இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம்.

1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில், புனித பிரதேசம் என அழைக்கப்படும் கதிர்காமத்தில், அங்கு வாழ்ந்த அழகி மனம்பேரி பிரேமாவதி மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த அவலத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த நூலின் அறிமுக நிகழ்வு பாரிஸில் 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்தபோதுதான் முதல் முதலாக புஷ்பராணி அக்காவை சந்தித்தேன். அவரைக் கண்டதும் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். பொங்கி வந்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன். எனது வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பியிருந்த பெண் ஆளுமை அவர். 'அக்கா' என்று விளித்ததும், தன்னை அவ்வாறு அழைக்கவேண்டாம். 'புஷ்பராணி' என்றே அழைக்கலாம் என்று அவர் சொன்னதும் சற்று திகைத்துவிட்டேன்.

என்னைவிட ஒரு வயது மூத்தவர் அவர். தனது இருபது வயதுப்பருவத்தில். தமிழ் ஈழக்கனவுடன் களமிறங்கி பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் துன்புறுத்தல்களையும் சித்திரவதைகளையும் சந்தித்தவர். அந்தச்செய்திகள் ஊடகங்களில் வெளிவரத்தொடங்கிய காலப்பகுதியிலேயே நானும் எழுத்துத்துறையில் பிரவேசித்தேன். புஷ்பராணி எழுதியிருக்கும் 'அகாலம்' நூலை படித்திருக்கிறீர்களா..? இல்லையாயின், எனது இந்தப்பதிவை படித்த பின்னராவது தேடி எடுத்து படிக்கவும் என்று பரிந்துரை செய்கின்றேன். உலக வரலாற்றில் சிறை சென்ற பலர் எழுதியிருக்கும் நூல்களின் வரிசையில், நேரு ( World History ) நெல்சன் மண்டேலா ( long walk to freedom) தொடக்கம், இந்திய பொடா – மிசா சட்டங்களில் தடுத்துவைக்கப்பட்ட தமிழகத்தலைவர்களின் நூல்கள், புலிகளிகள் இயக்கத்தினால் தடுத்துவைக்கப்பட்ட கடற்படை கொமடோர் அஜித் போயாகொட எழுதிய நீண்ட காத்திருப்பு, புனர்வாழ்வு முகாமிலிருந்த தமிழினி சிவகாமியின் ஒரு கூர்வாளின் நிழலில் முதலானவற்றை படித்திருப்பவர்கள், புஷ்பராணியின் அகாலம் நூலையும் படிக்கவேண்டும். இவ்வாறு நான் சொல்வதற்கான காரணத்தை இந்நூல் பற்றி எமது இலக்கிய நண்பர் கருணாகரன் இந்நூலுக்கான முன்னுரையில் ( களத்திலிருந்து இவர்கள் இறுதிவரையில் விலகுவதேயில்லை ) பதிவு செய்துள்ள இந்த வரிகளை பதச்சோறாக உங்கள் முன்னால் வைக்கின்றேன்.

“புஷ்பராணி ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல்வேறு தரப்பினருடனும் ஈழப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும் பின்னாளில் தலைவர்களாக இருந்தவர்களுடனும் அவர்கள் அந்தப்பொறுப்புகளுக்கு வரமுன்னரே இணைந்து செயற்பட்ட சகபயணியாக இருந்தவர். இந்தப்போராட்டத்தினால் மிகக் கொடுமையான வதைகளையும் பாடுகளையும் உச்ச ஒடுக்கு முறைகளையும் சந்தித்தவர். அகிம்சை வழியான போராட்டத்தில் நம்பிக்கை இழந்த அன்றைய இளைய தலைமுறையினருடன் ஆயுதப்போராட்டத்தைப் பற்றி சிந்தித்தவர். இன்று அகிம்சை வழியான பாராளுமன்ற ஜனநாயக முறைமை அரசியல் மட்டுமல்லாமல் ஆயுதப்போராட்ட அரசியலும் பெரும் சிதைவுகளையே தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்திய நிலையில் புஷ்பராணி இந்த சாட்சியத்தை வெளிப்படையாக ஆதாரபூர்வமான தகவல்களோடு, வாழும் சாட்சியங்களோடு முன்வைக்கிறார்."

