வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

மேங்களால் மூடுண்டு கிடந்தது சந்திரன். மெல்லிய வெளிச்சம் ஊடுருவியிருந்த அந்த இரவில் பெருமர இலைகளும் கலைக்காத நிசப்தம் செறிந்திருந்தது. பவனம் அசைவறுத்திருந்து அமுக்கமாய்த் திணிந்திருந்தது. தென்கிழக்கிலிருந்து பரந்துவந்த கரிய மேகங்கள் துவைக்கப்போட்ட துணிக் கும்பல்போல் திணிந்து கிடந்தபடி மெதுவாக வடதிசைநோக்கி ஊர்ந்துகொண்டிருந்தன.

இரவு எப்போதும்  கிளர்ச்சி தருவதாக  இருந்து வந்திருந்தது கலாவதிக்கு. சின்ன வயதிலிருந்தே அந்தப் பிரியம்.  இதுதான் காரணமென்று  எதைச் சொல்ல?

எத்தனையோ இரவுகளை, எத்தனையோ காரணங்களுக்காக அவள் தூங்காமல் கழித்திருக்கிறாள். அவை அவளது பகலின் வலிகளையும் வதைகளையும் ஆற்றுவனவாக,  மறக்கப் பண்ணுவனவாக இருந்தன. தூக்கத்தை இடறிய அப்பாவின்  தடவல்களும், கொஞ்சல்களும் அவளுக்கு இரவில்தானே கிடைத்தன? இரண்டு குண்டிகளையும் அடக்கக்கூடிய பெரிய மரக் கை அவருக்கு. நீட்டுநீட்டான விரல்களும். பகலில் அடித்த அதே கையாலேயே  அடிபட்ட இடங்களை அவர் சொஸ்தம் செய்கிறபோது பயமும் சுகமுமான கலவையில் அவள் கண்மூடிக் கிடந்திருக்கிறாள். வளர்ந்த பிறகான அவளின் சுகக் கனவுகளின் மூலமாய் அவையே இருந்திருக்க முடியும். அதை பகுத்துணரும் தேவையும் நேரமும் எப்போதும் அவளுக்குப் பொருந்திவரவில்லை. அதை அவள் எண்ணியதேயில்லை என்பதுதான் அதிலுள்ள சூட்சுமம்.

பகலைவிட இருண்ட பூமியே அவளுக்கு ரசிக்கும்படியாக என்றும் இருந்துவந்தது. நட்சத்திரங்களும், மேகங்களும், சிலபோது சந்திரனும், நிறைந்து விழுந்திருக்கும்  நிசப்தப் பின்னணியில், அத்தனை அழகானவையாகத் தோன்றியிருந்தன. அவளை  நினைவுகளின் தடத்தில் மிகஇலகுவாக அவை நடத்திச்சென்றன. அது அவளது சுயத்துக்குமட்டுமான உலகமாக இருந்துவந்தது. அன்றைய இரவு அவை எல்லாவற்றையும்விட வித்தியாசமானது. அன்று அவள் ஒரு காத்திருப்பில் ஏக்கமும் ஏமாற்றமும் பொங்கிப் பெருகப் பெருக விழித்திருக்கிறாள்.

அவற்றையெல்லாம் ஒரு சப்த சமிக்ஞை அவளிலிருந்து தூசாய்ப் பறக்க வைத்துவிடக்கூடியது. ஆனால் விடியல் நெருங்கிக்கொண்டிருக்கிற அந்த நேரம்வரைக்கும் அந்த சமிக்ஞை எழவேயில்லை.

எல்லோரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நேரமது. படுக்கையிலிருந்து எழுந்த அவ்வப்போதான மெல்லிய மூச்சொலிகளின் சீர், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதை கலாவதிக்கு உறுதிசெய்தது. முல்லைத்தீவு-மாங்குளம் பாதையும் நள்ளிரவுக்கு மேலான அந்த நேரத்தில் அரவமறுத்திருந்தது. இன்னும் சிறிதுநேரத்தில் அம்மன் கோவில் மணியோசை ஒலிக்கத் தொடங்கிவிடும். ஊர் விடிந்துவிடும். மனித சஞ்சாரம் வெகுத்துவிடும்.

