வாசிப்பும் யோசிப்பும்!சங்க காலத்துச் செய்யுள்கள் எப்பொழுதுமே என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துபவை. ஆறுதலாக அவற்றை அவ்வப்போது வாசித்து அனுபவிப்பதில் எனக்குப் பெரு விருப்புண்டு. பொதுவாக அவை என்னைக் கவர்வதன் காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அவற்றில் காணப்படும் வளம் நிறைந்த சொற்செறிவு, கூர்ந்த நோக்கு மிக்க இயற்கை மீதான அவதானிப்பு,  படைப்பாற்றல், கற்பனைச் சிறப்பு, மற்றும் அன்றைய கால கட்டச் சமுதாய அமைப்பு பற்றிய தகவல்கள். அண்மையில் வாசித்த சங்ககாலச் செய்யுளொன்று வாசித்தபொழுது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் மீதான யோசிப்பின் பதிவுகளை சிறிது பகிர்ந்துகொள்ள விழைந்ததின் விளைவே இச்சிந்தனைக்குறிப்புகள்.  இந்தச் செய்யுளினை இயற்றியிருப்பவர்  மதுரைக் கள்ளிற் கடையத்தன்  வெண்ணாகனார். திணை:  நெய்தல். தன் காதலுக்குரிய தலைவனை நீண்ட காலமாகக் காணாத தலைவி, அவனுடன் திரிந்த இடங்களையெல்லாம் சென்று பார்த்து வருந்துகிறாள். அவனைக் காணாததால் ஏற்பட்ட துயர் அவளை வருத்துகிறது. தன் துயரை அவள் தன் காதலனுக்குத் தெரியப்படுத்துவதற்காக அவள் தெரிவு செய்த உயிரினம் ஆச்சரியத்தை விளைவிக்கிறது. நளன் தமயந்திக்கு அன்னத்தைத் தூது விட்டதை நாம் படித்திருக்கின்றோம். வெண்முகிலைத் தூதுவிட்ட தலைவிமாரைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் யாராவது நண்டினைத் தூது விட்டிருக்கின்றார்களா? அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்தச் செய்யுளில் வரும் தலைவி அதனைத்தான் செய்திருக்கின்றாள். ஆம், நண்டினைத் தூது விடுகின்றாள்.

"கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேனிமிர் நறுமலர் புன்னையும் மொழியாது;
ஒருநின் அல்லது பிறிதுயாது இலனே;
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துனென நசைஇத்;
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையோடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து
'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ!' எனவே!