புஷ்பராணி, இந்த நூலை தனது 60 வயதில் எழுதி வெளியிடுகிறார். அவரது தாயக வாழ்க்கை பற்றிய வரலாறு அவரது வரலாறு மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தின் தொடக்க கால வரலாறுமாகும். அந்த வரலாற்றை தன்னிலை சார்ந்து புகலிட வாழிவில்தான் அவரால் எழுத முடிந்திருக்கிறது. அகாலம் நூல் 2012 மே மாதம் தமிழ்நாடு கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினால் வெளிவருகிறது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் பேரவலத்துடன் ஈழப்போராட்டம் முடிவுக்கு வருகிறது. புஷ்பராணி, அகாலம் நூலில் வாக்களிக்கப்பட்ட பூமி என்ற முதல் அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார்:

'மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கிறோம். தமிழீழத்தை நோக்கிய போராட்டப் பாதையில் நெடிய நாற்பது வருடங்கள் கழிந்துவிட்டன. என்னுடைய பொது வாழ்வுக்கும் வயது அதுதான். இருபது வயதில் ஈழப்போராட்டத்தில் இணைந்துகொண்ட எனக்கு இப்போது அறுபது வயது. இந்த நெடும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போராளிகளும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் தங்களது இன்னுயிர்களை இழந்திருக்கிறார்கள். சில இலட்சம் மக்கள் அகதிகளாகப் புவிப்பரப்பின் துண்டுகளில் சிதறிப்போயிருக்கிறார்கள். '

தென்னிலங்கையிலிருக்கும் சிறைச்சாலைகள், நான்காவது மாடி எனச்சொல்லப்படும் கொடிய விசாரணை முகாம், மற்றும் வட இலங்கையில் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசர் - ஒல்லாந்தர் காலத்து கோட்டைக்குள் அமைந்துள்ள Kings House என்பனவற்றுக்கு இறைச்சிக்கடை என்றும் பெயர் சூட்டலாம்.

அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறையில் வைத்துக்கொண்டு அரசியல் கைதிகளை பந்தாடியவர்கள் பலர். நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனைக்கு காத்திருந்தவர்களும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி, அரசில் முக்கிய பணிகளில் அமர்த்தப்படும் காலத்தை நாம் கடக்கின்றோம். சிறையிலிருந்த அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியவருக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படும் கோலத்தையும் பார்க்கின்றோம். இனிவரும் காலத்தில் இத்தகைய அரசியல் கேலிக்கூத்துக்கள் நடக்கலாம் என்று கற்பனையும் செய்து பார்த்திருக்காமல், தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் அறப்போராட்டத்தை தொடக்கிய தமிழ்த்தலைவர்களை முழுமையாக நம்பி, அவர்கள் பின்னால் சென்று வாக்கு வேட்டையில் ஈடுபடுவதற்கு பிரசாரக்களத்தில் இறங்கிய இளம் தலைமுறையினர் வரிசையில் முன்னணியில் நின்ற ஆண்களுடன் சரி சமமாக நின்றவர் புஷ்பராணி. அந்தத்தலைமைகளின் போலித்தனத்தை கண்டதும் தீவிரமான கொள்கை வழிநின்று போர்க்குரல் எழுப்பியவர் புஷ்பராணி. இவரது தாய் – தந்தை சகோதரர் சகோதரி என்று முழுக்குடும்பமும் இந்த உரிமைப்போராட்டத்தில் இணைந்து நின்றது. அவர்களின் தியாகத்தையும் புஷ்பராணி தனது வரலாற்றில் பதிவுசெய்துள்ளார். இந்த நூலில் இவர் சொல்லும் செய்திகளை நான் பணியாற்றிய வீரகேசரியிலேயே ஏற்கனவே வாசித்து தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், அச்செய்திகளின் ஆழ – அகலத்தை அகாலம் படித்தே முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.

புஷ்பராணி எழுதியிருக்கும் வரலாற்றில் வரும் காவல் துறையைச்சேர்ந்த பாத்திரங்கள் மட்டுமல்ல அரசியல் தலைமைத்துவம் பெற்ற பலரும் இறுதியில் அகால மரணத்தையே தழுவினார்கள். அவர்களின் பெயர்ப்பட்டியலே நீளமானது. பொது எதிரியை முறியடிக்க களம் புகுந்தவர்கள், சகோதரப் படுகொலைகளையும் புரிந்து, இறுதியில் தங்கள் வாழ்வையும் அவலமாகவே முடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புஷ்பராணியின் 'அகாலம்' கூறுகிறது.

