- Bondi Beach கடற்கரைக் கலைவடிவம் -

விஜியின் மனம் மட்டுமன்றி வீடும் விசாலமானதாகவே இருந்தது. காலையில் சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு ருசிமிக்க மசாலா தேநீர் பருகுவதும்,பின்னர் விஜி பரிமாறும் விதம்விதமான சாப்பாட்டை வயிறாராச் சாப்பிடுவதும், அதன்பின்னர் ஊர் சுற்றிவிட்டு வெளியில் சாப்பிடுவதுமாகப் பொழுது ரம்மியமாகப் போனது.

சோலைபோல எங்குமே பூச்செடிகளால் சூழப்பட்டிருந்த The Grounds of Alexandria என்ற உணவகத்தில் ஒரு நாள் உணவருந்தினோம். அது மனதுக்கும் மிகவும் உவப்பாகவிருந்தது. அங்கெடுத்திருந்த படங்களை முகநூலில்  விஜி பகிர்ந்ததும், நான் சிட்னியில் நிற்கிறேன் என்பதை அறிந்த ஜெயந்தி தங்களின் வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தார். ஒரே காலத்தில் மகாஜனாவில் படித்திருந்த ஜெயந்தியைப் பின்னர் கொழும்பில், ஆசிரியர்களுக்கான பட்டறை ஒன்றின்போது கடைசியாகச் சந்தித்திருக்கிறேன். தொலைத்த உறவுகளுடன் மீளவும் இணைய உதவிசெய்கின்ற முகநூலின் தயவால் 35 வருடங்களின் பின்னர் மீளவும் நாம் சந்தித்தோம்.

       - The Grounds of Alexandria என்ற உணவகம் -

இலக்கிய விழா ஒன்றைச் சிட்னியிலும் ஒழுங்கு செய்திருந்தமையால் பூபதி அண்ணாவும் அங்கு வந்திருந்தார். அவரைப் பேட்டிகண்ட SBS ரேமண்ட் செல்வராஜா என்னையும் பேட்டி காண்பதற்கான ஒழுங்குகளைப் பூபதி அண்ணா செய்திருந்தார். அந்த நேர்காணலின்போது, பத்து நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட பத்துக் கேள்விகளுக்கு அவசரமாகப் பதிலளிக்க வேண்டியிருந்தது வேறுபட்டதொரு அனுபவமாக இருந்தது.

சிட்னி விழாவில் எனது நூலுக்கான அறிமுகத்தைக் கவிஞர் செளந்தரி கணேசன் சிறப்பாகச் செய்திருந்தா. சபையினர் அனைவரையும் தன்பால் கட்டிப்போடும் பேச்சுத் திறன் அவவில் நிறைந்திருந்தது. ‘ஒன்றே வேறே’ பற்றி விமர்சனம் செய்யக்கிடைத்ததில் மகிழ்ச்சியடைவதாக அவ கூறினாலும், அவ அதனை அறிமுகம் செய்தது என் அதிஷ்டமே!

முருகபூபதி அண்ணாவின்கதைத்தொகுப்பின் கதை’ என்ற நூலுக்கான கானா பிரபாவின் விமர்சனத்தை அம்பிகா அசோகபாலன் என்ற மாணவி வாசித்தா. அவவின் தமிழ் உச்சரிப்புத் திறனும் வாசிப்புத் திறனும் அதிசயப்பட வைத்தன. எழுத்தாளர்களான காவலூர் ராஜதுரை, நீர்வை பொன்னையன், தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன், வீரகேசரி ஊடகவியலாளர் கார்மேகம் போன்றோரின் பிள்ளைகளைப் பூபதி அண்ணா அறிமுகப்படுத்தியிருந்தார்.

“அக்காவை எழுதவிட்டிட்டு நாங்க எல்லாவேலையும் செய்வம், அக்கா இடையில எங்காவது அகன்றால் ஓடிப்போய் எழுதினதை வாசிப்பம், திருத்தவேணும், இப்ப வாசிக்காதே என அக்கா சொல்லுவா,” எனத் தாமரைச்செல்வியின் தங்கை எழுத்தாளர் விமல் பரம் கூறியபோது, எழுத்தாளர்களின் குடும்பத்தவர்களில் இப்படி எத்தனைபேர் ஆதரவாகவிருக்கிறார்கள், அக்கா அதிஷ்டசாலிதான் என மனமார வாழ்த்தினேன்.