ஆனால் அப்போது அவள் எதிர்பார்த்த பூரண நிசப்தம் அது. பூரண சஞ்சார அடக்கமும். ஆனால் சமிக்ஞை…? கல் றோட்டாய், மக்கி றோட்டாய் மாறிமாறித் தொடர்ந்த அப்பெருவீதியில் முள்ளியவளை சைவப் பள்ளிக்கூடத்துக்குச் சமீபமாக அமைந்திருந்தது அந்த இடம். அதில் பத்து பன்னிரண்டு வீடுகள். ஒருபக்கம் மழைநீரோடும் வாய்க்கால். அதனோரமாய் நின்றிருந்தது ஒரு முதிர்ந்த மருதமரம். கிட்ட இருந்தது வாய்க்கால் நீர் பாய்வதற்கான மதகு. அதனோடு ஒட்டிப் பரந்து ஆடாதோடை, செம்மணத்தி, பன்னை, கண்டல், பாவட்டை, கன்னா ஆகிய முட்புதர்ப்  பற்றையோடு தொடர்ந்திருந்த பலவகை மரங்களின் கூடல். அதில் பாலை, முதிரை, யாவறணை, புன்னை, சிறுபுன்னை, வாகை, மருது, தேக்கு, இலுப்பை, ஆல், சடவக்கை, விண்ணாங்கு, சமண்டலை, கட்டுமா, குலா, வீரை, கருங்காலி, இலுப்பை, குத்தி, காட்டுப்புளி, குருத்து, நாவல், விடத்தல், மகிழ் ஆதிய வன்னிநில மரங்களும் செடிகளும் நின்றிருந்தன. அப்பாலுள்ள தரைவையில் மேய வரும் மந்தைகள் நீரருந்தும் பாறைகள் மிதந்திருந்த ஒரு நீர்நிலை. அதற்குமப்பால் ஒரு சிறு வயல் வெளி. அதிலிருந்து தொடர்ந்தது வளர்ப்புக் காடு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை சமஉயரத்தில் வளர்ந்த தேக்குமரங்களின் வரிசை. அரசாங்கத்தின் 1960ஆம் ஆண்டுக் கூட்டுறவு காடமைப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதலாவது வளர்ப்புக் காடு அது. அவற்றின்மேல் மேகங்கள் பதிந்திறங்கி வனவுலாச் செய்யும் காட்சி அற்புதமாயிருக்கும். காடு வளர்ப்புத் திட்டத்தினாலேயே குடிகள் அதிகம் பெருகாத ஒரு துண்டாய் ஒதுங்கியிருந்தது அந்த குடிமனைச் சூழல்.

அத்தகைய வீட்டுத் தொகுதியில்,  அடித்திருந்த பூர்வீக வர்ணம் வெள்ளையா மஞ்சளாவென  தெரியாதபடி சுவர்கள் எண்ணெய்ப் பசையும், அழுக்கும், பென்சில் கீறல்களுமாய்க் கறுத்துக் கிடந்த அந்த பழைய கூரைவேய்ந்த கல்வீட்டுத் திண்ணையில் அரவமறுத்து, செவிப்புலம் தீட்டி அமர்ந்திருந்தாள் கலாவதி.

விறாந்தையிலிருந்து பார்க்கத் தெரிந்த வானம், இதோ விடிந்துவிடப்போகிறதென்ற மனஅவசத்தை அவளில் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. நொய்த இடமெங்கும் துடித்திருந்த ராகத்தை இன்னுமே  இழையவிட்டிருப்பதில் அர்த்தமில்லையென்று அறுதியாய் அவளுக்கு உணர்தலாயிற்று. பிரியன் இனி வரமாட்டான்.

வீட்டைறையுள் அம்மா, அக்கா தயாவதி,  அவளின் இரண்டு பிள்ளைகள், தம்பி கணநாதன் யாவரதும்  தொடர்ந்துகொண்டிருந்த ஆழ்ந்த உறக்கத்தின் சீரான மூச்சுக்கள் எந்தநேரத்திலும் விசைமாறிப் போகலாம். போகட்டுமென்றே அவளுக்கும் பட்டது. அது இனி அவன் வரமாட்டானென்ற திண்ணத்தின்மேல் பட்ட எரிச்சல்.

அவள் இனி படுப்பதும், தூக்கம் வராதென்று நிச்சயமான பின், தேவையில்லாதது. முடிவாக விழுந்த ஏமாற்றத்தில் மனத்திலும் உடம்பிலும்  திகைந்தெழுந்திருந்த உணர்ச்சிகளை மெல்ல  அவள் எரிக்கத் துவங்கினாள்.

அது அன்றைய சந்திப்பின் ஏமாற்றம் மட்டுமேயென்றும்,   தான் வரமுடியாது போன காரணத்தை விளக்க அன்று மதியத்திலோ சாயந்தரத்திலோ பிரியன் சந்திக்க வருவானென்றும், தன்னை வலுவாக நம்பவைக்க முயன்றாள். அப்போது கிழக்கில் வெளிச்சம் தெரியவாரம்பித்தது.

இனி  அம்மா எழுந்துவந்து, விடியவிடிய அவள் விழித்திருப்பதுபற்றிக் கேட்டுவிடுவாளென  அவள் அஞ்சத் தேவையில்லை.  எழுந்து முற்றத்தில் அங்குமிங்குமாய் நடந்தாள். மேலே திரையோடிய மேகத்துள் இன்னும் சந்திரன் மறைந்திருப்பது தெரிந்தது. அவனை நேர்நேராய்க் காண அவள் இலச்சைப்படாமல் முடியாதிருந்தாள். அவன் அவளது வெறுமேனி கண்டிருந்தவன். அவளில் புரியப்பட்ட சம்போகம் பார்த்திருந்தவன். மேகத்திரை   தென்பாட்டில் அசைந்து போய்க்கொண்டிருப்பினும், தொடர்ந்தும் சந்திரனை அது மறைத்தபடியே  இருந்துவிட வேண்டுமென அதனாலேயே  அவள் ஆதங்கப்பட்டாள்.எல்லோரும் நிலா, சந்திரிகை, வெண்மதி, தண்மதி, மதியென்று சொல்லிக்கொண்டிருக்கையில், அவளுக்குமட்டும் ஏன் சந்திரனெனவானது என்பது தெரியவில்லை. அது ஒரு ஆணின் படிமமாயே அவளது மனத்தில் விழுந்திருந்தது. அதனால்தான் அவள் வெட்கப்பட நேர்ந்திருந்ததா?

