வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


11

கிளிநொச்சி திருநகர் உறங்குவதுபோல் தெரிந்தது. சலனங்கள் முற்றாக அறுந்திருந்தன. உறக்கமற்ற நிலையில் பல மனங்கள் தப்புவதற்கான மார்க்கங்களைப் பின்னிக்கொண்டு இருந்தன.  இரவின் தனிமைக்குள் சுழித்தெழும் நம்பிக்கையீனத்தை, மனத்தின் ஒரு படையில் பதிவாகியிருந்த பாடலின் வரியொன்று பகலில் மீட்டெடுத்துத் தந்துவிடும். அது சிலருக்கு ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற வரியாக, சிலருக்கு ‘அழகான தமிழீழம் நாளை வந்து சேரும்’ என்றதாக இருக்க முடியும். அது ஒரு விந்தைபோல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. பகல் நம்பிக்கைகொண்ட முகங்களையே காட்டியது. ஏனெனில் தம் மனங்களை முகங்களில் காட்டாத மனிதர்கள் பகலில் உலவிக்கொண்டிருந்தார்கள். கணவன் மனைவியோடு, மனைவி கணவனோடு, பிள்ளைகள் பெற்றோரோடு, பெற்றோர் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்ள விரும்பாத மனத்தின் கோலங்களாயிருந்தன அவை. அவநம்பிக்கைகளையும், பயங்களையும் உறவுகளுடன் எவ்வாறு பகிர்ந்துகொள்வது? அந்த வீட்டில் சுமையேறியிருந்தது பயமாகவும் நம்பிக்கையீனமாகவும். முன்கதவு திறந்திருந்தது. வாசலில் ஒரு பக்கம் கணவன் குணசீலனும், மறுபக்கத்தில் மனைவி ஆனந்தராணியும் அமர்ந்திருந்தனர். கால் நீட்டி அமர்ந்து மெல்லெனக் காய்ந்த நிலவொளியின் வெளியில் இருண்மையைக் கண்டுகொண்டிருந்தனர்.

அவர்களுக்குள் எண்ணங்கள் சுனைப்பெடுத்து இதயம் முழுக்க விரிந்துகொண்டிருந்தன.

பகிர்ந்தலின் சாத்தியமற்ற எண்ணங்களாய் இருந்தன அவை. உயிர் நெரித்த பயக்கெடுதி சொற்களாய்க் கிளம்பவிருந்த எண்ணங்களைத் தடுத்து தொண்டையின் வாசலில் நிற்கவைத்திருந்தது. மனிதர்கள் நீரிலும் உணவிலுமன்றி நம்பிக்கையிலேயே வாழ்தலைச் செய்துகொண்டிருந்த காலப் பகுதி அது. அதை உடைக்கும் ஒரு அபிப்பிராயம் அந்த வாழ்தலையே கேள்விக்குறி ஆக்கிவிடும். அவர்களது மௌனத்தின் காரணம் அதுவாக இருந்தது.

இருவருக்கும் இடையேயிருந்த வெளியில் இடைஞ்சல் படுத்தியபடி போய்வந்துகொண்டிருந்த பிள்ளைகள் படுத்துவிட்டிருந்தார்கள். அவர்கள் அவலங்களுக்குள்ளும், ஓடுதல்களுக்குள்ளும், குண்டு வெடிப்புகளுக்குள்ளும் பிறந்த பிள்ளைகள். அவர்கள் வெளியே வந்து வந்து போய்க்கொண்டிருந்தது எங்கேயாவது குண்டு வெடிக்கிறதா என்பதைப் பார்க்கத்தான்போலிருந்தது. அவர்களுக்கு அவை இல்லாததுதான் இயல்பு பிறழ்ந்த சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. விழுந்த குண்டு எல்லாவற்றையும் நொருக்கி இடித்துக்கொட்டுகிறபோது அவர்கள் திகைப்பார்கள், திடுக்கிடுவார்கள். பிறகு அவர்களுக்கு அது ஒரு விளையாட்டாகிவிடும். தாய் தந்தையரின் அவதிகூட அக்கணத்தில் அவர்களுக்குச் சிரிப்புவர வைத்ததுண்டு. ஆனால் பெரியவர்களுக்கு…? அவர்கள் சத்தங்களைக் கடந்து சேதங்களைப் பார்க்கத் தெரிந்தவர்கள். அவற்றிலிருந்து தொடரக்கூடிய உடல், மனம், மானம் ஆகிய எல்லா சேதங்களையும்கூட.