                   - எழுத்தாள்ர் முருகபூபதியுடன் -

அங்கிருந்து விஜியின் குடும்பத்தினரின் விருந்தொன்றுக்கு ஐங்கரன் விக்னேஸ்வரா என்னைக் கூட்டிச்சென்றார். அவரின் தந்தையாரான டொக்டர் விக்னேஸ்வராவிடம் நாங்கள் சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறோம் என்பதை நினைத்தபோது பூமியின் வடிவம் தட்டையல்ல என்பது மீளவும் நிரூபணமானது.

விருந்தில் விஜிக்கருகே போயிருந்தபோது முன்னாலிருந்தது சகமாணவி நளினி என்பதை நம்பமுடியவில்லை. அவவுடனான உரையாடலின்போது காய்கறிகள் எதையும் அவர்கள் வாங்குவதில்லை, வளவுக்குள்ளே எல்லாம் இருக்கின்றதென அறிந்தபோது அவுஸ்திரேலியாவில் வாழ்வோரில் சற்றுப் பொறாமையாக இருந்தது.

அடுத்தநாள் பூபாலசிங்கம், அவரின் மனைவி தவராணி, மகாகவியின் மகள் இனியாள் எனச் சில மகாஜனன்களுடன் தாயகம் வானொலி விக்கி மதியவுணவுக்கு கூட்டிச்சென்றிருந்தார். அதுவரையில் ரொறன்ரோவில் இருப்பதுபோல, தமிழ்ப் பெயரட்டைகளுடன் அடுக்கடுக்காகத் தமிழ்க் கடைகள் அவுஸ்திரேலியாவில் இல்லையோ என யோசித்த என்னை, ‘நாமிருக்கிறோம் பார்’ என எங்கும் தமிழ் மணமும் தமிழ் ஒலியுமாகவிருந்த அந்த வீதி வரவேற்றது.

தனியப் பயணம்செய்த நான் மீளவும் ரொறன்ரோவுக்கு வரும்போதாவது சேர்ந்து வரவேண்டுமென மகள் அபியும் சிட்னிக்கு வந்துசேர்ந்திருந்தா. அவ வந்த அன்று ஓயாமல் அலைகள் ஆரவாரம்

செய்துகொண்டிருந்த கடலையும், Bondi Beach கடற்கரை முழுவதும் வியாபித்திருந்த அற்புதமான கலைவடிவங்களின் கண்காட்சியையும் பார்த்து மகிழ்ந்தோம். பின்னர் அருங்கிருந்து ஒப்ரா ஹவுஸ், துறைமுகம், துறைமுகப் பாலம் எனச் சிட்னியில் பெயர்பெற்ற இடங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். இந்தியன் படத்தில் வரும் ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ என்ற பாடல் இங்கேதான் படமாக்கப்பட்டிருந்தது.

                    - Bondi Beach கடற்கரைக் கலைவடிவம் -

அபி ஒரு தாவரவுண்ணி, விலங்குகளை அடைத்துவைத்துப் பார்க்கக்கூடாதென்றும் நினைப்பவ. அதனால் அவுஸ்திரேலிய விலங்குகளை அவற்றின் வாழிடத்தில் பார்க்கலாமென விளம்பரப்படுத்தியிருந்த சேவையொன்றுக்கு இங்கிருந்தே முன்பதிவு செய்திருந்தா. நாங்களும் உற்சாகமாகச் சென்றிருந்தோம்.

கங்காருகளைக் கண்டதும் மனமெங்கும் ஆர்ப்பரித்தது. அவ்வளவுதான். வேறெந்த விலங்கையும் பார்க்கமுடியாதெனக் காரணம் சொன்னார் அந்த வழிகாட்டி. அது அசல் பகல் கொள்ளையாகவே போய்விட்டது. எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற சேர்ச்சுக்குப் போயிருந்தால் இதைவிடக் கனக்கக் கங்காருக்களைப் பார்த்திருக்கலாமென விஜி சிரித்தா.

                    - கங்காருகளைக் கண்டபோது.. -

அடுத்த நாள் மழைக்காடுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், நீர்வீழ்ச்சிகள் என வெவ்வேறு தரைத்தோற்றங்கள் சங்கமித்திருக்கும் இடத்திலிருக்கும் நீல மலைகளுக்குப் (Blue Mountains) போயிருந்தோம். யூகலிப்ரஸ் மரங்கள் நிறைந்திருக்கும் பகுதியில் அந்தக் குன்றுகள் இருப்பதால், யூகலிப்ரஸ் இலைகளிலிருந்து வெளியேறும் எண்ணெய்த்துளிகளிலும், சூழவிருக்கும் நீர்நிலைகளிலிருந்து ஆவியாகும் நீராவியிலும் சூரிய ஒளி பட்டுதெறிக்கும்போது, அவை நீலமாகக் காட்சியளிக்கின்றன.

