[தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுனனின் 'வேர் மறந்த தளிர்கள்' நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. - வ.ந.கி-]   [தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. - வ.ந.கி-]   இன்று இணையத்தின் வரவு ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகளிலொன்று பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மிகவும் இலகுவாக்கி விட்டது என்பதுதான். தகவல் பரிமாற்றம் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும், அதனை மிகவும் இலகுவாக்கிவிட்டது. இதனை அனைவரும் புரிந்துகொண்டு மிகவும் ஆரோக்கியமாகச் செயற்படுவது அவசியம். இந்த இணையத்தின் வரவு இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பல நல்ல விடயங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் பலவற்றில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளை, அவர்கள் வெளியிடும் இணைய இதழ்களை, அச்சூடகங்களின் இணையப் பதிப்புகளை .. இவற்றையெல்லாம் இலகுவாகக் கண்டடைய முடிகிறது. வாசிக்க முடிகிறது. அந்த வகையில் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் (இலக்கியமுட்பட) அத்துறைமீதான ஆய்வினை இணையம் மிகவும் இலகுவாக்கி விட்டது. இந்த இணையத்தின் விளைவாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தை அறிய, வாசிக்க முடிகிறது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அப்படைப்புகளினூடு அறிய முடிகிறது. இவ்விதமாக அண்மைக்காலத்தில் நான் அறிந்துகொண்ட மலேசிய எழுத்தாளரே வே.ம.அருச்சுணன். இவரது சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் 'வேர் மறந்த நாவல்' பற்றியெல்லாம் 'பதிவுகள்' இணைய இதழ்மூலம் அறிந்துகொண்டேன். அந்த நாவல் நூலாகவும் வெளிவரவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த நாவலைப் படித்தபொழுது எழுந்த சில என் உணர்வுகளின் வெளிப்பாடே இக்கட்டுரை.

ஓரிலக்கியப் படைப்பென்பது எவ்வகையானதாகவிருக்க வேண்டும் என்பது பற்றிப் பல்வேறு கருத்துகளுண்டு. கலை மக்களுக்காக என்றும் , கலை கருத்துக்காகவென்றும் அன்றிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கும் தர்க்கம் முடிந்தபாடில்லை. இது இனியும் தொடரும். என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு பாணிகளில் படைக்கபபடும் படைப்புகள் அனைத்துமே பல்வேறு படிநிலைகளில் இருக்கும் வாசகர்களுக்கேற்ப படைக்கப்படுகின்றன. அந்த வகையில் அவற்றின் தேவையும் எப்பொழுதுமிருக்கும். குழந்தைகளுக்காகப் படைக்கப்படும் குழந்தை இலக்கியத்தின் தேவையினை யாரும் மறுப்பதில்லை. அது போலவே ஜனரஞ்சக இலக்கியத்துக்கும், தீவிர இலக்கியத்துக்குமான அவசியமுண்டு. என்னை எப்பொழுதும் ஆச்சரியப்பட வைக்குமொரு விடயமென்னவென்றால், சிறுவர் இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் என்று படிப்படியாக வளர்ந்து பின்னர் தீவிரமான இலக்கியத்தினுள் பிரவேசித்துப் படைப்புகளை வழங்கும் பல படைப்பாளிகள் தாம் கடந்து வந்த படிகளை ஒதுக்கிவிடும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்பதுதான். எல்லா வகையான படைப்புகளின் தேவை மிகவும் அவசியமென்று கருதுபவன் நான். படைப்புகள் எந்த வகையான 'இஸங்களை'ப் பின்பற்றினாலும், அவை மானுட இருப்பைத்தான் தம் பாணியில் கூறுகின்றன. ஒரு நவீன ஓவியம் ஓர் உழைப்பாளியின் நிலையினை யதார்த்தவாதப் பாணியில் வெளிப்படுத்தலாம்; மிகையதார்த்தவாதப்பாணியில் வெளிப்படுத்தலாம்; கியூபிசப் பாணியில் வெளிப்படுத்தலாம். பாணி எதுவாக இருந்தாலும் அவை வெளிப்படுத்துவது ஓர் உழைப்பாளியின் நிலையினைத்தான். அதுபோல்தான் இலக்கியப் படைப்புகள் விடயத்திலும் , அவை எந்தப் பாணியில் இருந்தாலும் கூறும் பொருள் ஒன்றாகவிருக்கலாம். அவற்றை உள்வாங்கும் வாசகர்களின் படிநிலைக்கேற்ப படைப்புகளின் தேவையுமிருக்கும். அந்த வகையில் அவை முக்கியத்துவமுடையன.