விளக்கு அணைத்தாகிவிட்டது. சாய்ந்த நிலவு அடித்த மெல்லிய வெளிச்சம் வாசல்வழியே கூடத்துக்குள் வந்து விழுந்தது. நடுநிசிக்கு மேலாகியிருக்கும் அந்தப் பொழுதில் எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. அது மரணத்தின் முன்மொழிவாய் இருக்கவேண்டியதில்லை. அது அதற்கான சுகங்களும், சுவைகளும், படுக்கையும் மறுக்கப்பட்ட துயரத்தின் ஒலி. கொஞ்ச நாட்களாக அவ்வாறுதான் ஊளையிட்டுக்கொண்டு இருக்கிறது. யாருடையதாகவும் இல்லாத நாய். அந்த அபலைத்தனமே அதனொரு தனித்த துயரம்தானே?
நாளையை அதன் சகல அவலங்களோடும் எதிர்கொள்ள இரவில் சிறிது உறக்கம் யாருக்கும் அவசியமானதாக இருந்தது. ஆனால் குணசீலனுக்கும் ஆனந்தராணிக்கும் அது இருந்த திசைகூடத் தெரியாதிருந்தது.

அவனுக்கு இன்னும் அந்தத் திகதி அச்சொட்டாய் ஞாபகமாக இருந்தது. அது தை 18, 2008. அன்றுதான் வன்னிக்கெதிரான யுத்தத்தை பிரகடனப் படுத்தினார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ. அதுகாலவரையிருந்த அவர்களது நிம்மதி, மகிழ்ச்சி, திருப்தியென யாவற்றையும் அது அடித்து நொருக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அவையிருந்த தடமும் அழிந்தது. இப்போது இனி அழிக்க எதுவுமில்லையென்று ஆகியிருக்கிறது. நம்பிக்கைமட்டுமாய் இருந்த நிலையும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. அதில் அவன் கவனம்கொண்டது தை 18இலிருந்து அன்றுவரையான அந்தக் காலத்தின் அளவு பதினொரு மாதங்களாகும். அத்தனை மாதங்களில் அங்கே எந்த நம்பிக்கையில் தங்கியிருந்தார்கள்?

மாரி துவங்குவதற்கு முன்பாகவே குணசீலனின் மைத்துனன் குடும்பத்தோடு கிளிநொச்சியைவிட்டு வன்னேரிக்கு ஓடினான். அவர்கள் ஓடுவதை குணசீலனும், ஆனந்தராணியும் மட்டுமே அறிந்திருந்தனர். வெகு ரகசியத்தில் அது செய்யப்பட்டிருந்தது. படுத்த பாய் எடுக்கவில்லை. உடுத்த துணிமணிகள் எடுக்கவில்லை. பானை சட்டி எடுக்கவில்லை. ஒற்றைப் பையோடு போயிருந்தனர். ‘ஆரும் கேட்டால் வன்னேரியில செத்தவீடு எண்டு சொல்லுவம்’ என்ற திட்டம் அவர்களுக்கு இருந்தது.

