- இன்று தனது  78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுக்குப் 'பதிவுகள்' இணைய இதழும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. -


நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது. யாழ். பொது நூலக எரிப்பின் பின்னணியில் எங்கள் தேசத்தின் முன்னணிக்கவிஞரும் படைப்பிலக்கிய ஆளுமையும் எனத் பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய “ நேற்று என் கனவில் புத்தர் பெருமான்… “ எனத்தொடங்கும் கவிதை உலகப்பிரசித்தம். இக்கவிதை தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், பின்னர் ஆங்கிலம் – சிங்களம் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதை அறிவீர்கள். காலிமுகத்திடல் போராட்டத்தில் யாழ். பொது நூலக எரிப்பும் நினைவுகூரப்பட்டபோது நுஃமானின் குறிப்பிட்ட கவிதையும் பேசுபொருளானது. அந்த அரங்கில் அக்கவிதை மும்மொழியிலும் மக்களால் சொல்லப்பட்டது. இக்காட்சியை அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் காணொளியூடாக பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைய தினம் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கண்டியில் அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எமது நண்பர் நுஃமானும் அக்காணொளியை பார்த்திருப்பார்.

காலம் கடந்தும் பேசப்படும் அக்கவிதையை எழுதியவரை இன்றைய தினம் தொலைபேசி ஊடாக வாழ்த்திவிட்டு, அவரது ஆளுமைப்பண்புகளை விபரிக்கும் இந்த நனவிடை தோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன். நுஃமான் கல்வித்துறையில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து இன்று தகைமைசார் பேராசிரியராக விளங்குகிறாரோ அவ்வாறே தாம் சார்ந்த இலக்கியத்துறையிலும் படிப்படியாக உயர்ந்து முன்மாதிரியாகியிருப்பவர் கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், மொழியியல் அறிஞர், பேராசான், பதிப்பாளர் முதலான பன்முகம் கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில் அவர் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

அவரை முதன் முதலில் 1970 களில் கொழும்பில் இலக்கியசந்திப்புகளிலும், பின்னர் அவர் ஆசிரியராக பணியாற்றிய கொழும்பு அல்.ஹிதாயா வித்தியாலயத்திலும் சந்தித்தேன். அப்போது அவரை பாடசாலை ஆசிரியராகவும், அதேசமயம் இலக்கிய விமர்சகராகவும் பார்த்தேன். கவிஞன் என்ற கவிதைக்காக கிழக்கிலங்கையில் (1969 -1970) வெளியான இதழின் இணை ஆசிரியராகவும் மஹாகவி உருத்திரமூர்த்தியின் நூல்களை பதிப்பித்த பதிப்பாளராகவும் தெரிந்துகொண்டிருந்தேன். நுஃமான் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் காலிவீதியில் ஒரு சீனஉணவகத்தின் பின்னால் அமைந்திருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்து , ஆசிரியப்பணியையும் இலக்கியப்பணிகளையும் மேற்கொண்டிருந்த காலப்பகுதியில் எனக்கு நண்பரானவர். இந்த நட்பு எந்த விக்கினமும் இல்லாமல் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஆரோக்கியமாக தொடர்வது அதிசயம்தான்! ஆனால், அதுதான் உண்மை.

அவரது எழுத்துக்கள் - அவை கட்டுரையாக, கவிதையாக, விமர்சனமாக, மொழியியல் ஆராய்ச்சியாக இருப்பினும் கூட அவரது ஆக்கத்தின் முடிவிலிருந்து மற்றுமொருவர் தம்கண்ணோட்டத்தில் எழுதும் நிகழ்வுகள் பலவற்றை பார்த்துள்ளேன். இலக்கியத் தொடர்பாடலுக்கும் ஆய்வுத்தேடலுக்கும் பாதை செப்பனிட்டுக்கொடுத்துவிடும் எழுத்தாளுமை மிக்கவர். 1973 இல் அவர் எனது அழைப்பை ஏற்று எமது நீர்கொழும்புக்கு வந்து எமது இலக்கியவட்டத்தினால் நடத்தப்பட்ட இலக்கியக்கருத்தரங்கில் ஈழத்து இலக்கியத்தில் கவிதை என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையைத் தொடக்கும்பொழுதே " கவிதைக்கு வயது அதிகம். ஆனால், அதுபற்றி பேசும் எனக்கோ வயது மிகமிகக்குறைவு " என்றார்.

