இம்முறை லண்டன் போக ஆயத்தமானபோது, சந்திக்கவேண்டுமென நான் விரும்பியவர்களில் கெளரி பரா முக்கியமான ஒருவராக இருந்தா. 2019இல் லண்டனில் நிகழ்ந்த ‘உதிர்தலில்லை இனி’ என்ற எனது நூல் அறிமுகத்தின்போது கெளரியை ஒரு தடவை சந்தித்திருந்தாலும்கூட, அவவுடன் உரையாடியிருக்கவில்லை. அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான், நிறைந்த அர்த்தங்களுடனும் வித்தியாசமான பார்வையிலும் அவ செய்யும் பக்கச்சார்பற்ற நூல் விமர்சனங்களைக் கேட்கக் கிடைத்திருந்தது. அதனால் கவரப்பட்டிருந்த எனக்கு, 'ஒன்றே வேறே' என்ற என் சிறுகதைத் தொகுதி பற்றிய அவவின் கருத்தை அறிய வேண்டுமென்ற அவா ஏற்பட்டிருந்தது.

மச்சாளின் மகள் சூட்டா வீட்டில் சாப்பாட்டின் பின்னர் ஆறஅமரக் கதைத்துக்கொண்டிருந்தபோதே, அவவுக்கு அண்மையில் கெளரி பரா வசிப்பதாக அறிந்தேன். உடனே, கெளரியைச் சந்திக்கும் என் ஆவலைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு வழியைச் சூட்டா கண்டுபிடித்தா. இருவரினதும் வீடுகளுக்கு இடையிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் என்னைக் கொண்டுபோய் விட்டுவிட்டு, சூட்டாவும் திவ்வியாவும் அங்கு காத்திருந்தனர். சூடான கோப்பியுடனும் ருசியான சிற்றுண்டியுடனும், பல நாட்கள் பழகியவர்கள்போல மிக இயல்பாக நாங்கள் இருவரும் பேசினோம், சிரித்தோம், மகிழ்ந்தோம். திவ்வியாவையும் சூட்டாவையும் அதிக நேரம் காத்திருக்கவைக்க விரும்பாததால், நீண்ட நேரத்தைச் செலவழிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் விடைபெற வேண்டியிருந்தது.

'ஒன்றே வேறே' என்ற நூலின் முதல் பிரதியை அவவுக்குத்தான் கொடுத்திருந்தேன். அதிலிருந்த கதைகளில் ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு வித்தியாசமான அணுகுமுறையில், இரண்டு வெவ்வேறு விதமான விமர்சனங்களை எழுதியிருப்பதுடன், லண்டனில் நிகழ்ந்த மகளிர் தின விழா உள்ளடங்கலாக இரண்டு இடங்களில் அவற்றைப் பற்றிப் பேசியுமிருக்கிறா. அதற்காகக் கெளரிக்கு நான் மிக்க நன்றியுடையேன்.

மீளவும் சூட்டாவின் வீட்டுக்குக்குபோய் அமர்ந்தபோது, “நீங்கள் ஏன் dye பண்ணவில்லை, நான் வழமையாகப் போகும் salonஇல் போய் dye பண்ணிக்கொண்டு போங்கோ, வடிவாயிருக்கும் எனச் சொன்னவ அடுத்த செக்கனே அந்தச் சலூனுடன் தொடர்புகொண்டு அதற்கான ஒழுங்குகளைச் செய்துவிட்டதால் அவர்கள் கடையைப் பூட்டமுன் அவசரமாகப் போக வேண்டியிருந்தது. சூட்டாவின் கரிசனை என் சக ஆசிரியை சுசியையும் நினைவுபடுத்தியது. அவவும் அப்படித்தான் ஏன் dye பண்ணவில்லை எனக் கரிசனையுடன் விசாரிப்பா. ஆனால், பிள்ளைகள் dye பண்ணாமலிருப்பதும் வடிவுதான் என்பார்கள், எனக்கு ஏனோ இன்னும் முதுமையின் அடையாளங்களுக்கு இசைவாக்கப்படும் மனப்பாங்கு வரவில்லை. ரொறன்ரோவில் பல சலூன்களுக்குப் போயிருக்கிறேன், அங்கு அவர்கள் பயன்படுத்திய dye ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது என்னவோ உண்மைதான்.

