வாசிப்பும், யோசிப்பும் 26 யோ.கர்ணனின் 'தேவதைகளின் தீட்டுத் துணி'யோ.கர்ண்னின் 'தேவதைகளின் தீட்டுத்துணி' வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிறுகதைத் தொகுதி. அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதோரிடம் இதற்குண்டு. அதற்கு முக்கியமானதொரு காரணம் இதன் ஆசிரியர்தான். முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த யுத்தத்தின் பாதிப்பை நேரில் கண்டவர் இவர். அதுவரை நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் நேரில் பங்குபற்றிய சாட்சியாக இருந்தவர் இவர். அக்காலகட்டத்திலும், அதன் பின்னர் யுத்த காலகட்டத்திலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையெல்லாம் சாட்சியாக நின்று அவதானித்தவர் இவர். யுத்தம் காரணமாகக் காலினை இழந்தவர் இவர். இவற்றின் காரணமாக இவரது அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவான கதைகளிவையென்பதால் முக்கியத்துவம் வாய்ந்தவை இத்தொகுதிக் கதைகள். யோ.கர்ணனின் கதைகள் ஆயுதப் போராட்ட நிகழ்வுகளை, யுத்த காலகட்டத்தின் அவலங்களை, 'மனிக் பார்ம்' தடுப்புமுகாம் அனுபவங்களைப் பதிவு செய்யும் ஆவணங்களாக விளங்குகின்றன. அதே சமயம் நடைபெற்ற நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களாகவும் விளங்குகின்றன. இத்தொகுப்பு பல்வேறுபட்ட அவலங்களை, நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்பனுவங்களை விபரிக்கும் சிறுகதைகள், யுத்த்தில் மக்கள் அடைந்த துன்பங்களையும், அழிவுகளையும் வெளிப்படுத்துகினறன. போராளிகளுக்கும், படையினருக்குமிடையில் நடைபெற்ற ஆயுத மோதல்களை எந்தவிதப் பிரச்சார நோக்கமுமின்றி விபரிக்கின்றன. உதாரணமாகத் தொகுதியின் முதலாவது கதையான 'ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்' கதையினை எடுத்துக்கொண்டால் அக்கதையிலிருந்து பல்வேறு தகவல்களைப் பெற முடியும். அக்காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆள்சேகரிப்புக்கான தெருக்கூத்துகள் பற்றி, போராளிகளுக்கான நான்கு மாதப் பயிற்சி பற்றி, அதன் பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் பற்றி, ஜெயசிக்குறு காலகட்ட இராணுவத்துடனான மகளிர் அணியொன்றின் போராட்ட நடவடிக்கைகள் பற்றி, தன்னை அழிப்பதற்கு முன்னர் பொறுப்பாளருடன் 'வாக்கி டோக்கி'யில் தொடர்புகொண்டு 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்று கூறிவிட்டுத் தன்னை அழிப்பது போன்ற நடைமுறைகள் பற்றி பல்வேறு தகவல்களை இச்சிறுகதையினை வாசிக்குமொருவர் அறிந்துகொள்ள முடியும். இவ்விதமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அந்தச் சூழலில் வாழாத ஒருவரால் இதுபோன்ற தகவல்களையெல்லாம் விபரிக்க முடியாது. அந்த வகையில் யோ.கர்ணனின் சிறுகதைகள் கூறும் தகவல்கள் ஈழத்தமிழர்களின் யுத்தகாலகட்டத்து வாழ்வை மையமாக வைத்துப் புனைவுகளைப் படைக்க விரும்பும் எழுத்தாளர்களுத் துணைபுரியும் ஆவணங்களாகவிருக்கின்றன.