என்னைப் பொறுத்தவரையில் நான் அனைத்து வகையிலான படைப்புகளையும் விரும்பிப் படிப்பேன். எல்லா வகைகளிலும் பிடித்தவையுமுள்ளன; பிடிக்காதவையுமுள்ளன. படைப்புகள் எவ்வகையினதாகவிருந்தாலும், அவை வாசிக்கும்போது வாசிப்பவர் நெஞ்சில் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானது. எனக்குத் தனிப்பட்டரீதியில் நெஞ்சில் புத்துணர்ச்சியினை, இருப்பில் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் படைப்புகள், இயற்கையை, மானுடர் சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்புகள், இருப்பு பற்றிய சிந்தனையைத் தூண்டும் படைப்புகள் இது போன்ற படைப்புகள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சிந்தனைத் தெளிவு மிக்க மகாகவி பாரதியின் எழுத்து எப்பொழுதுமே என்னைக் கவரும். ஈழத்து எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) துள்ளுதமிழ் நடை மிகவும் பிடிக்கும். தத்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், எமிலி சோலா, கு.அழகிரிசாமி, எம்.டி.வாசுதேவன் நாயர்,   அதீன் பந்த்யோபாத்யாய, தகழி சிவசங்கரன்பிள்ளை, பொற்றேகாட், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சிவராம் காரந்த் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பிடிக்கும்.

வே.ம.அருச்சுனன் – மலேசியாஇலக்கியப்படைப்புகள் பற்றி இவ்விதமான எண்ணங்கள் கொண்டவன் நான். இந்த அடிப்படையில் எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' படித்தபொழுது என் சிந்தையிலுதித்த எண்ணங்களிவை. முதலில் இந்த நாவல் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறது. நாவல் கூறும் கதை இதுதான்: கதையின் நாயகன் பார்த்திபன். நல்ல பதவியில் இருக்கும் பெற்றோரின் ஒரே செல்லப்பிள்ளை. படித்து வளர்ந்து, நல்ல பணியில் இருப்பவன். போதை வஸ்து பாவிக்கும் நண்பர்களின் சகவாசத்தால் சீரழிந்து, மது போதைக்கு அடிமையாகி,  சிறைசென்று திருந்தி மீண்டு வருகின்றான். வருபவனுக்கு முன்னர் பெண் கொடுக்கத் தயாராகவிருந்த உறவினர்கள் எல்லாரும் , சிறை சென்று மீண்டவனுக்குப் பெண் கொடுக்கத் தயங்குகின்றார்கள். இறுதியில் நண்பன் கோமகனின் உதவியால் அநாதை விடுதியொன்றிலிருந்து நல்லதொரு பெண் அவனுக்கு மனைவியாகக் கிடைக்கின்றாள். இதுதான் நாவலின் பிரதான கதைக்களம். நாவல் சரளமானதொரு நடையில் சுகமாகப் பயணிக்கிறது. கதை பின்வருமாறு முடிகிறது:

'மனிதன் எப்படி எப்படியெல்லாமோ வாழநினைக்கிறான். ஆனால், நம்மைப் படைத்த இறைவன், இப்படித்தான் வாழவேண்டு என்று நியதியை ஒவ்வொரு மனிதனுக்கும் நீதியாக அமைத்துக் கொடுக்கிறான்!  இன்னாருக்கு இப்படிதான் வாழ்வு அமையும் என்பது ஆண்டவன் கட்டளை. இறைவன் கொடுத்ததை மனிதன் தடுக்க முடியாது! இதை உணர்ந்து நடக்கும் மனிதன் எந்நாளும் மகிழ்வுடன் வாழ்கிறான்! இதோ, ஆண்டவன் ஆசியுடன் புதுவாழ்வை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிவிட்ட  அன்பு மகன் பார்த்திபன்  மருமகள் தமிழரசி ஆகியோரைப் பெற்றோர் தினகரன் அம்பிகை தம்பதியினர் பூரிப்புடன் பார்க்கின்றனர்! அவர்கள் மட்டுமா பூரிப்புடன் இருக்கின்றனர்? புதுமணத் தம்பதியினரை வாழ்த்த வந்த அணைத்து நல்லுள்ளங்களின் முகங்களிலும் பூரிப்பு நிறைந்து காணப்படுகிறது!   பார்த்திபன் புத்துணர்ச்சியோடு தன் புது மனைவியின் கரங்களை இனிதாகப் பற்றியவாறு வானமே எல்லையாக வாழ்ந்து காட்ட பவிசுடன் நடந்து செல்கிறான்! தங்கள் உதிரத்தில் உதித்த மகன், இல்லறத்தில் நல்லறம் காண இறைவனின் ஆசிக்காகப் பெற்றோர் தங்களின் இருகரங்களையும் கூப்பி  இறைவனிடம் மனதார இறைஞ்சுகின்றனர். அப்போது அவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பி வழிகிறது!'             

