- வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதி. -

வாசிப்பும், யோசிப்பும் 56 :விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து  சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

இதே வகையானதொரு நிலையினைத்தான் இந்தியாவில் உலகமயமாக்கலின் விளைவாக உருவான 'பணம் புழங்கும்' நடுத்தர மக்களின் வாழ்க்கையிலும் காணலாம். மேற்கு நாட்டுசமூகக் கலாச்சாரச் சூழலை அப்படியே கொண்டு வந்து, வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடொன்றில் நட்டுவிட்டால் எவ்வகையான விளைவுகள் உருவாகுமோ அவ்வகையான விளைவுகள் அனைத்தும் இங்கும் உருவாகும். அவைதான் 'ராஜீவ்காந்தி சாலை'யிலும் உருவாகின. பணம் புழங்கும் மத்தியதர மக்கள் மில்லின் கணக்கில் உருவானதும், மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் புதியதொரு சந்தையினை இந்த மாற்றம் திறந்து விட்டது. குறைந்த அளவு ஊதியத்துடன் உழைப்பை வாங்குவதன் மூலம் இலாபத்தை அதிகரித்த மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்துத் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் இலாபத்தைச் சம்பாதித்தன. ஒரு கல்லில் இரு மாங்காய்கள். 'கோல்கேற்' பற்பசை , கோர்ன் ஃபிளாக்௶ஸ் சீரியல்கள் தொடக்கம், ஃபோர்ட் வாகங்கள், ஜிஎம் வாகனங்கள் போன்ற வாகனங்கள் தொடக்கம், புதிய சந்தை நிலவும் நாட்டில் பேசப்படும் பன்மொழிகளில் திரைப்படங்களை மிகச்சிறப்பாக 'டப்பிங்' செய்வது தொடக்கம் இலாபத்தை அள்ளிக்குவித்தன மேற்கு நாட்டின் நிறுவனங்கள். 'மாஸ்டர் கார்ட்', 'விசா', 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' என்று அத்தனை கடன் அட்டை நிறுவனங்களும் நுழைந்து விட்டன. பல்வேறு வகையான காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், 'மல்டி லெவல் மார்கட்டிங்'  என்று அனைத்து நிறுவனங்களும் நுழைந்து விட்டன.

மேற்கு நாடுகளின் நிறுவனங்களின் பணியினைக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்காகப் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பூற்றீசல்களைப் போல் முளைத்தன. இவ்விதமான நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பார்க்கும் மக்களை மையமாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் வலையை விரித்தன. கையில் காசு புழங்கத்தொடங்கியதும் இவ்வகையான நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை மாறத்தொடங்கியது. மேற்குக் கலாச்சாரம் அவர்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து விட்டது. வாகனம் வாங்குவது, கார் வாங்குவது என்பவையே அவர்களது கனவுகளாகின. புதிய சூழல், புதிய வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அழுத்தத்தினையும் கூடவே கொண்டுவந்து விட்டது. சக்திக்கு மீறிய வகையில் கடன்களைப் பெறும் சூழல் உருவாகியது. கடன்களைப் பெற்று வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு, வேலை சிறிது காலம் இல்லாமல் போனால் கூடத் தாங்க முடியாத நிலைதான். வாசலில் நின்று கடன்களை அவர்கள் மேல் திணித்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் இவ்விதமான இக்கட்டான நிலையில், உதவுவதில்லை. பணத்தைத் திருப்பிக் கட்டும்படி நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கும் சூழலுருவாகும். விளைவு? குடும்பங்கள் பிளவுறுதல், தற்கொலைகள், கொலைகள்  என்று பல்வேறு வகையான பக்க விளைவுகள் உருவாகும். இரவினில் தனித்துப் பெண்கள் வேலை செய்யும் சூழல்கள், அவர்களுடன் பணி புரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தும். வேலையிழத்தல் போன்ற சூழல்கள் உருவாக்கும் பொருளியற் சுமைகள் காரணமாக ஒருவருக்கொருவர் பண உதவிகள் பெறுவது, பின்னர் அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அநுசரித்து வாழ்வது என்று ஏற்படும் மாற்றங்கள் தம்பதியினரின் குடும்ப வாழ்வினைச் சீரழிக்கின்றன.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் விமர்சிக்கின்றது. குழந்தைகள் மேல் புரியப்பட்டும் பாலியல் வன்முறைகள் எவ்விதம் அவர்களது வாழ்வினைச் சிதைத்து விடுகின்றன என்பதை நாவலில் வரும் கெளசிக் பாத்திரத்தினூடு ஆசிரியர் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். சிறுவயதில் ஆண் உல்லாசப்பிரயாணிகளினால், முதிய செல்வந்தப் பெண்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் அவன் வளர்ந்ததும் இளம்பெண்களைப் பாலியல்ரீயில் வதைப்பதில் இன்பம் காணுமொரு வெறியனாக உருமாற்றமடைகின்றான். அதன் விளைவாகக் கொலையுண்டும் போகின்றான். சிறு வயதில் அவன் மிக அதிகமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாகியது ஆண் உல்லாசப்பிரயாணிகளால்தான். எனவே அவனது ஆத்திரம் அவ்விதமான ஆண்கள்மேல் ஏற்படாமல் எதற்காகப் பெண்கள் மேல் ஏற்பட வேண்டும் என்றொரு கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை இவ்விதமாக உலகமயமாதலால் அடியோடு மாறுதலடைந்து, ராஜீவ்காந்தி சாலையாக மாறிய சென்னையின் மகாபலிபுரச்சாலையின் மாறுதல்களை விமர்சிக்கின்றது. உண்மையில் உலகமயமாதல் எவ்விதம் செல்வந்த நாடுகளின் இலாபத்திற்காக வளர்முக நாடுகளில் நிலவிடும் இயற்கைச் சூழலினை , விவசாயம் போன்ற தொழில்களை, சிறுவர்த்தகச் செயற்பாடுகளைச் சிதைத்து விடுகின்றது. எவ்விதம் நகர்ப்புறங்களில் செல்வச்செழிப்புள்ள பகுதிகளை உருவாக்கும் அதே சமயம், மிகவும் வறிய மக்களைக்கொண்ட  சேரிகளையும் உருவாக்கி விடுகின்றது. எவ்விதம் பாலியல்ரீயிலான உளவியற் பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின் தீய விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. இவற்றைப்பற்றியெல்லாம் விமர்சிக்கின்றது. அந்த வகையில் 'ராஜீவ்காந்தி சாலை' ஒரு குறியீடு. உலகமயமாதல் வளர்ந்துவரும், அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றில் ஏற்படுத்தும் சமூக, பொருளியல், கலாச்சார மற்றும் சூழற் பாதிப்புகளை விமர்சிக்குமொரு குறியீட்டு நாவல் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.