மழையிருள் இறுக்கிய வானத்தில் அவ்வப்போது எங்கோ வெட்டிய மின்னலின் ஒளிக்கீறுகள்  ஓடி மறைந்து கொண்டிருந்ததைக் கண்டபடி, தோளில் துவாயைக் போர்த்தி குளிரை மறைத்துக்கொண்டு ஜன்னலோரத்தில் வெளிபார்த்து நின்றிருந்தாள் குசுமவதி. தேசத்தின் நிலைபோல, காலநிலையும் நன்னிமித்தம் ஏதுமற்று இருண்டு விறைத்த குளிருக்குள் கிடப்பதாய்ப்பட்டது அவளுக்கு. நான்கு நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. கூதல் காற்று தகரக் கூரையைப் பிய்த்தெறியும் மூர்த்தண்யத்துடன் ஓங்காரமாய் அலைந்தடித்தது.

அங்கிருந்து பார்த்தால் வவுனியா-கொழும்பு பிரதான வீதிக்கப்பால் புத்த வளாகத்தின் முன்பகுதியில் நிமிர்ந்து பிரமாண்டமாய் நின்ற புத்தர் சிலை தெரியும். பின்னால் சுற்று மதிலினுள்ளே  மூன்று புற விறாந்தையுள்ள சின்ன விகாரம். அதன் முற்றத்தில் செழிப்பாய் நெடிதுயர்ந்து  வளர்ந்துகொண்டிருந்த அரசமரம் நின்றிருந்தது. பின்னாலுள்ள மரக்கூடலுள் இருந்தது பன்சால எனப்படுகிற புத்த துறவிகளின் வாசஸ்தலம்.

எந்தவொரு பன்சாலவையும் அவள் அவ்வளவு நிர்விகற்பமாய் என்றும் நோக்கியதில்லை. அது குண பின்னம் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு இடமாய் மனத்தில் தோன்றிக்கொண்டிருந்தது. அவளது ஊரில் ஒரு பன்சால இருந்தது. அதிலும் ஒரு மகாதேரர், பிக்குகள் இருந்தார்கள். அவர்களும் பிட்சைக்கும், உபதேசத்துக்கும் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்றுவந்தார்கள். அவர்கள் எந்தவோர் அரசியல் உணர்வு வேட்கையிலும் ‘ஜெயவீவ’ சொல்லியதில்லை. மாவிலாறு வான் கதவுகள் ஆகஸ்டு 8, 2006இல் திறபட்ட செய்தியை இலங்கை வானொலி கொண்டாட்ட உவகையுடன் வெளியிட்டபோது, ‘ஜெயவீவ’வென்ற  பெருங்கோஷம் வவுனியாவின் மய்யத்திலுள்ள அந்த பன்சாலவிலிருந்து எழுந்திருந்தது. அன்றிலிருந்து ஏறுமுகம் கண்ட பன்சால  பிக்குகளின் முக விஸ்தாரம், ஒரு மாத இடைவெளிக்குள்ளாக 2006 செப்ரெம்பர் 4இல் திருகோணமலைத் துறைமுகத்தை அச்சுறுத்திக்கொண்டு புலிகள் வசமிருந்த சம்பூர்  ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட செய்தியோடு  பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் முகம் மட்டுமில்லை, நடை பேச்சு ஆசீர்வாதப் பாங்கு அனைத்திலுமே உபரி மகிழ்ச்சியின் அடையாளங்கள் நிறைந்துபோயிருந்தன. மகிழ்ச்சி கர்வத்தின் விளிம்பைத் தொட்டுக்கொண்டிருந்தது.

அக்காலப் பகுதியில் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலைக்கு  நானூறு ராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு வந்த ‘ஜெற் லைனர்’ கப்பல், தற்கொடைப் புலிப் போராளிகளின் மூர்க்கமான தாக்குதலை முறியடித்து துறைமுகத்தை வந்துசேர்ந்தது. அப் போரில் பல கடற்புலிகள் கொல்லப்பட்டதோடு, அவர்களது படகுகளும்  அழிக்கப்பட்டிருந்தன. யுத்த நிகழ்வொன்றில் ஒரு பன்சால காட்டிய அப் பேரெழுச்சி, அப்போது நினைத்தபோதுகூட குசுமவதிக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. பிரகாசம் மிகுந்த அதன் வெளிக்குள்ளே பன்சால இருளைக் கொண்டிருக்கிறதென எண்ணினாள் அவள்.