அது அப்போது அவளுக்கு முக்கியமில்லை. பிரியன் ஏன் வராதுபோனான்? தன்னை அனுபவிக்கமட்டுமே அந்தளவு விடாப்பிடியாகச் சுற்றிச் சுற்றித் திரிந்தானா? தனது உடம்பேதான் அவனது குறியாய் இருந்ததா? ஒருபோது,  அவன் தன்னை நெருங்காமல், தானேதான்  அவனைத்  தேவையென்று நெருங்கி நெருங்கி ஓடினாளோவென்றும் ஒரு பதைத்த நினைப்பு  அவளில் ஊறியது. அவை எல்லாவற்றிலும் சாத்தியங்கள் இருந்தன.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரியனை அவள் முதன்முதலாக முன்னாலுள்ள வீதியிலே கண்டாள். யாரையோ சைக்கிளில் பின்னுக்கு இருத்தி மூசிமூசி வேகமாக உழக்கிக்கொண்டிருந்தான். அவனது கரிய மேனியில் குளித்ததுபோல் நீர் வார்ந்துகொண்டிருந்தது. ஆனால் களைப்பே அறியாதனபோல் அந்தக் கண்கள்மட்டும் உயிர்ப் பிழம்பாய் மின்னிக்கொண்டிருந்தன. அந்தளவு தீட்சண்யத்தை, தலைவரின் கண்களில்தவிர பிறரெவர் கண்களிலும் அவள் அதுவரை கண்டதில்லை. அக்கணமே அவள் ஆகர்ஷமாகிப் போனாள். திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள், திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றவனை.

அடுத்து ஒரு வாரத்துள் ஒரு மாலை விரிகிற நேரத்தில் மதகடியில் அவனை மறுபடி கண்டாள். கழன்ற சைக்கிள் செயினை அதன் பல்லில் கொளுவ தெண்டிப்பவன்போல் ஒரு குச்சித் தடியைக் கையில்வைத்தபடி குந்தியிருந்து பார்வையை அவள் வீட்டின்மேல் எறிந்துகொண்டிருந்தான். வாசலடி கூட்ட வெளியே வந்தவள் அவனைக் கண்டு கணநேரம் ஸ்தம்பித்தாள். ‘பொழுதுபட்ட நேரத்தில விளக்குமாறு போடவேண்டாம். வா, நாளைக்குப் பாக்கலா’மென தாய் உள்ளேயிருந்து கத்தினாள். ‘வெளியதான கூட்டி ஒதுக்கப்போறன்’ என்றுவிட்டு  அவள் பெருக்க ஆரம்பித்தபோது, மனமெல்லாம் ஓர் இனிய சங்கீதம் அவளுக்கு இசைந்துகொண்டிருந்தது. முகமெல்லாம் மலர்ச்சி  படர்ந்துவிட்டிருந்தது. ஒரு முறுவலோடு அவளைப் பார்த்துச் சிரித்தபடி அவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான்.

அதே வசீகரமான கண்களோடு அவன் அவ்வப்போது அவள் நினைவுகளில் வந்துகொண்டே இருந்தான். வேண்டாம் அந்த எண்ணமென்று அறிவு ஆலோசனை சொல்லியது. ‘கலா, அந்தக் கண்கள் நல்லம் இல்லையடி.’

‘ஏன், அந்தக் கண்ணுக்கென்ன?’

‘அது அகப்பட்டவளையெல்லாம் வாரியிழுத்து பஸ்மமாக்குகிற கண்.’

‘அதன் தீட்சண்யத்தைக் கண்டாயோ?’

‘அபூர்வமானதுதான்.’

‘தலைவர் கண்ணின் தீட்சண்யமாயில்லை?’

‘தலைவர் கண்ணை நீ கண்டிருக்கிறாயா?’

‘ஓ. பல தடவை. தூரத்தில்தான். ஆனால் கண் எனக்குத் தெரிந்தது. போட்டோவில் வெகுகிட்டவாய்ப் பார்த்திருக்கிறேன்.’
‘அது  பத்தாது. நேரில் நின்று  பார்த்திருக்கவேணும். இது அவரின் கண்ணில்லை.’

‘பிறகு…?’

‘இது அவனின் வேஷம். போர்வை. உள்ளே கிடந்து அலையாய் அடிக்கிறதே அதுதான் நிஜம். அந்தப் போர்வை விலக, அந்த ஆகர்ஷ அலைகள் காமச் சுனையிலிருந்து அடிப்பதை நீ காண்பாய்.’

