"நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் ” எனச் சொல்லி வந்தவர்தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவர் தமது இறுதிக்காலத்திலும், உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் அயராமல் இயங்கிய ஆளுமை.

பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்தநிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் உருவானதும் அதற்குத்தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி 1976 இல் தமிழ்நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். அச்சமயம் அங்கு விரிவுரையாளராக விருந்த எனது இனிய நண்பர் நுஃமான் அவர்களின் அறையில் தங்கியிருந்து ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்குச்சென்றேன். சிவத்தம்பியுடன் கலந்துரையாடுவதற்கு அந்த சந்தர்ப்பம் உதவியாகவிருந்தது. ஆய்வரங்குகள் முடிந்த பின்னரும் நான் யாழ்ப்பாணத்தில் நிற்கநேர்ந்தது. ஒருநாள் மாலை யாழ். பஸ்நிலையத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்பாக நின்றபொழுது - சிவத்தம்பி வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸில் வந்திறங்கினார். அவர் அன்று வேட்டி அணிந்து மெதுவாக நடந்து புத்தகக்கடைப்பக்கம் வந்தவர், அங்கு நின்ற என்னைக்கண்டுவிட்டு, “ என்னடாப்பா இன்னும் ஊருக்குத்திரும்பவில்லையா?" எனக்கேட்டார். அவரது அந்த என்னடாப்பா என்ற உரிமையும் உறவும் கலந்த குரலை 2011 இல் அவர் மறையும் வரையில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கேட்கமுடிந்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரைப்பணி மற்றும் இலக்கிய விமர்சனத்துறை சார்ந்த அயராத எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு மற்றும் வடபிரதேச பிரஜைகள் குழு, யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு முதலானவற்றில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கியதை 1983 - 1987 களில் அவதானித்திருக்கின்றேன்.

ஒரு புறம் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களின் இயக்கங்கள் மறுபுறம் அரசாங்கத்தின் ஆயுதப்படைகள். இவை இரண்டுக்கும் இடையே சிக்கித்துன்பங்களை அனுபவித்த அப்பாவித்தமிழ்மக்கள். பேராசிரியர் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றார். அதனால், இரண்டு தரப்பினதும் கண்காணிப்புக்கும் ஆளானார். ஓவ்வொரு செயலுக்கும் எதிரொலி இருப்பது போன்று தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களின்போது அதன் எதிரொலியாக இயக்கங்களின் செயல்களும் அமைந்த காலத்தில், பொறுப்பான மக்கள் நலன் சார்ந்த பிரஜைகள் குழு பதவியி லிருந்துகொண்டு சாதுரியமாக இயங்கினார். அவரது சாதுரியங்கள் கடும் விமர்சனங்களுக்கும் உட்பட்டது. குமுதினி படகில் நடந்த மனிதப்பேரவலம் - பொலிகண்டி நூலகத்துக்குள் பல அப்பாவி மக்கள் தடுத்துவைக்கப்பட்டு குண்டுவைத்து கொல்லப்பட்ட சம்பவம் - முல்லைத்தீவு ஓதிய மலைசம்பவம் உட்பட பல கொடுமைகளை பேராசிரியர் ஆவணப்படுத்தி ஊடகங்களுக்குத்தந்தார். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அரசுக்கும் ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் எடுத்துரைத்தார்.

சிவத்தம்பி அவர்கள் பேராசிரியராகவும் இருந்தமையால் அவருக்கு இரண்டு தரப்பிலும் ஒரு கனவானுக்குரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. பேராசிரியர் கூரிய கத்தியின் மேல் நடக்கும் நிலைக்கும் ஆளானார். அக்காலப்பகுதியில் வீரகேசரியில் நான் ஆசிரிய பீடத்தில் பிரதம ஆசிரியர் - செய்தி ஆசிரியரின் பணிப்பின்பேரில், போர் சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரித்து எழுதிக்கொண்டிருந்தபோது யாழ்.மாவட்ட நிருபர்கள் ஊடாக கிடைத்த பல செய்தி ஆவணங்களுக்குப்பின்னால் சிவத்தம்பி அவர்களே இயங்கியிருந்தார். சிவத்தம்பி அவர்களின் ஆதாரங்களுடனான ஆவணங்களே தமிழரின் துயரங்களை நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் சொல்வதற்கு உதவின. அவருக்கு 1992 ஆம் ஆண்டு மணிவிழா நடந்தபோது நான் பாரிஸ் ஈழநாடு இதழில் அவரைப்பற்றி எழுதி அதன் பிரதியை பிறந்தநாள் வாழ்த்து மடலுடன் அவருக்கு அனுப்பியிருந்தேன். அதனைப்பார்த்து உள்ளம் பூரிக்க தனது நன்றியைச்சொன்னார்.

அவுஸ்திரேலியா தேசிய வானொலி SBS தமிழ் ஒலிபரப்பில் அவரது விரிவான நேர்காணல் இடம்பெறவேண்டும் என்று அந்த வானொலி ஊடகவியலாளர் ரெய்சலிடம் நான் கேட்டுக்கொண்டபோது அவர் அதற்கு ஏற்பாடு செய்து தந்தார். மெல்பன் ஒலிப்பதிவு கூடத்திலிருந்து சிவத்தம்பியை தெலைபேசி ஊடாக பேட்டிகண்டேன். இரண்டு வாரங்கள் அந்த நேர்காணல் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலித்தது.
அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதனை செவிமடுத்த பேராசிரியரின் பல மாணவர்கள் அவருக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்துத்தெரிவித்தனர் என்ற தகவலை பின்னர் எனக்குச்சொல்லி அகம் மகிழ்ந்தார்.

சிவத்தம்பி அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு உடல் உபாதைகளுடன் போராடினாலும் அவரது சிந்தனைகள் மிகவும் கூர்மையுடன் பதிவாகிக்கொண்டிருந்தன. அந்திம காலத்தில் கண்பார்வை குறைந்தபோதிலும் எதுவித தடுமாற்றங்களும் இன்றி தனது கருத்துக்களை தெளிவாகச்சொல்லி மற்றவர்களைக்கொண்டு எழுத்தில் பதியவைத்தார். அந்தவகையில் அவரது சுறுசுறுப்பான இயக்கம் அனைவருக்கும் முன்னுதாரணமானது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியை குறிப்பாகவும் தமிழ் இலக்கியத்தை பொதுவாகவும் நோக்குமிடத்து பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கும் பணியும் விரிவானது ஆழமானது. அவரது வாழ்வும் பணிகளும் தமிழர் நலன் சார்ந்தே விளங்கின. அவர் விமர்சனங்களுக்கும் ஆளானார். அதற்காக அவர் தமிழ் ஆய்வுத்துறைக்காக மேற்கொண்ட கடின உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது வாழ்வு இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் தொடங்கி, சர்வதேசரீதியாக வியாபித்து வளர்ந்து படர்ந்திருந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் நிரப்பப்படவேண்டியது. அவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியதே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.