அவளது பார்வை வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு பிக்குமீது தற்செயலாய் விழுந்தது. திடீரென அவளது சதிரம் பதறியது. நீண்டகாலமாய் கண்ணிலும் காணாமல் இருக்கும் சோபித தேரரளவு உயரம், பருமன் எல்லாம். அவரல்லவென நிச்சயமானபோதும் அவளுடல் நடுங்கிக்கொண்டு இருந்தது.

எப்படியான அவலத்திலும் ஆபத்திலுமிருந்து ஒருபோது அவள்  தப்பியிருந்தாள்!

நினைப்புக்கும் நடுக்கமேற்படுத்தும் அந்தக் காலப் பகுதியை, காய்ந்து வரும் புண்ணின் தினவை சொறிந்து ஆற்றுவதுபோல, மனத்தை வருத்திக்கொண்டேனும் ஒருமுறை நினைத்துப்பார்க்கத் தோன்றியது அவளுக்கு.

அது 2001 ம் ஆண்டு.

கோடை காலம் பிறந்திருந்தது.

தெற்கிலும் நிறைந்த அரசியல்  களேபரங்களைக் கண்டுகொண்டிருந்தது நாடு.

கேகாலையிலிருந்து கண்டியும், அங்கிருந்து வவுனியாவுமாக பயணித்து பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாய் இரண்டு மணி நேர தாமதத்தில் வந்த  பஸ்ஸிலிருந்து  இரண்டு பெண் குழந்தைகளுடனும், ஒரு சூட்கேஸ், இரண்டு பைகளுடனும் இறங்கினாள் குசுமவதி. வவுனியாவில் ஒரு பெரியசாமியின் முகவரி அவளிடம் இருந்தது. ஆனால் முகவரியைத் தேட இடம் தெரிந்திருக்கவேண்டும். இடத்தைத் தெரிய வடக்கு-தெற்கு தெரிந்திருக்கவேண்டும்.

பஸ் நிலையத்தில் தடுமாறிக்கொண்டு இருந்தவளைநோக்கி புத்தபிக்கு ஒருவர் வந்தார்.

கருணை மயமாக இருந்தது அவரது முகம். அவர் சிரிக்காமலே முகத்தில் சிரிப்பிருந்தது. என்றும் மலர்ந்திருக்கும் தாமரையாக, கொட்டிவைத்த மல்லிகை மொக்குகளின் இதழ்கள் பிரிந்ததான வசீகரம்.

நிலைமையை முன்னனுமானிக்க முடிந்திருந்தாலும் விபரமறிய வாஞ்சையோடு வினாக்கள் தொடுத்தார்.

புத்தகுருவிடம் சொல்லாமல் தன் அவதியை யாரிடம் சொல்லக்கூடும் அவள்?

விவரமறிந்த பிக்கு, பன்சாலவுக்கு எதிர்த்த தெருவிலேயே ஒரு சிறிய வீடு  இருப்பதாகவும், வீட்டு  உரிமையாளி  தொலைவிலிருப்பதால் அதன் பொறுப்பை அருகிலுள்ள ஒரு கடைக்காரரிடம் கொடுத்திருப்பதாகவும், வீட்டைப் பார்த்து வீட்டின் வசதியும் வாடகையும் அவளுக்குச் சரிவருமானால் தன்னால் அந்த வீட்டை அவளுக்குப் பெற்றுத்தர முடியுமென்றும் சொன்னார். உடனேயே சென்று வீட்டைப் பார்த்து, முன்பு குடியிருந்தவர்கள் கொடுத்த  தொகைக்கே வாடகையைப் பேசிமுடித்து, அன்றிரவே அங்கு குசுமவதி குடியேறினாள். அன்றைக்கு அவள் வாங்கிய சாமான் இரண்டு பாய்களும் மூன்று தலையணைகளும் மட்டுமாகவே இருந்தது.
மறுநாள் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கினாள். எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவானாலும் அவளிடம் பணம் சிறிது இருந்தது. அடுத்த வாரத்துக்குள் பிள்ளைகளை சிங்கள பள்ளியொன்றிலே சேர்த்தாள். ஆரம்பத்தில் எல்லாமே புது இடத்தின் சிரமங்களைக் கொடுக்கவே செய்தன. ஆனால் ஒரு ரசிப்புடனும், பொறுப்புடனும் அவற்றை  இலாவகமாகத் தாங்கினாள். இரண்டு மொழிகள் ஊசாடிய அந்த இடம் இன்னொரு வகையான உணர்வெழுச்சியைக் கொடுத்தது அவளுக்கு. ஆனால் தொடர்ந்து வந்த அனுபவங்கள் அந்த குதூகல நிம்மதியை அழித்தன.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை இருள் விழுந்து வருகிற நேரத்தில் திடீரென  சோபித தேரர் வாசலில் தோன்றினார். சட்டென்ற அவர் பிரசன்னத்தில் திடுக்குற்றாலும் குசுமவதி பிக்குவை வரவேற்று ஆசனமளித்து பணிவாய் ஓரத்தில் நின்றாள். ‘பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? நன்றாகப் படிக்கிறார்களா? புதிய பள்ளி அவர்களுக்கு பிடித்திருக்கிறதா?’ என பூர்வாங்க விசாரிப்போடு, சுற்றாடலைப்பற்றி வினவ ஆரம்பித்தார் பிக்கு. சகஜமாகவே அவருக்கு விடையிறுத்த குசுமவதி, அந்த இடம் பள்ளி, கடைத் தெருக்களுக்கு மிக வசதியாக அமைந்திருப்பதைக் கூறினாள்.