இறை நம்பிக்கை மிக்கவர் என்பதை இது காட்டுகிறது. அது அவரது தனிப்பட்ட உரிமை. தன் எண்ணத்தை நாவலின் முடிவில் தெரிவிக்கின்றார். டால்ஸ்டாய், தத்தயேவ்ஸ்கி போன்ற மாபெரும் படைப்பாளிகள் கூடத் தமது படைப்புக்களின் இறுதியில் மதமே அனைத்துக்கும் தீர்வு என்று முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களின் அந்தக் கருத்தை வலியுறுத்தும் முடிவுகளைக் கொண்டு அவர்களது படைப்புகள் அளவிடப்படுவதில்லை. நாவலின் கதைப்பின்னல், நடை, பாத்திரப்படைப்பு, உரையாடல், பாத்திரங்களின் சிந்தனை விபரிப்பு என்று பல்வேறு விடயங்கள் காரணமாக அவர்களது படைப்புகள் சிறந்து விளங்குகின்றன. அந்த வகையில்தான் நானும் ஆசிரியரின் முடிவில் பிரதிபலிக்கும் மதம் பற்றிய அவரது சிந்தனையை மட்டும் வைத்துக்கொண்டு இந்த நாவலினை அணுகவில்லை.

நாவலில் என்னைக் கவர்ந்த விடயங்களாக நான் கருதுபவை: நாவல் தெரிவிக்கும் மலேசியத் தமிழர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், உயர்ந்த சிந்தனைகளை வலியுறுத்தும் அமைப்புகள், மானுடர்கள் , அம்மானுடர்களின் செயற்பாடுகள் மற்றும் அவ்வப்போது வெளிப்படும் நாவலாசிரியரின் சூழல் பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றிய எண்ணங்கள் போன்றவையே ஆகும். முதலில் நாவல் கூறும் மலேசியத் தமிழர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பார்ப்போம். அவை:

1. பார்த்திபனின் தாயான அம்பிகையின் பெற்றோர் இருவரும் கிள்ளான் பட்டணத்திற்கு அருகிலிருக்கும் மிட்லண்ஸ் தோட்டத் தொழிலாளர்கள். அப்பா அரிகிருஷ்ணன் ‘டிராக்டர்’ ஓட்டுனராகவும் அம்மா இருசம்மாள் வெளிக்காட்டு வேலை செய்யும் சாதாரண தொழிலாளியாகவும் பணி புரிகின்றார்கள். இவர்களினூடு அன்றைய காலகட்டத்து இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நிலை நாவலில் விபரிக்கப்படுகின்றது.

2. வார இறுதியில் தோட்டத் தொழிலாளர்கள் நாய்களுடன் பன்றி வேட்டைக்குச் செல்வது குறிப்பிடப்பட்டுள்ளது.

3. சிலாங்கூர் மாநிலம் பற்றியும், தமிழர்கள் அதிகமாக வாழும் 'காப்பார்' பட்டணம் பற்றியும் கூறப்படும் தகவல்கள். 'அறுபதாம் ஆண்டுகளில்,ஆளும் பாரிசான் கட்சியைச் சேர்ந்த ‘தொழிலாளர் அமைச்சர்’ டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி இன்றைய ‘மக்கள் கூட்டணி’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வீற்றிருக்கும் மாணிக்கவாசகம் வரையில் அதுவே இன்றுவரை நடைமுறையாகும்!' என்கின்றார் நாவலாசிரியர்.

