'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக இதனைக் கருதலாம்.  1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43. அ.ந.க.வின் இக்கட்டுரை அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -


 வில்லூன்றி மயானம்! - அ.ந.கந்தசாமி -

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சாதிப்பேயின் கோரதாணடவம். கொடிகாமத்தில், அச்சுவேலியில் , சங்கானையில் இரத்த களரி - இவற்றை எல்லாம் கேட்கும்போது நாம் வாழ்வது இருபதாம் நூற்றாண்டா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? மனிதனை மனிதனாக மதிக்காத சமுதாயத்தின் அநியாயச் சட்டங்களை அடியோடு தகர்த்தெறிய வேண்டும் என்று துடி துடிக்காத முற்போக்குவாதி யார்? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று வாயளவில் பேசிக்கொண்டு தீண்டாமைப்பேயை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இன்னும் வாலாயம் செய்து வரும் சாதி வெறியர்களை என்னவென்பது? சாதிப்பேயின் வெறியாட்டம் சங்கானையில் ஐம்பது வயதுக்கார்த்திகேசுவின் உயிரைக் குடித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சாதி ஒழிப்புப் போரில் இந்தக் கார்த்திகேசு இரண்டாவது நரபலி. முதலாவது நரபலி 1944ம் ஆண்டு செப்டம்பர் 26ந் தேதியன்று வில்லூன்றிச் சுடலையில் மாலை ஆறு, எழ்ழு மணியளவில் முகிலுக்குப் பின்னே மறைந்தும் வெளிவந்தும் கொண்டிருந்த சந்திரன் சாட்சியாக அளிக்கப்பட்டது. 'டுமீல்' என்று ஒரு துப்பாக்கி வேட்டு. இலங்கை முழுவதும் அதனால் அதிர்ச்சி! யாழ்ப்பாணம் ஆரியகுளத்து முதலி சின்னத்தம்பி தியாகியானான்.

முருகன் மனைவி வள்ளிப்பிள்ளை - அவளே இதற்கெல்லாம் காரணம். அவள் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான முடிக்குரிய காணியில் எரிப்பதற்கு எடுத்துச் சென்ற சிறு கூட்டத்தில் ஒருவன் தான் இந்த முதலி சின்னத்தம்பி. கலகம் வரலாம் என்பது அவனுக்குத் தெரியாததல்ல. ஆனால் கலகத்துக்குப் பயந்து உரிமைப் போரை எவ்வளவு காலத்துக்குத்தான் தள்ளிப்போடுவது? உலகமெல்லாம் சமத்துவப் பறை பேரொலியுடன் கொட்டிக்கொண்டிருந்த அவ்வேளையிலே யாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் விழித்துக்கொண்டனர். அதுவே ஈழத்துச் சிறுபான்மைத் தமிழரின் முதலாவது விழிப்பு. 'கலகம் வந்தால் நியாயம் பிறக்கும். பார்ப்போம்' என்ற எண்ணத்துடன் உயிரைப் பணயமாக வைத்து வில்லூன்றி மயானபூமிக்குச் சவத்தைக் காவிச் சென்றது அச்சிறு கூட்டம். அதன் பயன் - ? எதிர்பார்த்தது நடந்தது. உண்மையில் மயானபூமி சாவின் பூமியேதான். வள்ளிப்பிள்ளையின் பக்கத்தில் இன்னோர் பிரேதம். முதலி சின்னத்தம்பியின் பிரேதம் விழுந்தது. எனினும் சாவின் பூமியில்தான் புரட்சி பூத்தது. வில்லூன்றிச் சுடலையில் தான் யாழ்ப்பாணத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் பிறந்தது. இச்சம்பவம் நடந்து இப்பொழுது இருபத்துமூன்று ஆண்டுகளாகிவிட்டன. இருந்தாலும் அன்று அந்நிகழ்ச்சி ஏற்படுத்திய பரபரப்பு என்றும் எனக்கு நல்ல நினைவிருக்கிறது. எனக்கு அப்பொழுது வயது இருபது.

'பார்ப்பாரை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரைஎன்ற காலமும் போச்சே'

என்ற பாரதியின் பாட்டை என் வாலிப உள்ளம் முழுமூச்சோடு பாடிக்கொண்டிருந்த காலம் அது.

'இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே'

என்ற பாரதிதாசனின் கவிதை என் நெஞ்சை ஆவேசத்தோடு ஊடுருவி நின்ற காலமது.

'பார்ப்பார்கள் தோள் சுமந்து
பாணரை முன் திருக்கோவில்
சேர்த்தார்கள் என்ற கதை
தெரியாதோர் உண்டோ? ஐயா!'

என்ற தேசிகவிநாயகனின் தீண்டாமை ஒழிப்புப் பாடல் செவி நிறைந்து நின்ற காலமது.

சாதிக்கொள்கையை நையாண்டி செய்து நவாலிச் சோமசுந்தரனார் பாடிய 'ஏறாத மேட்டுக்கு இரண்டு துலை இட்டிறைக்கும் பேறான கதை'யைப் பலருக்கும் நான் பாடிக்காட்டி வந்த காலமது.

இப்படிப்பட்ட உணர்ச்சி பொங்கும் என் மனதிலே வில்லூன்றிக் கொடுமை ஒரு பெரும் புயலையே கிழப்பி விட்டது. அப்புயலைக் கவிதை ஆக்கினேன். 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன் தினசரியில் வெளிவந்த அக்கவிதை பின்வருமாறு -

"நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது.