‘உனக்கு ஒரு ஆசீர்வாதமிருக்கிறது’ என்று கூறிச் சிரித்தார் பிக்கு.

தானும் மென்மையாகச் சிரித்த குசுமவதி அப்போதுதான் உணர்ந்தாள் தன் நெஞ்சக் குவடுகளிலும் வயிற்றுப் பரப்பிலும் அருவருக்கச் செய்யும் பார்வையின் ஊர்தலை. தான் போட்டிருந்த கருணை வேஷத்தைக் கலைத்துவிட்டாரா பிக்கு? சஞ்சலத்தைக் காட்டாதிருக்க முயன்றபடி கதவு நிலையோடு தன்னை நிறுத்தி நின்றிருந்தாள் அவள்.

பிறகொரு நாள். முன்னிரவு நேரத்தில் பிக்கு வந்தார். அவளது கல்வி, தொழிலனுபவம் ஆதியன விசாரித்தறிந்துகொண்டு, அவளுக்கேற்ற வேலையொன்றை தான் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார். அவளே முயன்றுகொண்டுதான் இருந்தாள். பெரியசாமி இப்போது தொடர்பிலிருந்தார். அவர்மூலமும் முயற்சி இருந்தது. பாதி பணம் முடிந்திருந்த நிலையில் நீண்டநாட்களுக்கு வேலையின்றி அவளால் அங்கே தாக்குப்பிடிக்க முடியாதென அவளுக்குத் தெரியும். தன்  மேனியிலூர்ந்த அட்டையை தட்டி அகற்றுவதுபோல் பிக்குவின் விரக பார்வையை ஒதுக்கிக்கொண்டு விபரம் சொன்னாள்.

மற்றுமொரு நாள் இருட்டிய வேளை. பிக்கு வீட்டுக்கு வந்தார்.  கதிரை உள்ளேயிருக்க வெளியிலிருந்த புட்டுவத்தில் அமர்ந்தார். தொழிலனுபவம் இல்லாதவிடத்தில் வேலை தேடுவதிலுள்ள சிரமத்தைச் சொன்னார். தொழிலனுபவம் இருந்தாலும்கூட அது கடினமென்றார். அவளுக்கிருக்கும் அனுபவத்தைச் சொல்லி வேலைதேட முடியாதென்று விரசமாய்ச் சிரித்தார். அவள் திடுக்கிட்டாள். பின் அவரது விரச சிரிப்பிலிருந்து எல்லாம் விளங்கி அவள் உடல்கூச நின்றிருந்தாள். அதைச் சொல்லாமலே அவளுக்கு எப்படியும் ஒரு வேலை எடுத்து தருவதாகக் கூறிவிட்டு பிக்கு போய்விட்டார்.

திறந்த கதவினூடாக அம்மாவின் முகத்தையே கதிகலங்கப் பார்த்தபடி இருந்தாள் யயானி.

ஒரு மாதத்திற்குள் அலுவலகங்கள் உள்ள  இரண்டு மாடிக் கட்டிடமொன்றின் துப்புரவுப் பணியொன்று பெரியசாமியின் முயற்சியால் குசுமவதிக்குக் கிடைத்தது.

பிக்குவும் அவ்வப்போது வந்து அவள் கதையெல்லாம் அறிந்து மிகவும் பச்சாதாபப்பட்டு போய்க்கொண்டிருந்தார். அவள் அளித்த தேநீர் இலங்கைத் தேயிலைக்கே இல்லாத மணம் சுவை கொண்டிருந்ததாய் உபசாரம் சொன்னார். அதை அபசாரமாய் நினைத்து மறுபடி தன்மேல் அட்டையின் ஊர்தலை உணர்ந்து பயிர்ப்படைந்தாள் அவள்.