2019 இல் புஷ்பராணியை முதல் தடவையாக சந்தித்து பேசியபோது செலவிட்ட நேரம் சொற்பம்தான். ஆனால், இவர் எம்மோடு பேசியிருக்கும் இவரது அகாலம் கூறும் செய்திகள் நடந்த காலம் என்பது இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் அரைநூற்றாண்டிற்குள் வருகிறது. தனது இருபது வயதிலேயே கேரள நக்ஸலைட் போராளி அஜிதா எழுதிய அவரது நினைவுக்குறிப்புகளை படித்திருப்பவர் புஷ்பராணி. அந்த அஜிதா பெற்றோருடன் சிறையில் அடைக்கப்பட்டவர். புஷ்பராணி தனது சகோதர சகோரிகளுடன் சிறையிலடைக்கப்பட்டவர். இலங்கை வடபுலத்தில் கடற்கரை கிராமமான மயிலிட்டியில் வாழ்ந்த சிதம்பரி – சின்னம்மா தம்பதியரின் பதின்மூன்று பிள்ளைகளில் நான்காவது பிள்ளையாக பிறந்தவர் புஷ்பராணி. அங்கிருந்த ஆதிக்க சாதியினருக்கும், மேட்டுக்குடியினருக்கும் மத்தியில் தனித்துவமாக வாழத்தலைப்பட்டவர் புஷ்பராணி. வளரிளம் பருவத்தில் மருதாணிச்செடிகளை பறித்துவந்து அம்மியில் அரைத்து நகங்களில் பூசிக்களித்து ஊரில் சிட்டாக பறந்து திரிந்த இவரை அரசியல் ஆட்கொண்டதனால் சிறைப்பறவையாகி பல்வேறு இன்னல்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது. கைதாகியதும் தடுத்துவைத்து சித்திரவதை செய்த பொலிஸார், கேவலமாகப்பேசியும் பெண்ணுடலை அவமதித்தும் கொக்கரித்தபோது மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தவர், "அடுத்து கோணிப்பையில் சாரைப் பாம்புடன் உன்னையும் போட்டு கட்டிவைப்போம்" என்று சொன்னபோது வந்த அடக்க முடியாத சிரிப்பை தனது நூலில் சித்திரித்துள்ளார் புஷ்பராணி. நெருக்கடி மிக்கவேளையிலும் இவரிடமிருந்த ஓர்மம் எம்மை திகைக்கவைக்கிறது. துப்பாக்கியிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற உண்மையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் கிரகித்துக்கொள்ளவேண்டும் என்று சொன்ன தோழர் மாஓ சேதுங்கின் நூல்களை தனது பதின்மவயதில் படித்திருக்கும் புஷ்பராணி, தனது போராட்ட வாழ்வில் கற்றதையும் பெற்றதையும் உள்வாங்கி, அதன் பட்டறிவை இந்த நூலின் இறுதியில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

"இங்கே நான் பல்வேறு தரப்புகளின் தவறுகளை மனம்வெந்து சுட்டிக்காட்டுவது அவர்களைப் பழிக்கும் நடவடிக்கையோ அல்லது அவர்களை அவதூறு செய்யும் முயற்சியோ அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தவறுகளை நாங்கள் எங்களிடமிருந்து வேரோடு களைய வேண்டியிருக்கிறது. இனி ஒரு துப்பாக்கிக் குண்டு துப்பாக்கியின் குழலிருந்தல்ல, நமது எண்ணங்களிலிருந்து கூடப் புறப்படக்கூடாது. ஆயுதப்போராட்டத்திற்கான எண்ணக்கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்ற வகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப்போராட்டத்தில் நல்ல போராட்டம் , மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே… அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறொன்றிற்கும் அது பயன்படாது."

1976 ஆம் ஆண்டு, மயிலிட்டியில் மறைந்த தந்தையார் சிதம்பரியின் இறுதி நிகழ்வுக்கு புஷ்பராணியும் இவரது சகோதரர் புஷ்பராசாவும் கொழும்பிலிருந்த சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியானபோது அது எமது சமூகத்தில் அன்று பரபரப்பாக பேசப்பட்டது. தமது வாழ்வில் வசந்தத்தை காணாமல், வலிகளை மாத்திரமே அனுபவித்த புஷ்பராணி போன்ற பெண் ஆளுமைகளை எமது சமூகம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.


*** - முருகபூபதி எழுதிய பெண்ணிய ஆளுமைகள் தொகுப்பான யாதுமாகி மின்னூலில் இடம்பெற்றுள்ள ஆக்கம் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.