'மன்னிக்கப்படாதவனின் கைத்தொலைபேசி' தொகுதியின் இரண்டாவது கதை. அப்பண்ணா சுமார் நாற்பது வயதுள்ள முன்னாள் போராளி. கொழும்பில் தங்கியிருந்து தனிமையில் வாழ்கின்றார். முன்னாள் போராளியின் இன்றைய காலகட்டத்து வாழ்க்கையினை குறை, நிறைகளுடன் (பாலியல்ரீதியிலான தாகங்களுட்பட)  விபரிக்கும் சிறுகதை. முன்னாள் போராளியென்பதால் அவர் மீது மற்றவர்களுக்குச் சந்தேகங்கள் எழுகின்றன. தன் நண்பனொருவனின் உதவியுடன் வெளிநாடு செல்ல இருப்பவரைச் ஆட்டோவில் வந்த இருவர் சுட்டுக்கொல்கின்றார்கள். யார் அவர்கள் என்பதை ஆசிரியர் ஊகத்துக்கே விட்டு விடுகின்றார். மாற்று அமைப்பினைச் சேர்ந்தவர்களாகவிருக்கலாம். அரச சார்பு புலனாய்வுத்துறையினைச் சேர்ந்தவர்களாகவிருக்கலாம். யாராகவுமிருக்கலாம். இந்தச் சிறுகதை அப்பண்ணா என்னும் முன்னாள் போராளியின் மனநிலையினை, வாழ வேண்டுமென்ற ஆசையினை வெளிப்படுத்துகின்றது. 'திருவிளையாடல்' என்னும் சிறுகதை இறுதி யுத்த காலகட்டத்தில், உலகமெங்கும் ஈழத்தமிழர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சமயம், மனித உருவெடுத்து யுத்தச்சூழலில் சிக்கியிருக்கும் வன்னிக்கு வரும் கடவுளின் அனுபவத்தை விபரிக்கும். இந்தச் சிறுகதையினை வாசித்தபொழுது எனக்கு உடனடியாக புதுமைப்பித்தனின் 'கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்' , அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'இரத்த உறவு' சிறுகதையும்தாம்  உடனடியாக ஞாபகத்துக்கு வந்தன. அச்சிறுகதைகளும் இறைவன் பூமிக்கு வருவதை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருந்தன. காலகட்டம், சம்பவங்கள் வேறாவையாக இருந்தபோதும், இவ்விதமான கதைகள் மானுடரின் வாழ்வினை விமர்சிப்பவை. அதற்கு இச்சிறுகதையும் விதிவிலக்கல்ல. இச்சிறுகதையில் படையினர் பக்கம் தப்பிச்செல்லும் கடவுளை இயக்கத்தின் முக்கிய பிரமுகராக எண்ணிப் 'போட்டுத்தள்ள' முடிவு செய்யும் படையினரைக் காணலாம். இச்சிறுகதையின் கடவுளை , ஒரு படைப்புக்குப் பல்வேறு வாசிப்புகள் சாத்தியமென்னும் வகையில், இயக்கக் கடவுளின் குறியீடாகவும் கொண்டு வாசிக்க முடியும். இச்சிறுகதையிலும் பல தகவல்கள் கிடக்கின்றன. யுத்த காலத்தில் மக்களின் அவல நிலை, 'பணிக்காட்' (போர் அரங்குகளில் வேலை செய்யும் பொது மகனுக்கு விடுதலைப் புலிகள் வழங்கும் அடையாள அட்டை), 'பண்ட்' அடிப்பது (பாதுகாப்பு அணை') போன்றவை.