இந்தக் கவிதையினை விளங்குவதற்கு இதற்கு ஏற்கனவே எழுதப்பட்ட உரைகளை ஒருமுறை வாசிக்கலாம். இச்செய்யுள் மீதான வாசிப்பினை அதுவே மிகவும் இலகுவாக்கும். அல்லாவிடில் இச்செய்யுள் கூறும் பொருளினைச் சரியாக அறிவது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை. சங்கச்செய்யுள்களை அறிவதற்குத் தடையாக இருப்பவை அவற்றில் பாவிக்கப்பட்ட சொற்கள். அடுத்தது அதிகமாகப் பாவிக்கப்பட்ட தொகைச்சொற்கள். பல பாவிக்கப்பட்ட சொற்கள் இன்றைய காலகட்டத்தில் வேறான அர்த்தத்தில் பாவிக்கப்படலாம். தொகைச்சொற்களை விரித்துப் பார்க்கும்போது அவற்றுக்குப் பல்வேறு வகைகளில் பொருள்கொள்ளச் சாத்தியங்களிருக்கலாம். உதாரணமாக மேலுள்ள செய்யுளிலிலுள்ள 'கமழிதழ் நாற்றம்' என்னும் சொற்களைப் பார்ப்போம். இன்று நாம் நாற்றம் என்னும் சொல்லை அருவருப்பான துர் வாசனையை விபரிக்கப் பயன்படுத்துவோம். அந்த அர்த்தத்தில் நீங்கள் இந்தச் செய்யுளினை அணுகுவீர்களால் அதோகதிதான். பிழையான அர்த்தத்தையே நீங்கள் அடைவீர்கள். ஏனெனில் மேற்படி செய்யுளில் மணங்கமழும் நெய்தல் பூக்களின் நறுமணத்தை அமிழ்தமாகக் கருதி வண்டினங்கள் விருப்புடன் அவற்றை நாடிச் செல்வதற்கே இங்கு நாற்றம் என்னும் சொல் உரையாசிரியரின் கருத்துப்படி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  இன்னுமொரு இடத்தில் 'பறை இய தளரும் துறைவனை' என்று குறிப்பிடப் படுகிறது. பறை என்றால் நாம் அறிந்தது அது ஒரு தோற்கருவி. பெயர்ச்சொல். வினைச்சொல்லாகப் பாவிக்கும்போது பறைசாற்றினார் (பலருக்கும் அறிவித்தார் என்னும் பொருளில்)  என்று கூறுவதும் எமக்குப் புரியும். பேச்சு வழக்கில் பறைந்தான் என்றும் பாவிப்பதுண்டு. அந்த அர்த்தத்தில் நாம் இங்குள்ள 'பறை இய தளரும் துறைவனை' என்னும் சொற்றொடரினை அணுகினால் தவறான அர்த்தத்தையே அடைவோம். நெய்தல் பூக்களின் நறுமணத்தால் அவற்றை நாடிய வண்டினங்கள் அப்பூக்களிலிருந்த பூந்தாதினை உண்ட களிவெறியில் பறப்பதற்கும் இயலாத நிலையில் தளர்ந்து கிடக்குமாம். அத்தகைய துறைக்கு உரியவனான தலைவனே அவன். இதனைத்தான் அச்சொற்றொடர் குறிப்பிடுகிறது. 'பறை இய ' என்பது இங்கு பறத்தலைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றது. உரையாசிரியர்களின் கருத்தும் இதுவே.  படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி இச்செய்யுள்களை அணுகுவதே முறையான செயல். மேலும் 'தண்தாது ஊதிய வண்டினம்' என்று வரும் சொற்றொடரினைக் கவனியுங்கள். இங்கு வரும் ஊதிய என்னும் பெயர் எச்சம் என்ன அர்த்தத்தில் வருகிறதென்று நீங்கள் கருதுகின்றீர்கள்? ஊதிய என்றால் வாயைக் குவித்து ஒலி எழுப்பிய என்றுதான் நாம் அர்த்தம்கொள்வோம். ஆனால் அந்த அர்த்தத்தில் அந்தச் சொல் இங்கு பாவிக்கப்படவில்லை. பூந்தாதினை உண்ட என்னும் அர்த்தத்தில் ஊதிய என்னும் சொல் இங்கு பாவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னுமோரிடத்தில் 'கோட்டு மீன் வழங்கும்' என்றொரு சொற்றொடர் வருகின்றது. இதற்கு உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் சுறா மீன் என்று பொருள் கொள்கின்றார். உண்மையில் ஏற்கனவே பல தமிழறிஞர்களால் இச்செய்யுள்களுக்கு உரைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மிகவும் எளிமையாக கூறும் வகையிலான தெளிவுரைகளையே புலியூர்க் கேசிகன் எழுதியிருக்கின்றதாக நூலின் முகவுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். ஏனைய தமிழ் அறிஞர்களின் வழியொட்டி அவரும் இவ்விதமே பொருள்கொள்வதாகக் கருதலாம். 'வாட்சுறா வழங்கும் வளைமேய்' (குறுவழுதியாரின் செய்யுளொன்றில்) என்று சுறா என்றே பாவிக்கப்பட்ட செய்யுள்களுமுள்ளன. இந்நிலையில் கோட்டு மீன் ஏன் சுறாவைக் குறிப்பிட வேண்டும் என நீங்கள் வாதாடினால் அதுவொரு நல்லதொரு தர்க்கமாக இருக்கும். மேலும் பல செய்யுள்களை ஆராய்ந்து கோட்டு மீன் சுறா மீன் அல்ல என்று கூட நீங்கள் நிரூபிக்கலாம். சாத்தியங்களுள்ளன. 'அது சரி மேலுள்ள செய்யுள் நண்டு விடும் தூதினைக் குறிப்பிடுவதாகக் குறிப்பிடுகின்றீர்களே. நண்டு என்ற சொல்லினையே இந்தச் செய்யுளில் காணவில்லையே' என்று நீங்கள் கேட்பது என காதுகளில் விழுகின்றது. 'தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து, பறைஇய தளரும் துறைவனை, நீயே, சொல்லல் வேண்டுமால் - அலவ' என்று வரும் சொற்றொடரில் வரும் அலவ என்னும் சொல்லினைக் கவனியுங்கள். அலவனென்றால் உரையாசியர்களின் கூற்றுப்படி அது நண்டினையே குறிக்கின்றது. ஆக இந்தச் செய்யுளிலும் தலைவி 'நீயே சொல்லல் வேண்டுமால் அலவ' என்று கூறுவதன் மூலம், தன் துயரினைத் தலைவனுக்குத் தெரியப்படுத்துவதற்கு நண்டினைத் தூது விடுகின்றாள்.