அந்த நிகழ்வு எமது ஊரில் முக்கியமான தடம் பதித்தது. அன்று அக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்: ஈழத்தின் மூத்த படைப்பாளிஇளங்கீரன், நாடக இயக்குநர் சுஹேர் ஹமீட், பூரணி ஆசிரியர் மகாலிங்கம், சிங்கள திரையுலக கதாசிரியர் ஆரியரத்ன விதான. அன்றிலிருந்து நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும் வரையில் நுஃமான் அவர்களின் பணிகளை அருகிருந்தும் 1987இற்குப்பின்னர் தொலைவிலிருந்தும் அவதானித்து வருகின்றேன்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1974 இல் பல்கலைக்கழக வளாகம் தோன்றியபொழுது அதன் முதல் தலைவராக பணியேற்ற பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தான் மாத்திரம் இயங்காமல் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் இயங்கவைக்கும் ஆற்றல் மிக்கவர். அவர் தினகரன் நாளிதழில் ஆசிரியராக பணியாற்றிய காலத்திலும் அவ்வாறே இயங்கியவர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் தோன்றியது வரப்பிரசாதம்தான். அதனால் வடபுலத்தில் கல்வித்துறை மேலும் மேன்மையடைந்தது. ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டியது. கைலாசபதி தன்னோடு அங்கு பணியாற்ற அழைத்துச்சென்றவர்களில் சிவத்தம்பி, நுஃமான், சித்திரலேகா, நிர்மலா , மௌனகுரு, மு.நித்தியானந்தன், ஏ.ஜே. கனகரட்னா, சண்முகதாஸ், சுப்பிரமணிய ஐயர், துரை மனோகரன், கிருஷ்ணராஜா, சிவநேசச்செல்வன் முதலானோர் ஈழத்து இலக்கிய விமர்சனத்துறையில் நெறிப்படுத்தப்பட்ட போக்கை உருவாக்கியவர்கள். இவர்களின் இலக்கிய சுவாசம்தான் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறு வயது நிறைவுற்றபொழுது இரண்டு நாட்கள் மிகவும் தரமான நாவல் இலக்கிய ஆய்வரங்கினை அங்கு சாத்தியமாக்கியது. கைலாசபதி தமிழ்நாட்டிலிருந்து மூத்த படைப்பாளி அசோகமித்திரனை அதற்கு அழைத்திருந்தார். அவர் நாடு திரும்பும் வரையில் அவரது நலன்களை அக்கறையெடுத்து கவனித்துக்கொண்டவர் நுஃமான்.

முதல் தமிழ் நாவல் தமிழகத்தில் தோன்றியிருந்தாலும் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூற்றாண்டு வந்துவிட்டது என்று முதலில் தமிழ் உலகிற்கு பிரகடனப்படுத்தியது யாழ். பல்கலைக்கழகம்தான். இதனை தமிழ்நாட்டில் 1990 இல் நான் சந்தித்த இலக்கிய விமர்சகர் சிட்டி சுந்தரராஜன் பகிரங்கமாகவே ஓர் இலக்கியச்சந்திப்பில் ஒப்புக்கொண்டார். அதன் பிறகே சோ.சிவபாதசுந்தரத்துடன் இணைந்து நாவல் இலக்கியம் பற்றிய நூலை எழுதினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த நாவல் ஆய்வரங்கில் நுஃமான் சமர்ப்பித்த கட்டுரை மிகவும் முக்கியமானது. நாவல், சிறுகதைப் படைபாளிகளுக்குபயனுள்ளது. அந்தப்பயணத்தில் அவர் தான் தங்கியிருந்த வீட்டிலேயே என்னையும் தங்கவைத்து, பல்கலைக்கழக உணவு விடுதியில்உபசரித்தார். அவரிடமிருக்கும் உபசரிக்கும் பண்பு சிலிர்ப்பூட்டும். 1972 இல் கொள்ளுப்பிட்டியில் அவரை சந்திக்கச் செல்லும்போதெல்லாம் என்னை அந்தக் காலி வீதியை கடந்து அழைத்துசென்று ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலையில் உபசரித்தவாறே இலக்கியம் பேசுவார்.

