- அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை. -

இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் , தாவீது அடிகள், மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த யாழ் பொதுசன நூலகம் என்னைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் ஒரு அங்கமே என்று கூறிக்கொள்ளும் வகையில் ஆகியவொன்று. ஒவ்வொரு வாரமும் பல தடவைகள் அங்கு செல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் நான் வணங்கும் ஆலயங்கள் என்றால் அவை நூலகங்களே. அதிலும் இந்த யாழ் நூலகத்துக்குத் தனி முக்கியத்துவமுண்டு. சிறுவர் நூல்கள், அறிவியல் நூல்கள், வெகுசன நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், இலக்கிய நூல்கள் ... என எத்தனை வகையான நூல்கள். நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. பெளதிகத்தின் வரலாறு, கடலின் வரலாறு, உயிரினங்களின் வரலாறு,.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். பெளதிகத்தின் வரலாறு என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்றொரு நூல் மிகவும் அழகான சித்திரங்களுடன் வெளியாகியிருந்தது. அக்காலகட்டத்தில் மிகவும் பிடித்த புத்தகங்களில் அதுவுமொன்று. அதில் உருப்பெருக்கும் கண்ணாடியுடன் சிறுவர்கள் வீட்டின் பின்புறத்தே ஆய்வில் ஈடுபட்டிருக்கும் காட்சியினைச் சித்திரிக்கும் வகையில் சித்திரங்களிருந்தன. மாணவர்களுக்கு விளங்கும் வகையில் விஞ்ஞானப் பரிசோதனைகள் பல அந்நூலில் விபரிக்கப்பட்டிருந்தன. அவை எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. இவை போன்று ஏன் இன்று தரமான நூல்கள் மாணவர்களுக்காக வெளிவருவதில்லை?

நூலகம் என்றதும் எனக்கு எப்பொழுதும் மறக்க முடியாத சம்பவமொன்று ஞாபகத்தில் வரும். தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற வெகுசன நூல்கள் பல அந்த நூலகத்திலிருந்தன. கல்கியின் பொன்னியில் செல்வன் , அலையோசை தொடக்கம் சாண்டில்யனின் கடல்புறா போன்ற நூல்கள் வரை அந்நூலகத்திலிருந்தன. இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாடமி வெளியிட்ட நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகள் அங்கிருந்தன. சிவராம் காரந்தின் புகழ்பெற்ற நாவலான 'மண்ணும் மனிதரும்' நாவலை முதன் முதலில் அங்குதான் வாசித்தேன். பேர்ல் பக்கின் 'நல்ல நிலம்' நாவலினையும் அங்குதான் முதலில் படித்தேன். அக்காலகட்டத்தில் வெகுசன நூல்களுக்கு மிகவும் தேவை இருந்ததால், அவற்றைப் பெறுவதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும். நானும் கல்கியின் ;அலையோசை' நாவலுக்குப் பதிவு செய்திருந்தேன். வருடமொன்றாகியும் கிடைத்தபாடில்லை. அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: அங்கு பணியாற்றுபவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கெல்லாம் நூல் கிடைக்கும் சமயங்களில் இரவலாகக் கொடுத்துவிடுவதுதான். இதனைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து ஈழநாடு பத்திரிகைக்குக் கடிதமொன்றினை அனுப்பினேன். அவர்களும் உடனேயே பிரசுரித்து விட்டார்கள். ஈழநாடு பத்திரிகையைப் பொறுத்தவரையில் என்னை அவர்களுக்கு எழுத்துமூலம் நன்கு தெரியும். நான் எழுதத்தொடங்கியதே ஈழநாடு பத்திரிகையின் மாணவர்மலர் மூலம்தான். பின்னர் வளர்ந்த பின்னர் என் சிறுகதைகள், நல்லூர் இராஜதானி நகர அமைப்பு மற்றும் பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியம் பற்றிய என் கட்டுரைளையெல்லாம் பிரசுரித்திருந்தார்கள். அப்பொழுது யாழ் நூலகத்தின் உயர் அதிகாரியாக இருந்தவர் கமலா நடராஜா. ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த கடிதம் அங்கு பணியாற்றுபவர்களுக்குக் கோபத்தினை ஏற்படுத்திவிட்டது. அச்சமயம் கிரிதரன் என்னும் பெயரில் அங்கத்தவர்களாகவிருந்தவர்கள் இரண்டுபேராம். என்னை அவர்கள் சந்தேகிக்கவில்லை. நான் அப்பொழுது சிறுவன். எனவே அவர்கள் அடுத்தவரையே சந்தேகித்தார்கள். அதன் காரணமாக அந்தக் கிரிதரனையும், அவரது அக்காவையும் நூலகத்தில் பணிபுரிந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவிட்டார்கள். இவ்வளவுக்கும் அந்த கிரிதரனின் சகோதரி ஓரிளம் சட்டத்தரணி. அந்த கிரிதரன் இதனால் ஆத்திரமுற்று ஈழநாடு பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று, என் முகவரியை வாங்கிக்கொண்டு அராலியிருந்த எங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்பொழுது நான் யாழ்நகரிலிருந்தேன். இது விடயமாக நூலகத்தாருடன் கதைக்கும்படி கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவரது இருப்பிடம் மானிப்பாய்/குளப்பிட்டிச் சந்திக்கண்மையிலிருந்தது. குளப்பிட்டியிலிருந்த எனது நண்பர் ஒருவருடன் அவரது இருப்பிடத்துக்குச் சென்றபோது அவர் அங்கிருக்கவில்லை. அந்த விடயம் சம்பந்தமாக இனிமேல் கவலைப்பட வேண்டாமென்றும், அதனை நான் கவனித்துக்கொள்வதாகவும் கூறிவிட்டு வந்துவிட்டேன். பின்னர் ஈழநாடு பத்திரிகைக்கு இன்னுமொரு கடிதம் அனுப்பினேன். அதில் யாழ் நூலகப் பணியாளர்கள் நன்கு சுறுசுறுப்பாகப் பணிபுரிவதாகவும், பாராட்டியும் கடிதமொன்றினை அனுப்பினேன். அதனையும் ஈழநாடு பத்திரிகை பிரசுரித்தது. அத்துடன் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