மேலே அந்த விவாதத்தை தன்னுள் தொடர  அவள் விரும்பவில்லை. அந்தச் சுனையின் அலையடிப்பை அவளுமே  கண்டிருந்தாள்.

அதற்கடுத்த வாரத்தில் இரண்டு மூன்று மாலைகளில் அவனை அவள் அதே இடத்தில் கண்டாள். மருதமரத்தின்  முன்னாலிருந்த மதகில் பஸ்சுக்காய்ப்போல் அமர்ந்திருந்தான். இப்போது அவனைக் காணும் ஏக்கம் அவளில் ஆரம்பமாகியிருந்தது. யார் அவன்? முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவனா? வெளிமாவட்டம் ஏதாவதிலிருந்து இடம்பெயர்ந்து வந்தனா? எப்போது வந்தான்? அண்மைக் காலத்தில் முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சி ஈறான அவ் வன்னிப் பெருநிலப் பரப்பில் அவனை எங்கேயும் கண்டதாய் ஞாபகமில்லை அவளுக்கு. போராளியாகவோ, முந்தின போராளியாகவோகூடத் தெரியவில்லை. என்ன வேலை செய்கிறான்? பலதும் நினைக்கவிருந்தது.

ஆனாலும் அவளுக்கு துரோகங்களும், கபடங்களும்பற்றிய விஷயம் சிந்தையில் எட்டவேயில்லை. மட்டுமில்லை. அவையெதுவும் எட்டாதவிடமாக தமிழீழமும் மனத்தில் வார்பட்டிருந்தது. அது அவர்களின் ராஜ்யம். அவர்களின் கொடியே எங்கும் பறக்கிறது. சமாதானத்தையோ சண்டையையோ தீர்மானிக்கும் சர்வவல்லமை கொண்டவர்களாய் அவர்களே இருக்கிறார்கள். அண்மையில் ஜெனிவா பேச்சுவார்த்தை மேசையிலிருந்தும் அவர்கள் சடுதியில் வெளிநடப்புச் செய்திருந்தனர். அந்த சர்வவல்லமையைச் சொல்லித்தான்  தினம்தினம் புலிகளின் வானொலி மக்களின்  மனங்களை உசுப்பேற்றுகின்றது. எந்தப் பெண்ணையும் எவரும் கெடுத்துவிட்டுப் போதலென்பதை சாத்திமறச் செய்திருந்தன தமிழீழத்தின் காவற்றுறைச் சட்டங்கள். அது ஒரு பெரும் பலமாக பலர் மனங்களிலும் இருந்தது. அன்று தன்  மனத்திலும் அதுதான் இருந்ததென்பதை இப்போது அவள் புரிந்தாள். அதுவே  தன்னை  மெல்ல மெல்ல முன்னகர்த்தி அடுத்து வந்த ஓர்  இருள் விழுந்த பொழுதில் அந்த அந்நியனைச் சந்திக்கும் திடத்தை, அவனது காமச்சுனைக்குள் ஆழ்ந்துவிடும் அபேட்சையைக் கொடுத்ததோ? சதிரம் பதற நினைத்தாள் கலாவதி.

இப்படித்தான் அந்த முதல் சந்திப்பில் உரையாடல் நடந்திருந்தது.

‘என்ன பேர்?’

‘கலாவதி. உம்மட பேர்…?’

‘பிரியன்.’

‘வெறுமன பிரியனோ?’

‘ஈழப்பிரியன்.’

‘ஓ…!’

‘வேலை முடிஞ்சு வீட்டை போயிட்டு வருவன். நேரஞ்செண்டிடும்தான். ஆனா தனியாக் கதைக்கவேணும். வந்தாச் சந்திப்பிரோ? பின்னால இருக்கிற வெறுங்காணிக்குள்ள நிப்பன்’ என்ற அவனுடைய கேள்விக்கு  தான்  பிரியமென்று சிரிப்பில் காட்டியதை அப்போது அவள் ஞாபகமானாள்.

அன்று இரவு காற்றற்று வெம்மை கனத்திருந்தது. குளித்த மேனியில் வியர்வை அரும்பிக்கொண்டிருந்தது.

அன்று அவன் தீர்மானமாயிருந்தானென்று நெருங்கியவுடனேயே அவளுக்குத் தெரிந்தது.

வீட்டின் பின்னாலுள்ள துண்டு மரக் கூடலுள் அவன் நின்றிருக்கிறான். ஆடுகள் போட்ட வேலிக் கண்டாயத்தால் அவள் அவனை நெருங்குகிறாள். எங்கிருந்தோ அருவிபோல் பொங்கி மேனியெங்குமாய்ப் பிரவாகித்திருந்த ராகம், அவளின் கீழுதட்டை, கன்னத்தை, கீழிறங்கி இளமுலைகளை, மேலும் கீழிறங்கி பொக்கிளைச் சூழ்ந்த பரப்பை, அதன்மேலும் கீழிறங்கி அடிவயிற்றை, அப்பாலும் இறங்கி பெருந்தொடைப் பொருத்தை மோதிச் சிலிர்க்கவைக்கிறது.