அவரது பார்வையின் அருவருப்பில் மனம் முறுகியிருந்த குசுமவதி, எல்லார் பார்வைகளுமே ஒன்றாயிருந்த வகையில், நாளடைவில் பேதமறுந்துபோனாள். ஆணென்பதன் அர்த்தம் அதுவென்பது அவளுக்கு  கேகாலையிலேயே தெரிந்திருந்தது. அவள் எல்லாவற்றையுமே சமாளித்தாகவேண்டும். வந்தேறு குடியாயிருந்த வகையில் பார்வைக்காவது அவள் இரைகாட்டியே  ஆகவேண்டியேயிருந்தது. கொஞ்சம் சரசமாகக் கதைப்பதும் வேலையைச் சுமையாக ஆக்காமலிருக்கச் செய்யும் உபாயமாயிருந்தது. கட்டிடத்தின் இரவுக் காவலாளி சுமனபால அவள் காலையில் வேலைக்குச் செல்லும் நேரம் முதற்கொண்டு, தனது வேலை முடிந்து வீடு போகும்வரை குட்டையான இடதுகாலை எறிந்து நடந்து அவள் பின்னால் பேச்சுக் கொடுத்தபடி அலைந்துகொண்டிருந்தான்.
ஆனாலும் கட்டிடக் காவலாளியையும் புத்தபிக்குவையும்  ஒரே கருவிகொண்டு அளந்து  பார்க்கக்கூடாது. கருணையிலிருந்து பிக்குவும், வாழ்க்கையிலிருந்து காவலாளியும் தோன்றியிருப்பதை கவனங்கொள்ளவேண்டும். பிக்குவிடமிருந்து அவளுக்குத் தேவையாயிருந்தது கருணையாக மட்டுமே  இருந்தது. அவரோ சகலமும் அளிக்கத்  தயாராயிருந்தார். அவரின் வரவை எப்படித் தடுப்பதெனத் தெரியாது திகைத்தாள் குசுமவதி.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. நிலவில்லாதிருந்தது வானம். மரக்கிளைகள் வீதி விளக்குகளை மூடி இருள் விழுத்தியிருந்தன. எதனதும், எவரதும் சஞ்சாரங்களை  மறைக்கும் இருட்டாயிருந்தது வீட்டின் முன் பகுதி.

நேரத்தோடேயே பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு அறைக்குள்  படுத்துவிட்டிருந்தன.

படுக்கத் தயாராக விளக்கை அணைத்துவிட்டு குசுமவதி பாயில் வந்து அமர்ந்த சொற்ப நாழிகையில், கதவு மெல்ல தட்டப்பட்ட ஒலி கேட்டது. அதன் அவ்வளவான மெதுமையில் யாராவது தட்டினார்களாவென்றும் சந்தேகமாயிருந்தது. அவள் அரவமறுத்திருந்தாள் ஒரு நிச்சயத்திற்கு.

அப்போது மீண்டுமெழுந்தது அவ்வொலி.

அவளது தேகத்திலிருந்த வயது  நடுங்கப் பண்ணியது.

அவளுக்கு அது யாராக இருக்கலாமென்ற ஊகமிருந்தது. அவள்  நிசப்தத்துள் உறைந்திருந்தாள்.
மீண்டும் இரகசியத்தில்போல் கதவு தட்டப்பட்டது. அவள் உயிர் கழரும் அவதி கொண்டாள். விநாடிகள் நகர்ந்தன. நிமிஷங்கள் தொடர்ந்தன.

மேலே  அவ்வோசை எழவில்லை.

சிறிதுநேரத்தில் காலரவமெழாது மெல்ல ஜன்னலை நெருங்கி, சாத்தப்பட்டிருந்த ஜன்னல் கதவின் நீக்கினூடு குசுமவதி வெளியே பார்த்தாள்.

சோபித தேரர்  கேற்றைக் கடந்து   நடந்துகொண்டிருந்தார்.

