தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாவலுக்கு சிறந்ததொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் தேவிபாரதி. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றினை நன்கு புரிந்துகொண்ட ஒருவராக அவரை இனங்காட்டுகிறது அந்த முன்னுரை. நாவலைப்பற்றிய அவரது திறனாய்வில் நாவலின் நாயகியான ராஜியை மணிமேகலையுடன் ஒப்பிட்டு, மணிபல்லவத்தில் (நயினாதீவில்) நடைபெறும் நாவலைச் சுட்டிக்காட்டியிருப்பது அவரது இலக்கியப்புலமையினைக் காட்டுகிறது. ஈழத்துத்தமிழ் இலக்கியக்களத்திலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் வெளிவந்திருக்கிறது 'கனவுச்சிறை' நாவல். அதனை எழுதிய எழுத்தாளர் தேவகாந்தன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தொன்றினையும், , நாவலின் இயற்கை வர்ணனையொன்றினையும் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

" ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தைத் தன் படைப்புக்கான பின்புலமாகக்கொள்ளும்போது அந்தக்காலகட்டத்தின் மிகமுக்கியமான சமூக அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய பதிவுகள் இடம் பெறுவது ஒரு ஒத்துக்கொள்ளப்பட்ட, வெற்றிகரமான இலக்கியக்கோட்பாடு. வரலாற்றின் வசீகரங்களிலிருந்து வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையை உருவாக்கியவர்கள் டால்ஸ்டாயும், மீகயில் ஷோலக்காவும் ஹெமிங்வேயும். 'புயலிலே ஒரு தோணி'யை முன்னிட்டு ப.சிங்காரம் இந்தப்பட்டியலில் சேரக்கூடியவர். கல்கி போன்றவர்கள் வரலாற்றின் வசிகரங்களை வணிக உத்தியாகப்பயன்படுத்திக்கொண்டார்கள். போர் அதன் இயல்பிலேயே மனித மனங்களைக்கிளர்ச்சியுறச்செய்வது. அந்தக் கிளர்ச்சியிலிருந்து தப்பிச்செல்வது எழுத்தாளன் முன்னுள்ள சவால். அந்தச் சவாலை எதிர்கொள்வதில் தேவகாந்தன் பெற்றுள்ள வெற்றியே இந்த நாவலை முக்கியமானதாகக்கருதச் செய்வதில் முதன்மையான பங்கு வகிக்கின்றது." (தேவிபாரதியின் முன்னுரையிலிருந்து)

 

நாவல் முழுவதும் இயற்கை வர்ணனைகள் நிறைந்து வாசிப்புக்குச்சுவையூட்டுகின்றன. உதாரணத்துக்கு ஒன்று கீழே:

" இருள் ஆரம்பித்த சிறிது நேரத்துக்குள்ளேயே பெரிய மஞ்சள் குடம்போல் நிலா தோன்றிவிட்டது. வானம் வெளுப்பாய் இருந்தது. வான இருளையெல்லாம் நிலா பூமி நோக்கித்தள்ளிக்கொண்டிருப்பதாகப்பட்டது... தென்னங்கிளைகளினூடு தெரிந்த நிலா மதுக்குடமென மருட்டியது. கண்டால் மயக்கும் மது அது..."

இதுவரை வாசித்த என் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் மண்வாசனை மகுந்த நாவலின் முக்கியமான அம்சங்களாக பாத்திரப்படைப்பு, சம்பவங்களின் கதைப்பின்னல், மொழி மற்றும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து வரலாற்றினை அக்காலகட்டத்தில் வாழும் மாந்தர்களின் இருப்பினூடு விபரிக்கும் கதைக்கரு போன்றவற்றைக் கூறுவேன். நீண்ட காலத்துக்குப்பின்னர் மனமொன்றி வாசிக்கும் நாவல் 'கனவுச்சிறை'


அண்மையில் நான் வாசித்த நூல்களிலொன்று சோ.பத்மநாதனின் 'தென்னிலங்கைக்கவிதை'...

சிறிய கைக்கடக்கமான நூல் 53 தென்னிலங்கைக்கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. இவை போன்ற மொழிபெயர்ப்புகள் பல்லினங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு மிகவும் முக்கியமானவை. அண்மைக்காலமாக சோ.பத்மநாதன், எம்.ரிஷான் ஷெரீப் போன்றவர்கள் இவ்விதமான மொழிபெயர்ப்புகளைச்செய்து வருவது பாராட்டுதற்குரியது. இந்நூலுக்கான அட்டைப்படத்தினை வரைந்திருப்பது ஓவியர் ஜீவன் (நந்தகுமார்). இத்தொகுப்பிலுள்ள பசில் பெர்னான்டோவின் 'நீதியான சமுதாயம்' கவிதையினைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

 

கவிதை: நீதியான சமுதாயம்.