'சடகோபனின் விசாரணைக் குறிப்பு' இயக்கத்தில் இணைந்த மலையகத் தமிழ் இளைஞனொருவன் மீதான விசாரணையை மையமாகக் கொண்டது. அவன் இயக்கத்தில் இணைவதே பதின்ம வயதுக்குரிய துடிப்பு காரணமாகவே என்பதை ஆரம்பத்தில் ஆசிரியர் அவனது செய்கைகளினூடு குறிப்பிடுகின்றார். அவ்விதமாக இயக்கத்தில் இணையும் அவன் தன் வயதுக்குரிய துடிப்புடன் செயற்படுகின்றான். இயக்க நிதியினைக் கையாடியது, ஆயுதத்துடன் தப்பியோட முனைந்தது, பெண்களுடன் பாலியல்ரீதியிலான தொடர்புகளை வைத்திருந்தது, எதிரியுடன் இணைந்து இயக்கத்தில் ஊடுருவி நாசம் செய்ய முயன்றது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவன் விசாரிக்கப்படுவதே கதையின் சாரம். முடிவில் விசாரணையாளர் அவனுக்கு மரண் தண்டனை விதிக்கப் பரிந்துரைப்பதுடன் கதை முடிகிறது. நூலின் தலைப்புக் கதையான 'தேவதைகளின் தீட்டுத்துணி' இயக்கத்துக்கு ஆட்சேர்த்து பயிற்சியளிப்பதில் மும்முரமாகவிருக்கும் பொறுப்பாளர் பின்னர் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் அகதிகளிலொருவராகவிருக்கும், முன்னர் இயக்கப் பயிற்சி எடுத்த ஒரு முன்னாள் போராளியைத் தலையாட்டியாக வந்து காட்டிக்கொடுப்பதை விபரிக்கிறது. இன்னுமொரு கதை பாதுகாப்பாகத் தன் மனைவி, பிள்ளைகளைத்  'தான் போரிட்டுச் சாகப் போவதாகக்' கூறி,  அரச பகுதிக்கு அகதிகளாக அனுப்பும் இயக்க்க முக்கியஸ்தர் பின்னர் பாதுகாப்பாகத் தப்பி வருவதை விபரிக்கும். தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக இயக்கத்தைப் பயன்படுத்திப் பழி தீர்த்துக்கொள்வதை 'சுதந்திரம்' சிறுகதை எடுத்துரைக்கும். மக்கள் யுத்தத்தில் அடையும் அவலங்களை 'பாதுகாப்பு வலயம்' போன்று தொகுப்பிலுள்ள பல கதைகளில் காணலாம்.

யுத்தகாலத்து அனுபவங்களை நேரடியாக, போராளியாக, அகதியாக அனுபவித்துத் தப்பியவர் என்பதாலும், அவை விபரிக்கும் தகவல்களுக்காகவும், சுய விமர்சனங்களுக்காகவும் யோ.கர்ணனின் இத்தொகுதிக்குரிய முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. முக்கியமான குறைபாடுகளிலொன்றாக நான் கருதுவது பேச்சுத் தமிழை அளவுக்கதிகாமக் கதை சொல்லி பாவித்திருப்பதுதான். கதையினைக் கூறும்போது பாத்திரங்களின் உரையாடலில் 'பேச்சுத் தமிழை'ப் பாவிப்பதுடன் நிறுத்திக்கொண்டு,  கதை சொல்லியின் கூற்றில் அளவுக்கதிகமாக அவை வருவதைத் தவிர்த்திருந்தால் நன்றாகவிருக்குமென்று எனக்குப் படுகிறது. ஏனென்றால் கதைகளில் கதைசொல்லியாக வருவது ஆசிரியர். பாத்திரங்களே தங்களது கதைகளைக் கூறும்போது பேச்சுத்தமிழைப் பாவிப்பதை நியாயப்படுத்தலாம். ஆனால் ஆசிரியரின் பிறர் கூற்றாகக் கூறப்படும் கதைகளில் பேச்சுத் தமிழை உரையாடல்களுடன் நிறுத்திக்கொள்வது நல்லதாகவே எனக்குப் படுகிறது. மேலும் இச்சிறுகதைகளின் கூறும் பொருள் காரணமாக நூலாசிரியர் கோ.கர்ணன் மிக அதிகமான விமர்சனங்களைப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் பெறுவது தவிர்க்க முடியாது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குட்பட்ட காலகட்டத்தில், இறுதி யுத்தக் காலகட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விமர்சித்ததற்காக இவர் கடுமையாக விமர்சிக்கப்படலாம். ஆனால் இவ்வகையான நூலாசிரியரின் சுய விமர்சனமென்பது  ஆரோக்கியமானதொரு செயற்பாடு. ஆயுதங் கொண்டு தமிழீழத்தை அடைவதற்காகப் போராடிய விடுதலைப் புலிகளே இறுதியில் நிலைமை எல்லை மீறிப்போய்விட்டபோது ஆயுதத்தை மெளனிக்கச் செய்தார்கள். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதும், அதன் விளைவாக ஏற்பட்ட போராளிகள், பொதுமக்களின் படுகொலைகளும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் பக்கம் சர்வதேசத்தின் கவனத்தை ஓரளவாவது திருப்பியிருக்கிறதென்பது உண்மை. சர்வதேச நாடுகள் தமது நலன்களை மையமாகவைத்தே இப்பிரச்சினையை அணுகினாலும், இசைப்பிரியா போன்றவர்களுக்கேற்பட்ட சித்திரவதைகளையும், கொடூர முடிவையும் வெளிப்படுத்தும் காணொளிகள் இந்த விடயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சாட்சிகள். 'ஓர் அமைப்பு, ஒரு தலைவன், ஒரு கொள்கை' என்னும் அடிப்படையில் இயங்கிவந்ததே அந்த அமைப்பின் ஆரம்ப வெற்றிகளுக்குக் காரணமாகவிருந்தது. அவையே பின்னர் அந்த அமைப்பின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்திருந்தது. அடுத்த கட்டங்களுக்குப் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளற்ற நிலை, சர்வதேசத்தை ஆரோக்கியமாக அணுகும் வகையில் அரசியல் ரீதியிலான கட்டமைப்பு அற்ற நிலை போன்றவையே வீழ்ச்சியின் முக்கிய காரணிகள். இன்னுமொரு முக்கிய காரணம் சுய விமர்சனமற்ற தன்மை. தனி மனிதரோ, ஸ்தாபனங்களோ நேர் மறையான விளைவுகளைச் சந்திக்கும்போது அவற்றால் நிலைகுலைந்து விடுவதில்லை. தம்மைச் சுய ஆய்வுக்குட்படுத்தி, மாறுபட்ட கள நிலைகளுக்கேற்ப மாற்று நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். அவ்விதம் எடுப்பது ஆரோக்கியமான நடவடிக்கை. எதிர்கால வெற்றியினை நோக்கிச் செலுத்துவது இவ்விதமான செயற்பாடுகள்தாம் [உதாரணமாக அல்கொய்தா அமைப்பினைக் கூறலாம். பாலஸ்தீன அமைப்புகளைக் கூறலாம். அல்கொய்தாவின் கொள்கைகள் பல பிற்போக்குதனமானவையாக இருந்தாலும், பின் லாடனே அவ்வமைப்பின் முக்கிய தலைவராக இருந்தபோதும், பின் லாடன் அந்த அமைப்பினை தன் ஒருவரிலேயே தங்கியிருக்கும் வகையில் கட்டமைத்திருக்காத காரணத்தால்தான் அந்த அமைப்பின் செயற்பாடுகளை இதுவரையில் மேற்குநாடுகளின் ஆவேசமான தாக்குதல்களால் அழித்தொழித்துவிட முடியவில்லை. பாலஸ்தீன அமைப்புகளை அழித்தொழித்துவிட முடியவில்லை. தென்னாபிரிக்காவின் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசை அழித்தொழித்துவிட முடியவில்லை.] விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை மெளனித்தபொழுது போராட்டமானது எதிர்காலத்தில் அரசியல் நடவடிககைகள் மூலம் முன்னெடுக்கப்படுமென்று கூறியிருந்தார்கள். அதன் வெற்றிக்கு கடந்த காலச் செயற்பாடுகளைப் பாரபட்சமின்றி விமர்சனத்துக்குள்ளாக்குவதும், யுத்தத்தில் நிகழ்ந்த அழிவுகள் உண்மையாகவிருக்கும்பட்சத்தில் அவற்றை ஏற்றுக்கொள்வதும் முக்கியம். அத்துடன் முரண்பாடுகளுடன் கூடிய ஐக்கியம் என்னும் வகையில் சகலரையும் ஒன்றிணைப்பதும் அதன் மூலம் சாத்தியப்படும்.   இந்த வகையில்தான் , கோ.கர்ணனின் தான் சார்ந்த அமைப்பின் மீதான, அரசின் மீதான விமர்சனங்களை ஆரோக்கியமாக முன்வைக்கும் இச்சிறுகதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. மொழி, பாத்திர அமைப்பு, உரையாடல் போன்ற பல விடயங்கள் ஒரு படைப்பின் சிறப்புக்கான முக்கிய காரணிகள். அவற்றில் சிறப்பு மிக்க படைப்புகளென்று இத்தொகுதிக் கதைகளைக் கூறமுடியாதென்பதென் எண்ணம். ஆனால் ஒரு காலகட்டத்து நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதாலும், அந்நிகழ்வுகள் மீது விமர்சனங்களை முன் வைப்பதாலும் கோ.கர்ணனின் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..