வன்னேரி எப்படி இருந்தது அப்போது? வன்னேரிக் குளம் பெருக்கெடுத்திருந்தது என்று ஒரு கதையிருந்தது. அதற்கு மாறாக, படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்க பெடியள் உடைத்துவிட்டார்கள் என்றும் ஒரு கதையிருந்தது. பெரும்பாலும் கதைகளே ஊசாடிக்கொண்டிருந்த காலம்தான் அது. நிஜங்கள் இனிமேலேதான் தெரியவேண்டியிருந்தன. அவற்றையும் அவரவரும் தத்தமது பார்வையின், அறிகையின் நிஜங்களாகவே சொல்லப்போகிறார்கள். அவ்வாறான பல நிஜங்கள் பல திசைகளிலும் உலவிக்கொண்டிருக்கும். இனி வரும் காலம் நிஜங்களைத் தேடுவதாகவே இருக்கப்போகிறதென குணசீலன் எண்ணினான்.
எப்படியாயினும் வன்னேரிக்குளம் வழியெங்கும் பெருக்கெடுத்த நிலமாயிருந்தும் படையினரின் சிறிது முன்னேற்றத்தையும் அது தடுத்திருக்கவில்லை. அவர்கள் அந்தத் தடைகள் தாண்டி தம் அடுத்த இலக்கை அடைந்தார்கள். வன்னேரி இனியும் வாழ்வதற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்குமா? குருவி கலைந்த கூடுபோல் இருக்கிற இடத்தைநோக்கி என்ன நம்பிக்கையில், எந்தத் துணிவில் அவர்கள் ஓடினார்கள்? நூறு நூறாய் மக்கள் செத்திருந்தார்கள் அங்கே. ஆனாலும் அவர்கள் அங்கேதான் ஓடினார்கள். அது அடிபட்டுவிட்ட பூமியாய் இருந்தது. அடிபடவிருந்த பூமியைவிட, அடிபட்ட பூமி பாதுகாப்பானதென அவர்கள் எண்ணியிருக்க மிகுந்த சாத்தியமுண்டு. ஆனாலும் அங்கிருந்து வவுனியா சேர்வதே அவர்களது அறுதியான குறியாகவிருந்தது.

அவர்கள் விக்னமேதுமின்றி அதுவரையில் வவுனியா போய்ச் சேர்ந்திருந்தால், அவர்களெடுத்தது நல்ல முடிவு.
அப்போதே குணசீலன் மனைவியைக் கேட்டிருந்தான், ‘நாங்களும் போயிடுவம், ஆனந்தி. இனி இஞ்சயிருந்து ஒண்டும் செய்யேலாது’ என. ஆனந்தி பார்த்துக்கொண்டே இருக்கத்தான் நிறையப் பேர் போயிருந்தார்கள். இன்னும் நிறையப் பேர் போறதற்கான முழு ஆயத்தத்தோடு இருந்தார்கள். தெரிந்த மனிதராய் அயலில் ஒருதர்கூட இல்லை, இந்த நிலையில் அங்கே இன்னும் இருக்கவேண்டுமாவென அவளாகவே யோசித்திருக்கலாம். ஆனால், குணசீலன் சொல்லித்தான் அவளுக்கு அதைத் தெரியவேண்டியிருந்தது. மன்னாரில் எல்லா முக்கியமான நகரங்களும் ராணுவத்திடம் வீழ்ந்துவிட்டதையும், பூநகரியும் அவர்கள் கையில் பறிபோய்விட்டதையும்கூட  விளக்கிவிட்டு அவளது முகத்தைப் பார்த்தபடியிருந்தான்.

அதையே யோசிப்பதுபோல் நீண்டநேரம் மௌனமாயிருந்தாள் அவள். பிறகு, ‘எங்க போறது?’ என்றாள், இடம் சரியாக இருந்தால் போயிடலாம் என்பதுபோல.

‘எங்கயெண்டான்ன வசதியான இடத்துக்கு. வவுனியா போவம்…’

‘அங்க புலியளைத் தவிர மற்ற எல்லா இயக்கமும் இருக்கு.’

‘இருக்கட்டுமன். நாங்கள் வடமராட்சியிலயிருந்து வந்து வன்னியில இருந்தமே தவிர வேற என்ன செய்தம்?’

‘அது சரிதான். ஆனா அந்த வழி பூட்டியிட்டுதெண்டு நீங்கள் கேள்விப்படேல்லயோ?’

‘வழி திறந்திருந்தோ எல்லா இடத்துக்கும் சனம் போய்ச் சேர்ந்தது? ஓடுற சனத்துக்கு போற இடமெல்லாம்தான் வழி. இருட்டு மடுவால இன்னும்தான் சனம் போய்கொண்டிருக்கு. இருந்து சாகிறதவிட ஓடிக்கொண்டு சாவம்.’

‘இந்தச் சாமானுகள என்ன செய்யிறது? கூடவே கொண்டு போறதெண்டாலும் ரண்டு லொறி வேணும்.’

‘முந்தியேயெண்டா கொண்டுபோயிருக்கலாம். இனி என்ன செய்யிறது? வீட்டுக்குள்ள வைச்சு பூட்டியிட்டுத்தான் போகவேணும்.’