மேலுள்ள செய்யுளில் கவிஞர் மதுரைக் கள்ளிற் கடையத்தன்  வெண்ணாகனார் 'தலைவி யாமப்பொழுதில் தலைவனைச் சந்தித்துத் தலைவனின் காம நோயினைத் தணித்தவள். இன்று அவன் பிரிவால், நினைவால் வாடுகின்றாள். அத்துயரினைத் தலைவனிடம் சென்று கூறும்படி நண்டினை வேண்டுகின்றாள்' என்ற கருத்துப்பட செய்யுளினை படைத்திருக்கின்றார். நள்ளிரவைப் பற்றிக் கூற வந்த கவிஞர் அந்த யாமப்பொழுது எவ்விதமிருக்குமென்று வர்ணிப்பதிலிருக்கிறது அவரது இயற்கை மீதான கூர்ந்த கவனிப்பு.

'கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையோடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து'

தாழை மரத்தின் தாழ்ந்த கிளைகளில் (கைதை - தாழை; படுசினை - தாழ்ந்த கிளை)  தம் விருப்பத்துக்குரிய பெடைகளோடு நள்ளிரவில் சுறாக்கள் மலிந்த ஆனால் வேட்டையாடுதலற்ற இடத்திலுள்ள வெண் இறால்களைப் பற்றிய கனவுகளில் ஆழ்ந்திருக்குமாம். அவ்விதமான நள்யாமத்துப் பொழுதுகளில் முன்பு தலைவி தலைவனை இரவில் சந்தித்து அவனது காம நோயினைத் தீர்த்து வைத்தவளாம். எப்படியெல்லாம் கவிஞர் இயற்கையை அவதானித்து தலைவியின் நிலையுடன் சம்பந்தப்படுத்தி அவளது நிலையினை வெளிப்படுத்துகின்றார்.

செய்யுளின் இறுதியில் வரும் கீழுள்ள வரிகளைக் கவனியுங்கள்:

'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ'

தலைவன் உற்ற காம நோயென்னும் துயரினைக் களைந்தவள் தலைவி. இன்று அவள் அவனது பிரிவால் அடையும் துயரினையும் நீந்திக் கடப்பாளோ? என்பதுதான் பொருள். இங்கு வரும் விழுமம் இன்று நாம் பாவிக்கும் விழுமங்கள் அல்லது விழுமியன்ங்கள் அல்ல. துயரினையே இச்செய்யுளில் வரும் விழுமம் குறிக்கும்.

சங்கத்துச் செய்யுள்களை வாசிப்பதும் ,யோசிப்பதும் வாசிப்பை யாசிக்கும் நெஞ்சங்களுக்கொரு வரப்பிரசாதம்தான்.