உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் புகழ் பெற்ற நாவல்களிலொன்று 'அன்னா கரினினா' . இந்நாவலைத் தழுவித் தமிழில் 1953இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் 'பணக்காரி' என்னும் பெயரில் திரைப்படமொன்றும் வெளியாகியுள்ளது. சித்தூர் நாகையா அன்னாவின் கணவன் கரீன் ஆக நடித்துள்ள திரைப்படத்தால் அன்னா வேடத்தில் நடித்திருப்பவர் அந்நாளைய 'கனவுக்கன்னி' டி.ஆர்.ராஜகுமாரி. இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடுத்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் அறியப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன்தான்.
வெரோன்ஸ்கி நாவலின் பிரதான பாத்திரங்களிலொன்று என்றாலும், தமிழ் உலகில் அன்னாவின் காதலன் என்னும் பாத்திரம் ஒருவிதத்தில் எதிர்மறையான பாத்திரம். தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இது போன்ற சவாலான பாத்திரங்கள் பலவற்றில் எம்ஜிஆர் நடித்திருக்கின்றார்.
தமிழில் வெளியான முதலாவது அண்டவெளிப் பயணத்தை விபரிக்கும் திரைப்படமான 'கலையரசி'; திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் வசூலில் தோல்வியுற்றாலும், டால்ஸ்டாயின் நாவலின் திரை வடிவம் என்ற வகையிலும், நாகையா, டி.ஆர்.ராஜகுமாரி & எம்ஜிஆர் நடிப்புக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இத்திரைப்படம் வெளியானபோது வெளியான பிச்சைக்காரி என்னும் திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றதாகவும், இதனால் அக்காலகட்டத்தில் பிச்சைக்காரி பணக்காரியானாள், பணக்காரி பிச்சைக்காரியானாள் என்று தமிழ்த்திரையுலகில் கேலி செய்யப்பட்டத்தாகவும் விக்கிபீடியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் இது போன்ற படங்களில் நடிப்பதில்லையென்று எம்ஜிஆர் முடிவு செய்ததாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.