4. 1941 ஆம் ஆண்டு ஐரோப்பிய தோட்ட முதலாளிகள் இந்தியத் தொழிலாளர்களுக்கு இழைத்த கொடுமைகள்,அநீதிகளை எதிர்த்து கிள்ளான் வட்டாரத்தில் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்; மற்றும் முல்லை வேலை நிறுத்தம்தான் மலாயா வரலாற்றிலேயே  மிகப் பெரிய வேலை நிறுத்தமாக இருந்துள்ளது.  சமுகச் சீர்திருத்தவாதியான ஆர்.எச்.நாதன் தலைமையில் ஏறக்குறைய 15,000 முதல் 20,000 வரையிலான தோட்டத் தொழிலாளர்கள்  இதில் பங்கு கொண்டுள்ளனர். கோலாசிலாங்கூர் மற்றும் பத்தாங் பெர்ஜுந்தை வட்டாரங்களில் உள்ள தோட்டங்களில் இருந்து சைக்கிள்கள் மூலம் கிள்ளானுக்கு வந்த தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டு ஆதரவைத் தெரிவித்தனர்.
 
5. கிள்ளான், பந்திங், போர்ட்ஸ்வெட்டன்ஹாம், பத்துதீகா, மோரிப், லாசிலாங்கூர், ப்பார், பந்திங், ரவாங், குவாங், பத்துஆராங், கோலாலம்ர், தஞ்சோங்மாலிம், ஆகிய இடங்களில் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்குமிடையிலேற்பட்ட  கடுமையான கைகலப்பு. இந்தியத் தொழிலாளரை அடக்க இந்தியத் துருப்புகளையே பிரிட்டிஷார் ஏவிய விபரம்;. பதினான்கு அம்சக் கோரிக்கையை ஒரு வாரகால அவகாசத்தில் ஏற்குமாறு அரசாங்கத்திற்கும், தோட்ட முதலாளிகளுக்கும்  தொழிலாளர் தலைவர்கள் அனுப்பிய விபரம்.

6. மலேசியாவில் பிறந்திருந்தும் பிரஜா உரிமை இல்லாத தமிழர்கள் சொந்த நாட்டிலேயே நாடற்ற அகதிகளாக இருப்பது பற்றியும், அதன் காரணமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் நாவல் கூறுகிறது.

7.  பிறப்புக்கான அத்தாட்சிப் பத்திரமில்லாத காரணத்தால் குழந்தைகளால் பள்ளி செல்ல முடியவில்லை;  குழந்தைகள், தோட்டப்புறத்திலும் தனியார் நிலத்திலும் ஒட்டுக் குடும்பம் நடத்தும் யாதொரு வசதிகளும் இல்லாதத் தமிழ்ப்பள்ளிகளில் கல்வி கற்கும் தமிழ்க்குழந்தைகள் எதிர்நோக்கும்  சிரமங்கள் பற்றியும் நாவல் குறிப்பிடுகிறது.

8.  1969 மே 13 நடைபெற்ற ‘கறுப்பு தினம்’ என்று கூறப்படும் இனக்கலவரம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

9. பிறப்புப் பத்திரம் இல்லாததால் பாடசாலை சேர முடியாது, கல்வி கற்க முடியாதிருக்கும் குழந்தைகள் நிலை, தோட்டப்பகுதிகளில் ஒட்டுக் குடும்பம் நடாத்தப்படும் வசதிகளற்ற தமிழ்ப்பள்ளிகள் பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன.

10. இங்கிலாந்திடமிருந்து ஆகஸ்ட் 31, 1957 அன்று மலேசியா சுதந்திரமடைந்தது. அது பற்றி நாவலில் 'அவர்கள்   இந்நாட்டைவிட்டு    வெளியேறிய போது, அவர்களால் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் உரிய அரசியல் பொருளாதார,சமூக,கல்வி, சமய,மற்றும் இதர உரிமைகளைப் புதிய மலாயா அரசியலமைப்புச் சாசனத்தில் முழுமையாக உறுதிப்படுத்தாமல் சென்றுவிட்டதால் இந்தியர்கள் இன்று பல துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது 'காலனி'களாகவிருந்த நாடுகளிலிருந்து செல்லும்போது ஒன்றாகவிருந்த இந்தியாவைத் பாகிஸ்தான், இந்தியா என்று இரு பகுதிகளாகத் துண்டாடிவிட்டுச் சென்றார்கள். இன்றுவரையில் இருநாடுகளும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. இலங்கையை நீங்கியபோது, சிறுபான்மையினருக்கு மலேசியாவில் நடைபெற்றதுபோல் அரசியல் சாசனத்தில் உரிமைகளுக்கு உரிய உத்தரவாதமெதுவும் செய்யாமல் நீங்கினார்கள். விளைவு 'பேர்கர்கள்' ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இன்றுவரை ஈழத்தமிழர்கள் உரிமைப் போராட்டம் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற முப்பது வருட யுத்தத்தின்போது 40,000ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல ஆயிரக்கணக்கில் காணாமல் போனார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெருமளவில் இலங்கையின் படையினரால் புரியப்பட்டன. இலங்கை அரசுக்கெதிரான யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபை வரையில் எதிரொலிக்கின்றன. இந்த விடயத்தில் மலேசியத் தமிழர்களின் நிலையும் ஒருவிதத்தில் ஈழத்துத் தமிழர்களின், குறிப்பாக மலையகத்தமிழர்களின் நிலையுடன் ஒத்திருப்பதை நாவலில் குறிப்பிடப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விதமான மலேசியத் தமிழர் வாழ்வில் நடைபெற்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை நாவல் பகிர்கின்றது. இது நாவலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது.