குறுகிய அலைநீளமுள்ள நீலநிறமே அதிகம் சிதறடிக்கப்படுவதால் வானமும் கடலும் நீலமாக இருப்பதைப்போல அவையும் நீலமாக இருப்பதால் அவை நீல மலைகள் என்றழைக்கப்படுகின்றன. அத்துடன் மூன்று மலைக்குன்றுகள் ஒன்றாகவிருப்பதால் அவற்றை மூன்று சகோதரிகள் என்றும் கூறுவர். அந்த மலைகள் தொடர்பான தொன்மங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவானதாக இருப்பது மூன்று மகள்களையும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மந்திரவாதி ஒருவர் அவர்களை மலையாக்கியிருக்கிறார் என்பதுதான். பின்னர் அவரும் தப்பவேண்டியிருந்தபோது கிளியாக உருமாறி தனது மந்திரக்கோலை வாயில் காவிக்கொண்டு பறந்தபோது, மந்திரக்கோலை அவர் தவறவிட்டுவிட்டதால் மூன்று சகோதரிகளும் இன்னும் மலையாகவே உள்ளனர் என்கிறது அந்தத் தொன்மங்கள்.

                - நீல மலைகள் - Blue Mountains -

ஒரு காலத்தில் கைதிகளைத்தான் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பினார்களாம் என்பதால் அங்கிருப்பவர்கள் அவர்களின் வாரிசுகளே என அந்த நாட்டைப் பற்றிச் சிலருக்கொரு தாழ்வான அபிப்பிராயம் இருக்கிறது. ஆனால், அதன் காலநிலையை, அங்கிருக்கும் வசதிகளை அறிந்தால் அது வாழ்வதற்கு சிறந்ததொரு நாடென்பது தெரியும். (அதற்காகக் கனடா நல்ல நாடல்ல என்பது பொருளில்லை. எவ்வளவுதான் குளிர் இருந்தாலும் இங்கு வாழக்கிடைத்தது பெரும்பாக்கியமென்றே நான் கருதுகிறேன்.)

அவுஸ்திரேலியாவில் மழை நிலத்தை நனைக்குமளவில்தான் பெய்யுமென எழுத்தாளர் ஜெயமோகன் அவரது பயணக் கட்டுரையில் எழுதியிருந்தார். ஆனால் அவுஸ்திரேலியாவில் நான் நின்றபோது எந்த நாளும் மழையாகவே இருந்தது. வெள்ளத்தால் சிலர் வீடுகளை இழந்திருந்தனர். ரயில் உள்ளடங்கலாகப் போக்குவரத்தும் பல இடங்களில் தடைப்பட்டிருந்தது. பூபதி அண்ணாவும் நடேசனும் சிட்னியிலிருந்து மெல்பேர்னிலிருந்து போகவிருந்த ரயில்கூட ரத்துச் செய்யப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் மழைக்காடுகள் முதல் பாலைவனம் ஈறாக வேறுபட்ட தரைத்தோற்றமும் காலநிலையும் இருக்கிறது என்பதே உண்மை.

அவுஸ்ரேலியாவிலிருக்கும் தாவரவியல் பூங்காக்களை அனுபவிப்பதற்குக் கட்டணம் ஏதுமில்லை என்பதும் மின்சக்தியைச் சேமித்து பூமியின் வளத்துக்கு உதவும்வகையில் dryer இல்லாமல் ஊரில் செய்வதுபோல உடுப்புக்களை அந்த மக்கள் வெளியில்தான் காயவிடுகிறார்கள் என்பதும் அங்குள்ள வேறு சில சிறப்புகள்.

அங்கு எனக்குப் பிடிக்காமலிருந்த விடயங்களென இரண்டைச் சொல்லலாம். ஒன்று வீட்டுக்குள்ளும் குளிராகவிருப்பதால் நன்கு உடுத்தித்தான் இருக்கவேண்டும். மற்றது கழிவறை தனித்திருப்பதால் கழுவுவதற்கு குளியலறைக்குச் செல்லவேண்டும்.