நான் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் கண்டிக்குச்சென்றால் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சிங்கள உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றுவிடுவார். அங்கே மண்சட்டியில் உணவு பரிமாறப்பட்டிருக்கும். புகலிடத்தில் அத்தகைய காட்சிகள் காண்பது அரிது. இவையெல்லாம் பசுமையான வசந்த காலங்கள்.

அவர் எந்த ஊர் மக்களுக்காக வடபுலத்தில் பணியாற்றச்சென்றாரோ அவ்வூரிலிருந்து விடுதலைப்புலிகளினால் அவர் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டபொழுது அவுஸ்திரேலியாவிலிருந்து மனதிற்குள் அழுதிருக்கின்றேன். "நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் எமக்குவேண்டாம் " என்று கவிஞர் சேரன் பதிவுசெய்திருப்பதிலிருந்து அவரது உயர்ந்த பண்புகளை எம்மவர்கள் இனம்காணவும் முடியும்.

நுஃமான் சிறந்த மொழியியல் அறிஞர் என்பதை 1984 இல் முதல் பதிப்பாக வெளியான பாரதியின் மொழிச்சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு என்ற அவரது பல்கலைக்கழக ஆய்வேடு அன்றே பெரிதும் பேசப்பட்டது. பின்னாளில் அவர் எழுதியுள்ள ஆரம்ப இடை நிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் ஒரு மொழியியல் நோக்கு, அடிப்படைத்தமிழ் இலக்கணம் என்பனவும் குறிப்பிடத்தகுந்தவை.
பாரதியின் மொழிச்சிந்தனைகள் நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள அன்றைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் கா. இந்திரபாலா , " இந்த வெளியீடு எமது கலைப்பீடத்தில் உள்ள பலரை இத்தொடரில் ஆய்வுகளை வெளியிடுவதற்கு ஊக்குவிக்கும் என நம்புகின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

1982 இல் பாரதி நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டவேளையில் - அதனையொட்டி அவர் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்க வெளியீடான நுட்பம் மலரில் எழுதியிருந்த மொழி வளர்ச்சி - பாரதியின் கருத்துக்கள் என்ற கட்டுரையின் விரிவாக்கமாகவே குறிப்பிட்ட ஆய்வேட்டை எழுதியிருந்தார். அதன் முன்னுரையில் நுஃமான் குறிப்பிட்டுள்ள கருத்து முக்கியமானது. ".....இந்த மதிப்பீடு முடிந்த முடிபானது அல்ல. ஒரு முதல் முயற்சி மட்டுமேயாகும். இப்பொருள் பற்றி மேலும் பலர் சிந்திக்கவும் ஆராயவும் இது தூண்டுகோலாக அமையும் என நம்புகின்றேன்."

நுஃமான் - கல்விப்பொதுத்தராதர (உயர்தர) மாணவருக்குரிய புதிய தமிழ் இலக்கணப்பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாகப்பயிலும் மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் மிகுந்த தேடலுடனும் ஆய்வுக்கண்ணோட்டத்துடனும் எழுதிய நூல் அடிப்படைத்தமிழ் இலக்கணம். அதிலும் தமது முன்னுரையின் இறுதிப்பகுதியில் - மொழியியல் சிந்தனைகளைத்தழுவி அமைந்த ஒரு பாட நூல் என்ற வகையில் இந்நூல் ஒரு முதல் முயற்சியே என்றுதான் பதிவுசெய்கின்றார்.