இவ்விதமாக மலேசியத் தமிழர்களின் அரசியல் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் நாவலினை ஆசிரியர் தனது இலட்சிய வேட்கையினைப் பூர்த்தி செய்யும் வகையில் பாத்திரங்களை உருவாக்கிப் படைத்துள்ளார். பார்த்திபனின் தாயாரின் சித்தப்பா அறிவுமதி, அம்பிகையின் முதலாம் வகுப்பு ஆசிரியை திருமதி அழகம்மா, பட்டணத்தில் தனது சொந்த நிலத்தில் 'அன்பு இல்லம்' என்னும் அநாதை விடுதி நடாத்தும் ரீத்தா அம்மையார் ஆகிய பாத்திரங்களின் வாயிலாகத் தனது சமுதாய மேம்பாட்டுக்கான கருத்துகளை ஆசிரியர் முன்வைக்கின்றார். உதாரணமாகச் சித்தப்பா அறிவுமதி தனது சகோதரரின் புதல்வியான அம்பிகைக்கு கல்வி, தொடக்கம் சகல உதவிகளையும் வழங்கி உதவுகின்றார். நூல்களை வாங்கி எழுத்தாளர்களை ஆதரிக்கின்றார். ஆசிரியை அழகம்மாவோ சிறப்பாக, பொறுப்பாகக் கற்பித்து மாணவர்கள் தம்நிலையில் உயர உதவுகின்றார்.

இவற்றுடன் ஆசிரியர் இன்னுமொரு விடயத்தையும் பார்த்திபன் என்னும் பாத்திரத்திக்கு ஏற்பட்ட நிலையினூடு வெளிப்படுத்துவார். சந்தர்ப்ப சூழ்நிலையால் போதை மருந்துக்கு அடிமையாகிச் சிறைசென்று, மீண்டுவரும் பார்த்திபனை அவனது உறவினர்களே ஒதுக்குகின்றனர்.அது பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் 'ஒரு முறை எதிர்ப்பாராமல் செய்துவிட்ட தவற்றுக்கு மன்னிப்பே கிடையாதா? மனிதன் திருந்துவதற்கு வாய்பே தராத மனிதர்கள் என்ன மனிதர்கள்? சந்தர்ப்பச் சுழ்நிலை ஒரு நல்ல மனிதனையும் கெட்டவனாக்கிவிடலாம் அல்லவா?' என்று கேள்வி எழுப்புவார்.

முன்பே குறிப்பிட்டதுபோல் நூலாசிரியர் மேற்படி 'வேர் மறந்த தளிர்கள்' நாவலினைத் தனது சமுதாய முன்னேற்றத்துக்குரியதொரு சாதனாமாகவே படைத்துள்ளார். தனது கருத்தான மலேசியத் தமிழர்களின் முன்னேற்றத்தை வலியுறுத்துவதற்காக இந்நாவலை ஆசிரியர் படைத்துள்ளார். அதே சமயம் மலேசியத் தமிழர்களின் அரசியல் வரலாற்றுத் தகவல்களையும் நாவல் வெளிப்படுத்திக் கேள்விகள் எழுப்பும்வகையில் கதைப்பின்னலை, மிகவும் சரளமானதொரு நடையில் அமைத்துள்ள ஆசிரியரின் முயற்சி வெற்றியளித்துள்ளதென்பதையே நாவலை வாசித்து முடிக்கும் சமயத்தில் உணரமுடிகின்றது. அத்துடன் மலேசியத் தமிழர்கள் பற்றிய நல்லதொரு புரிதலையும் நாவல் ஏற்படுத்துகிறது. ஆவணமாகவும் விளங்குகின்றது. இவ்விதமாகக் கூறும் பொருளின் அடிப்படையில் நாவல் முக்கியத்துவமுள்ளதாகவிருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.