அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில், ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்த நபர் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இலங்கையில் சில சிங்கள திரைப்படங்கள் முன்னர் வெளிவந்துள்ளன. ஹ◌ாரலக்‌ஷே ( நான்கு இலட்சம் ) தடயம ( வேட்டை ) உதுமானெனிய ( மேன்மைதங்கிய ) முதலானவை அவற்றில் முக்கியமானவை. இவற்றில் காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்கிரம, ரவீந்திர ரந்தெனிய, சுவர்ணா மல்லவராச்சி முதலான மிகச்சிறந்த சிங்கள நடிகர்கள் நடித்திருந்தனர். அந்த வரிசையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள படுகாகஹே டொன் சுமதிபாலா எமது இலங்கை சமூகத்தில் அனுதாபத்திற்குரிய மனிதன்.

அந்தச்சம்பவம் 1972 இல் நடப்பதற்கு முன்னர் 1971 இல் கதிர்காமத்திலும் ஒரு அழகுராணி ( பிரேமாவதி மனம்பேரி ) அவ்வாறு பாலியல் வன்முறைக்கு இலக்காகி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டாள். இவள் பற்றி கங்கை மகள் என்ற சிறுகதையும் எழுதியிருக்கின்றேன். இச்சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து இரண்டு வருடங்களில் நடந்திருப்பவை.

பிரேமாவதியின் கதையும் திரைப்படமானதாக அறிகின்றேன். ஆனால், பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. அந்த யுவதி மீண்டும் மறுபிறவி எடுத்து பிறந்திருப்பதாக ஒரு கதை தென்னிலங்கையில் கதிர்காமம் பிரதேசத்தில் உலாவுகிறது. அந்த கிராம மக்களின் நம்பிக்கையில் அவள் இப்போதும் வாழ்கிறாள் என்பதற்கான செய்திதான் அது.

செம்மணியில் கிருஷாந்திக்கும் திருகோணமலையில் கோணேஸ்வரிக்கும் இதுதான் நேர்ந்தது. ஆனால், அவர்களின் கதைகள் திரைப்படமாகவில்லை. மெல்பன் எழுத்தாளர் ஜேகே. என்ற ஜெயகுமாரன் கிருஷாந்தி பற்றி ஒரு சிறுகதை ( உஷ். இது கடவுள்கள் துயிலும் தேசம் ) எழுதியிருக்கிறார்.

உங்கள் ஹிதுமதெ ஜீவிதெ திரைப்படத்தை பார்த்தேன். டொன் சுமதிபாலா இறுதியில் ஒரு பௌத்த ஆலயத்தில் தஞ்சமடைந்து இறந்திருக்கிறான். சிங்கள எழுத்தாளர் குணதாச அமரசேகரவின் கருமக்காரயோ கதையும் திரைப்படமாகியது. இதில் பிரதான பாத்திரம் விஜயகுமாரணதுங்க. இந்தப்பாத்திரமும் இறுதியில் பெளத்த ஆலயத்தில்தான் தஞ்சமடைந்து துறவியாகின்றது. சோமரத்ன திசாநாயக்காவின் சூரிய அரண திரைப்படத்திலும் வன்முறையில் நம்பிக்கை கொண்ட நாயகன், இறுதியில் பெளத்த ஆலயத்தையே நாடுகின்றான்.

கதிர்காமம் மனம்பேரியையும் , மற்றும் களுத்துறை அழகுராணியையும் அழித்தவர்களின் இறுதி முடிவு பற்றிய செய்திகள் இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புத்துறையிலும் அரச மட்டத்திலும் எத்தகைய சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரியாது. சமூகத்தை பொறுத்தமட்டில் யாவும் கடந்து போகலாம். ஆனால், கலைஞர்கள், எழுத்தாளர்களை விட்டு அவை கடந்து செல்லாது.
கவனத்திற்குரிய பதிவை எழுதியிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.