வாசிப்பும், யோசிப்பும் 42: சயந்தனின் 'ஆறா வடு'வும் ஷோபா சக்தியின் 'கொரில்லா'வும் பற்றி... அண்மைக்காலத்தில் பரவலாக வரவேற்பினையும், விமர்சனங்களையும் பெற்ற சயந்தனின் 'ஆறா வடு' புகலிட நாவல்களில் தவிர்க்க முடியாத இன்னுமொரு படைப்பு. இந்த நாவலை முதலில் வாசித்ததும் ஏனோ தெரியவில்லை உடனடியாகவே எனக்கு 'ஷோபா சக்தி'யின் 'கொரில்லா' ஞாபகத்துக்கு வந்தது. அதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. இரு நாவல்களுமே முன்னாள் விடுதலைப் புலி ஒருவரின் கடந்த கால, புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை இரண்டிலுமே அவ்வப்போது பட்டும் படாமலும் இயக்கத்தின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன.  அதே சமயம் இரண்டிலும் இயக்கத்தின் ஆரோக்கியமான பக்கங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

2. கொரில்லாவில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளியால் இந்திய அமைதிப்படையின் மேஜர் கல்யாணசுந்தரம் கொல்லப்படுகின்றார். பிரின்ஸியை விசாரணக்குட்படுத்தும் சமயம், மேஜர் அவளது மார்புகளைக் காமத்துடன் பார்த்து "இங்கே என்ன பாம் வைச்சிருகேயா?" என்று கேட்கும் சமயம், மார்பினில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளுடன் அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள் பிரின்ஸி. குண்டுகள் வெடிக்கின்றன. 'ஆறா வடு'வில் வரும் நிலாமதி என்னும் பதின்ம வயதுப் பெண் வயதுக்கு மீறிய மார்பகங்களின் வளர்ச்சியைப் பெற்றவள். அதன் காரணமாகவே 'குண்டுப் பாப்பா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுபவள். அவளது குடும்பம் விடுதலைப் புலிகளுக்கு அவ்வப்போது உதவி செய்யும் தமிழ்க் குடும்பம். வெற்றி என்று அழைக்கப்படும் விடுதலைப் புலி உறுப்பினன் ஆரம்பத்தில் திலீபன் நினைவுதினத்துக்காக அச்சடித்த துண்டுப்பிரசுரங்களை நிலாமதியிடன் பாதுகாப்பாக வைத்துத் தரும்படி வேண்டுகின்றான். இவ்விதமாக ஆரம்பிக்கும் தொடர்பு ஆயுதங்களை அவர்களது இடத்தில் மறைத்து வைக்கும் அளவுக்கு வளர்கிறது. ஒரு முறை இந்திய அமைதிப்படை இராணுவத்தின் தேடுதலில் அவளது வீடு அகப்பட்டுக்கொள்கிறது. அதற்குச் சற்று முன்னர்தான் போராளிகள் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டிருந்தார்கள். ஆனால் கிரேனைட் குண்டொன்று தவறுதலாக விடுபட்டுப் போகிறது. அதே சமயம் இந்தியப் படைச் சிப்பாய்கள் வீட்டினுள் நுழைகின்றார்கள். நிலாமதி கிரேனைட்டினைத் தனது மார்பகங்களுக்குள் மறைத்து நிற்கின்றாள். வந்திருந்த சிப்பாய்களில் ஒருவன் அறையைச் சோதிக்கும் பாவனையில் அறையினுள் அவளைத் தள்ளி அவளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றான். அச்சமயம் அவளது பிராவினைப் பற்றி இழுக்கும்போது உள்ளிருந்த கிரேனைட் குண்டு கீழே விழுகிறது. அதிர்ச்சியுற்ற அந்தப் படையினன் கிரேனைட் குண்டினை எடுத்து, கிளிப்பை நீக்கி, நிலாமதி மீது வீச எத்தனிக்கையில், நிலாமதி அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள். வெடிப்பில் இருவருமே கொல்லப்படுகின்றனர்.

3. ஆறா வடு நாவலில் லூசு தேவி என்றொரு பாத்திரம் வருகிறது. சிறு வயதில் தாயை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் இழந்தவள். அவளை 'செக் போஸ்'டுகளில் நிற்கும் இராணுவத்தினர் பாலியல் தேவைக்காகப் பாவித்துக்கொள்கின்றனர். அதன் விளைவாக, பத்து மாதக் கர்ப்பத்துடனிருந்த அவள் வயிற்றில் சுடப்பட்டுக்கொல்லப்படுகின்றாள். அவள் யாரால் கொல்லப்படுகின்றாள் என்பது நேரடியாகக் கூறப்படவில்லை. ஆனால் மறைமுறைமாகக் கூறப்படுகின்றது. "அப்பொழுது ஊரில்  பலதரப்பட்ட கதைகள் அவளைப்பற்றி இருந்தன. தேவியொரு உளவாளியாம்... ஆமிக்காரங்களுக்கு மெசேஜ் எடுத்துக் குடுக்கிறவளாம். ஆமியோடை தொடர்பு எண்டு இயக்கம்தான் போட்டதாம்... இவள் ஆமிக்காரங்களோடை போய்ச் சண்டை பிடிச்சவளாம். .. அவங்கள்தான் சுட்டுட்டாங்களாம்." இவ்விதமால நிலவும் கதைகள் அவளது மரணம் பற்றி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இதே போல் கொரில்லா நாவலிலும் ஒரு பாத்திரம் வருகிறது. அவள்: யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு முன்னாளிலுள்ள  லக்கி ஹொட்டலில்  66வது இலக்க  அறையில் தொழில் செய்து வரும் சலங்கை. "சலங்கையை இயக்கம்  சி.ஐ.டி.  எண்டு சுட்டுப் போட்டு பஸ் ஸ்ராண்டில போட்ட அண்டு இஞ்ச வந்தனான" என்று சிறைக்கைதி ஒருவன் கூறும் கூற்றில் வருகின்றது.