அவளை இதமாக  அவன் ஆலிங்கனம் பண்ணுகிறான். அவள் விலக முனைந்து, விலகாது நிற்கிறாள். அவளை யோசிக்கவும் முடியாமல் பிரக்ஞையிலிருந்து இழுத்து வெளியே எறிந்த ஆலிங்கனமாயிருந்தது அது. அப்படியே அவளை மரக் கூடலுக்கு இடையிலுள்ள  புல்வெளியைநோக்கி காற்றில் மிதத்திச் செல்லுகிறான் அவன். புல்லும் நோகாமல் பசுமையில் சரியப்பண்ணுகிறான். காமம் உச்சந்தலையிலடித்து இறங்குகிறபொழுதில் கண்திறக்க அவளுக்குத் தெரிகிறது, மேகத்தின் பின்னாலிருந்த சந்திரன். யாரோ பார்த்திருந்ததுபோன்ற துணுக்கம். சந்திரன்தான். ஆனாலும் ஆணாகியவன். குப்பென அவள் கண்ணும் மனமும் சிவந்துபோகிறாள்.

பிரியன் விலகி பக்கத்தே புல் தரையில் சாய, மெதுவாய்ச் சரிந்து அவன் முகம் பார்த்து அப்போதுதான் ஓர் அவதியில்போல் கேட்கிறாள், ‘என்னைக் கல்யாணம் பண்ணுவியளெல்லோ?’ என்று.

‘இப்ப நடந்தது எங்கட கலியாணம்தானே?’ என மெல்ல வெண்பல் பளீரிட அவன் சொல்கிறான். பிறகு எழுந்தவன், ‘ முக்கிமான வேலையொண்டிருக்கு. கிளிநொச்சி போறன். ஒரு கிழமைக்கு மேலயாகும் திரும்பி வர. வந்தாப்பிறகு சந்திக்கிறன்’ என்றுவிட்டு இருளில் மறைகிறான்.

அவள் வீட்டுக்கு வர தன்னைத் தயார்படுத்தவேண்டி வெகுநேரமிருந்து அந்த இடத்தில் சிரமப்பட்டாள்.
அப்போதும் சந்திரன் பார்த்துக்கொண்டிருந்தான். மேகத்தின் பின்னால் ஒழிந்திருந்துதான். அவன் சிரித்துமிருக்கலாமென ஏனோ அவள் எண்ணினாள்.

யோசிக்கையில் அன்றைக்கு தானடைந்தது இன்பமாவென்றே அவளுக்குத் தெரியாதிருந்தது. ஒரு வாழ்க்கை பரியந்த உச்சபட்ச உறவின் தொடக்கம் அந்தமாதிரி நடந்தது அவளுக்கு எப்போது நினைத்தாலும் மனவுளைச்சலைக் கொடுத்தது. வீதியில் யுவர்களும்  யுவதிகளுமாக ஒரு கூட்டம் போராளிகள் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தனர். வன்னியின் காலைகளில் துலக்கமான இந்தக் காட்சி வழக்கமாகத் தென்படுவதுதான். கடமைக்குப் போவதும், அதிலிருந்து திரும்புவதுமாக அது. ஆனாலும் அன்றைய  இயங்குதலில் ஓர் அவசரத்தின் விசை   தென்பட்டது கலாவுக்கு. அவர்கள் பேச்சொலியுமற்ற மௌனத்துள் அந்தளவு விரைவாக ஏன் போய்க்கொண்டிருக்கிறார்கள்?

திரும்ப, எழும்பிவந்து விறாந்தையில் வீதியைப் பார்துக்கொண்டு  தயாநிதி நின்றிருந்தது கண்டாள். அவளது கணவன் தனபாலன் இயக்கத்துக்கு வாகனமோட்டியாக கிளிநொச்சியில் தங்கியிருந்தான். பிள்ளைகள் இரண்டையும் பார்க்க முல்லைதீவுக்கோ புதுக்குடியிருப்புக்கோ வாகனம் கொண்டுவரும்போது வீட்டுக்கு வந்து பார்த்துப்போவான். மனைவியைப் பார்க்க வேலையொழிந்த நாட்களில் இரவில் வந்து தங்கிப்போவான். அந்தவகையில் தயாநிதி தவனமற்றுத் திரிய. முடிந்தவரை தன் வருகையை ஒழுங்குபடுத்தியிருந்தான்.

தயாநிதிக்கு இளைய, கலாவுக்கு மூத்த சகோதரமொன்று இயக்கத்தில் இருக்கிறது. பொறுப்பான வேலையொன்றில் இருந்தான். போராட்ட முனைகளில் அவனது பிரசன்னம் அப்பொழுது எங்கெங்கும் கதைக்கப்படுவதாக இருந்தது. அவனது கைத்திறன் களமுனை நிலைமைகளை உயிரோட்டத்துடன் படம்பிடித்து இந்த உலகத்துக்கு புலிகளின் வீரத்தையும், இலங்கை ராணுவத்தின் வன்மம் வக்கிரங்களையும் கலாநேர்த்தியுடன் சொல்லிக்கொண்டிருந்தது. பல சர்வதேச பத்திரிகைகள்  அவனது  படங்களை ஆர்வமாய்ப் பிரசுரித்தன. பல தேசத்து மக்களின் மனச்சாட்சிகளையும் அவை தட்டியெழுப்பின. அதனால் தலைவரால் பாராட்டும் பெற்றிருந்தான் அவன்.

