முருகபூபதி(  வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம்  போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச்  சந்தித்தாலும்  மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை.   இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில்  யாழ்.  ஈழநாடு பிரைவேட்  லிமிட்டட்  நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன்,  இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை  யாழ்ப்பாணத்தில்  வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முருகபூபதி எழுதி,  அண்மையில் வெளியான இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலில், முன்னைய ஈழநாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இங்கு பதிவாகின்றது. )

"  கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம்  ஆகிய  இரு சகோதரர்களின்  உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில்  வெளிவரத்  தொடங்கி,  நாளும் பொழுதும்  உரம்பெற்று வளர்ந்து,  ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக  சிலிர்த்து  நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில்  தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம்  ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன்  பின்னிப் பிணைந்ததாகவே  நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும்  தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில்  தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில்  தொண்ணூறுகளின்  ஆரம்பத்தில்  தன்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டது." இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியின் மறைவிற்குப்பின்னர் உதயமாகிய ஈழநாடு பத்திரிகையின் தோற்றத்தையும் அஸ்தமனத்தையும் லண்டனில்  வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா " ஈழநாடு என்றதோர் ஆலமரம்" என்னும் கட்டுரையில் உணர்வுபூர்வமாகவும்  அறிவார்ந்த  தளத்திலும்  பதிவுசெய்துள்ளார்.

ஈழநாடு  ஸ்தாபகர்  கே.சி. தங்கராசா  கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத்தின்  தலைவராகவும் சிறந்த பணியாற்றி நாடாளுமன்றில் முன்னாள்  நிதியமைச்சர்  கலாநிதி என்.எம்.பெரேராவால்  பாராட்டப்பட்டவர். இவருடைய  கொழும்பு  இல்லமே ஈழநாடு பத்திரிகையின் தென்னிலங்கை  அலுவலகமாக  இயங்கியது.  இலங்கை  நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ,  1981  இல்  யாழ்ப்பாணம் பொது நூலகம் தங்கள் பதவிக்காலத்தில்  எரியூட்டப்பட்டதற்கு  வருத்தம்  தெரிவித்து மன்னிப்புக்கோரியிருந்தார். ஆனால், அக்காலத்தில் அதே அரசின் கூலிகளினால் ஈழநாடு என்ற ஆலமரமும் எரிக்கப்பட்டது என்பதை ஏனோ சொல்வதற்கு மறந்துவிட்டார். அதனை நினைவுபடுத்துவதற்கும் அங்கிருந்த தமிழ்த்தலைவர்கள்  ஏனோ  மறந்துவிட்டனர். ஈழத்தமிழர்களின் குரலாக ஒலித்த ஈழநாடு முதல் இதழ் 1958 இல் வெளியானதும் நேரே கொழும்புத்துறையிலிருந்த யோகர்சாமிகளிடம்தான் ஆசிபெறுவதற்கு சென்றார்களாம். அவர் அந்த இதழைப்பார்த்துவிட்டு, "ஏசுவார்கள் எரிப்பார்கள். துணிவுடன் தொடர்ந்து நடத்துங்கள் " என்றுதான் ஆசி கூறினாராம்.

அவரது தீர்க்கதரிசனம் பலித்தது. பாரதி இந்தியாவில் ஆசிரியராக இருந்த அனைத்துப்பத்திரிகைகளும் சுதந்திரவேட்கையையே வலியுறுத்தி வந்திருக்கின்றன. அவர் நடத்திய பத்திரிகைகளுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் தடைவந்திருக்கிறது. அவரும் நண்பர்களும் புதுவைக்கு தலைமறைவாக தப்பியோடியிருக்கிறார்கள்.

வெள்ளிவிழாக்கண்ட  யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையும் சோதனைகள்  - தடைகள் பலவற்றையும்  கடந்துதான் பயணித்து ஓய்வுற்றது. ஈழகேசரி 1958 இல் நிறுத்தப்பட்டதும் அங்கிருந்த ஆசிரியர் இராஜ அரியரத்தினம் ஈழநாடு வில் இணைந்தார். கே.பி. ஹரன் ஆசிரியரானார்.