‘திரும்பி வரேக்க வீடே இருக்குமோ தெரியாது.’

‘அப்ப என்ன செய்யிறது?’

‘கடைசிமட்டும் இருந்து பாப்பம். இயக்கம் எதாவது செய்யாம விடாது.’

அதுமட்டுமே அவளுடைய  காரணமாக இருந்ததா? அவள் அதைச் சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு ஊகம் இருந்தது.
கிளிநொச்சி ராணுவத்திடமிருந்து மீட்கப்பட்ட பின்னால் முதல் மீள்குடியேற்றவாசியாய் அங்கே ஓடிவந்தவள் ஆனந்தராணிதான். அப்போதே அவளுக்கு வியாபாரத்தின் சூட்சுமம் தெரிந்திருந்தது. தன் நகைகளை  விற்றுத்தான் அந்தச் சூதில் அவள் இறங்கினாள். யார் பின்னால் அதன் விசையாக இருந்தார்களென்று அவனுக்குத் தெரியாது. எல்லாம் ஒரு நேரமென்றுதான் சொல்லவேண்டும். அதில் அவளுக்கு சுளை சுளையாய் பணம் கொட்டியது. நூறுக்கு ஐம்பது வட்டி. அடைவுக்குத்தான் பணமும். ‘ஆரிட்டயும் தட்டிப் பறிக்கேல்ல… ஏமாத்தியும் எடுக்கேல்ல. பாக்கப்போனா நான் பறவாயில்லை. இஞ்ச அறா விலைக்கு நகையளை வாங்குறாங்கள். சனம் வயிறெரிஞ்செண்டாலும் குடுத்திட்டுத்தான் போகுது’ என்றே அவன் அதுபற்றி புறுபுறுக்கிறபோதெல்லாம் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவளிடம் ஐம்பது அறுபது பவுணளவுக்கான நிறைய அடைவு நகைகள் இருந்தன. கொண்டோடினால் துரோகமாகிவிடும். அவள் ஓடிய பின்னால் நகையை வைத்து பணம் வாங்கிய மனிதர்கள் வந்து அவளை எங்கே, எப்படி தேடுவார்கள்? அப்போது அவள் அடைவு நகைகளை கொண்டோடிவிட்டாளென நாளைக்கு ஒரு பெரும்பழி வந்துவிடாதா?

மேலும் நிலைமை இப்படியே தொடர்ந்தும் இருக்கப்போவதில்லை, யாழ்ப்பாணத்தில் 1995க்குப் பின் தலைகீழாய்த் திரும்பிய நிலைமையிலும் சனம் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறது? அதுபோல் ஏன் வன்னியில் நடக்கக்கூடாதென நினைத்தும் ஆனந்தராணி தயங்கிக்கொண்டிருக்கலாம்.

2006இல் மாவிலாறில் தொடங்கிய வீழ்ச்சி, சம்பூரென்றும் வாகரையென்றும் அம்பாறையென்றும் படிப்படியாக வீழ்ந்து, கிழக்கு மாகாணம் மொத்தமும் ராணுவ வசமானது. களமுனையில் நின்ற புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு தொப்பிகல காட்டுக்குள் ஓடினார்கள். இறுதியாக மன்னார் மாவட்டத்தையும் கைப்பற்றிய பின்னால் இன்று கிளிநொச்சியைச் சூழ ராணுவம் நின்றுகொண்டிருக்கிறது. நிறைந்த ஆயுதங்களையும், நிறைந்த படையணியையும் கொண்டிருக்கிறது அவர்களது சேனை. அப்போதும் புலிகள் சொல்கின்றார்கள், ‘ஆமி கிளிநொச்சிக்கு வரட்டும் பாப்பம். பெரிய பயங்கரம் அவைக்கு காத்திருக்கு. கிளிநொச்சி அவையின்ர மரணக் கிடங்கு ஆகப்போகுது’ என்று.

கிளிநொச்சியில் என்ன தந்திரமிருக்கிறது? என்ன பயங்கரமிருக்கிறது? யாருக்கும் தெரியாது.

இதற்கு என்னதான் விடிவு என்பதல்ல, இதற்கு முடிவு எவ்வாறு இருக்கப்போகிறது என்பதுதான் கேள்வியாக அப்போது அனைவர் மனத்திலும் இருந்திருந்தது.

