எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர் சண்முகம் சபேசன் அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்து நாளை மே 29 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றது. அதனை முன்னிட்டு, நாளைய தினம் மெய்நிகரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா, கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த மெய்நிகர் அரங்கில் மூத்த ஊடகவியலாளர் திரு. இரா. சத்தியநாதன் ஏட்டுச்சுவடி முதல் எண்ணிம ஊடகங்கள் வரையில் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

சண்முகம் சபேசன் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சபேசன், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய தமிழ்த் தேசிய பற்றாளர். 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதி ஒலிபரப்பிய ஆக்கங்கள் நூற்றுக்கணக்கானவை. அவுஸ்திரேலியாவில் 1989 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்தவர். அற்பாயுளில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மெல்பனிலேயே மறைந்துவிட்டார்.

காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் என்ற தலைப்பில் சபேசனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலை அன்னாரது மனைவி திருமதி சிவமலர் சபேசன் கடந்த மார்ச் மாதம் மெல்பனில் வெளியிட்டார். சபேசனின் வானொலி ஊடகத்துறை எழுத்து, மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த பணிகளை நினைவு கூர்வதற்காக நாளையதினம் மெய்நிகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு திரு. தாமோ . பிரமேந்திரனின் வரவேற்புரையுடனும் எழுத்தாளர் திரு. முருகபூபதியின் தொடக்கவுரையுடனும் ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில் நினைவுப் பேருரையாற்றவிருக்கும் மூத்த ஊடகவியலாளர் இரா. சத்யநாதன் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஊடகத்துறையில், குறிப்பாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியனவற்றில் தொடர்புடையவர். ஆரம்பத்தில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன கல்விச்சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக 1974 இல் இணைந்திருக்கும் சத்தியநாதன், பின்பு அந்த முழுநேரப்பணியுடன் தமிழ் சேவையில் அறிவிப்பளராகவும், நேர்முக வர்ணனையாளராகவும் பிரதான அரச நிகழ்ச்சிகளில் ( ஜனாதிபதியின் ஆங்கில மற்றும் சிங்கள உரைகளை ) மொழிபெயர்ப்பை தமிழ் சேவைக்கு சமகாலத்தில் வழங்குபவராகவும் பணியாற்றியவர்.

வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பிலும் மலேஷியாவிலுள்ள Asian Institute for Broadcasting (UNESCO ) நிறுவனத்திலும் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் ஜப்பானிலுள்ள, லண்டன் BBC ஒலிபரப்பிற்கு நிகரான, NHK நிலையத்தில் ஆறு மாதங்களும் பயிற்சி பெற்றவர்.

அதன்பின்னர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நியமனம் பெற்றார்.

சத்தியநாதன், அவுஸ்திரேலியா வந்த சில வருடங்களில் ‘தமிழ்முழக்கம்’ வானொலியில் உலகச்செய்திகளைப் பல ஆண்டுகள் தொகுத்து வழங்கியதோடு, இன்பத்தமிழ்ஒலி நிலையம் சார்ந்த ஒலிபரப்பில் பிற்பகல் செய்திகள், உலகச்செய்திகள், Current affairs என்ற சமகால நிகழ்வுகள், அரசியல் சார்ந்த கலந்துரையாடல்கள் என்பவற்றில் பங்கேற்றவர்.

கடந்த சுமார் இருபது வருடகாலமாக அவுஸ்திரேலியா அரச ஊடகமான SBS தமிழ் ஒலிபரப்பில் அரசியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம், பொருளாதாரம் முதலான எண்ணற்ற தலைப்புகளில் வாராந்தம் நிகழ்ச்சிகளை படைத்து வருகின்றார்.

நாளைய நிகழ்வின் இறுதியில் திருமதி சிவமலர் சபேசன் நன்றியுரை நிகழ்த்துவார்.

எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இதழாளர்கள் மற்றும் அன்பர்கள் அனைவரையும் இந்த மெய்நிகர் அரங்கில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் அரங்கம் அன்புடன் அழைக்கின்றது.

மெய்நிகர் இணைப்பு:

 Join Zoom Meeting

Meeting ID: 846 9597 5744
Passcode: 978671

நேரம்:
29-05-2022 ஞாயிற்றுக்கிழமை
அவுஸ்திரேலியா : இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி
இங்கிலாந்து : காலை 10 – 00 மணி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.