என்னைப்போல் பலருக்கு இந்த நூலகம் நண்பராக, ஆசிரியராக, படைப்பாளியாக எனப் பல்வேறு கோணங்களில் உறுதுணையாக விளங்கியதொரு நிலையம். இந்த நூலகம் எரிந்தபொழுது இது பலருக்குப் பேரதிர்ச்சியினைக் கொடுத்தது. இரண்டாவது உலக மகாயுத்தத்தில் அடொல்ப் ஹிட்லர் கூட நூலகங்களின்மேல் குண்டுகள் போடக்கூடாதென்று தடையுத்தரவு போட்டிருந்ததாகப் படித்ததுண்டு. ஆனால் தன் நாட்டின் ஓரின மக்களின் அறிவியல் மையத்தையே அன்றைய ஆட்சியாளரின் அமைச்சரைவையைச் சேர்ந்த சிலர் முன்னின்று எரித்ததாகப் பின்னாளில் அந்த அரசின் முக்கிய தலைவர்களே குற்றம் சாட்டியிருந்தார்கள்.

யாழ்பொதுசனநூலகம் என்றதும் ஞாபகம் வரம் ஏனைய விடயங்கள்: யாழ் மத்திய கல்லூரி, சுப்பிரமணியம் பூங்கா, யாழ் டச்சுக் கோட்டை, றீகல் , றியோ தியேட்டர்கள். மணிக்கூட்டுக் கோபுரம், வீரசிங்கம் மண்டபம் , தந்தை செல்வா நினைவுத் ஸ்தூபி, துரையப்பா விளையாட்டரங்கம், திறந்தவெளி அரங்கு மற்றும் பண்ணைக்கடல். இவற்றுக்கு மத்தியில் அமைந்திருந்தது அந்நூலகம். நூலகத்திலிருந்து யாழ் பஸ் நிலையத்தை நோக்கி, றீகல் தியேட்டருக்கு அண்மையில் செல்லும் வீதியில் அமைந்திருந்த தேநீர்க் கடையொன்றுக்கு நூலகம் செல்லும் சமயங்களிலெல்லாம் நண்பர்களுடன் செல்வதுண்டு.

இன்று நூலகம் எரியுண்ட நாளென்பதால் அது பற்றிய நினைவுகளும் ஆழ்மனதிலிருந்து மேலெழுகின்றன. ஈழத்தமிழர்கள் போராட்ட வரலாற்றில் அதற்குமொரு தனியிடமுண்டு. [இது முகநூல் நண்பர்களுடன் பகிர்வதற்காக எழுதிய குறிப்புகள்.]

யாழ் நூலக எரிப்பு பற்றிய மேலதிகத் தகவல்கள் பல: http://kiruththiyam.blogspot.ca/2013/06/32-part-1.html