மாரி தொடங்கியிருந்தாலும் இன்னும் மூச்சாக மழை பிடிக்கத் துவங்கவில்லை. ஆங்காங்கே சேறும் சகதியுமாக இருந்தது பூமி. மாரி முடிந்த பிறகே இனி யுத்தமென்றுதான் மக்கள் எல்லோரும் நினைத்திருந்தார்கள். அது நிறைந்த ஆசுவாசத்தை அவர்களுக்குத் தந்தது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அந்த மாரிக்குள் ராணுவம் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டிருக்கிறது. இனி…?
மழைக்கான தாழ்வு மேக மூட்டத்தில் பூமியில் ஒரே வெப்ப பிரவாகம்.

பொழுது விடிந்தது. மறுபடி அது பட்டது. இரவிலே அவர்கள் தனித்தனியாயிருந்து யோசித்தார்கள். பகலிலே ஏக்கத்தோடு அசைந்து திரிந்தார்கள். விடிகிற திருநகர் அதன் பிரஜைகளில் சிலபேரையாவது காணாமலிருந்தது. பக்கத்துப் பக்கத்து வீட்டுச் சனங்கள் சொல்லிக்கொண்டும் போகவில்லை.

குணசீலன் எல்லாம் கண்டுகொண்டு இருந்தான். ஆனந்தராணியும்.

யாரும் எதிர்பார்த்திருக்காத ஒருநாள் கனகாம்பிகைக் குளத்தில் திடீரென கிபீரின் நாலு குண்டுகள் விழுந்து வெடித்தன. எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை பேர் மிஞ்சினார்கள்? எத்தனை பேர் ஆஸ்பத்திரியில்? எத்தனை பேர் அதுவும் முடியாமல்? தெரியாது.
ஒருநாள் வெளியே போய்விட்டு வந்த குணசீலன், இருண்டு வந்து பிள்ளைகள் எல்லாம் படுத்ததும் ஆனந்தராணியை கைப்பிடியில் இழுத்துக்கொண்டு போய் மூன்று பிள்ளைகளையும் காட்டி, “பார், இதுகளை” என்றான்.

மூத்தது பெரியபிள்ளையாகிற வயது. மூடிக்கொண்டு படுத்திருந்தது. அப்போதும் நுளம்பு இருந்தது. ஒன்று காலை எறிந்துவிட்டு கிடந்தது. அதற்கு கீழே நிக்கர்கூட இருக்கவில்லை. பாவைப் பிள்ளையோடு விளையாடுகிற வயது. அடுத்தது பெடியன் சந்திரன். சாரத்தால் காலிலிருந்து தலைவரை இழுத்துப் போர்த்துக்கொண்டு. அவள் கொண்டிருக்கும் கெடுவினதும், நிலைமை மாறுமென அவள் வைத்திருக்கும் நம்பிக்கையினதும் பணயங்கள்.

“நல்லாய்ப் பாத்திட்டியா? இப்ப உன்ர முடிவைச் சொல்லு. நாங்கள் என்ன செய்யப்போறம்?”

சிறிதுநேரத்தில் கண்கலங்க நின்றிருந்த ஆனந்தராணி சொன்னாள். “வெளிக்கிடுவம்.”

“ட்றக்ரர் பிடிக்கேலுமோ ஏலாதோ தெரியா. காலமை பாக்கப்போறன். நாளைக்கு ராத்திரி ஏலுமோ, இல்லாட்டி நாளையிண்டைக்கோ தெரியா. ட்றக்ரர் கிடைச்சோடன சாமான் ஏத்துறம். ட்றக்ரர் கிடைக்காட்டி சாமானுகளைப் போட்டு பூட்டியிட்டு நாங்கள் வெளிக்கிடுறம்.”
குணசீலன் அப்போதுதான் ஆனந்தராணியின் கையை விட்டான். அதுவரை அவனுக்கு அது மறந்திருந்தது. அவளாகவும் அதை இழுத்திருக்க முடியாது. அன்று அவன் நிறைய வெற்றிலை போட்டிருந்தான்.

