வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

'டொராண்டோ' போன்ற பல் கலாச்சார மக்கள் வாழும் நகரங்களில் வசிப்பதால் ஏற்படும் நன்மைகளிலொன்று: உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பழகுவதற்கு, அவர்களைப் பற்றி அறிவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். பல்வேறு நாட்டு மக்களின் உணவு வகைகளை ருசிப்பதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். எல்லாவற்றிலும் மேலாக இப்பூவுலகு பற்றிய சிந்தனை முதிர்ச்சி ஏற்படுவதாகும். இத்தாலியர்கள் சிறிது ஆச்சரியம் அடையும்போது 'மம்மா மியா' என்பார்கள். ஸ்பானிஷ்காரர்கள்  'நண்பனே' என்பதற்கு 'அமிகோ' என்பார்கள். எனக்குத் தெரிந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியனொருவன் தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளில் சிறிதாவது உரையாடுவதற்குப் போதுமான மொழியறிவு பெற்றிருக்கிறான். என்னைக் கண்டால் தமிழில் நலம் விசாரிப்பான். பாகிஸ்தானியர்களைக் கண்டால் 'அஸ்ஸலாமு அழைக்கும்' , கியா ஹால் கை', 'சுக்ரியா' போன்ற உருது சொற்களைக் கூறுவதற்குத் தெரியும். போர்த்துகேயர்களைக் கண்டால் அவர்கள் ஒரு காலகட்டத்தில் எங்களூரில் செய்த அட்டுழீயங்களை விபரிப்பேன். மேலும் ஜன்னல், சப்பாத்து என்று தமிழில் கலந்துவிட்ட போர்த்துகேய சொற்களைப் பற்றிய எனது பாண்டித்தியத்தையும் சிறிது 'அவிழ்த்து' விடுவேன். 'ஆ'வென்று வாயைப் பிளப்பார்கள். ஆங்கிலேயர்களிடம் 'எங்கள் மொழியிலிருந்தும் நீங்கள் சொற்களைக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் தெரியுமா?' என்பேன். 'என்ன" என்று தலையைச் சொறிவார்கள். அவர்களுக்கு 'கட்மரான்' கட்டுமரத்திலிருந்து வந்ததுதானென்பேன்.  அவர்களும் தம் பங்குக்கு வாயைப் பிளப்பார்கள்.

எப்பொழுதுமே மொழிகளில் சீன மொழி என்னை ஆச்சரியப்படுத்துவதுண்டு. ஓவியமொன்றினை வரைந்தது போன்றிருக்கும். ஒரு வசனத்தை ஓரெழுத்தில் எழுதிவிடுவார்கள். இவ்விதமான மொழியினைச் சீனர்கள் எவ்விதம் கற்றுக்கொள்கின்றார்கள் என்பதை அறிவதற்கு எப்பொழுதுமே எனக்கு ஆவல். பலவருடங்களுக்கு முன்பு, இங்குள்ள பிரபலமான எலக்ட்ரோனிக்ஸ் பாகங்களைச் செய்யும் 'செல்ஸ்டிகா'  நிறுவனத்தில் சில வருடங்கள் வேலை செய்தபொழுது என்னுடன் சீனத்துப் பெண்ணொருத்தியும் வேலை செய்தாள். அவள் சாங்காய் நகரத்தில் பொறியியலாளராக வேலை பார்த்தவள். கனடாவுக்குக் கனவுகளுடன் வந்திருந்தாள். ஆங்கில மொழியறிவினை அதிகரிப்பதில் ஆர்வமாகவிருந்தாள். அவள் மான்டரின் மொழி பேசும் சீனத்துக்காரி.

ஒருமுறை மொழிகள் பற்றிய உரையாடலில் தமிழ் மொழி பற்றிக் கேட்டாள். நான் உயிரெழுத்து , மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து இவற்றையெல்ல்லாம் விபரிக்கையில் வாயைப்பிளந்து நின்றாள். நான் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவளிடம் மான்டரின் மொழியில் 'எப்படிச் சுகம்' என்று வினவுவது எப்படி என்று வினவினேன். 'நீ ஹா மா'?' என்று கூறித்தந்தாள். எனக்கு அவள் சீனத்து மொழி பற்றிக் கூறிய ஒரு விடயம் மிகுந்த ஆச்சரியத்தைத்தந்தது. நீங்களும் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

நான் "மான்டரின் கற்பதற்குக் கஷ்ட்டமா?" என்று கேட்டதற்கு அவள் சிரித்து விட்டுக் கூறினாள்: "மான்டரின் கற்பதற்கு மிகவும் இலகுவான மொழி"

என்னால் நம்ப முடியாமலிருந்தது. என் அவநம்பிக்கையினைப் பார்த்துவிட்டு அவள் கூறினாள்:" உனக்குத் தெரியுமா மான்டரின் மொழியில் காலங்கள் (Tenses) இல்லையென்பது."

எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகத்தானிருந்தது. 'காலங்கள்' இல்லாமலும் ஒரு மொழியா?

"உண்மையாகவா!" என்று வியப்புடன் கேட்டேன்.

அதற்கவள் "உண்மைதான்" என்றாள்.

"அப்படியென்றால் மான்டரின் மொழியில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்தறிவது எப்படி?" என்று மேலும் அவளிடம் கேள்விக்கணை தொடுத்தேன்.

அதற்கவள் கூறினாள்: "இதனை எப்படி விளங்கப்படுத்தலாமென்றால்... ஆங்கிலத்தில் I come yesterday, I come tomorrow  என்று கூறுவதைப் போன்றதுதான் மான்டரின் மொழியில் 'காலங்க'ளைப் பாவிப்பதும். yesterday, tomorrow போன்றவற்றைக்கொண்டு கடந்த காலமா, எதிர்காலமா என்று புரிந்துகொள்வார்கள்.

எனக்கு 'மான்டரின்' மொழி பற்றி இன்னுமொரு கேள்வி இருந்தது. "மான்டரின் மொழியைப் பார்த்தால் ஒவ்வொரு சொல்லும் ஓவியமொன்றினைப் போன்று சிக்கலாக இருக்கிறதே. எவ்விதம கற்றுக்கொள்கிறார்கள்?' என்று மேலும் கேட்டேன்.

அதற்கவள் கூறினாள்: " அது உண்மைதான். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலர் கையால் எழுதுவதில்லை. எல்லாமே கம்யூட்டர் எழுத்துகளாக வந்தபின்பு கையால் எழுதவேண்டிய பிரச்சினையே இல்லை"

உண்மையில் சீனத்து மொழிக்குக் காலங்காட்டும் இலக்கணமில்லை என்று அந்தச் சீனத்துப் பைங்கிளி இயம்பியது இன்றுவரை எனக்கு ஆச்சரியம்தான். அதைப் போல் அண்மையில்தான் இன்னுமொன்றினைக் கேள்விப்பட்டேன். அது ருஷ்ய மொழியில் a, an, the போன்ற நிர்ணயிக்கும் சொற்கள் இல்லையென்பதுதான். கற்ற மொழி கைம்மண்ணளவு. கல்லாததோ உலகளவு என்று எண்ணிக்கொள்ளும் தருணங்களிவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.