அ.செ.முருகானந்தன், எஸ்.எம்.கோபாலரத்தினம், பெருமாள், சசிபாரதி, எஸ். எஸ். குகநாதன், காசிலிங்கம், சபாரத்தினம், மகாதேவா,  அனந்த பாலகிட்ணர், ஈ.கே. ராஜகோபால்,  கே.வி.ஜே. திருலோகமூர்த்தி,  ஐயா சச்சிதானந்தம், கே.கே. ஐயாத்துரை, எஸ்.திருச்செல்வம், ஏ.பி. சூரியகாந்தன், கா.யோகநாதன், எஸ். ஜெகதீசன், ஏ.என்.எஸ் திருச்செல்வம், பார்வதி நாதசிவம்,  கந்தசாமி , துரைசிங்கம் ,  மகாலிங்க சிவம் …. .இப்படிப்பலர்  பணியாற்றிய  பத்திரிகை ஈழநாடு.
இவர்களில் சிலர் மறைந்து நினைவுகளாகிவிட்டனர். சிலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சென்றவிடத்திலும்  விட்ட குறை தொட்ட  குறையாக பத்திரிகைகளை நடத்தினர். சிலர் ஈழநாடு பத்திரிகை வாழ்க்கை குறித்த நினைவுகளை நூல்களாக வெளியிட்டனர்.

சிலர் ஈழநாடு பத்திரிகையில் பெற்ற அனுபவத்திலிருந்து கொழும்பில் வெளியான --  வெளிவரும் பத்திரிகைகளில்  இணைந்தனர். சிலர் தாம் பெற்ற ஈழநாடு அனுபவத்திலிருந்து ஊடகத்துறையின் வேறு துறைகளான வானொலி, தொலைக்காட்சி சேவைகளுக்கும்  சென்றனர்.

நூலகர் செல்வராஜா குறிப்பிடுவதுபோன்று ஈழநாடு ஆலமரம்தான். இந்த விருட்சத்தின் நிழலில் வாழ்ந்தவர்கள் அன்றைய வாசகர்கள். அதில் கூடுகட்டி வாழ்ந்தவர்கள் மேற்சொன்ன பத்திரிகையாளர்கள். 1981 இல்  தீக்குளிக்கப்பட்ட  சீதையாக  ஈழநாடு  மீண்டும் புதுப்பொலிவுடன் வெளிவரத்தொடங்கிய காலத்தில் இதன் ஆசிரியராக பணியாற்றிய ந. சபாரத்தினம் அவர்களின் ஆசிரியத்தலையங்கங்கள் எளிமையும் கருத்துச்செறிவும் மிக்கதாக விளங்கின. பத்திரிகையாளரான  பாரதியும்  எழுத்திலே  எளிமையை கையாண்டவர்.

" எளிய  பதங்களைக் கொண்டு  எளிய  நடையில்  காவியம் செய்து தருவோன்  தாய்மொழிக்குப் புதிய உயிர்  தருவோனாகின்றான். தமிழா  தெய்வத்தை  நம்பு,  பயப்படாதே.  உனக்கு  நல்ல  காலம் வருகின்றது.  உனது  ஜாதியிலே  உயர்ந்த  அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.   தெய்வங்கண்ட  கவிகள்,  அற்புதமான ஸங்கீத  வித்வான்கள்,  கைதேர்ந்த  சிற்பர்,  பல  நூல்  வல்லார், பல  தொழில்  வல்லார்,  பல  மணிகள்  தோன்றுகிறார்கள். அச்சமில்லாத   தர்மிஷ்டர்  பெருகுகின்றனர்.  உனது  ஜாதியிலே தேவர்கள்   மனிதர்களாக  அவதரிக்கிறார்கள்.  கண்ணை நன்றாகத்துடைத்துவிட்டு  நான்கு  பக்கங்களிலும்  பார்"  என எழுதியிருக்கிறார்.

யாழ்ப்பாணம் ஈழநாடு  அன்றைய  தமிழ்சமுதாயத்திற்கு பாரதியின் இக்கருத்துக்கு  இசைவாகவே செய்திகளை வழங்கியது. வாழ்ந்தது.  கொழும்பு பத்திரிகைகள் அங்கிருந்து முதல்நாள் இரவு தபால் ரயிலில் புறப்பட்டு  வடபுலத்திற்கு மறுநாள் காலையில் வந்து சேர்வதற்கு முன்னர், ஈழநாடு சுடச்சுட செய்திகளுடன் மக்களிடம் சென்றுவிடும்.