ஆங்கில மூலம்: பஸில் பெர்னான்டோ | தமிழில்: சோ.பத்மநாதன்

நீ கட்டடங்களை எரித்தாய்.
ஆனால் என்னைச் சிறையுள் தள்ளினாய்.
நீ அவர்களுடைய குழந்தைகளை நெருப்புக்குள் வீசினாய்.
ஆனால் என்னை மனிதத்தன்மை அற்றவன் என்றாய்.
நீ பட்டப்பகலில் கொலைபுரிந்தாய்.
ஆனால் என்னை இரத்த வெறியன் என்றாய்.
நீ அயலவனை அகதியாக்கினாய்.
ஆனால் அதற்கு நான் பொறுப்பு என்றாய்.
நீ அவன் பாடுபட்டுச் சேர்த்த சொத்தைச் சூறையாடினாய்.
ஆனால் என்னைக் கள்ளன் என்றாய்.
நீ அவனைச் சிறையிலிட்டுக்கொன்றாய்.
ஆனால் எனக்கு மிருகம் என்று பட்டம் சூட்டினாய்.
நீ காடையர்களுடன் உறவாடினாய்.
நானோ பாதிக்கப்பட்டவர்களுடன் நட்புப் பூண்டேன்.
ஆனால் நீ என்னைக் குற்றவாளி ஆக்கினாய்.

என் பள்ளித்தோழனும்
என் நண்பனும் அயலானும்
என் குருவும் என் சகபாடியும்
செத்த போதோ
ஒளித்த போதோ
துரத்தும் கும்பலுக்குத் தப்பி ஓடியபோதோ
வெறுங்கையோடு
நாட்டை விட்டு ஓடிய போதோ
நானே துக்கித்தேன்.
துறைமுகத்தில் அவர்கள் கையைப்பற்றியபடி
நானே அழுதேன்.
அப்பாவிகளின் மீது
பழியைப்போட்டுக்கொண்டு
சமாதானம் என்கிறாய்..

குற்றவாளிகளைப் பாதுகாத்துக்கொண்டு
ஸ்திரத்தன்மை என்கிறாய்.
அறிக்கைகளை மறைத்துவிட்டு
நேர்மை என்கிறாய்.
விசாரணைகளை மூடுமந்திரமாக்கிக்கொண்டு
வெளிநாடுகளிடையே பொய்ப்பிரச்சாரம் செய்தபடி
பிளவுண்டு காயப்பட்ட நாட்டை
நீ எள்ளி நகையாடுகிறாய்.

நீ அயர்ந்து தூங்குகிறாய்.
எனக்கு உறக்கம் வருகுதில்லை.
நீ வயிறார உண்ணுகிறாய்.
எனக்கு உணவு பிடிக்கவில்லை.
உனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.
நான் நண்பர்களை இழந்து விட்டேன்.
நீ வென்றுவிட்டதாகக் கருதுகிறாய்.
ஆனால்
தோல்வியின் வடுக்களோடும்
அவமதிப்பின் ஞாபகங்களோடும்
நான் வாழவேண்டியவன் என்பது
எனக்குத்தெரியும்

 


மறக்க முடியாத மரச்சிற்பம்!

amma59.jpg - 15.14 Kb

என் அம்மாவின் மறைவின்போது 'தாய்வீடு' பத்திரிகை ஆசிரியரும், நாடகக்கலைஞருமான பி.ஜெ.திலிப்குமார் இங்குள்ள ஒட்டுப்பலகையிலான கலைப்படைப்பைத்தந்து வியப்படைய வைத்தார். புகைப்படமொன்றை புகைப்படப்பிரதியெடுத்து அதனைப்பின் ஒட்டுப்பகையில் (Plywood) வெட்டுவதன்மூலம் உருவாக்கிய மரச்சிற்பமென்று இதனைக்கூறலாம். இவ்வளவு காலமும் என்னிடமிருந்த இந்தப்படைப்பினை அண்மையில் என் கடைசித்தங்கை விரும்பிக்கேட்டதால் அவருக்குக்கொடுக்க இருப்பதால் அதற்கு முன் இதனைப்பதிவு செய்வதற்காக என் மூத்த மகள் மூலம் எடுத்த புகைப்படமிது. இதனைத்தானாகவே நினைத்து, உருவாக்கி எனக்கு அம்மாவின் ஞாபகமாக இருக்கட்டுமேயென்று தந்த திலிப்குமாரின் நல்ல உள்ளத்துக்கு நன்றி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.