2009 -8

ராணுவம் அடுத்த முன்னகர்வுக்கு வழக்கமாக எடுக்கும் ஓய்வை அந்தமுறை எடுக்கவில்லைப்போல் தெரிந்தது. எரி குண்டுகளும், ஷெல்களும் விழுந்து சிதறின. அங்கே நிறையப் போராளிகளும் கூடியிருந்தனர். ஒரு யுத்தத்திற்கான முன்னாயத்தங்கள் தெரிந்தன. அது அவ்வாறுதான் இருக்கும். புலிகள் இயக்கத்து தலைமையின் மையம் அது. போராளிகளின் பிரசன்னம் பாதுகாப்புக்கான அம்சமாக ஒரு காலத்தில் இருந்ததுதான். அப்போது இல்லை. அதன் அர்த்தம் போராளிகள் நிறைய இருக்கிறவரையில் புதுக்குடியிருப்பு இனி பாதுகாப்பில்லை என்பதுதான். முருகமூர்த்தி உஷாரானான். “பையை எடு, ஜோதி” என்றான்.

ஜோதி சாமன்களை அடுக்கிக் கட்டினாள். அவன் தறப்பாளை கழற்றி மடித்தான். ஆயிற்று. மூவரினதும் பயணம் மேலே தொடங்கியது. அது இரணைப்பாலையை நோக்கியதாய் இருந்தது.

நாகியும் குடும்பமும்கூட பின்னால் போய்க்கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாகத்தான்.

பொக்கணையும் இரணைப்பாலையும் பிதுங்கி மக்களால் வழிந்துகொண்டிருந்தது. ஊடறுத்துத்தான் செல்லவேண்டி இருந்தது. முந்திவிட எடுக்கிற மூர்க்கம் உயிரச்சத்தின் விளைவெனினும், அது ஒரு சமயத்தில் சகிக்கமுடியாது இருந்தது.

எப்படியோ தறப்பாளைக் குத்தி குந்தியிருக்க இடமொன்றுக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இரணைப்பாலையில் இன்னும் காய்கறிகளும், மற்றும் சமையல் சாமான்களும் வாங்கக்கூடியதாக இருந்தது. முருகமூர்த்தி போய் சமையலுக்கு சில காய்கறி வாங்கிவந்தான்.
அன்றைய பொழுது கழிந்தது.

ஒரு மாதமளவான காலத்தை அங்கே கழித்தார்கள். பணமிருந்தால் அங்கேயே சில நாட்கள் இன்னும் இருந்துவிடலாமென சிலபேருக்குப் பட்டது. முருகமூர்த்தியிடம் ஆபத்து அந்தரத்துக்கென்று கொஞ்சப் பணம் இருந்தது. அதை கடைசிவரை அவன் இறுக்கமாய் வைத்திருந்தே ஆகவேண்டும்.

முல்லைத்தீவுக்கு வடமேற்கே அமைந்திருந்த பாதுகாப்பு வலயத்துக்கு போய்விடலாமென சிலர் பேசிக்கொண்டார்கள். முருகமூர்த்திக்கும் அதுவே எண்ணமாக இருந்தது.

ராணுவம் மேலும் முன்னேறி வந்தது. ஒருபோது அறுபது கிமீ சுற்றளவுக்குள் சுருங்கிய நிலத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 53ஆம், 55ஆம், 58ஆம், 59ஆம் ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்த 50000 ராணுவத்தினர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்திருந்தனர்.

சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறுபடி பெயரத் தொடங்கினர். அவர்களது இலக்கு அப்போது முள்ளிவாய்க்காலாக இருந்தது. வடமராட்சி தென்மராட்சிகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களில் பலருக்கு இடம்கூட சரியாகத் தெரியவில்லை. அவர்களும் தறப்பாளை மடித்துக் கட்டிக்கொண்டு அத்திசையில் முன்னேறினர்.

தறப்பாளும், சாப்பாடும் முடிந்தளவு கொடுத்துக்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அவ்வப்போது ஆங்காங்கே தென்பட்டனர். அவர்களும் அந்தளவுக்கு மேல் எதையும் செய்யமுடியாத நிர்க்கதியில் இருந்திருந்தனர். இனி சகலமானதும் தங்கள் சுயமுயற்சியிலேயே செய்யவேண்டியவர்களாய் இருந்தமை இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கும் தெரிந்திருந்தது.

சைக்கிளொன்று இருந்திருந்தால் எவ்வளவு சுகமாக இருந்திருக்குமென ஜோதி அப்போது எண்ணினாள். முருகமூர்த்தியாலும், ஜோதியாலும்கூட கொஞ்சம் நடக்க முடியுமாயிருந்தது. விசாகன்தான் களைத்துப் போனான். உடல்நலக் குறைவாகவும் இருந்தான்.
தனபாலனை எண்ணியபடி நடந்துகொண்டிருந்தாள் தயாநிதி. கணநாதனை எண்ணியபடி நாகி. பிரியனைப்போல ஒருவனைக் கண்டதை நினைத்து கொதித்தபடி கலாவதி சென்றுகொண்டிருந்தாள்.

சனங்கள் கதைத்தார்கள், பிரபாகரன், பொட்டம்மான், சூசை, பானு ஆகியோர் அங்கேயே இருப்பதாக. அப்படியானால் ஒரு பயங்கரமான யுத்தம் வெடிப்பது தவிர்க்கமுடியாதபடி அங்கே நிகழும்.

திடீரென வழியெங்கும் ஒரு குழப்பமேற்பட்டது. குண்டுகள் வெடித்துச் சிதறின. கல்லுக்குத் தப்பி ஓடுவதுமாதிரி குண்டுக்குத் தப்பி ஓடிவிட முடியாது. ஓரமாக விதி விட்டுக்கொடுக்கும்வரை நடந்துகொண்டு இருக்கவேண்டியதுதான்.

அவர்கள் சென்ற பாதைக்கருகே யுத்தம் மிதித்துச் சென்ற வீதியில் ஆறு உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன. நாகி தாமதித்தாள். எங்கேயும் தன் மகனைத் தேடிப் பார்த்துக்கொண்டிருக்கிறவள் அவள். அதில் தனது மகன் இருக்கக்கூடாதென அவளது மனம் பிரார்த்தித்தது. ஆனால் பார்த்தால்மட்டுமே எதையும் உறுதிசெய்யக் கூடியதாயும் இருந்தது.

நால்வரின் உடம்பில் ஜீவனிருக்கவில்லை. ஐந்தாவது உடம்பு கிடந்து அசைந்தது. காலிலே ஒரு வரிந்த துணிக்கப்பால் துணிக்கப்பட்டிருந்தது அந்தப் போராளியின் கால். இரத்தம் சொட்டிக்கொண்டு இருந்தது. இன்னொரு போராளியினருகே இரண்டு போராளிகள் அவனை நிறுத்திவைத்திருக்க வசதியான முண்டுக்கு ஏதாவது தேடியபடி இருந்தனர்.

“அண்ணையைக் கண்டன்… அண்ணர் தலைமை தாங்கிப் போறார்… நான் கண்டன்…”

அத்தனை ஆயிரம் குரல்கள் பினைந்தெழுந்துகொண்டிருந்த இடத்தில் அந்தக் குரலை துல்லியமாய் இனங்கண்டாள் நாகி. “கணா…! கணா…!”
அவளது குரல் எங்கும் ஒலித்தது.

“அம்மா…!”

குரல்வழியில் ஓடினாள் நாகி.

அங்கே அவளது பாலன் வீழ்ந்து கிடந்திருந்தான். அவனுக்காக தைக்காத ஆரோவின் சீருடையொன்றுள் இருந்த அவனிலிருந்து பச்சை இரத்தம் ஒழுகி நிலத்தை நனைத்துக்கொண்டு இருந்தது.

கணநாதன் அம்மாவைப் பார்க்கிறான். சிரிக்க முயல்கிறான். “அண்ணை தலைமை தாங்கி அடிக்கிறாரம்மா. விதுஷாக்காவும் நிக்கிறா. இந்திய ஆமியை ஓடஓட அடிக்கினமம்மா.”

அப்படி ஆவேசம் வருவது, இறுதி மூச்சுக்கு முன்னமான ஒரு கணம். அவனது பார்வையில் அந்தத் தகவல் இருந்தது.

நாகி அலறியபடி ஓடிச்சென்று அவனது தலையை தாங்கினாள்.

“தூக்காதயுங்கோ, அம்மா. கழுத்திலைதான் காயம் பட்டிருக்கு.”

“ஐயோ… எதாவது செய்யுங்கோவன்… எங்க கொண்டோட... ஒண்டும் செய்ய முடியேல்லயே...” தலையிலிருந்து தாங்கிய கைகளின்வழி ரத்தம் ஒழுகிக்கொண்டிருக்க நாகி குழறினாள்.

“இனி அவருக்கு ஒண்டும் தேவையில்லையம்மா.” அருகிலிருந்த போராளிப் பெண் சொல்லிக்கொண்டு எழுந்தாள்.
நாகிக்கு நிலைமை தெரிந்தது. அவள் கதறினாள். “ஐயோ... எல்லாம் போச்சே... எத்தினை நேர்த்திவைச்சன்... எல்லாம் போச்சே...!”
அவளது பிரலாபம் மெல்ல மெல்ல அடங்கிக்கொண்டிருந்தது.

கலாவதியும், தயாநிதியும் அழுதனர். ஒருவகையில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுபோல் இருவரின் முகங்களிலும் ஒரு இறுக்கம் மெல்ல வந்து விழுந்து கிடந்தது.

உடல்களை எரிக்க வசதியான இடத்தில் எரித்தும், அது இல்லாத இடத்தில் தாழ்த்தும்கொண்டு வந்த போராளிப் பெண்கள் குழுவொன்று காலிழந்து கிடந்த போராளியை ஓரமாக விட்டுவிட்டு மற்றவர்களை கிடங்குவெட்டி தாழ்த்தது.

எல்லோருமே சின்னப் பிள்ளைகள். பதினைந்து பதினாறுக்கு மேல் வயதில்லை. அறிவுச் சோலையிலும், செஞ்சோலையிலுமிருந்து பிடித்தனுப்பிய பிள்ளைகளாயிருக்கும்! கணநாதனுக்கு பதினாறுதான். அவர்கள் துவக்குகளோடு நின்றபொழுது எதிரிகள் துப்பாக்கிகளை மட்டும்தானே பார்த்திருப்பார்கள்? துப்பாக்கிகள் அவர்களது சின்ன உடல்களை மறைக்கக்கூடிய அவ்வளவு சிறுவர்களாய் இருந்தார்கள்.
நாகியைத் தெளிவித்து எழச் செய்தாள் தயாநிதி.

எத்தனையோ துன்பங்களுக்குள் அது ஒரு துயரம். துயரம் சுமந்தவர்கள் அத் துயரினையும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தனர். எல்லாவகைத் துன்பங்களினதும் சங்கமமாயிருந்தது அப்பெருவெளி.

அவளுக்கு அந்தச் சோகத்துக்கிடையிலும் தூண்டிலில் கட்டிய கிடப்புக் கட்டைபோல் கேள்வியொன்று தனித்துக் கிடந்தது. ‘இந்திய ஆமியெண்டு எதோ சொன்னானே…!’

கலாவதியிடம் மெல்லக் கேட்டாள்.

“அவன் தெரியாமச் சொன்னானோ, என்னமோ?” என்றாள் அவள்.

“ஶ்ரீலங்கா ஆமியையும் இந்திய ஆமியையும் தெரியாமலிருக்காது கணாவுக்கு. அவன் சொன்னதில எதோ இருக்கடி.”
மேலே நடந்துகொண்டிருந்தனர். கால்வாய்கள், வாய்க்கால்கள், கானாறுகள் எல்லாம் கடந்து அந்த மகாபயணம் தொடர்ந்துகொண்டிருந்தது.
திடீரென தொடர்ந்தும் நடக்கமுடியாதபடி இறுகி வந்தது ஜனக்கூட்டம்.

என்ன… ஏன்… என்னவாம்...?

கேள்விகளுக்கு பதில் கிடைக்காதிருந்தது.

‘பிளைற்றில அடிக்கிறான்… நச்சுக் குண்டு விழுகுது… சனமெல்லாம் எரிஞ்சு சாகுதுகள்… ‘

அது விழுந்த இடத்தில் வெடித்து தீயாய்ப் பொங்கியெழும். பொப்பென ஒரு சத்தத்தோடு கொளுந்து அணைய, சுற்றியுள்ள இடமெல்லாத்தையும் வலித்து உறுஞ்சியதுபோல சூழலில் வெறுமையை விரிக்கும். காற்றும் அற்ற வெறுமையுள் கசியும் விஷ வாயுவில் மூச்சுத் திணறும். மூச்சைவிட்ட மூக்கு அடுத்த மூச்சை இறுதி மூச்சாய் விடும். அந்த வாயு பட்ட இடமெல்லாம் பொசுங்கிப்போகும். சுட்ட இடமும், சூழவும் சாம்பலும் நீலமும் பாரித்து கரியும். தசையுருகி நிணமாய் வழியும். இறுதியில் உடல் ஒரு அசிங்கமாய் எஞ்சும்.

அருகிலே நின்றிருந்த போராளிப் பெண் சொன்னாள்: “அதுதான் ரசாயனக் குண்டு. இந்தியா குடுத்திருக்கு. கொத்துக் கொத்தாய் விழுந்து சாகவேண்டியதுதான் இனி.”

“நிலா… அதெல்லாம் மக்களுக்குச் சொன்னா பயப்பிடுவினம்.”

“மக்களுக்குச் சொல்லவேணும், ராதாக்கா. அதை எதிர்கொள்ளுற ஆக்கள் அவைதான? சொல்லாமல் சொல்லாமல் எல்லாத்தையும் ரகசியமாய் நாங்கள் இனியெண்டான்ன வைக்காம விடுவம்.”

நிலா சற்று கோபத்தோடும்தான் சொன்னதுபோல இருந்தது.

அவர்களுக்கு எறிகணை தெரியும், கொத்துக் குண்டு கிளாஸ்ரர் குண்டுகள் தெரியும், ஷெல்லடி தெரியும், மிதிவெடி, கிளைமோர் எல்லாம் தெரியும். இது ரசாயனக் குண்டு. தசையை உருக்கி மூச்சைத் திணறவைத்துக் கொல்கிற விஷ வாயுக் குண்டு.
“இது இப்ப பாவனையில இல்லை. யுத்தத்தில இதைப் பாவிக்கக்குடாதெண்டு தடையிருக்கு. நம்ம அண்டைநாட்டாரிட்ட இது கனக்க இருக்கு.”

நிலா மேலும் சொன்னாள்.

மேலும் குண்டுகள் விழவில்லையென்றதும் ஜனங்கள் முன்னேறினர். அப்போது நாகி கண்டாள், ஒரு வரிசையில் சாம்பல் பூத்த மேனியராய் இருபத்தைந்து முப்பது உடல்கள் வளர்த்தப்பட்டிருப்பதை.

அவர்கள் ரசாயனக் குண்டு வெடிப்பில் பலியானவர்கள்.

கரையாம் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால் முழுவதும் நிற்க இடமற்ற நெரிசல்.

மறுபடி குண்டுகள் விழுந்து வெடித்தன. சனங்கள் சிதறுப்பட்டு நீருக்குள் விழுந்து ஓடினர். அவ்வெளியின் கிழக்கில் இந்து சமுத்திரம் இருந்தது. மேற்கே நந்திக் கடல். அவர்களுக்கு எச்சமாய் இருந்த அந்த ஒரேயொரு பாதையின் வழியில் அம் மரண யாத்திரை இருந்தது. சோர்ந்து, களைத்து, பாதி உயிரோடு அவர்கள் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த எல்லை வந்தது.

வெளியேறும் வாசல் வட்டுவாகலிலும் பூட்டியிருந்தது. கம்பி வேலியைச் சுற்றி இலங்கை ராணுவம் நின்றுகொண்டிருந்தது. தண்ணீரும், உணவுப் பொட்டமும் கொடுத்தார்கள். அதற்கும் முண்டியடிப்புத்தான். பலர் எழும்பவும் இயலாமல் காயம்பட்டு. இன்னும் பலர் வதங்கிப்போய்க் கிடந்தனர். பொக்கணை, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு இறுதியாக மாத்தளனும் ராணுவத்திடம் வீழ்ந்தது கேட்டு பலர் அழுதுகொண்டிருந்தார்கள். தம் போராளிப் பிள்ளைகள்… தமது இனி… என்ற எந்த எண்ணமுமற்று நினைவின் இருள்வெளியில் ஸ்தம்பிதமடைந்து பலர்.

கண்கொண்ட திசையெங்கும் மக்களாயிருந்தனர். வன்னியே அங்கு திரண்டிருந்தது. அது ஒருவகையில் துயரத்தின் திரட்சியும்.
மாலையாகி இருள் செறிந்து வந்தது.

தமிழ்ப் புதுவருஷம் ‘விரோதி’ பிறந்து ஒரு மாதத்துக்கு சற்று மேலேயான அந்த நாள் மே 18, 2009.

[ தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com