வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!

கவிதை: ஒரு கவிஞனின் (மனிதனின்) பெருங்கவலை!

- வ.ந.கிரிதரன் -

ஒரு சாதாரண 'காலக்சி'யினோரத்தே - சுழலும்
ஒரு சாதாரணச் சூரிய மண்டலத்தே -  சுழலும்
ஒரு சாதாரணக் கோளத்தில் - வாழும்
ஒரு சாதாரணக் கவிஞனொருவனுக்கு- அல்லது
ஒரு சாதாரண மனிதனொருவனுக்கு
ஒரு பெருங்கவலை. அது என்ன?

பந்தெனச் சுழலுமிந்தக் கதிரின் வாழ்வும்
ஐந்து பில்லியன் வருடங்களில் முடிந்து விடுமாம்.
அறிவியல் கூறிடுமுண்மையிது என்பதுதான்
அவனது பெருங்கவலை முன்பு; இப்போதல்ல.
பின் இன்றவன் பெருங்கவலை தானென்ன?
நாம் வாழுமிந்தப் பால்வெளியும்
இன்னுமொரு பால்வெளியும்
மோதிடுமாம் இன்னும்
இரண்டு பில்லியன் வருடங்களில்.
அதற்கான சாத்தியங்களுண்டாம்.
அறிவியல் அறிக்கைகள் கூறுகின்றன.
இப்போதவன் கவலையெல்லாம்
அவனுக்கு அது பற்றித்தான்.
அதுதானவனது பெருங்கவலை.

'தப்புதற்கு வழிதானென்ன?'
இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று
இன்புற்றிரு என்றானொரு கவிஞன்.
மாகவிஞன்.
நாளை இருப்பிற்குச் சாத்தியமுண்டா
என்னும் பெருங்கவலையில்
வாடுகின்றான் இந்தக் கவிஞன்.

- அறிவியற் செய்தியொன்று: நமது 'காலக்ஸி'யும் இன்னுமொரு 'காலக்ஸி'யும் இரண்டு பில்லியன் வருடங்களில் மோதும் சாத்தியங்கள் உண்டு. -


கவிதை: முகநூலும், முதற்காதலும்.

- வ.ந.கிரிதரன் -

வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!

அதிகாலைகளில், அந்தி மாலைகளில் - ஒருபோதில்
முதற்காதலின்பத்தினை,
ஓரப்பார்வைகளால், இதழ்க்கோடி முறுவல்களினால்,
அள்ளியள்ளி வழங்கியவள் அவள்.
விரகத்தில் வாட்டி,கனவுகளிலாழ்த்தி
உருகிட வைத்து விளையாடியவள்
அவள்.
மார்புற நூல் தாங்கி, நிலம் பார்த்து
நடை பயின்று,
தெருவோரத்தே திரும்புகையில்
தலை மெல்லச் சாய்த்து
கணப்பார்வைக் கணை வீசிச்செல்வாள்.
காலத்தின் சுழற்சியினில்
காணாமல் போனவளை - தன்
குழவியின் குழவியொன்றுடன்
குலவிடும் காட்சிதனில்
முகநூலின் 'புரொஃபை'லொன்றில்
கண்டபோது
இன்னுமவள் முகத்தில் மாறா அந்த முறுவல்
இருக்கக்கண்டு அதிசயித்துப்போனேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.