4. 1994 வரையிலான கால கட்டச் சம்பவங்களின் அடிப்படையில் கொரில்லா கூறப்பட்டிருக்கின்றது. ஆறா வடு 1987 - 2001 வரையிலான காலகட்டத்தை மையமாக வைத்துக் கூறப்பட்டுள்ளது. இரண்டிலும் இயக்கத்தின் அக்காலகட்டங்களுரிய சமர்கள், அரசியல் நிகழ்வுகள் , இயக்கத்தின் நடைமுறைகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன.

வாசிப்பும், யோசிப்பும் 42: சயந்தனின் 'ஆறா வடு'வும் ஷோபா சக்தியின் 'கொரில்லா'வும் பற்றி... 5. கொரில்லா நாவலின் இறுதி அத்தியாயம் அதுவரை கூறப்பட்ட கதைக்கு எந்தவிதத் தொடர்புமில்லாத பாரிஸ் சபாலிங்கம் கொலையுடன் முடிவடைகின்றது. ஆறா வடு அது வரையில் கூறப்பட்ட கதைக்கு எந்தவிதச் சம்பந்தமுமில்லாத இத்ரீஸ் என்றழைக்கப்படும் முன்னாள் எரித்திரியா விடுதலைப் போராளி ஒருவனின் கதையுடன் முடிவடைகின்றது. கொரில்லாவில் அதுவரை கூறப்பட்ட கதைக்கும் , இறுதி அத்தியாயத்துக்குமிடையிலுள்ள ஒரேயொரு தொடர்பு: பாரிசில் நடைபெற்ற இன்னுமொரு ஈழத்தமிழனின் படுகொலைதான். 'ஆறா வடு' நாவலில் வரும் இறுதி அத்தியாயத்துக்கும் அது வரை கூறப்பட்ட கதைக்குமுமிடையிலுள்ள ஒரேயொரு தொடர்பு: புகலிடம் நாடி, இத்தாலி நோக்கிப் படகில் ஏனையவர்களுடன் பயணிக்கும் அமுதன், படகு மூழ்கியதில் கடலினுள் மரித்துப் போகின்றான். ஆனால் , அவனது பைபர் க்ளாசிலான செயற்கைக் கால் மட்டும் கழன்று நீரில் மிதந்து வருகின்றது. ஏற்கனவே தனது காலொன்றினை இழந்திருந்த இத்ரீஸ் கிழவனுக்கு அச்செயற்கைக்கால் அச்சொட்டாகப் பொருந்துகின்றது. இச்செயற்கைக்காலொன்றே தொடர்பு.

இரு நாவல்களும் கூறப்பட்ட முறையில் வேறுபடவும் செய்கின்றன. 'கொரில்லா'வில் கதை பைபிள் கூறப்பட்டுள்ளதைப் போன்றதொரு நடையில் நகர்கின்றது. அதே சமயம் காடாற்ற ஏசுதாசனான சண்டியன் 'கொரில்லா'வின் கதையும், அவனது மகனான ரொக்கிராஜ் என்கின்ற அந்தோனிதாசனின் (இவனும் தந்தையைப் போன்றே கொரில்லா என்றழைக்கப்படுகின்றான். ஆனால் இவன் கெரில்லா. அவனது சந்தையோ ஊர்ச்சண்டியன்) கதையும் கூறப்படுகின்றது. அந்தோனிதாசனின் புகலிட வாழ்வும் கூறப்படுகின்றது. ஆனால் 'ஆறா வடு'வில் புகலிடம் நாடிச் செல்லும் முன்னாள் போராளி அமுதனின் வாழ்வு செல்லும் படகு கடலுள் மூழ்குவதுடன் முடிந்து விடுகின்றது. அவனது புகலிடம் நாடிய தேடல் முற்றுப்பெறவில்லை. எனவே அவனது புகலிட வாழ்வு பற்றிய அனுபவங்களைக் கூறுவதற்குரிய வாய்ப்பு கொரில்லா நாவலுக்குள்ளதைப்போல் ஆறா வடு நாவலுக்கில்லை. இன்னுமொரு முக்கியமான வித்தியாசம்: ஆறா வடு நாவலில் முன்னாட் போராளியான அமுதனின் கடந்த கால வாழ்வு உணர்ச்சி பூர்வமாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அவனது காதல், காதலி அகிலாவின், அவனது உணர்வுகள் மனதைத் தொடும் வகையில் நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இன்னுமொரு விடயம் கூறும் நடையிலும் இரு நாவல்களும் வேறுபட்டுள்ளன். கொரில்லாவில் கதை பேச்சு வழக்கில் கூறப்பட்டுள்ளது. ஆறா வடு நாவலில் உரையாடல்களில் மட்டும் பெரும்பாலும் பேச்சு நடை பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரது நடையிலும் அங்கதம் அவ்வப்போது தலை காட்டவும் செய்கின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும்