கும் அத்திவாரமிட்ட தேம்ஸ் ஆற்றினதும் அழகை ரசித்தபடி லண்டன் மாநகரை வலம்வந்துவிட்டு வீட்டை அடைந்தோம்.

இலண்டன் பற்றிய என் பதிவொன்றை  முகநூலில்  பார்த்த கமலினி, “லண்டன் வந்த நீங்கள் இங்கும் வந்திருக்கலாமே,” எனக் கேட்டிருந்ததா. “அழைப்புக்கு மிக்க நன்றி, கமலினி. சாந்தியின் மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகத்தான் சென்றிருந்தேன். உங்கு வருவதற்கு ஆசைதான், பார்ப்போம்,” எனப் பதிலளித்திருந்தேன். அதுதான் இவ்வருட நோர்வேப் பயணத்துக்கு வித்திட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நாங்கள் எங்குபோவதானாலும் அது பற்றிய தேடல்களைச் செய்து, அட்டவணைகள்/வழிகாட்டுதல்களைத் தயார்ப்படுத்துவது மூத்த மகள் சிவகாமிதான். இலண்டனுக்குத் தானும் வந்தால் எனக்கு உதவியாக இருக்குமென அவ விரும்பியபோதும் அது சாத்தியப்படவில்லை. முன்பொரு முறை அவவுடன் அங்கு போயிருந்தபோது, Big Ben, Westminster Abbey, Madame Tussauds London, National Gallery, London Eye, Greenwich meridian line, Royal Botanic Gardens போன்ற இடங்களுக்குச் சென்றிருந்ததால், லண்டன் நகருக்கு வெளியேயுள்ள சில இடங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு எப்படிப் போவதென படிப்படியான அறிவுறுத்தல்களையும் தந்து என்னை அவ அனுப்பிவைத்திருந்தா. அவற்றில் குறிப்பிடத்தக்க இடங்கள் என Roman Bathsஐயும், Stonehengeஐயும் சொல்லலாம்.

                           - Bath நகரம் -

ரோமர்களின் ஆட்சியின் கீழ் இங்கிலாந்து இருந்தபோது Bath என்ற அந்த நகரத்தை அவர்கள் அழகுற அமைத்திருக்கும் விதம், பாதைகளைச் செப்பனிட்டிருக்கும் பாங்கு, சுண்ணாம்புக்கல்லில் இருந்து உருவாகும் (geothermal energy) வெப்பத்தைப் பயன்படுத்திச் சூடான நீரைப் பெற்ற முறை, தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், சேர்ந்திருந்து கதைத்து மனம் மகிழ்வதற்கும் என இடங்களை ஒழுங்குபடுத்தியிருந்த லாவகம், இளைப்பாறுமிடங்களைச் சூடேற்றுவதற்காகச் செங்கல் சூளைகளை உருவாக்கிய முறை, மழை நீரைச் சேகரித்து நன்னீரைப் பெற்றுக்கொண்ட பாங்கு என யாவுமே அதிசயப்பட வைத்தன.

முதலில் ஆடைகளைக் களையும் அறை, பின்னர் உடற்பயிற்சி அறை, அதற்கடுத்ததாக எண்ணெய் பூசும் அறை எனக் குறிப்பிட்டதொரு ஒழுங்கில் வேறுபட்ட தேவைகளை நிவர்த்திசெய்யும் அறைகளை Roman Baths கொண்டிருக்கிறது. ரோமானியர்கள் குளிரான குளிப்பும், அதைத் தொடந்து சூடான நீரில் குளிப்பும் செய்திருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து வெளியேற முன்பாக எதிர்த்திசையில் சென்று கழற்றி வைத்த ஆடைகளை மீளவும் அணிந்திருக்கிறார்கள். அதைவிட வேறுபட்ட வெப்பநிலைகளைக் கொண்ட சூடான அறைகளும் (sauna) குளிரான அறையும் கூட அங்கு காணப்படுகின்றன. அத்துடன் சூரியனிலிருந்து வரும் இயற்கையான வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையிலும் இவை அமைந்திருக்கின்றன. இவ்வறைகள் பெண்களுக்கும் ஆண்களுக்குமென தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.

