வாசிப்பும் யோசிப்பும்!'பதிவுக'ளில் வெளியாகியுள்ள எழுத்தாளர் தேவகாந்தனின் 'புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு' கட்டுரை பற்றிய எனது கருத்துகள் சிலவற்றைக் குறிப்பிடுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட தனது கட்டுரையினைப் 'பதிவுகள்' இதழுக்கு அனுப்பியது பற்றிக் குறிப்பிடும்போது தேவகாந்தன் 'இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். 'மேலும் விரிவான தேடல்களுக்கும், பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் இக்கட்டுரையினை அவர் வெளியிட விரும்பினார். அதற்கொப்பவே இக்கட்டுரை பற்றி மேலும் சில கருத்துகளை எனது இக்கட்டுரை கூறும்.

புலம்பெயர் இலக்கியமும், புகலிட இலக்கியமும்..

புலம்பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் பற்றி எழுத, ஆய்வு செய்ய விழையும் பலர் தவறினைத்தான் தேவகாந்தனும் இங்கு செய்திருக்கின்றார். உண்மையில் புகலிட இலக்கியமென்பது புலம்பெயர் இலக்கியத்தினோர் பிரிவு. இது பற்றி முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் , படைப்பும்' நூல் பற்றிய எனது நூலறிமுகக் கட்டுரையில் ('பதிவுகள்' இதழில் நவம்பர் 14, 20111 அன்று வெளிவந்த கட்டுரை) குறிப்பிட்டுள்ள குறிப்புகளை மீண்டுமொருமுறை குறிப்பிட விரும்புகின்றேன். அது கீழே:

'உண்மையில் புகலிட இலக்கியத்தை புலம்பெயர் இலக்கியத்தினோர் சிறப்பான அம்சங்களைக் கொண்ட பிரிவாகவே நான் கருதுகின்றேன். சொந்த மண்ணில் இருப்பே கேள்விகுறியானதொரு சூழலில், பல்வேறு அடக்குமுறைகளுக்குள்ளாகிப் புகலிடம் நாடிப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் இலக்கியமே புகலிட இலக்கியமாகின்றதென்பதென் கருத்து. அத்துடன் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு காரணமாகப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் இலக்கியத்திற்கும், புகலிடம் நாடிப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் மக்கள் படைக்கும் இலக்கியத்திற்குமிடையில் வேறுபாடுகள் பல உள்ளன. ....... இத்தகையதொரு பின்னணியில்தான் நான் புகலிட இலக்கியத்தையும், புலம்பெயர் இலக்கியத்தையும் அணுகுகின்றேன். அதனால்தான் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியமென்பதில் எந்தவிதத் தவறுமில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அதனை விபரிக்கும்போது அவ்விலக்கியத்தின் முக்கியமானதோர் அம்சமாக புகலிடம் நாடிய அவர்களின் நிலைப்பாடு புலப்படுத்தும் உணர்வுகள் இருக்குமென்பதை எடுத்துரைக்கலாம்.'