மக்களின்  நாடித்துடிப்பறிந்து  பத்திரிகை  வெளியிட்டவர்  பாரதியார். பத்திரிகையில்  உரைநடை  எவ்வாறு  அமையவேண்டும்  என்று  தமது அனுபவத்தில்  இவ்வாறு  சொல்லியிருக்கிறார்:" தமிழ்  வசன  நடை  இப்போதுதான்  பிறந்து,  பலவருஷமாகவில்லை. தொட்டிற்பழக்கம்  சுடுகாடு  மட்டும்.  ஆதலால்,  இப்போதே  நமது வசனம்   உலகத்தில்  எந்த  பாஷையைக்காட்டிலும்,  தெளிவாக இருக்கும்படி   முயற்சிகள்  செய்யவேண்டும்.  கூடியவரை  பேசுவது போலவே  எழுதுவதுதான்  உத்தமம்  என்பது  எனது  கட்சி.  எந்த விஷயம்   எழுதினாலும்  சரி,  ஒரு  கதை  அல்லது  தர்க்கம்,  ஒரு சாஸ்திரம்,   ஒரு  பத்திரிகை  விஷயம்,   எதை  எழுதினாலும்  வார்த்தை சொல்லுகிற   மாதிரியாகவே   அமைந்துவிட்டால்   நல்லது.

சொல்ல  வந்த  விஷயத்தை  மனதிலே  சரியாக கட்டிவைத்துக்கொள்ளவேண்டும்.   பிறகு  கோணல்,  திருகல் ஒன்றுமில்லாமல்  நடை  நேராகச்செல்ல  வேண்டும்.  உள்ளத்திலே நேர்மையும்  தைர்யமும்  இருந்தால்,  கை  பிறகு  தானாகவே  நேரான எழுத்து  எழுதும்.  தைர்யம்  இல்லாவிட்டால்  வசனம்  தள்ளாடும். சண்டிமாடு   போல  ஓரிடத்தில்  வந்து  படுத்துக்கொள்ளும்.  வசன நடை   கம்பர்  கவிதைக்குச்சொல்லியது  போலவே  தெளிவு,  ஒளி, தண்மை,  ஒழுக்கம்  இவை  நான்குமுடையதாக  இருக்கவேண்டும்."

ஈழநாடு பத்திரிகை யாழ் மண்ணில் தோன்றியது முதல் அஸ்தமிக்கும் வரையில் பாரதியின் இச்சிந்தனையின் தாக்கத்துடன் வெளிவந்தமைக்கு  அங்கிருந்த  சமூக,  அரசியல், பொருளாதாரக்காரணிகளும்  முக்கியமானது.  இலங்கை  அரசியலில்  தமிழ்த்தலைவர்களினால் யாழ்ப்பாணத்தில்  1961 ஆம்  ஆண்டில் நடத்தப்பட்ட  சத்தியாக்கிரகப்போராட்டம்  வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்தது.  சமூகத்திற்காக  பேசுவதும்  சமூகத்தை  பேசவைப்பதுமே  ஒரு பத்திரிகையாளனதும்  படைப்பாளியினதும்  கடமை.  அக்கடமையை யாழ்ப்பாணம் ஈழநாடும் அதில் பணியாற்றியவர்களும் வெளியிலிருந்து அதில் எழுதிய எழுத்தாளர்களும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட சத்தியாக்கிரகம் தொடர்பான செய்திகளை மக்களிடத்தில் உடனுக்குடன் எடுத்துச்சென்றதனாலும் ஈழநாடு விற்பனை அதிகரித்ததாக அக்கால வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  அத்துடன்  ஈழநாடு விற்பனை அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான கொலைவழக்கும்  காரணம்  எனவும் சொல்லப்படுகிறது.