                       - சிட்னி துறைமுகப் பாலத்தில்.. -

அடுத்ததாக கல்வி தொடர்பாகப் பார்த்தால், ரொறன்ரோவில் இருப்பதுபோல gifted என மாணவர்களை இனம்கண்டு பாடவிதானத்தை அவர்களுக்கேற்ற வகையில் சவாலுடையதாக மாற்றிக் கற்பிக்கும் அமைப்பு அங்கில்லை, மாறாக லண்டனில் இருக்கும் gramer schools போல மெல்பேர்ன் மற்றும் சிட்னியில் தரமான பாடசாலைகள் எனக் கருதப்படும் Selective Schools இருக்கின்றன. மாணவர் ஒருவரின் புத்திக்கூர்மையே gifted இனம்காணலில் பயன்படுத்தப்படுவதால் அதற்காகத் தயார்செய்யமுடியாது, ஆனால் selective schoolsகளில் இடம்பிடிப்பதற்காக தனிப்பட்ட ரியூசன்களுக்கு மாணவர்களைக் கொண்டோடித் திரியும் பெற்றோரையும் அவர்களின் அழுத்தம் நிறைந்த வாழ்வைப் பற்றியும் கேள்விப்பட்டேன். என் தொழில் ஆசிரியர் என்பதாலும் எங்களின் குடும்பப் பெறுமானங்களில் கல்வி முதலிடத்தை வகிப்பதாலும் நாங்கள் ரொறன்ரோவில் இருக்கிறோம் என்பதில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

டொக்டர் ஞானசேகரன் அவரது அவுஸ்ரேலியப் பயணக்கதையில் இலங்கையில் பெற்றோர் கஷ்டப்பட்டுப் படிப்பிப்பதால், பின்னர் பிள்ளைகள் அவர்களைப் பராமரிக்கிறார்கள். அவுஸ்ரேலியாவில் பிள்ளைகளை அரசாங்கம் படிப்பிப்பதால் அங்கு நிலைமை அப்படியில்லை என எழுதியுள்ளார். ஆனால், இலங்கையில்தான் பல்கலைக்கழகக் கல்வி இலவசமானது, உதாரணத்துக்கு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நானிருந்தபோது இருப்பிடம், கல்வி யாவுமே இலவசமானவையாகவே இருந்தன. என் பெற்றோர் அரச ஊழியர்களாக இருந்ததால் வருடத்தில் மூன்று முறை இலவசமாக தெல்லிப்பழைக்கு ரயிலில் பயணிக்கக்கூடியதாகவும் இருந்தது. சாப்பாட்டுக்கு மட்டுமே செலவிருந்தது, ஆனால் இங்கு என் பிள்ளைகளுக்கு எல்லாமே கட்டணம் செலுத்தவேண்டியவையாகவே உள்ளன. எனவே அந்த ஒப்பீடு சரியானதெனச் சொல்லமுடியாது.

 - SBS ரேமண்ட் செல்வராஜாவின் வானொலி நேர்காணலின்போது..-

அவுஸ்ரேலியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பணமான Ausstudyஐ பெற்றோரின் வருமானத்தின் அடிப்படையில் இங்கு வழங்கப்படும் Child Tax உடன் ஒப்பிடலாமென நினைக்கிறேன். அவ்வாறே பல்கலைக்கழத்தில் இருப்பவர்களுக்கு இங்குள்ள OSAP போன்ற உதவி அங்கும் கிடைக்கிறது. அதேபோல இலங்கையில் வருமானம் குறைந்தவர்களின் பிள்ளைகளுக்கு மாதமாதம் ஒரு குறித்த தொகையை அரசாங்கம் கொடுக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது. எனவே மாற்றங்களுக்கு கலாசார மற்றும் சந்ததி மாற்றத்தை வேண்டுமானால் குறைகூறலாம். அத்துடன் கனடாவில் இருப்பதைப் போலன்றி, இலங்கையிலும் லண்டனிலும் இருப்பதுபோல உயர்தரப் பாடசாலையிலிருந்து நேரடியாக மருத்துவக் கல்லூரிக்கு அவுஸ்ரேலியாவில் போகமுடிகிறது.

மணியனின் பயணக்கட்டுரைகளை அந்த நாட்களில் வாசித்தபோது அப்படி ஒன்றை நானும் எழுதுவேனென நினைத்திருக்கவில்லை. இதை எழுதக் கிடைத்த சந்தர்ப்பத்துக்கும், இக்கட்டுரையைப் பிரசுரிக்கும் பதிவுகள் வலைத்தளத்துக்கும், என் நூலை இரண்டு இடங்களில் அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தப் பயணத்துக்குச் சிறப்புச் சேர்த்த பூபதி அண்ணாவுக்கும் மிக்க நன்றியுடையேன்.

 முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.