எனவே நாட்டு அரசியல் நிலைமை காரணமாக, அகதிகளாகப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தைப் புகலிட இலக்கியமென்று கருதலாம். அதே சமயம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், பிற நாட்டுத் தமிழர்கள் அனைவரும் படைக்கும் இலக்கியத்தை புலம்பெயர் தமிழ் இலக்கியமென்று குறிப்பிடலாம். புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைக்கும் புகலிட இலக்கியம் புலம்பெயர் இலக்கியத்தினோர் அங்கமென்ற வகையில் புலம்பெயர் இலக்கியமே. ஆனால் புலம்பெயர் இலக்கியப் படைப்புகளைப் புகலிட படைப்புகளென்று வகைப்படுத்த முடியாது. ஏனென்றால் அவை பல தரப்பட்ட தமிழர்களாலும் (புகலிடம் நாடிய, [பொருளியல் காரணங்களுக்காக, கல்வி வாய்ப்பு நாடி) படைக்கப்பட்டவை; பல்தரப்பட்டவை. தேவகாந்தன் அவரது இந்தக் கட்டுரையில் 'புலம்பெயர் இலக்கியமும், ஈழத்து இலக்கியமும் ஓர் ஒப்புநோக்கு' என்ற விடயத்தை ஆராய முற்பட்டுள்ளார். இத்தலைப்பு மிகவும் பரந்து பட்டதொன்று. புலம்பெயர் இலக்கியம் என்றால் அவரே குறிப்பிட்டிருப்பதுபோல் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் படைக்கும் இலக்கியம். அது பற்றி ஆய்வதென்றால் மிக அதிகமான அளவில் படைப்புகளை வாசித்திருக்க வேண்டும். மிகமும் சிரமமான விடயம். மேலும் மேற்படி கட்டுரையின் தலைப்பில் அவர் குறிப்பிட்டுள்ள 'ஈழத்திலக்கியமும்' என்பதை அவர் ஈழத்தமிழர்களின் இலக்கியமென்ற அர்த்தத்திலேயே பாவித்துள்ளதாக நான் கருதுகின்றேன். இவ்விதமானதொரு தலைப்பில் கட்டுரையினை எழுதியிருப்பதால்தான் அவரால் ' புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும், ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும்.  புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு  நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிருஷ்ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்' என்ற முடிவுக்கே வர முடிகிறது. அதற்குப் பதிலாக 'புகலிடத் தமிழர்களின் இலக்கியமும், ஈழத்தமிழ் இலக்கியமும்' என்ற தலைப்பில் கட்டுரையினை எழுதியிருப்பாரானால், அவரால் மிக இலகுவாக புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இலக்கியத்தையும், ஈழத்தில் படைக்கப்படும் தமிழ் இலக்கியம் பற்றியும் ஒப்பிட்டிருக்க முடியும். மேலும் அவர் அவரது இந்தக் கட்டுரையில் புலம்பெயர் இலக்கியம், புகலிட இலக்கியம் என்பதை ஒரே அர்த்தத்தில் பாவித்திருப்பதையும் காண முடிகிறது.