                               - குளியல் தடாகம் -

Roman Baths உடன் இணைந்த வழிபாட்டுத் தலமும் இங்குள்ளது. துரோகம் செய்தவர்களைச் சபித்து அவர்களுக்குக் கெட்டது நடக்கவேண்டுமென கடவுளுக்குச் செய்தி அனுப்பினால் அது நடக்குமென எங்களில் சிலர் நம்புவதுபோல சில ரோமானியர்களும் நம்பியுள்ளமைக்குச் சாட்சியங்களும் அங்கு காணப்படுகின்றன. அத்துடன் தண்ணீருக்குள் காசு எறிந்து பிரார்த்தனை செய்தலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை அங்கு பார்க்கமுடிந்தது

தினமும், வேலையை முடித்துவிட்டு, பின்னேரத்தில் அனைத்துச் ரோமானியச் சமூக வகுப்பினரும் வயது வேறுபாடின்றிக் குளிக்கும், ஓய்வெடுக்கும் ஓர் இடமாக இருந்த Roman Baths க்குள்ளே தற்போது செல்லமுடியாது. ஆனால், அவற்றுக்கு ஒத்ததாக அமைக்கப்பட்டிருக்கும் Thermae Bath Spa என்பது சூடான நீரூற்றை அனுபவிப்பதற்குப் பிரபலமான ஓர் இடமாக இருக்கிறது. இந்த நீரூற்றில் உள்ள கனியுப்புக்களும் அதில் பராமரிக்கப்படும் வெப்பநிலையும் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. தரையின் கீழ் சூடான காற்றைப் பரப்பும் அமைப்புக்களால் இங்குள்ள குளியல் தளங்கள் சூடாகப் பேணப்படுகின்றன.

Bath நகரில் ஓடும் Avon என்ற ஆற்றின் மேலாகக் கட்டப்பட்டிருக்கும், Pulteney Bridge இந்த நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இதன் இரண்டு பக்கத்திலும் பல்வேறு வகையான கடைகள் காணப்படுகின்றன. அத்துடன், பிரபல்யமான எழுத்தாளரான Charles Dickens இங்கிருக்கும் ஒரு pubஇல் இருந்துதான் தனது நாவல்களை எழுதியிருக்கிறார்.

 - Pulteney Bridge - இரண்டு பக்கத்திலும் கடைகளைக் கொண்ட அழகான பாலம் -

நாகரிகத்துக்குப் பெயர்பெற்ற ரோமானியர்களின் கைவண்ணத்தை Bath நகரில் பார்த்து வியந்த பின்னர், புராதான கால கட்டடக்கலை என்ற வகையில் உலகில் மிகவும் பெயர்ப்பெற்ற ஒரு இடமாக இருக்கும்  'கல்வட்டம்' (Stonehenge) பார்க்க அடுத்த நாள் சென்றிருந்தேன். Salisbury என்ற இடத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டிருக்கும் 'கல்வட்டம்'  என்ற அமைப்பு கிடையாகவிருக்கும் மிகப் பெரிய கற்களைக் காவுவதற்காக மிகக் கவனமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பாரிய செங்குத்தான கற்களைக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 1000 வருடங்கள் எடுத்தது என்கின்றனர். UNESCO பாதுகாக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

              - 'கல்வட்டம் (ஸ்டோன்ஹெஞ்ச் - Stonehenge): சூரியன் நடுவில் வரும் இடம் -

இந்தக் கல்வட்டம்  எப்படிக் கட்டப்பட்டிருக்கும் என்பது இன்றுவரை மர்மான ஒரு விடயமாகவே இருக்கிறது என்கின்றனர். அதைச் சுற்றியுள்ள புல்வெளிக்குள் பிரத்தியேகமாகத் தெரியும்வகையில், சுமார் 20 தொன் நிறையுள்ள ஏழு மீற்றர் உயரமான சுண்ணாம்புக்கற்களுடன் அது நிமிர்ந்து நிற்கிறது. அத்துடன் சூரியனின் இயக்கத்துடன் ஒத்திருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. கோடையில் வரும் மிக நீளமான பகல்பொழுதின்போது (summer solstice) இந்தக் கற்களினாலான வட்டத்தின் நடுவே, வட கிழக்கு திசையில் சூரியனை உதிப்பதைப் பார்க்கலாம், அதேபோல குளிர்காலத்தின் மிகக் குறுகிய பகல்பொழுதின்போது இந்தக் கற்களினாலான வட்டத்தின் நடுவே தென்மேற்குத் திசையில் சூரியன் மறைவதைப் பார்க்கலாம். அந்த இடம் இங்கு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.இக்கல்வட்டம் பற்றிய மேலதிகத்தகவல்களுக்கான் இணைப்பு.

இப்படியாக லண்டன் நகருக்கு வெளியே இருக்கும் இந்தவிரு அதிசயங்களுடனும் இரண்டு நாள்களைக் கழித்த பின்னர் மீண்டும் திவ்யா இருக்கும் வீட்டுக்குச் சென்றேன்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.