வாசிப்பும், யோசிப்பும் 62: கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....'டொராண்டோ'வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா.  இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன் இதனை இங்குள்ள நூலகங்கள் செய்யவில்லை. பிரச்சினை இதுதான்: இங்குள்ள நூலகங்கள் நூல் வாங்குவதற்குப் பொறுப்பான தமிழ் பேசும் அதிகாரிகளை நம்பியுள்ளன. இவர்கள்தான் இந்த விடயத்தைப நூலகங்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்கிறார்களில்லை. ஏன்? அவ்வப்போது இங்குள்ளவர்களின் ஓரிரு புத்தகங்களை வாங்குவதோடு சரி.

இங்கு முக்கியமான செல்வாக்கு மிக்க தமிழ் எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள் அ.முத்துலிங்கத்தைப் போல். 'ஆனந்த விகடன்' விருது பெற்ற 'காலம்' சிற்றிதழின் ஆசிரியர் இருக்கிறார். 'தமிழர் தகவல்' திருச்செல்வமிருக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் ஏன் இதுவரையில் இவ்விடயத்தைப் பற்றி வற்புறுத்தவில்லை. இது பற்றி நான் பல வருடங்களாக இங்குள்ள நூலகப் பிரிவினருக்கு அவ்வப்போது கடிதங்கள் மூலம் வற்புறுத்தி வருகின்றேன். அவர்கள் கூறும் பதில்: ஏற்கனவே இதற்கான திட்டங்கள் நடைமுறையிலுள்ளன. உண்மைதான். ஆனால் இங்குள்ள நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதற்குப் பொறுப்பானவர்கள் இவ்விடயத்தை முன்னெடுக்கவில்லை. இது பற்றி 'கனடியன் இமிகிரண்ட்', 'டொராண்டோ ஸ்டார்' பத்திரிகைக்கும் கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். அவற்றை அந்நிறுவனங்கள் பிரசுரித்துமுள்ளன. இருந்தும் இதுவரையில் கனடியத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை இங்குள்ள நூலகங்களுக்கு வாங்குவதற்கான திட்டங்களை நூலக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடைமுறைப்படுவதற்கு இதற்குப் பொறுப்பான தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் அதிகாரிகள் முயற்சிகள் எதுவும் செய்யவில்லையென்றே தெரிகின்றது.

மார்க்கம் நகர சபை அங்கத்தவராகத் தேர்தலில் வெற்றி பெற்ற லோகன் கணபதி இம்முறையும் அப்பதவிக்காகப் போட்டியிடுகின்றார். அவரது விளம்பரமொன்றில் '72 மில்லியன் டாலர் செலவில் சன சமூக நிலையமும் நூலகமும் அமைத்ததை' அவரது சாதனைகளிலொன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 72 மில்லியன் டாலர் செலவில் இவ்விதமான திட்டம் நடைமுறைப்படுத்த உதவியவர் கனடாத் தமிழர்களின் நூல்களை ஆண்டுதோறும் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு வாங்கும் வகையில் திட்டங்களை ஏற்படுத்தினால் மிக நன்றாகவிருக்கும். தமிழ் எழுத்தாளர்கள் பலர் மார்க்கம் நகரில் வாழ்கின்றார்கள். இவர்கள் எல்லாரும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்குவதில்லை. குழுக்களாக இயங்கி, தமிழக ஆளுமைகளின் அங்கீகாரத்துக்காக ஏங்கி நிற்பதில் செலவிடும் நேரத்தை , உங்கள் நகரத்தில் 'நகரசபை அங்கத்தவராக'போட்டியிடுவோரிடம் இவ்விதமான கோரிக்கையினை வற்புறுத்துவதில் செலவிட்டால் நன்றாகவிருக்கும். இங்குள்ள அரச நிறுவனங்களிடம் நிதி பெறுவதற்காக அலையும் நேரத்தை, இது போன்ற தமிழ் எழுத்தாளர்கள் பயன்படத்தக்க திட்டங்களுக்குச் செலவிடுவது நல்லது.

அண்மையில் இங்குள்ள ஒரேயொரு புத்தகக்கடையான முருகன் புத்தகக்கடையின் உரிமையாளரான மகேசனுடன் உரையாடுகையில் அவர் கூறிய விடயங்கள் அதிர்ச்சியளிப்பவையாகவிருந்தன. டொராண்டோ நூலகப் பிரிவில் தமிழ் நூல்களைத் தேர்வு செய்து வாங்குவதற்கான அதிகாரி, முன்பு வருடா வருடம் முருகன் புத்தகசாலைக்கூடாக வாங்க உதவியவர், தற்போது தனது வர்த்தக நிறுவனமொன்றினூடு நூல்களைத் தமிழகத்திலிருது வாங்கி, நூலகங்களுக்கு விற்கின்றாராம். அது போல் மார்க்கம் நகரில் நூலகத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்திய நகரசபையின் தமிழ் உறுப்பினரும் இதுபோன்ற திட்டங்களுக்கு உதவி செய்வதாகத்தெரியவில்லை என்றும் திரு.மகேசன் கவலைப்பட்டுக்கொண்டார்.

தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை இங்குள்ள நூலகங்களின் கிளைகளுக்கு விற்பதற்கும், மேலதிகத் தமிழ் நூல்களை இங்குள்ள தமிழ் புத்தகக் கடைகளினூடு வாங்குவதற்கும் உரிய திட்டங்களைச் செயற்படுத்தினால் அத்திட்டங்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழ் புத்தகக்கடைகளுக்கும் மிகவும் உதவியாகவிருக்கும். அத்துடன் தமிழ்ப் பதிப்பகங்கள் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை, எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுத்து வாங்கி வெளியிடும் நிலையும் தோன்றும். உரியவர்கள் கவனிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.