அப்போது அவளால் மனத்துக்குள்ளாகக் கூவ முடிந்திருந்த ஒரே  சொல், ‘பகவானே!’ என்பதாயிருந்தது. விஹாரை செல்வதும், பகவானை வணங்குவதும், பிக்குகளைப் பணிவதும் வாழ்வின் சம்பிரதாயங்களாக அவள் சின்ன வயதிலிருந்தே கொண்டிருந்திருக்கிறாள். வளர்ந்த பின்னால் துக்கமான சம்பவங்கள் நிகழ்ந்தபோதும் பகவானை அவள் கூவியழைத்ததில்லை. மனத்துள்ளாகக்கூட. ஆனால் அன்றைக்கு அவ்வாறு செய்யும் அவதி ஏற்பட்டிருந்தது.

அரநாயக்கவின் விதூஷக ராசாவின் எண்ணற்ற பத்தினிகள் அசுபினி நீர் வீழ்ச்சியில் பாய்ந்துயிர் மாய்த்த கதை அப்போது அவளுக்கு ஞாபகமாயிற்று.

அச் சிற்றரசின் ராசாவுக்கும் எதிரி அரசனுக்கும் மலையிலே யுத்தம் நடந்தது. போரில் தான் வென்றால் மலையிலிருந்து தமது நாட்டுக் கொடியையும், தோற்றாலோ தான் இறக்க நேர்ந்தாலோ வெண்கொடியொன்றையும் அசைக்கச் செய்வதாக யுத்தத்திற்குச் செல்லும்போது ராசா கூறிச் சென்றிருந்தார். யுத்தத்தின் முடிவறிய அவரது கணக்கற்ற ராணிகள் பள்ளத்தாக்குக்கு அப்பால் நீர் வீழ்ச்சிகொண்ட மலையிலே குதிரைகளின் மேலமர்ந்து காத்திருந்தார்கள். யுத்தம் முடிந்தது. ராசா ஜெயமடைந்தார். ராணிகளுக்கு தமது சின்னம் பொறித்த நாட்டின் கொடியை இனி அசைக்கலாமென எண்ணுகிறபோது, அவருக்கு ஒரு விதூஷகம் செய்ய ஆசை ஏற்படுகிறது. அதனால் தான் சொன்னபடி இல்லாமல், ராணிகளுக்கு வெண்கொடியை அசைக்கச் செய்கிறார். போரின் முடிவறிந்த ராணிகள் ராசாவின் இறப்பில் பேரவலம்கொண்டு அந்நீர்வீழ்ச்சியிலேயே வீழ்ந்து உயிர் துறக்கிறார்கள்.

மிகப் பழங்காலத்தில், ஒரு சிற்றரசாக அவளது அரநாயக்க இருந்தபோது நடந்த கதையாக ஊரிலே படித்தவரும் பாமரரும் சொன்ன கதை அது. அது அவளுக்கு முன்னுதாரணம் சொன்ன ராணிகளின் கதையாகத் தோன்றியது அப்போது. அந்தக் கதை அவளுக்குள் ஒரு வலிமையைச் செறித்தது. அவள் இரையாக மாட்டாள்.

ஒருநாள், இருள் நன்றாக விழுந்திருந்த நேரத்தில், பிக்கு சிரித்தபடி வந்து திண்ணையில் ஏறி நின்றார்.

பிள்ளைகள் இரண்டும் அறையினுள்ளே ஏதோ செய்துகொண்டிருந்தன.

வெளியே திண்ணையில் குறைந்த சக்திகொண்ட ஒரு மின்குமிழ் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

கதவுகள் திறந்தே இருந்தன.

எவ்வாறு அந்த  யோசனையும், உந்துதலும்  பிறந்ததோ, பிக்குவை அமரக்கூட கேட்காமல் விறுவிறென அறைக்குள் ஓடி பிள்ளைகள் இரண்டையும் கைப்பிடியில் வெளியே இழுத்துவந்தாள் குசுமவதி. பிக்கு எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகளை பிக்குவின் முன் மண்டியிட வைத்த மறுகணம்  தானுமே மண்டியிட்டமர்ந்து வணங்கி, ‘நானும் என் பிள்ளைகளும் சுவாமியிடம் சரணம்’ என்று அவரது  பாதங்களை உறுதியாகப் பற்றினாள்.

ஒரு கணம் நடப்பது என்னவென்பதே அறியாது திகைத்து நின்றார் பிக்கு. தகாத நோக்கத்தோடு வந்தது வெளிப்பட்டதில் அவரது உள்ளம் நடுங்கியது. மெய் சிலையெய்தி கண்கள் பனிக்க சிறிதுநேரம் நின்றிருந்தார். பின் மெல்ல சுதாரித்துக்கொண்டு அவளைக் குனிந்து பார்த்தார். ஒரு பக்தையின் முழுச் சரணாகதி. அது அவரிடம்கூட இல்லை. அந்தப் பகவானிடமானது. அதை அவர் கண்ணீரில் புனிதமாகிய புதுஅவதாரத்தில் ஏற்றுக்கொண்டார்.