அதுதான்  கோகிலாம்பாள்  வழக்கு. 1963  இல்  இலங்கையில் தமிழர்கள்  மத்தியில்  பரபரப்பாக  பேசப்பட்ட  கிளிநொச்சி உருத்திரபுரம்  பிள்ளையார்  கோயில்  அய்யர்  கொலைவழக்கு.  அந்த அய்யரின்  மனைவி  குற்றஞ்சாட்டப்பட்ட  வழக்கு  விசாரணை  யாழ்ப்பாணம்  நகரமண்டபத்தில்  அமைந்திருந்த  அசைஸ்  நீதிமன்றத்தில்  சுமார்  மூன்று  மாதங்கள் நடைபெற்றபொழுது, ஈழநாடு பத்திரிகையில் பக்கம்  பக்கமாக செய்தி வெளியானது. தினமும்  20  ஆயிரம் பிரதிகளுக்கு  மேல்  விற்பனையாகியிருக்கிறது. என்னும்  தகவலை  குறிப்பிட்ட  வழக்குச்செய்திகளை  தொடர்ந்து ஈழநாடுவில்  எழுதிய  நிருபர் கா. யோகநாதன்  தமது கட்டுரை ஒன்றில்  பதிவுசெய்துள்ளார்.  ( பத்திரிகையாளன் - ஈழநாடு வெள்ளிவிழா சிறப்பிதழ் - 1984)

ஈழநாடு இலங்கைத்தமிழ்ப்பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தமைக்கு பாரதியின் அஞ்சாமை தாரக மந்திரமாக திகழ்ந்தது எனலாம். ஈழநாடுவில் ஆசிரியர் ந. சபாரத்தினம் எழுதிய ஆசிரியத்தலையங்கங்கள்  சிலவற்றின் தொகுப்பு நூல் ஊரடங்கு வாழ்வு 1985 இல் தமிழியல் பதிப்பகத்தினால் வெளியானது.   இதனை வெளியிட ஆக்கபூர்வமாக உழைத்தவர்கள் தற்பொழுது லண்டனில் வதியும் பத்மநாப அய்யர், மற்றும் 'அலை' அ. யேசுராசா ஆகியோர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இலங்கையில் இவ்வாறு   பத்திரிகை ஆசிரியத்தலையங்கங்கள் தனித்தனி நூல்களாக தொகுக்கப்பட்டு  பின்னாளில் வெளிவந்தமைக்கு  ந. சபாரத்தினம் அவர்களின் ஊரடங்கு வாழ்வு முன்னுதாரணமாகும். முன்னர் யாழ். ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றிய எஸ். எஸ். குகநாதன், பிரான்ஸ்  சென்ற பின்னர், பாரிஸ் ஈழநாடு வார இதழை வெளியிட்டார். இலங்கையில் புதிய ஈழநாடு இணைய இதழையும் நடத்தியவர்.  டான் தொலைக்காட்சியை ஆரம்பித்தவர்.

காசிலிங்கம் -  ராஜகோபால்  ஆகியோர் இணைந்து லண்டனிலிருந்து தமிழன் இதழையும்  பின்னர், ராஜகோபால்  லண்டன் ஈழகேசரி , புதினம் ஆகியனவற்றையும்  வெளியிட்டார். எஸ்.திருச்செல்வம் கனடா சென்று தமிழர் தகவல் என்னும் இதழை வெளியிடுகிறார். இவ்வாறு யாழ். ஈழநாடுவில் முன்னர் பணியாற்றியவர்கள் பாரதியின் தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடும் கனவை நனவாக்கி வருகின்றனர். இந்தப்பத்தியில், பாரதியின் அச்சமில்லாத தர்மிஷ்டர்கள் பெருகுகின்றனர் என்னும் ஒரு வரி தொடக்கத்தில் வருகிறது.

இலங்கையிலும்  ஒரு  தர்மிஷ்டர்  ஜே.ஆர். ஜயவர்தனாவின் உருவத்தில் வந்தார். அவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் ஈழநாடு எரிந்தது. சுமார் மூன்று தசாப்தங்கள்  கடந்து அவருடைய மருமகன் முறையானவர் நாடாளுமன்றத்தில் அதற்காக மன்னிப்புக்கோருகின்றார்.

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தருமம் ஓர் நாள் வெல்லும்." என்றார் பாரதியார். வடபுலத்தில்  எத்தனையோ எரியூட்டல்கள், எறிகணை வீச்சுக்கள், குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்தாலும், ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் இளம் தலைமுறையினரும்  அழிக்கப்பட்டாலும்  வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம்போன்று,  மீண்டும் மீண்டும் தமிழ்ப்பத்திரிகைகள் வெளிவந்தவண்ணமே  இருக்கின்றன. கணினியின் தீவிர பாய்ச்சலையடுத்து,  இணைய இதழ்களும் பெருகிவிட்டன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.