ஏழு ஆண்டுகளாக இயக்கத்திலிருக்கும் அவன்  ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராளியாய் பல களமுனைகளைக் கண்டவன். பின்னால் 2004இல் ஏற்பட்ட கிழக்கிலங்கையின் இயக்கப் பிரச்னையில் கருணாம்மானுக்கு எதிராக அனுப்பப்பட்ட அணியில் சென்று சண்டையில் தன் வலது காலையிழந்தான். முழங்காற் பொருத்தோடு வலதுகால் கழற்றப்பட்டிருந்தது. பின்  குணமானதும் அலுவலக ஊழியனாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலுள்ள செஞ்சோலை சிறுவரில்லத்தில் ஊன்றுகட்டைகளோடு வேலைபார்த்து வருகையில், அவனுக்கு  வெண்புறா நிறுவனத்தின்  உதவியால் பொய்க்கால் கிடைத்தது. அதன்பின்னர்தான் அவன் தன் தொழில்நுட்பத் திறமையை கமராவின்மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தான்.
அவனது  போட்டோக்கள் வித்தியாசமாக இருந்தன. ஒளியும், துல்லியமும், சரியான கோணமும் அந்த வித்தியாசங்களை ஏற்படுத்தியிருந்தன. சிறுவரில்லத்திற்கான விநியோகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவன் தலைமையகத்துக்குச் சென்றபோதுதான், தோளில் கமராவைக் கொளுவியிருந்த அவனையும், அத்துறையிலிருந்த அவனது ஆர்வத்தையும், அதற்கான அறிவைக் கிரகிக்கும் அவனது  திறமையையும் கண்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மிகுந்த சுவாதீனத்தோடு  நிதர்சனத்தில் செயலாற்ற வாய்ப்பு பெற்றுக்கொடுத்தார்.

தாய் நாகாத்தையை, சகோதரிகளை, தம்பி கணநாதனை, தனது இரண்டு மருமக்களை எப்போதாவதுதான் பார்க்க வீட்டுக்கு வருவான்.  அவன் கடைசியாக அங்கே வந்தது எட்டு மாதங்களின் முன் நடந்த தந்தையின் சாவு வீட்டுக்குத்தான். கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அவரது மரணம் சம்பவித்தது. குடும்பத்தை முள்ளியவளையில் விட்டுவிட்டு யாழ்ப்பாணம் போய் இந்த மனிசன் என்ன செய்கிறதென்று எல்லோரும், சில இயக்கத்தினரும்கூட, உசாவினார்கள். என்ன பதிலை நாகாத்தையினால் சொல்லமுடியும்? ஆனால்  அவளுக்கு அவர் குடிக்கவும் கூத்தடிக்கவுமே சென்றாரென்ற விஷயம் நிச்சயமாகத் தெரிந்திருந்தது. அவள் தன்னை எதிர்நோக்கிய கேள்விகளுக்கு கையை விரித்துப் பதிலாக்கினாள். வயிற்றுக் குத்தென்று கொஞ்சக் காலம் வயிற்றைப் பிடித்துக்கொண்டு திரிந்தார். பின்னொருநாள் முள்ளியவளை வந்துநின்றபோது வயிற்று வலி தாங்கமுடியாதுபோய் அலறத் தொடங்கிவிட்டார். ஆஸ்பத்திரி போனபோது  தெரிந்தது, அவரது ஈரல் கருகிவிட்டதென்று. ஒரு பெண்ணும், அவள் தாய்போல் தோன்றிய ஒரு முதியவளும், இன்னும் இரண்டு குமரிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து பார்த்து ஒருமுறை அழுதுவிட்டுப் போனார்கள். மேலே அவர் யாழ்ப்பாணம் ஓடியோடிப் போய் செய்த காரியம் குடும்பத்தில் எல்லாருக்கும் தெரிந்தது. துன்பத்திலும், துரோகத்திலும் மனமுழைந்திருந்த நாகாத்தை அப்போது எண்ணினாள், ‘அங்கை இருக்கேக்கை இந்தாளின்ர ஈரல்குலை அறுந்து விழுந்திருக்கலாம். யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில போட்டிருக்க  ஏலுமாயிருக்கும். அவங்களும் கெதியில எல்லாம் சரிப்பண்ணி திரும்பவும் எங்கனயாச்சும் போய் மேய்ஞ்சு திரியச்சொல்லி விட்டிருப்பாங்கள். இஞ்சை கிடந்து எங்கட மானத்தை வாங்குது’ என்று.

