மகாத்மா காந்தியின் மனைவியான அன்னை கஸ்தூரிபா மீது மிகுந்த மதிப்பினை வைத்திருந்தவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. அவர் தனது இருபதாவது வயதில் ஈழகேசரியில் ( 26-3-1944 பதிப்பில்) எழுதிய 'அன்னையார் பிரிவு! 'என்னும் கவிதையிது. கவீந்திரன் - என்னும் புனைபெயரில் எழுதிய கவிதை. இதன் முழு வடிவத்தையும் அண்மையில் ஈழகேசரியில் கண்டோம். - பதிவுகள் -

கவிதை: அன்னையார் பிரிவு! - கவீந்திரன் -

ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!

பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப்
பண்புடைய பிதாவென்றும் அம்மை யாரைச்
சீருதவும் செவ்வியளாம் மாதா வென்றுஞ்
சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று
நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை
தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்
பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து
பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்!

மாரியினிலே பெருமழைதான் கொட்டு கின்ற
காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த
பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின்
பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தி யாரின்
சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க
கஸ்த்தூரி யன்னாய்! எம் கருத்தே! கண்ணே!
பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்; இ·தோ
பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்லோ?

சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றுச்
சிறப்புள்ள நளாயினி என்போ ரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னி யர்கள்
கடுகேனும் உண்மையங்கே இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டி னாய்! நல்
மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய்
உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?

எண்ணற்ற பாரதராம் உனது மக்கள்
எழிற்தாயர் உன்போல் இல்லை யம்மா!
மண்ணுற்ற பேர்களிலே மகாத்மா வுன்றன்
மணவாளன்! உன்போல் மனைவி யில்லை!
மண்ணுற்றார் யாவரே அறியா ரிஃதை?
மற்றந்தக் காலன்தான் அறிகி லானோ?
கண்ணற்றான் குருட்டம்புக் காளாய் விட்டாய்
கஸ்தூரி அம்மைநாம் என்ன செய்வோம்?

வெஞ்சிறையில் போட்டடைத்தார் அந்தோ அன்னார்
வெறுஞ்செயலால் யாதுபயன் கண்டாய்? நீயோ
வெஞ்சிறையில் விடுபட்டு விண்க லந்தாய்!
வீராங்கணை யுன்போல் யாரு முண்டோ?
நெஞ்சினிலே பொங்கியெழும் துன்பந் தீர
நெடுமூச்சின் துணையல்லால் நமக்கொன் றில்லை
எஞ்சலிலா அரிவையர்கள் தலைவி! அன்பின்
எம்மன்னாய்! ஏற்பாய்எங் கண்ணின் வெள்ளம்.

ஈழகேசரி 26-3-1944