- ஓவியம் : கிறிஸ்டி நல்லரெத்தினம் ( மெல்பன் ) -

குணவர்தனா, தபாலில் வந்த கடிதத்தை படித்துவிட்டு, வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவி நிலாந்தி பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்துவரச்சென்று திரும்பும்போது, வீட்டு தபால் பெட்டியிலிருந்து எடுத்து வந்த கடிதத்தை அறையை தட்டி தந்துவிட்டு, மகனை குளியலறைக்கு கூட்டிச்சென்றாள்.

“ குணே… உங்கட உபாலியிடமிருந்து கடிதம். திரும்பவும் பணம் கேட்டு எழுதியிருக்கலாம் “ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொல்லியவாறுதான் அகன்றாள் நிலாந்தி.

குணவர்தனாவின் நெருங்கிய நண்பன்தான் உபாலி. அம்பாந்தோட்டையில் ஒரே கிராமத்தில், பிறந்த வளர்ந்து படித்தவர்கள். வீட்டுக்கஷ்டத்தால், கிராமத்து விகாரையிலிருந்த தர்மரத்ன சாதுவின் தூண்டுதலால் தேசத்தை விடுதலை இயக்கத்திடமிருந்து காக்க இராணுவத்தில் சேர்ந்து, இறுதிப்போரில் வலது காலை இழந்து முடமாகத் திரும்பியவன்.

குணவர்தனாவின் குடும்பப் பின்னணி செழிப்பாக இருந்தமையால் படித்து பட்டதாரியாக முடிந்தது, அவுஸ்திரேலியாவில் தொழில்வாய்ப்பும் பெற்று வரக்கூடியதாக இருந்தது.

இறுதிப்போர்க் காலத்தில் உபாலியைப்பற்றியே மனைவியிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த குணவர்தனாவுக்கு ஒருநாள் வந்த கடிதம் அனைத்தையும் சொல்லிவிட்டது.

பாடசாலையில் உதைபந்தாட்டத்தில் துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் தனது இரண்டு கால்களினாலும் பந்தை நகர்த்தி கோல் போட்டவன் உபாலி. அவனது விளையாட்டுத்துறை சான்றிதழ்களே இராணுவத்தில் இணைவதற்கு அன்று முக்கிய தகுதியாகவும் இருந்தது.

இறுதிப்போர் வெற்றியின் மமதையில் அதிகாரத்திலிருந்தவர்கள் பாற்சோறும் கேக்கும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உபாலியின் வலது கால் இராணுவ மருத்துவமனையில் சத்திர சிகிச்சையில் அகற்றப்பட்டது.
குணவர்தனா, அடிக்கடி உபாலிக்கு பணவுதவி செய்தமையால், அன்று வந்த கடிதத்தையும் திறந்து பார்க்காமலேயே, முகத்தை நீட்டியவாறு கணவனிடம் கொடுத்துவிட்டு பிள்ளையின் தேவைகளை கவனிக்கத் தொடங்கினாள் நிலாந்தி.

வழக்கத்தை விட சிறிய கடிதம். உபாலி அந்தக்கடிதத்தை காலிமுகத்திடலிலிருந்து எழுதியிருக்கிறான். அதனை அவன் எழுதும்போது போராட்டம் தொடங்கி தொண்ணூற்றியைந்து நாட்களாகியிருந்தது.
கொழும்பு கோட்டை பொலிஸார், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அகற்றிக்கொண்டு சென்றுவிடவேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்த காட்சியின் காணொளியை குணவர்தனா தனது கணினியில் தரவிறக்கம் செய்து பார்த்துக்கொண்டிருந்த இரவுக்கு மறுநாள்தான் அக்கடிதம் வந்து சேர்ந்திருந்தது.

அக்கடிதம் மூலம்தான் உபாலியும் அந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்பதை குணவர்தனா தெரிந்துகொண்டான்.

“ நிலாந்தி, மகனுக்கு சாப்பாட்டை கொடுத்துவிட்டு வாரும். நீர் நினைக்கிறவாறு உபாலி செலவுக்கு பணம் கேட்டு கடிதம் எழுதவில்லை. வாரும். வந்து கடிதத்தை பாரும். “ குணவர்தனா அறையிலிருந்து உரத்துக்குரல் கொடுத்தான்.

உணவருந்தும் மேசையில் குழந்தைகள் நிகழ்ச்சி பதிவான ஐபேர்டை இயக்கியவாறு , மகனது உணவுத்தட்டத்தில் நூடில்ஸும் சிக்கன் நக்கட்ஸும் தக்காளி ஸோஸும் கலந்து வைத்துவிட்டு கணவன் குணவர்தனாவின் அறைக்கு வந்து உபாலியின் கடிதத்தை வாங்கிப்படித்தாள் நிலாந்தி.

“ அன்புள்ள குணே… நீயும் நிலாந்தியும் செல்ல மகனும் நலம்தானே..? இறுதியாக நான்கு மாதங்களுக்கு முன்னர் உனக்கு நான் எழுதிய கடிதத்திற்கு பதில் வந்ததாகத் தெரியவில்லை. கடந்த எழுபது நாட்களாக நானும் காலிமுகத்திடலில்தான் இருக்கின்றேன்.