மக்கள்குல மன்றோநாம் மரமோ கீழாம்
மாடுகளோ விலங்குகளோ கூறும என்று
திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்
தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு
மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி
மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்
திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்
சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.

கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.
கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?
பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்
பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்
வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்
வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்
கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்
கொள்கைக்கிங் காதரவு, நல்குவோம் நாம்.

பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்
பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான
பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்
சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்
சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்
சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்
சிரங்கொய்தே புதைத்திடுவோம் வாரீர் வாரீர்."

இருபத்துமூன்று ஆண்டுகளின் பின்னே வயதால் வாடிப் பழுப்பாகி விட்ட 'தினகர'னின் பழைய பிரதியிலே இச்செய்யுட்களை வாசிக்கும்போது எனக்கேற்படும் எண்ணங்கள் பல. வில்லூன்றி நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. இருந்தும் அன்று என்னைத்தவிர வேறு எந்த எழுத்தாளனுமே அதைத் தன் எழுத்துக்குரிய பொருளாகக் கையாளவில்லை. யானோ அன்றே அந்நிகழ்ச்சியில் இன்றைய கொடிகாமத்தையும் , அச்சுவேலியையும் , சங்கானையையும் கண்டு விட்டேன். அன்று அந்நிகழ்ச்சி இருள் படிந்த ஓர் இடுகாட்டின் ஒரு மூலையில் நடைபெற்ற சிறு சம்பவம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் வில்லூன்றித் தீப்பொறி நாளடைவில் ஒரு பேரியக்கமாக எரிய ஆரம்பிக்கும் என்று அஒபோதே நான் நம்பினேன். அது வீண்போகவில்லை. வில்லூன்றியால் ஏற்பட்ட விழிப்பே - மரணத்தில் கூட எமக்குச் சமத்துவம் இல்லை என்ற அந்த எண்ணமே - நாளடைவில் யாழ்ப்பாணத்துச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அதனால் ஏற்பட்ட உரிமை உணர்வே இன்று புரட்சியாக யாழ்ப்பாணக்ல் குடாநாட்டின் பல பகுதிகளிலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

'வில்லூன்றி தன்னில் நாம் கண்ட தீ வெறும் தீயன்று' என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கவிதைத்தேவி என் நாவிலேறி முழங்கினாள். வில்லூன்றிச் சம்பவம் 'வரப்போகும் நவயுகத்தின் வளக்காலை இளம் பருதி வரவுணர்த்தும் கோழியது சிலம்பம்' என்று கூவினாள். 'வில்லூன்றித் திருத்தலத்தைச் சிரம் தாழ்த்தி வணங்குவோம், புனித பூமி' என்று புரட்சியின் மண்ணுக்கு அஞ்சலி செலுத்தினாள்.

அநீநிக்கு எதிராக நடக்கும் போரிலே, இருபத்துமூன்று வருடங்களின் முன்னே என் இருபதாவது வயதிலே நான் இரண்டற ஒட்டிக்கொண்டேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அவ்வாறு ஒட்டியதனாற்போலும் பலர் என்னை முற்போக்கு எழுத்தாளன் என்று அழைக்கிறார்கள். ஆனால் எனது மகிழ்ச்சி, அந்தோ, வில்லூன்றியில் தொடங்கிய அப்போர் இன்னும் வெற்றியில் முடியவில்லையே என்பதை நினைத்ததும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. இருள் நீங்குவதெப்போ. விடிவதெப்போ என்று சங்கானையிலும் கொடிகாமத்திலும் அச்சுவேலியிலும் ஏங்கும் நெஞ்சுகளுடன் சேர்ந்து என் நெஞ்சும் ஏங்குகிறது.

பலர் வில்லூன்றிச் சம்பவத்தை இன்று மறந்து விட்டார்கள். ஆனால் வில்லூன்றியின் விழிப்பு வீரசரிதை எழுதிச் செல்லுகிறது. தியாகி முதலி சின்னத்தம்பியின் பெயரைக்கூட பலர் நினைவு கூருவதில்லை. இருந்தாலும் சங்கானைத் தியாகி கார்த்திகேசு தோன்றுவதற்கு அவனே காரணம்.

உயிர் விட்டவர்களின் மரணந்தால் நாம் பயனடைய வேண்டும். சமத்துவப் போரை எல்லாத் துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தீண்டாமைப்பேயை நாட்டை விட்டு முற்றாக ஓட்டும்வரை எமக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை என்று தீர்மானிக்க வேண்டும். பேச்சால், செயலால், எழுத்தால் அதற்கு ஆதரவு நல்க வேண்டும்.

தீண்டாமைப் பேய் அறிவீரோ - அதன்
சேட்டைகள் முற்றூம் தெரிந்திடுவீரோ?

கூடியிருக்க வொட்டாது - நண்பர்
கொண்டு வருவதை உண்ண வொட்டாது.
வாவிக் கரையிலும் நிற்கும் - அங்கு
வந்த மனிதரை ஓட்டித் துரத்தும்.

பொல்லாத பேயிதை நம்பி - இன்னும்
பொங்கலிட் டாடுதல் புத்தியோ? - ஐயா!
நல்லாக வேண்டுமேயானால் - இதை
நாட்டை விட் டோட்டித் துரத்துவோம், ஐயா!

                       - கவிமணி தேசிக விநாயகன் -

நன்றி: 15.10.1967 மல்லிகை சஞ்சிகை.