இப்படியாக மிகுந்த கரிசனையைச் சூட்டா காட்டியதால், சேர்ந்திருந்து பேசுவதற்கு அதிக அவகாசம் கிடைக்காதபோதும், அம்மா திருமணமாகி அரியாலையிலிருந்து தெல்லிப்பழைக்குச் சென்றபின்பே, படம் பார்ப்பதற்காவோ அல்லது வேறு விடயங்களுக்காவோ வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கான சந்தர்ப்பங்கள் தனக்கும் தன் வயதொத்த இளம் பெண்களுக்கும் கிடைத்தது என மச்சாள் அம்மாவை நன்றியுடன் நினைவுகூர்ந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா ஊரில் பல நல்ல விடயங்களைச் செய்திருக்கின்றா என்பதில் எப்போதும் எங்களுக்குப் பெருமையே.

அடுத்த நாள் எங்களின் ஊரவரான தர்சியைச் சந்தித்தபோது, நோயுற்றிருக்கும் அவவின் அம்மாவுக்காகவும், தங்கைக்காகவும் அவ செய்துகொண்டிருப்பவை மனதைத் தொட்டன. “ஶ்ரீ அக்கா, அம்மாவுக்கு உங்களை நல்லாய்ப் பிடிக்கும், எப்போதும் உங்களைப் பற்றிக் கதைப்பா,” எனத் தர்சி சொன்னபோது, என் தனிப்பட்ட வாழ்வின் துயரங்களால் அன்புள்ளவர்களிடமிருந்து நான் எவ்வளவு அந்நியப்பட்டிருந்திருக்கிறேன், இனியாவது அப்படி இருக்காமல் உறவைப் பேண முயற்சிக்க வேண்டுமென்ற துடிப்பு ஏற்பட்டது. எங்களின் ஊரிலிருந்து முதன்முதலாக தூரவுள்ள ஓரிடத்துக்குப் படிக்கச்சென்றது நான்தான் என்பதாலோ என்னவோ, பேராதனைக்கு நான் பயணமானபோது, தர்சியின் அம்மா உட்பட அயலவர்களில் பலர் நான் எடுத்துச்செல்வதற்கான சிற்றுண்டிகளுடன் எங்களின் வீட்டுக்கு வந்திருந்தனர். சிலர் தெல்லிப்பழைப் புகையிரத நிலையத்துக்குக்கூட வந்திருந்தனர் என்பது மீளவும் நினைவுக்கு வந்தது. நாட்டில் நிகழ்ந்த அனர்த்தங்கள் இப்படியான உறவுகளை, இந்த உறவுகளுடன் வாழும் சுகத்தை, செளகரியத்தை எல்லாம் எங்களிடம் இருந்து பறித்திருப்பது எங்களின் தூரதிஷ்டமே.

நெதர்லாந்தில் நிகழ்ந்த பெண்கள் சந்திப்பு ஒன்றின்போது எழுத்தாளர் நவஜோதியைச் சந்தித்திருக்கிறேன். சென்றமுறை லண்டனுக்குச் சென்றிருந்தபோது, கவிஞர் ப.வை.ஜெயபாலன் அண்ணாவின் சிபாரிசின்பேரில் zoom ஊடாக அவர் என்னை ஒரு நேர்காணல் செய்திருந்தார். நவஜோதி, பிரபல்யமான எழுத்தாளரான அகஸ்தியரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை லண்டனுக்கு வருகிறேன் என்றதும் எப்படியும் என்னைச் சந்திக்க வேண்டும் என்று நீண்ட தூரத்திலிருந்து பல சிரமங்களைத் தாண்டி வந்திருந்தார். அந்த ரம்மியமான பொழுதுக்கும் அவரின் அன்புக்கும் என்ன கைங்கரியம் செய்யலாமென வியந்துபோனேன்.