மொழியியல் துறையில் மட்டுமன்றி படைப்பிலக்கியத்துறையிலும் அவர் இவ்வாறு விமர்சன முறைமைத் தேடல்களுக்கு வழிவகுத்திருக்கிறார். தி.ஜானகிராமன் தமிழ் நாவல் இலக்கியத்தில் சிகரங்களைத்தொட்டவர். இன்று தமிழகத்தில் மிகச்சிறந்த 150 நாவல்கள் வரிசையிலும் அவரது நாவல்கள் முதலிடத்தில் நிற்கின்றன. 1969 அல்லது 1970 என்று நினைக்கின்றேன். தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் வெளியாகியிருந்த காலப்பகுதி. அம்மா வந்தாள் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் பாலு மகேந்திராவும் ஈடுபட்டு பின்னர் அது முடியாத காரியம் என பின்வாங்கியிருந்தார். இந்நாவல் Appu's Mother என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Illustrated Weekly இதழில் தொடராக வெளியானது. நுஃமான் , அம்மா வந்தாளை படித்துவிட்டு மல்லிகையில் இந்நாவல் தொடர்பாக மாப்பசானும் ஜானகிராமனும் என்ற விமர்சனக்கட்டுரையை எழுதியிருந்தார்.

அதற்கு எதிர்வினையாக அல்ல - நுஃமான் தமது கட்டுரையில் மறைமுகமாகக் கிளப்பும் சில பொதுப்பிரச்சினைகளைப் பற்றி சில குறிப்புகளை எழுதத்தலைப்பட்டு வாசகர்களுக்கு மாத்திரம் அல்ல தனக்கும் தெளிவைத்தேடிக்கொள்ள முயன்றார் மாக்சீய இலக்கிய விமர்சகர் ஏ.ஜே. கனகரட்னா. கனகரட்னா அக்கட்டுரையின் இறுதியில் இவ்வாறுதான் முடித்திருக்கிறார்: ஏனைய வாசகர்களை வேறு வேறு கோணங்களிலிருந்து இப்பிரச்சினையை நோக்கத்தூண்டுமேயாயின் அதுவே போதும்.

நுஃமானின் மேலும் சில நூல்கள்: மழை நாட்கள் வரும் , அழியா நிழல்கள் , இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் (இணை ஆசிரியர்) தாத்தாமாரும் பேரர்களும், திறனாய்வுக் கட்டுரைகள் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் , பலஸ்தீனக் கவிதைகள். மொழியியல் துறையில் அவர் பெற்ற முனைவர் பட்டம் கல்விக்கும் இலக்கியத்திற்கும் நல்வரவு. மூத்த படைப்பாளி சுந்தரராமசாமி இலக்கிய உலகில் ஒரு வசிட்டர். அவரிடத்தில் அங்கீகாரம் பெறுவது அரிது என்பார்கள். ஆனால், அவர் இலங்கையில் அங்கீகரித்த ஆளுமைகளில் நுஃமான் முக்கியமானவர். பின்னாட்களில் நுஃமானின் அங்கீகாரத்திற்காக தவம் இருந்தவர்கள் பலர். நுஃமானுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட சமயம் அவர் விருதுகள் - பட்டங்கள் குறித்து பேசிய உரை இலக்கியப்பரப்பில் விதந்து போற்றப்பட்டது. அந்த உரை பல இணையத்தளங்களிலும் மீள் பதிவுசெய்யப்பட்டன.

அவர் தமது வாழ்நாளில் மாணவர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டவர். அவரது ஆற்றலையும் ஆய்வறிவுலகத்தேடலையும் இலங்கையில் சாதாரண பாடசாலைகளும் யாழ். பல்கலைக்கழகம் , பேராதனைப்பல்கலைக்கழகம் மாத்திரமன்றி தஞ்சை பல்கலைக்கழகம் - மலேசியா பல்கலைக்கழகங்களும் பெற்றுக்கொண்டன. தமிழ் இலக்கியத்துறைகளிலும் நுஃமானின் பங்களிப்பு விரிவான ஆய்வுக்குரியது.

நுஃமான் பன்முக ஆளுமையாளர். அவர் தமது ஆளுமையை வெளிப்படுத்திய ஆக்கங்கள் நிகழ்வுகள் பலவுண்டு. மீண்டும் அவர் இலங்கை ஞானம் முதலான இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இன்றைய ( ஓகஸ்ட் 10 ) பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துக்கூறி கொண்டாடுவதிலும் தனி இன்பம் இருக்கிறது. இவ்வாறு ஒரு பதிவை எழுதி நானும் அவரை கொண்டாடுகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.