பிறகு மனம் தணிந்திருந்த ஒருபொழுதில் அருகிலேயிருந்த ஆனந்தராணியை கேட்டான். “கனகாம்பிகைக் குளத்தில இருக்கிற பெரியம்மா வீட்டில என்னமாதிரி?”

“அவை எங்களைமாதிரி சாமான் சக்கட்டையள் இல்லாத ஆக்கள். இத்தறுதியில அவை வெளிக்கிட்டிருப்பினம்.”

“ஒரு பெட்டை இயக்கத்திலயிருந்திட்டு வந்து இப்ப கலியாணம் முடிச்சிருக்கெல்லே?”

“அவள்தான் சங்கவி. ஒரு பிள்ளையும் இருக்கு. இயக்கத்தில இருந்தபடியா நிலமையை முந்தியே மட்டுக்கட்டியிருப்பினம். இப்ப அதுகள் பாதுகாப்பாய் எங்க இருக்குதுகளோ?”

‘ஊரும் சதமல்ல… உற்றார் சதமல்ல…’ ஏனோ ஞாபகமாயிற்று குணசீலனுக்கு.

அவ்வளவு அவலமும் ஏன் ஒரு அவசரத்தில் வந்து நின்றுகொண்டிருக்கிறது அவர்கள் முன்னால்? எப்படி அது நடந்தது? குணசீலன் எண்ணிப் பார்த்தான்.

தருமன் பகடையாடுகிறான். எதிரே சூதில் வலிய சகுனி. சகுனி கேட்கிற தானம் தருமனுக்கு விழவேயில்லை. ஒரு தரம்… இரண்டு தரம்… ஏன் அவ்வாறு ஆகிக்கொண்டிருக்கிறது? தருமனுக்கு அந்த பகடையாட்டத்திற்கு முன் தேர்வு இருந்தது. ஆனால் மறுபடியும் பகடையாடவே சகுனியை அழைத்தான். அப்போது முழுவதையும் அவன் இரண்டாம் தடவையாகவும் இழக்கப்போகிறான். பகடையில் அவன் வைத்த இச்சை அப்போது  பாண்டவர்களை… தன்னை… பாஞ்சாலியை… நாட்டை… நாட்டு மக்களை… எல்லாரையும், எல்லாவற்றையும் இழக்கச் செய்யப் போகிறது.

குணசீலனின் சொண்டுகள் சிவப்பாயிருந்தன. பற்களும் சிவந்துபோயிருந்தன. வெற்றிலைக்கு இட்ட புகையிலை அவனை ஏற்றிவிட்டிருக்கிறது வானத்தில். குணசீலன் பறந்தபடி சத்தமாக நினைத்தான். ‘தருமா, போடு தாயம்… தாயம் போடு. விழேல்லையோ? போச்சு… எல்லாம் போச்சு. உனக்கு தெரிவு இருந்திது, தருமா, அதை விட்டிட்டாய். இப்ப எல்லாரையும்… எல்லாத்தையும் இழக்கப்போகிறாய்.’

ஆனந்தராணி திரும்பி அவனைப் பார்த்தாள். அவனது பார்வை சுவரிலிருந்த கீதா வாசகத்தில் நிலைத்திருந்தது. சுவரிலிருந்த பெரிய பிறேம்போட்ட படத்தில் அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கீதோபதேசம் செய்கிற காட்சி. நெடுநெடுத்து நிற்கிற கிருஷ்ணன் முன்னால் வணங்கியபடி மண்டியிட்டிருக்கிறான் அர்ச்சுனன். வாசகம் பிறக்கிறது: ‘எது நடந்ததோ அது நன்றாக நடந்தது…!’  முக்காலங்களையும் உள்ளடக்கிய வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் துல்லியமாய்த் தெரிந்தன. பாரதப் போர் துவங்குவதற்கான மூல காரணத்தை அவனது மனக் கண் அதில் கண்டிருக்குமென எண்ணினாள் ஆனந்தராணி. கலையேறிய இரவுகளில் அவன் அப்படித்தான் எதையாவது சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

‘போதும், பேசாம இருங்கோப்பா.’ பல வேளைகளில் அவள் அவனை அதட்டியிருக்கிறாள். அப்போது பேசாமலிருந்தாள், அவனது சொற்களை தானும்  நினைத்தபடி.

[ தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.