கட்டுரையின் இன்னுமோரிடத்தில் தேவகாந்தன் 'நம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் தமிழிலக்கியமென்பது எப்போதும் ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியுமென்று, புலம்பெயர்ந்தோர் இலக்கியம்பற்றிப் பரவலான உரையாடல் இருந்த சமயத்திலிருந்தே இவ் உரைக்கட்டாளன் கூறிவந்திருக்கிறான். ஈழத் தமிழிலக்கியமென்பது மொத்த தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியுமென்பது இதன் இன்னொரு முகம்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். அவர் இந்த விடயத்தில் குழம்பிப் போயிருப்பதையே மேற்படி வரிகள் புலப்படுத்துகின்றன. அதனால்தான் ''நம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் தமிழிலக்கியமென்பது எப்போதும் ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியுமென்று, புலம்பெயர்ந்தோர் இலக்கியம்பற்றிப் பரவலான உரையாடல் இருந்த சமயத்திலிருந்தே இவ் உரைக்கட்டாளன் கூறிவந்திருக்கிறான்' என்று கூறும் அவர் மேற்படி கட்டுரையின் ஆரம்பத்தில் 'புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு  நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிருஷ்ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்' என்றும் கூறுகின்றார். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான கூற்றுகள். 'புலம்பெயர்தமிழ் இலக்கியமென்பது எப்போதும் ஈழத்து இலக்கியத்தின் ஒருபகுதியாகவே அடித்துக் கூறும் தேவகாந்தன், பின்னர் 'புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு  நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும்' என்று முரண்பட்டுக்கொள்கின்றார். இந்தக் குழப்பத்துடன் மேற்படி கட்டுரையினை அவர் படைத்திருப்பதால் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட படைப்பாளிகள் சிலரின் தேர்வு விடயத்திலும் மிகப்பெரிய தவறினை விட்டிருக்கின்றார். படைப்புகளை அதிகம் வாசிக்காத நிலையில், தமக்குக் கிடைத்த ஒரு சில படைப்புகளை மட்டுமே வாசித்து விட்டு எழுதினாரோ என்றொரு சந்தேகமும் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இவ்விதம் அதிகமான படைப்புகளை வாசிக்காமல் எழுதியுள்ளதைத்தான் அவரது 'இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன்' என்ற கூற்றும் புலப்படுத்துகிறது. இவ்விதமானதொரு சூழலில் அவர் கட்டுரையின் இறுதியில் 'நிலமும், வாழ்வும், வாழ்வு ஏற்படுத்திய மனநிலைகளும், அந்த மனநிலைகளுக்கு இயைபாக வளர்ந்துவரும் கருதுகோள்களும், நம்பிக்கைகளும், அறங்களும் இலக்கியத்தில் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது என்ற உண்மையையும் இந்த இடத்தில் பொருத்திக்கொண்டு பார்த்தால், நியாயமாகவே புலம்பெயர்ந்த இலக்கியத்தில் மிகவித்தியாசமான போக்கும், பாய்ச்சலும் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இந்த நிலைமை உருவாகியிருக்கிறதா' என்று சந்தேகம் எழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்விதமான கருத்துக்கு வருவதற்கு முன்னர் , இந்த விடயம் பற்றி விரிவான ஆய்வொன்றினைச் செய்திருக்க வேண்டும். அல்லது மிக அதிக அளவில் இவ்விடயம் சார்ந்த நூல்களை வாசித்திருக்க வேண்டும். அதன் பின்னரே அவர் இவ்விதமானதொரு முடிவுக்கு வர முடியும். படைப்புகளை வாசிக்காமல், அதன் போதாமையை உணர்ந்து கொண்டு , விடுபடல்களையும் விளங்கிக்கொண்டு இவ்விதமான முடிவுக்கு அவர் வருவதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவரது இக்கட்டுரை மிகவும் பயன்மிக்கதாகவிருந்திருக்கும் கீழுள்ளவாறு தேடுதல் நடைபெற்றிருந்தால்:

1. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் ஈழத்தமிழர்களின் புகலிட இலக்கியமும், ஈழத்தமிழ் இலக்கியமும் என்ற பொருளில் கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2. பொதுவாகப் படைப்பாளிகள், படைப்புகள் பற்றிக் குறிப்பிடாமல், ஐரோப்பியத் தமிழர்களின் புகலிடத் தமிழ் இலக்கியம், வட அமெரிக்கத் தமிழர்களின் புகலிட இலக்கியம், ஆஸ்திரேலியத் தமிழர்களின் புகலிட இலக்கியம், சிங்கப்பூர் / மலேசியத் தமிழர்களின் புகலிட இலக்கியம், மத்திய கிழக்குத் தமிழர்களின் புகலிட இலக்கியம், ஆபிரிக்கத் தமிழர்களின் புகலிட இலக்கியம்.. என்ற பிரிவுகளில் விரிவாகத் தேடுதல் நடத்தியிருக்க வேண்டும்.

3. மேலும் இவ்விதமான பிரிவுகளை மேலும் பிரித்து கவிதைகள், அபுனைவுகள், புனைவுகள், நாடகம், மொழிபெயர்ப்பு, பத்திரிகை/ சஞ்சிகைகள் (அச்சு/ இணைய) என்று இன்னும் விரிவாக ஆராய முயன்றிருக்கலாம். இக்கட்டுரையினை இணைய இதழான 'பதிவுகளு'க்கு அனுப்புகிறார். ஆனால் இணைய இதழ்கள் அவருக்கு முக்கியமான விடயமாகத் தெரியவில்லை. சஞ்சிகைகள் பல வெளிவந்திருக்கின்றன. அவரே ஆண்டு தோறும்  வெளியிடும் 'கூர்' கலை இலக்கிய மலர் முக்கியமானதொரு ஆண்டு மலர். அவற்றைக் கூடத் தவற விட்டிருக்கின்றார்.