‘சூபத் நிவன் சம்பத்.’

சுகவாழ்வும் பேறும் கிடைக்கட்டுமென்ற பிக்குவின் ஆசீர்வாதத்தில் தலையை நிமிர்த்தினாள் குசுமவதி.

அங்கே ஒரு மெய்யான பிக்குவின் தரிசனம் அப்போது அவளுக்குக் கிடைத்தது.

மேலே பிக்கு அமரக்கூடச் செய்யாமல் படியில் கழற்றிய செருப்பைக் கொளுவிக்கொண்டு மிக நிதானமாகத் திரும்பி ஒரு ஓவியம்போல் மெல்ல நகர்ந்து மறைந்தார்.

அதற்குப் பின்னால் அவர் அங்கே எப்போதும்  வந்ததில்லை. வீதியில், பன்சாலவில்  காணப்பட்டதுமில்லை. ஒரு ஆபத்து நீங்கியதென்று குசுமவதி சந்தோஷப்பட்டாள். ஆனாலும் அவரை அவ்வப்போது நினைத்தாள் அவள். காமமும் குரோதமும் ஆசையும் நீங்கியவராகத்தான் அவரை அவள் முதன்முதலாக கண்டிருந்தாள். திடீரென்றுதான் அவரில் அந்த மாற்றம் விளைந்தது. அவள் கண்முன்னாலேயே அவர் மாறிக்கொண்டிருந்தார். தன் அழகு, தன் அபலைத்துவம் இரண்டில் எது அவரை அவ்வாறு மாற்றியது? இரண்டுமேயா? அவளால் தீர்வுகாண முடியவில்லை. அவரின் அடிமனத்துள் பொறியாய் அது இருந்திருக்கிறது. ஒரு பெண்ணின் அபலைத்தனம் அதை கனலாய் மூட்டியிருக்கிறது. பிக்கு அன்றுதான் உண்மையான துறவை ஏற்றதாக குசுமவதி எண்ணினாள். இனி அவரில் அவளுக்கு பயமில்லை.

ராணுவ வாகனங்கள் உறுமி நகரம் ஒரு மாலையில் பெருங்களேபரம் கொண்டிருந்தது. ‘கொட்டியா...’,  ‘கொட்டியா’ என்ற  கூச்சல்கள் எழுந்தன. தமிழர் வீடுகள் சில சோதனையிடப்பட்டன. சிலர் விசாரிக்கப்பட்டார்கள். சிலர் இழுத்துச் செல்லப்பட்டார்கள். ஒன்பது  மணியளவில் எல்லாம் ஓய்ந்துவிட்டது. வவுனியா நகரம் பழைய நிலையெய்தியது.

பிள்ளைகள் உள்ளேவர வற்புறுத்தியும், அச்சம் கடந்த ஒரு நிலையில் எல்லாம் அவள் வாசலில் நின்று  கண்டபடி இருந்தாள். பிள்ளைகளுக்குத் தெரியுமா, அவள் கண்டதும் அறிந்ததும் அதைவிடப் பெரிய கலவரங்களென்பது?

மனத்துக்குள் அடக்கியடக்கி பொக்கிஷமாய்க் காத்துவரும் எண்ணங்களையெல்லாம் அவள் ஒருநாள் வெளியே எடுத்து அலசிப்பார்க்கத்தான் வேண்டும். அதை பிள்ளைகளுக்கு நேரம் கிடைக்கிறபோதெல்லாம் சொல்லவும்வேண்டும். கதை கேட்க வெகுத்த ஆர்வம் அவர்களுக்கு. வண்ணான் ராசாவான கதை, விதூஷக ராசாவின் கதை, நாவிதனின் யுக்தியென்பவை அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லும்படி கேட்கும் கதைகளாகவிருந்தன. இனி அவள் தனது கதையையே சொல்லலாம். எந்த புனைவுக் கதையிலும், கிராமியக் கதையிலும் இல்லாத சுவை அவள் கதையில் இருக்கிறது. அவளது ஊர், அவளது உறவுகள், நண்பர்கள், சந்தித்த காதல், செய்த காதல் திருமணம், திருமணத்தால் கிடைத்த போக சுகங்களும் போத வளர்ச்சிகளும், துரதிர்ஷ்டம் இழப்பு மரணங்களென அவள் கதை பாகங்களாய் விரிக்கப்பட கூடியது. அதையே இனி அவள் சொல்வாள்.