எங்கள் நேசத்திற்குரிய எந்தத்தாயகத்தை தமிழ் பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்ட விடுதலை இயக்கத்தின் அச்சுறுத்தலிலிருந்து மீட்க கடுமையாக போரிட்டோமோ, தற்போது அதே தாயகத்தை சுரண்டிக்கொழுத்து மக்களை பட்டினிச்சாவை நோக்கித்தள்ளிக்கொண்டிருக்கும் அதிகார வார்க்கத்தை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.

அன்று 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நானும் எங்கள் படையிலிருந்தவர்களும் ஆயுதங்களுடன்தான் அவர்களை போராடி வென்றோம். ஆனால், இன்று கையில் ஆயுதம் ஏதும் இன்றி, எனது உன்று கோலுடன் நின்றவாறே குரல் எழுப்பி போராடிக்கொண்டிருக்கின்றேன்.

அன்று போர்க்களத்தில் நின்ற அந்த கேர்ணல், பாதியில் விட்டுச்சென்று, மீண்டும் திரும்பி வந்து பாதுகாப்பு செயலாளராக உத்தரவுகள் பிறப்பித்தவர், மீண்டும் திரும்பிச்சென்று, அதிபராவதற்காகவே மீண்டும் வந்தார். பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் எமது படையினர் உயிரையும் உடல் உறுப்புகளையும் தியாகம் செய்து மீட்டுக்கொடுத்த தேசத்தை முறையற்ற நிருவாகத்தினால் சீர்கெடச்செய்த அவரை மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டோம்.

எங்கள் கிராமத்து பன்சலையிலிருந்த தர்மரத்தின சாது, என்னையும் வேறு சில இளைஞர்களையும் இராணுவத்தில் சேருமாறு வழியனுப்பியபோது சொன்னதையும் நான் மறக்கவில்லை.

அவரும் காலிமுகத்திடல் போராட்டத்தில் எம்முடன் இணைந்திருந்தார். இந்தக்கடிதத்தை இங்கு அமைக்கப்பட்டுள்ள நூல் நிலைய கூடாரத்திலிருந்துதான் எழுதுகின்றேன்.

முள்ளிவாய்க்காலில் அன்று இறுதிப்போரின்போது நான் கண்ட காட்சிகளையும் மறக்க முடியவில்லை. தற்போது இங்கே நான் காணும் காட்சிகளையும் இனிவரும் காலத்தில் மறக்கமுடியாது நண்பனே.
நாம் வென்றெடுத்துவிட்டோம் என்று வீர முழக்கம் செய்த அந்த முள்ளிவாய்க்காலில் எம்மால் கொல்லப்பட்டவர்களை நினைவுபடுத்தி இங்கே விளக்கேற்றி, கஞ்சியும் கொடுத்தோம்.

நாம் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்ட பொது நூலகத்தையும் நினைத்து கூட்டம் வைத்து பேசினோம். 1983 கறுப்பு ஜூலையையும் நினைவுகூர்ந்தோம். வடக்கு மக்களுக்கு எத்தனை தடைகளை எங்கள் அரசுகள் அன்று விதித்தன. இன்று அதே தடைகள் எமக்கும் வந்து வயிற்றில் அடிவிழுந்தமையால் வீதிக்கு வந்திருக்கின்றோம்.

போரில் நான் எனது காலையும் இழந்து, அதனால் எனது காதலையும் இழந்து, துணை ஏதும் இன்றி தற்போது மக்களோடு மக்களாக இந்தக் களத்தில் நின்றுகொண்டு இதனை எழுதுகின்றேன். சில தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் என்னையும் படம் எடுத்து பேட்டி கண்டார்கள். அவற்றையெல்லாம் உன்னால் பார்க்கமுடிந்ததோ தெரியாது. ஆளும் அதிகார வர்க்கம் ஆட்களைத்தான் மாற்றியிருக்கிறது. தலையணை உறைதான் மாறியிருக்கிறது. தலையணை மாறவேண்டும். அதுவரையில் நாம் போராடத்தானே வேண்டும். இக்கடிதம் உனக்கு கிடைக்கும்போது இங்கே காட்சிகள் மாறலாம். இறுதியாக ஒரு விடயத்தை உனக்கு சொல்லிக்கொண்டு இக்கடிதத்தை முடிக்கின்றேன்.

“ ஞானம் என்பது பிறர் மூலம் நமக்கு ஏற்படும் அனுபவம். மெய்ஞானம் என்பது நம்மாலேயே நமக்கே கிடைக்கும் அனுபவம் . “

எங்கள் ஊர் தர்மரத்தின தேரோ இங்கிருந்து புறப்படும்போது என்னிடம் வந்து சொன்ன வார்த்தைகள்தான் இவை. அவருக்கும் பல உடல் உபாதைகள் புறப்பட்டுவிட்டார். நான் இங்கே ஊன்றுகோலுடன் காட்சிகளை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். காட்சிகள் மாறும். நேரம்கிடைக்கும்போது பதில் எழுது. என்றும் உனது நண்பன் உபாலி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.