4. புகலிடம் நாடிய தமிழர்களால பல நாடகங்கள் (நவீன, மரபு சார்ந்த) மேடையேற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி, அவை பற்றிய முயற்சிகளைக் குறிப்பிட்டிருக்கலாம்.

5. மிகவும் தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக என்.கே.மகாலிங்கத்தின் 'சிதைவுகள்', 'ஆடும் குதிரை', 'விலங்குகளின் வாழ்வு' போன்ற நூல்கள்.

6. ஈழத்தமிழர்களின் புகலிட இலக்கியத்தைப் பிரதிபலிக்கும் குறிப்பிடத்தகுந்த தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக மித்ர பதிப்பகத்தின் 'பனியும், பனையும்', அண்மையில் எழுத்தாளர் ஜீவகுமாரனின் விஸ்வசேது பதிப்பகம் வெளியிட்ட 'முகங்கள்' தொகுப்பு.. இவ்விதம் கூறலாம்.

7. எஸ்.பொ., அகஸ்தியர், முருகபூபதி போன்ற பல படைப்பாளிகள் இலங்கையிலிருந்த காலகட்டத்திலும், பின்னர் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளிலும் தங்கள் இலக்கியப் பங்களிப்பைத் தொடர்ந்திருக்கின்றார்கள்; தொடர்கின்றார்கள். எஸ்.பொ.வைப் பொறுத்தவரையில் தனது மித்ர பதிப்பகம் மூலம் 'பனியும், பனையும்' தொகுப்பு நூல், மலேசியச் சிறுகதைகளின் தொகுப்பு நூல், அளவெட்டி சிறிஸ்கந்தராஜாவின் சிறுகதைத் தொகுப்பு மேலும் பல புகலிடப் படைப்புகளை மித்ர பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கின்றார். இவர்களையெல்லாம் குறிப்பிட மறந்த கட்டுரையாசிரியர் ஓரிடத்தில் 'இவை புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலைக் காட்டக்கூடியதான கதைக்களத்தைக் கொண்டிருக்கவில்லையென்பது இவற்றின்மேல் பொதுவாகச் சொல்லக்கூடிய விமர்சனமாக என்றும் இருந்துவந்திருக்கிறது. அந்த வகையில் அதன் தன்மைகளைக் கொண்டிருக்கக்கூடியதான சில தொகுப்புக்களையே எம்மால் இனங்காண முடிகிறது. இவை பரவலாகப் பேசப்படாதவையாகவும், பரவலாகச் சென்று சேராதவையாகவும் இருந்தபோதிலும், புலம்பெயர் களமென்று பார்க்கிற வேளையில் இவற்றுக்கான இடம் அளிக்கப்பட்டாக வேண்டும் என்பதே சரியான முடிவாகும். இவற்றுக்கு உதாரணமாக கலாமோகனின் சில சிறுகதைகள், பொ.கருணாகரமூர்த்தியின் சில சிறுகதைகள் என்றும், கனடாவைப் பொறுத்தவரை சுமதிரூபனின் ‘யாதுமாகி நின்றாள்’, வி.கந்தவனத்தின் ‘காதலினால் அல்ல’, மனுவல் யேசுதாசனின் ‘வயது பதினாறு’ போன்ற தொகுப்புகளையும் சுட்ட முடியும்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். படைப்புகளைப் படிக்காமல் இந்த முடிவுக்குக் கட்டுரையாசிரியர் வந்திருக்கின்றார். மிதரவின் 'பனியும், பனையும்', அண்மையில் வெளிவந்த 'முகங்கள்' போன்ற தொகுப்புகளை வாசித்துப் பார்த்திருந்தால் கட்டுரையாசிரியர் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்.  எனக்கு உண்மையிலேயே "கனடாவைப் பொறுத்தவரை சுமதிரூபனின் ‘யாதுமாகி நின்றாள்’, வி.கந்தவனத்தின் ‘காதலினால் அல்ல’, மனுவல் யேசுதாசனின் ‘வயது பதினாறு' போன்ற தொகுப்புகளையும் சுட்ட முடியும்" என்ற கூற்று வியப்பினைத் தந்தது. எனக்குத் தெரிந்து புகலிட எழுத்தாளர்களின் பல படைப்புகள் (சிறுகதைகள், நாவல்கள்) புலம்பெயர் வாழ்வியலைக் காட்டும் வகையில் வெளிவந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான படைப்புகளை என்னால் சுட்டிக்காட்ட முடியும். இந்நிலையில் இவ்விதமான புலம்பெயர் வாழ்வியலை வெளிப்படுத்தும் ஒரு சில படைப்புகளையே கட்டுரையாளரால காண முடிகிறதென்பது வியப்புக்குரியது. அவ்விதம் அவரது வாசிப்பு வி.கந்தவனம், மனுவர் ஜேசுதாசனுடன் நின்று விடுவது இன்னும் ஆச்சரியத்திற்குரியது.