ஜன்னலிலிருந்து திரும்பியவள் விளக்குகளையெல்லாம் அணைத்த பின் கதவைச் சாத்தி தாழிட்டாள். கூடத்துள் பாயை விரித்துக்கொண்டு  படுத்தாள்.

இருளும், குளிரும் இருந்தும் அவளுக்கு உடனேயே தூக்கம் பிடிக்கவில்லை.

வாழ்க்கை எங்கெங்கிருந்தெல்லாம், ஒருபோது அரசியலிலிருந்தும், இன்னொருபோது தர்மத்தின் பெயரிலிருந்தும், ஆபத்துக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றதென்ற எண்ணம் அவளை மலைத்துப்போக வைத்தது.

இவையெல்லாம் முன்பே அவளது கணவன் பந்துல சொன்னதுதான். போராடாமல் வாழ்க்கையில்லை என்றான் அவன். தேடலே ஒரு போராட்டம்தான் எனவும் அவன் சொல்லியிருந்தான்.

‘தாயின் உதரத்திலிருந்து வரும் சிசுவின் முதல் சத்தம் அதன் அழுகையல்ல. அது ஒரு அடைப்பின் திறப்பு. சுவாசத்தின் வழிவிடுகை. சிசுவின் அடுத்த குரலே அதன் தேடலைத் தொடங்குகிறது. அதன் தேடல் முதலில் தாயும் முலையுமாக இருக்கிறது. வளர வளர வேறொன்றாக அது மாறுகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதான காலம் வாழ்க்கையெனக் கூறி, அதன் மூலம் அடையவேண்டியது  தர்மமேயென பௌத்த சாஸ்திரங்கள் குறித்துவைத்தாலும், அவற்றினையும் தேடலாலேயே  அடையமுடிகிறது. லௌகீக கனவுகளை அடையும் தேடலின் தீவிரத்திலிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை கனவாகவே முடிந்துவிடுகிறது. கனவு, மாயை இல்லை. அது எதார்தமும் இல்லை. கனவு என்பது கனவுதான். வாழ்க்கையையும் வாழ்தலையும் இணைக்கிற சரடு அது. அதுவும் ஒரு தேடலின் தீவிரத்திலேயே சாத்தியமாகிறது. தேடலில் தடைகள் குறுக்கிடும். அதனால் நீ போராடியே ஆகவேண்டும். போராடாமல் எதையும் அடைந்துவிட முடியாது. உன் சுதந்திரந்திரத்துக்காகவும் நீ போராடிக்கொண்டே இருக்கவேண்டும். உறக்கத்திலும் உனக்கு அந்த ஜாக்கிரதம் அவசியம். இல்லாவிட்டால்  பூட்டப்பட்ட விலங்குகளோடேயே நீ கண்விழிக்க நேரும்.’
அழகாகத்தான்  சொல்லியிருந்தான். அது  உண்மையென்பது அனுபவபூர்வமாகவே இப்போது குசுமவதிக்குத்  தெரிகிறாள். ஒரு முட்டுப்பட்ட குடும்பத்துப் பெண், கல்யாணமாகி இரண்டு குழந்தைகளிருக்கையில் கணவனை இழந்து விதவையாகிறபோது ஏற்படுகின்ற இன்னல்கள் எங்கேயும், எவருக்கும் ஒன்றுதான்போலவே அவளுக்குத் தோன்றியது. அவள் சிங்களத்தியாக இருந்ததில் என்ன வித்தியாசம் நிகழ்ந்தது?

வடவிலங்கை, தென்னிலங்கை, கிழக்கிலங்கையென மூன்று பெரும்பாகங்கள் இலங்கையில் இருப்பதாகக் கொள்ளமுடியும். மேற்கு பெரும்பாலும் கலப்பினப் பகுதியாகவே இருந்தது. அந்த மூன்றும் ஒருவகையில் இனத்துவமாகவும் பிரிந்துள்ளதென கருதத்தக்கது. இதில் எந்தத் திசையிலும்  பெண்ணின் அவலம் ஒன்றாகவே இருக்கிறது.

அவைபற்றியெல்லாம் அவளைப்  புரியவைத்தவன் பந்துலதான்.