மறுநாளும் மனதுக்கு நெகிழ்வுதரும் ஒரு நாளாக அமைந்திருந்தது. மகாஜனாவில், சாந்தியின் சகமாணவியாக இருந்த புனிதா சின்னப்பா இல்லத் தலைவராக இருந்தபோது நான் அந்த இல்லத்தின் உப தலைவராக இருந்திருக்கிறேன் என்றாலும் அப்போது அதிகம் பழகியதில்லை. FBஇல் நண்பர்களான பின்பே இருவருக்குமிடையில் அதிக பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதற்குக் காரணமாக இருந்தது எழுத்தெனலாம். 2019இல் நான் லண்டன் போயிருந்தபோது, நிகழ்ந்தது போலவே, இம்முறையும் நீண்டதொரு பயணம்செய்து அவ என்னைச் சந்திக்க வந்திருந்தா. மதியவுணவுடன் மனதார உரையாடி மகிழ்ந்தோம். நாங்கள் இணைந்து எங்காவது ஓரிடத்துக்குப் பயணம்செய்ய வேண்டுமென்றும் பேசிக்கொண்டோம். புனிதாவின் அன்புக்கு நான் என்றும் நன்றியுடையேன்.

இலங்கையின் துயர்படிந்த வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய சம்பவங்களுக்கும் அவவின் வாழ்வுக்கும் அதிக தொடர்புகள் இருக்கிறதென அறிந்திருந்தபோதும், நேருக்கு நேரான உரையாடல்கள் அதன் முழுமையை நான் விளங்கிக்கொள்ள உதவிசெய்திருந்தன. அவை நிச்சயமாகப் பதியப்பட வேண்டியவையென நான் உணர்ந்தேன். இப்போது அதற்கான நேரமும் வசதியும் அவவுக்கு இருக்குமென நினைக்கிறேன். விரைவில் அவற்றை வாசிப்பதற்கு நான் காத்திருக்கிறேன்.

அன்றைய சந்திப்பின் பின்னர், “இன்று மதியம் இலண்டன் மாநகரில் சிறுகதை எழுத்தாளரும், தெல்லியூர் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவியும் என் இனிய நட்பும் ஆன ஶ்ரீரஞ்சனியைச் சந்தித்து அளவளாவியதில் மிக்க மகிழ்வுற்றேன். ஒன்றே ஒன்றாகவும், பல்வேறு வகையாகவும் இருப்பதை, உள வளஞ் சார்ந்து கூறும் ஒன்றே வேறே என்ற சிறுகதை தொகுப்பு, நீண்ட நாட்களின் பின்னரான என் இரயில் பயணத்திற்கு துணையாக வந்திருந்தது! என அருமையானதொரு பதிவை முகநூலில் புனிதா பகிர்ந்திருந்தா

புனிதா ஒரு கவிஞரும்கூட. ‘ஒன்றே வேறே’ சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகள் ஒவ்வொன்றுக்கும் சிறிய கருத்துரைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வகையில் ‘ஒன்றே வேறே’ என்ற கதை பற்றிய அவவின் கருத்தைத் தரமுடியுமா எனப் புனிதாவிடம் கேட்டபோது, "கவர்ச்சி மிகு கொங்கைகளில், கட்டிகள் புற்றெடுத்த போதும், கலங்காது நிமிரும் பெண்மையின் திண்மையைச் சங்கத் தமிழோடு தோய்த்துச் சமூக விழிப்புணர்வையும் காட்டி, வாழ்வின் நிரந்தரமற்ற நிஜங்கள் அத்தனையையும் குறைவறக் கூறும் இக்கதைப் பூம்புனலாடி உய்த்துணர்க, பாலூட்டிகளின் பெருமை தனை!" என 30 நிமிடத்துக்குள் கவித்துவத்துடன் தன் கருத்தை அவ வெளிப்படுத்திய விதம் என்னை வியக்கச் செய்திருந்தது. எங்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்குப் புனிதா தன் எழுத்தாற்றலைப் பயன்படுத்த வேண்டுமெனப் புனிதாவை மீண்டும் நான் அன்புடன் கேட்டிருக்கிறேன்.

தொடரும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.