ஒரு மாதத்துக்கு மேலாக  வீடும் ஆஸ்பத்திரியுமாய்க் கிடந்து இழுபட்டார். ஞானசேகரனுக்கு விஷயம் சொல்லியனுப்பினார்கள். அவன் வரவில்லை.

செத்தவீட்டுக்குத்தான் வந்திருந்தான். தாங்கித் தாங்கி நடந்து மயானம் போனான். கொள்ளி வைத்தது அவன்தான். பேரப்பிள்ளைகள் இரண்டும் பந்தம் பிடித்தன.

நாகியின் சொந்த ஊரே முள்ளியவளைதான். எவ்வாறு எண்பதுகளிலேயே சதாசிவம் அவ்வளவு தூரம் கடந்து கடையர், காடையர் இடமென்று வடக்கு  ஒதுக்கியிருந்த பகுதிக்கு வந்து அவளைப் பெண்ணெடுத்தாரென்று  நாகியைத் தவிர யாருக்கும்  இதுவரை தெரிந்திருக்கவில்லை.

நாகாத்தை அவர் பெண்பார்க்க வந்த சமயத்தில் யோசிக்கத்தான் செய்தாள். ஆனால் அவர் கல்தச்சனாய் தொழில் பார்ப்பதாக சொன்னதிலிருந்தும், அந்தச் சிவப்பிலும் மதியழிந்து சம்மதித்தாள். ஆனால் அந்தக் கேள்வி நெஞ்சுக்குள்ளேயே நின்றிருந்தது. அதை திருமணமாகி கப்புதூ சென்று சிலநாட்கள் கழிய, சம்போகம் முடிந்திருந்த ஒரு ஆசுவாசப்பொழுதில், அவள் அவரிடம் கேட்டாள். ‘தெரியாமக் கேக்கிறன், இஞ்சயிருந்து அந்தக் காட்டுக்க எதுக்கு என்னைப் பொம்பிள பாக்க வந்தியள்?’ ‘எழுதியிருந்திருக்கு, நாகு, உனக்கும் எனக்கும்தானெண்டு. நீ கொழும்பிலயிருந்தாலும் நான் வந்திருப்பன். முள்ளியவளை அதைவிடக் கிட்டத்தான?’

‘நீங்கள் சும்மா சொல்லுறியள்.  மெய்யாய்ச் சொல்லுங்கோ, ஏன் வந்தியள்?’

மென்மையானவொரு மனநிலையிலிருந்த சதாசிவம் அதன் இரண்டாம் காரணத்தைச் சொல்லிவிட்டார்: ‘இது காட்டுக் கிராமம், நாகு. உங்கட காட்டைப்போல இது பெரிசில்லை. ஆனா இஞ்ச பயங்கரம் கனக்க. ஒவ்வொரு வீடும் தனியாயிருக்கிறதுதான் பயங்கரம். கூப்பிடு துலைக்கும் ஆளிருக்காது. இஞ்சத்தியப் பொம்பிளயளுக்கு இஞ்ச வந்து குடும்பம் நடத்த தைரியமிருக்கேல்லை. அதாலதான் நல்ல நெஞ்சுரமிருக்கிற பொம்பிளயாய்த் தேடி அங்க வந்தன்.’

‘நெஞ்சுரத்துக்கு என்ன குறை? வேழம் படுத்த அரியாத்தையின்ர பரம்பரையெல்லே!’ என்று சிரித்தாள் நாகாத்தை.
அவ்வாறான எல்லா கர்வங்களையும், கம்பீரங்களையும் அங்கே அடக்கியடக்கித்தான் வாழ்ந்திருந்தாள்.

இவ்வாறு மூன்று பிள்ளைகளும் பதினைந்து வருஷ வாழ்வனுபவமும் கிடைத்திருந்த வேளையில் 1995 வந்தது. ஒப்பரேஷன் ரவிரச நடவடிக்கையை இலங்கை ராணுவம் அந்த ஆண்டில்தான் துவங்கியது.

நாகிக்கு யோசிக்க மேலே எதுவுமிருக்கவில்லை. வலிகாமம் வெறிதாகும் முன்னரே சதாசிவத்திடம் சொல்லிவிட்டாள், ‘இனி பொறுக்கவேண்டாம். வெளிக்கிடுங்கோ, முள்ளியவளைக்குப் போவ’மென்று. வீட்டு விஷயத்தில் அவளாக முடிவெடுத்து நடைமுறைப்படுத்திய காரியம் அதுவரையில் அதுவொன்றாகவே இருந்தது. சதாசிவம் அது நல்லமுடிவென எண்ணி அவளைப் பின்தொடர்ந்தார். ஷெல் விழுந்து வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த ஒரு பேயிரவில் கப்புதூவிலிருந்து வாதரைவத்தை வழியாக ஓட்டமும் நடையுமாக சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மிதந்து, பொடிநடையில் சாவகச்சேரி வந்து, முள்ளியவளையை அடைந்தார்கள்.