அப்படியானவனின் இழப்பின் துயரை இளக்கவும், துரோகிகளிடமிருந்து தப்பவுமே அவளது  இடப்பெயர்வு சுயத்தில் நிகழ்ந்தது. பந்துலவின் காதலியாயும் மனைவியாயும்  அவள் நினைவுகளை மறக்க விரும்பாதவள். நினைவுகளை வைத்து அடைகாக்க விரும்புபவள். அவனது நினைவுகளை அவளது மண்ணே எங்கெங்கும் கொண்டிருந்தது. ஆனாலும் அங்கேதான் அவனது அழிவின் காரணமும் இருந்தது. காரணத்தில் துரோகம் இருந்தது. துரோகத்திலிருந்து சூது கிளர்ந்தது. அதிலிருந்து தப்பிக்கவே ஓடினாள். நெருங்கிய நண்பர்களும் உறவினரும் சிலர் கேட்டார்கள், அவள் எந்த இடத்தை புகலிட குறியாக்கியிருக்கிறாளென்று. அவள் வனமோடு உள்ள வவுனியாவென்றாள். அது எதுவானாலும், அவள் அங்கே தனிமனிதி ஆகிவிடுவாளென்று அவர்கள் எச்சரித்தார்கள். மெய்தான்.  தனியள் ஆகவே செய்தாள். ஆனாலும் நல்ல நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அவள்போல சிந்திக்கிறவர்களாயிருந்தார்கள். அன்பை அநாயாசமாய் பிரதியுபகாரமின்றிக் கொடுப்பவர்களாயிருந்தார்கள். சிந்திக்கவும் அன்பு செய்யவும் இயன்ற வாழ்க்கை சொர்க்கமானது என்றிருந்தான் பந்துல. அவள் அதை ஞாபகமாக நண்பர்களிடம் சொன்னாள். அவன் தங்களுக்கும் அவ்வாறுரைத்ததாக அவர்கள் சொன்னார்கள். கதைப்பதும் சாத்தியமற்ற அக்கால அரசியல் சூழலில், அவர்கள் கதை சொன்னார்கள். தன் கதைபோலவே அவர்களதும் இருப்பதை அவள் சுட்டிக்காட்டினாள். அப்போது அவர்கள் முறுவலித்தார்கள். அது அவர்கள் ஒரே கதையின் வேறு பாத்திரங்களாய் இருந்ததின் அர்த்தமாயிருந்தது.

அவள்  நினைவு ஒவ்வொன்றும் காவியப் பக்கம். போராட்டமும் காதலும் அவளுக்கு வேறுவேறல்ல. அவள் பிறந்தது வறுமையுள்போலவே, வாழ்ந்ததும் அதனுள்ளேதான். பஞ்சம் எப்போதும் அவள் வீட்டுப் படியிலிருந்து தலையைச் சொறிந்துகொண்டே இருந்தது.

சராசரி கேகாலையின் ஒரு சிங்களக் குடும்பம்போன்றதே அவளது.

தென்னிலங்கை மண் வளப்பம் மிக்கது.

கேகாலை தென்னிலங்கையில் அழகு மிக்கது.

அதில் அரநாயக்க  பேரழகு கொண்டது.

அந்தளவு அழகும் வளமும் கொண்ட அவளது ஊர் வறுமையும் கொண்டிருந்தது. அங்கே வைரமும், இன்னும் விலையுயர்ந்த முத்து புஷ்பராகம் போன்ற கற்களும் கிடைத்தன. ஆனால் வறுமையும் அங்கேதான் முகாமிட்டிருந்தது. அது இயற்கையில்லையென அவள் எண்ணினாள். அப்போது, அது எதனாலென்ற கேள்வி பிறக்க, பதிலின் தேடலைத் தொடங்கினாள். அதற்கான கதவுகள் ஏற்கனவே அவளுக்குத் திறபட்டிருந்தன. வாசலில் பந்துல நின்றிருந்தான். அவள் கற்றாள் அரசியலும் சமூகமும் கலையும் கலாச்சாரமும்.

பந்துல ஆசானாகவிருந்தான்.

அவன் நூற்றுக்கணக்கான யுவர்கள் யுவதிகளின் ஆசானும்.

அவையெல்லாம் ஒருபொழுதில் ஒன்றுமே இல்லையென ஆயின. அவளுக்கும் ஒன்றுமில்லையென ஆனாள். அந்தக் கதையை அவள் தொகுத்துப்பார்க்க ஒரு போது வேண்டியிருந்தது. படுப்பதற்கும் தூங்குவதற்கும் இடையிலான அந்தப் போது வெகு சிலாக்கியமானதென்று அவள் கருதினாள். அந்தப் போது அப்போதே துவங்கட்டுமென அவள் தீர்மானித்தாள்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.