என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களின் புகலிட இலக்கியம் பெருமைப்படத்தக்க அளவில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. அதனை நினைத்துப் பெருமைப்படலாம். ஆனால அவை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. தமிழக, ஈழத்துப் பிரபல எழுத்தாளர்கள், திறனாய்வாளர்களின் அங்கீகாரத்துக்காக அலைந்து திரிவதில் காட்டும் ஆர்வத்தை, வெளியான படைப்புகளைப் படிப்பதில் பல புகலிடப் படைப்பாளிகள் காட்டுவதில்லை. இவர்களில் பலர் தொகுப்புகளை வெளியிடுவதிலும், விளமபரங்களை நாடுவதிலும் காட்டும் ஆர்வத்தைச் சக படைப்பாளிகளின் படைப்புகளை வாசிப்பதில், அவை பற்றிக் கலந்துரையாடுவதில் காட்டுவதில்லை. தமக்குள் எப்பொழுதும் குழுக்களாகப் பிரிந்து கிடக்கும் இவர்களில் பலர் தமிழகத்தின் பெரும் படைப்பாளிகளின் அங்கீகாரத்துக்காக ஏங்கிக் கிடக்கின்றார்கள். அதற்குப் பதில் சக படைப்பாளிகளின் படைப்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டியிருந்தால் அவர்களுக்குப் புகலிடத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சி விளங்கியிருக்கும்; அதன் பெருமை புலப்பட்டிருக்கும். அது பற்றிய ஆய்வுகள் பல்கிப் பெருகியிருக்கும். அவ்விதமான தேடலும், வாசிப்பும் இல்லாமையினால்தான் இக்கட்டுரையிலும் கடந்த முப்பது வருடக் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய புரிதலும் வி.கந்தவனம், மனுவல் ஜேசுதாசனுடன் நின்று விடுகிறது. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை/பத்திரிகையின் படைப்புகள் தெரியவில்லை. 'தேடல்', 'காலம்' போன்ற சஞ்சிகைகளின் படைப்புகள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இணைய இதழான 'பதிவுகள்' இதழில் வெளியான ஆக்கங்கள் புலப்படவில்லை. 'பொதிகை', 'மறுமொழி' என அவ்வப்போது வெளியான சஞ்சிகைகள், ஆரம்பகால மஞ்சரி பத்திரிகை போன்றவற்றில் வெளியான படைப்புகள் , 'வைகறை' போன்ற பத்திரிகைகளில் வெளியான படைப்புகள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. ஆனால் புனைவுகளைப் பொறுத்தவரையில் ஓரிரு படைப்புகளை வெளியிட்ட வி.கந்தவனம், மனுவல் ஜேசுதாசன் ஆகியோரின் படைப்புகள் கண்ணில் தென்பட்டிருக்கின்றன.  சக படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய வாசிப்பும்,  அவை பற்றிய யோசிப்பும் வளரும்போது புகலிட இலக்கியத்தின் வளர்ச்சி தென்படத் தொடங்கும். அதன் பெருமையும் விளங்க ஆரம்பிக்கும்.