அவர்களெல்லாம் அங்கே வந்து சேர்ந்த பிறகுதான், வலிகாமம் புலப்பெயர்வு நடந்து முடிந்தது. அதற்கடுத்த வருஷத்தில் நாகாத்தையின் தாய்  கொசுகாத்தை காலமானாள். அவள் குடியிருந்த சிறிய துண்டு நிலம் நாகிக்கென்றானது. வாழையும், மரவள்ளியும், காய்கறியும் பயிரிட்டதோடு, நாகியும் தயாநிதியும் கிடைத்தபோதெல்லாம் கூலிவேலைக்கும் போயினர். வீட்டை கலாவதி பார்த்தாள். முல்லைத்தீவு, பூநகரி, ஆனையிறவு என்ற எந்தப் பெரிய ராணுவ முகாம் தாக்குகையிலும்கூட வன்னியில் பட்டினியென்று பெரிதாக எதையும் அவர்கள் அனுபவிக்கவில்லை. அதெல்லாம் இடம்பெயர்ந்து வடமராட்சியிலும் தென்மராட்சியிலுமிருந்து வந்தவர்களுக்குத்தான். அந்தச் சிறிய நிலத்தைக்கொண்டே தங்களையும் காத்து, வேறு சிலரையேனும் அவர்களால் ஆதரிக்க முடிந்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி அதிகம். யாழ் குடாவிலிருந்தவரை  பல்வேறு அழுத்தங்கள் தங்களில்  விழுந்திருந்ததை அங்கு வந்த பின்னர்தான் கலாவதி  உணர்ந்தாள். அழுத்தங்கள் கவனிக்கப்பெறாதவரை இயல்பாகவிருந்தன. வன்னி, யாழ் குடாவிலிருந்த அதே சமூகத்தினால்தான் பெரும்பாலும் கட்டமைந்திருந்ததில், சமூகத்தின் ஏற்ற இறக்க முறை அங்கேயும் பரவியிருந்தது. இயக்கம் அங்கே தலையெடுத்த பின்னால் சகலவிதமான பேதங்களையும் முற்றாக அந்நிலத்தில் தடைசெய்திருந்தது. தன் உணர்வால் அந்த விடுதலையை உணர ஆரம்பித்ததின் பின்தான் அவளுக்குத் தெரிந்தது, தன்மேலிருந்த அதுவரையான அழுத்தம் எதுவென்பது. கப்புதூவில் கூலிவேலைக்கும் சிரமமிருந்தது. தினசரி  பசியென்ற பயங்கரம், மனத்திலிருக்கக்கூடிய தர்க்க, தார்மீக உணர்வுகளையெல்லாம் கறையான்போல் அரித்துத் தின்றுகொண்டிருந்தது. சதாசிவமும் செய்தொழில் அற்றுத் திரிந்தார். குடியும் அவருக்கு அதிகமாக இருந்தது. நாகியும் குடிப்பாள். அவளை அவர்தான் குடிக்கவைத்தார். அதனால் அங்கேதான் பசியையும், நோயையும், தளைகளின் சுமப்பையும் அவள் அனுபவிக்க வேண்டியவளாய் இருந்தாள். வன்னி அவள் சுயாதீனத்தை எழுதிக்கொடுத்தது.

பெரும்பாலும்  யாரின் உதவியுமில்லாமலேதான் நாகாத்தை தன் நான்கு பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தாள். அந்த நிலம் அதற்கு இசைவாயிருந்தது.

கணவனின் நடத்தைகளில் தான் கொண்டிருந்த வருத்தத்தை வார்த்தைகளில் நாகி சொல்லி  பிள்ளைகள் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனாலும் அவைகளை அவர்கள் தாமாகவே கண்டறிந்தனர். முன்னிரவுகளில், சாப்பிட்டு வந்து திண்ணையில் அமர்ந்துகொண்டு அவள் சப்பித் துப்புகிற வெற்றிலையின் அளவிலும், அதன் கடும் சிவப்பு நிறத்திலும், அவள் கொண்டிருக்கும் புறம்மறந்த ஸ்திதியிலுமாய் அதை அறிய முடிந்திருந்தார்கள்.

அம்மா பாவம்!  அவர்களுள் ஓர் பரிவு எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. கலாவதி அதற்குப் புறம்பான மனநிலை கொண்டிருக்கவில்லை. ஆனால் பிரியன் விஷயமாக அம்மாவுடன் சிறிது வாதாட வேண்டியிருக்குமென கலா எண்ணி அதற்கான வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கையில், அவன் தன்னை ஏமாற்றிவிடுவானோ என்ற உள்ளச்சம் எழுந்துவிட்டிருக்கிறது.

இனி அம்மாவை நோக்கியல்ல, பிரியனைநோக்கியே அவள் தனது திட்டத்தைத் தீட்டவேண்டியவளாயிருந்தாள். அவள் தன்னை உறுதியாக்கினாள். பறந்துவிட்ட நம்பிக்கையை பிடித்திழுந்துவந்து மறுபடி இருதயத்துள் பொருத்தினாள். ‘பிரியன் வருவான்… கட்டாயம் வருவான்... வரவேணும்’ என்று மனத்துக்குள் எண்ணியபடி முகம் கழுவ கிணற்றடிக்கு நடந்தாள்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.