வாசிப்பும், யோசிப்பும் 95: சமகால ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய பென்குவின் (இந்தியா) தொகுப்பு பற்றி....அண்மையில் French Insititute of pandicherry மற்றும் 'பென்குவின் (இந்தியா) அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருந்த Time will write A SONG for you என்னும் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை உள்ளடக்கிய நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந் நூலைப் பற்றி முன் அட்டையில் Contemporary Tamil Writing from Sri lanka  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி தொகுப்பிலுள்ள படைப்புகளுக்குச் சொந்தக்காரர்களின் எழுத்துத்திறமை பற்றிய சந்தேகம் எதுவும் எனக்கில்லை. அவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்கள். ஆனால் இத்தொகுப்பு தொகுக்கப்பட்ட விதம் மிகவும் ஆச்சரியத்தையும், தொகுப்பின் தரம் பற்றிய சந்தேகத்தினையும் எழுப்புகிறது.

தொகுப்பில் மொத்தம் 68 படைப்புகள் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என) உள்ளன. அவற்றில் கீழுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் முப்பதுக்கும் அதிகமானவையாக இருக்கின்றன: வ.ஐ.ச. ஜெயபாலன், சிவரமணி, பா.அகிலன், கருணாகரன், சு.வில்வரத்தினம், எஸ்.விநோதினி, எஸ்.செழியன், கி.பி.அரவிந்தன், போஸ் நில்கலே, வி.கெளரிபாலன், நிலாந்தன், மஜீத், ஃபகீமா ஜகன், சண்முகம் சிவலிங்கன்

ஶ்ரீலங்காத்தமிழரின் சமகால எழுத்து என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பிலுள்ள 68 படைப்புகளில் முப்பதுக்கும் அதிகமானவை மேலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளே. இவர்களின் ஒன்றுக்கும் அதிகமான பல படைப்புகளைத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

சமகாலம் என்று இத்தொகுப்பாளர்கள் குறிப்பிடுவது மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து இன்று வரையிலான காலம் என்று நான் அர்த்தப்படுத்திக்கொள்கின்றேன். ஏனேனில் மறுமலர்ச்சிக் காலகட்டத்திலிருந்து எழுதத்தொடங்கிய மஹாகவியின் கவிதை தொடக்கம், நிலாவணன், சு.வில்வரத்தினம், டொமினிக் ஜீவா என்று பல படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுப்பு உள்ளடக்கியிருப்பதால் இத்தொகுப்பாளரின் அர்த்தத்தில் சமகாலம் என்பதற்குரிய காலகட்டத்தை அவ்வாறுதான் கருத வேண்டும். அவ்வாறு கருதுப்பட்சத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில் எத்தனை படைப்பாளிகள் ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். அறிஞர் அ.ந.கந்தசாமி, இலங்கையர்கோன், எஸ்.பொ, வ.அ.இராசரத்தினம், தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், சொக்கன்,  செம்பியன் செல்வன், வேந்தனார், கவிஞர் கந்தவனம், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி,தேவகாந்தன், செல்வி, அவ்வை, சட்டநாதன், சாந்தன், தாளையடி சபாரத்தினம், சி.வைத்திலிங்கம், திக்குவல்லை கமால், அ.செ.முருகானந்தன், பித்தன், சுதாராஜ், செ.கதிர்காமநாதன், செ.கணேசலிங்கன்.. என்று பல எழுத்தாளர்களின் படைப்புகள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றன.

ஒரு சில எழுத்தாளர்களின் பல படைப்புகளால் தொகுப்பினை நிறைத்திருப்பதற்குப்பதில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களைப்போன்ற எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைத்தொகுப்பில் சேர்த்திருக்கலாமே. இவ்வளவுக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகள், படைப்புகளை உள்ளடக்கிய தொகுதிகள் பல தமிழகத்தில் மித்ர பதிப்பகம், காந்தளகம், குமரன் பப்ளிஷ்ரஸ்,  ஸ்நேகா பதிப்பகம், அடையாளம் போன்ற பல பதிப்பகங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மேற்படி தொகுப்பினைத் தொகுத்த தொகுப்பாளர்கள் மேற்படி தொகுப்பின் உருவாக்கத்திற்காக அவர்களுக்கு நிதியுதவி அளித்த நிறுவனங்களின் நம்பிக்கையினைச் சிதற அடித்திருக்கின்றார்கள். எந்த விதமான அர்ப்பணிப்புடன் கூடிய ஆய்வும் இல்லாமல், கிடைத்த நிதிக்கு வேலை செய்தோம் என்று காட்டுவதற்காக கிடைத்த சில படைப்புகளை மட்டும வைத்து பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். இதற்கு இவ்வளவு தொகுப்பாளர்கள்தாம் எதற்கு?

மேலும் தொகுப்பில் தென்பட்ட சில குறைகளாகப் பின்வருவனற்றைக்குறிப்பிடலாம்:

காலச்சுவடு நிறுவனம் மு.தளையசிங்கத்தின்  படைப்புகள் அனைத்தையும் திரட்டி வெளியிட்ட தொகுப்பில் எத்தனையோ முக்கியமான படைப்புகள் இருக்க, அத்தொகுப்பிலிருந்து முக்கியத்துவமற்ற படைப்பொன்றினைத்தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.

சமகால ஈழத்துக் கவிதைக்கு வளம் சேர்த்த கவிஞர் சேரனின் இரண்டாவது சூரிய உதயம் போன்ற பல நல்ல கவிதைகள் உள்ளன. அவரது ஒரேயொரு கவிதையினை மட்டும் தொகுத்த தொகுப்பாளர்கள் எழுத்தாளர்களின் சிலரின் படைப்புகள் பலவற்றைத் தொகுப்பில் இணைத்திருப்பது ஏன்?

மேலும் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களும் கவனத்தைக் கவர்ந்தன.

நவீன ஈழத்தமிழ் இலக்கியத்தைத் தொகுப்பாளர்கள் பின்வரும் கட்டங்களாக வகுத்துள்ளார்கள்:

1. ஈழகேசரி காலகட்டம் (1930 -1958)

2. மறுமலர்ச்சிக் காலகட்டம் (1946-1948)

3. தினகரன் காலகட்டம் (1932 - )

ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி முறையான அறிவற்றவர்கள் தொகுப்பாளர்களின் என்பதையே மேலுள்ள கால கட்டங்கள் புலப்படுத்துகின்றன.

மேலும் ஈழத்து முற்போக்கு இலக்கியமானது பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாக மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஈழத்து முற்போக்கு இலக்கியத்தை கே.கணேஷ், அறிஞர் அ.ந.க போன்ற முன்னோடிகள் முன்னெடுத்தபொழுது பேராசிரியர் கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் மாணவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் வளர்ந்து பட்டம் பெற்றபின் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தை தத்துவார்த்தரீதியில் மேலும் வளம் படுத்தியவர்கள் என்று கூறலாமே தவிர ஒட்டு மொத்தமாக அவர்கள்தாம் முன்னெடுத்தார்கள் என்று கூற முடியாது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகள் பலர் மறைந்துவிட்ட நிலையில் தற்போது வாழும் அல்லது அண்மையில் மறைந்த முற்போக்கு எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள் சிலவற்றையும் அண்மையில் வாசித்தபொழுது அவர்களும் இவ்வாறே முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகள் பலரை இருட்டடிப்பு செய்து தம்மை மட்டுமே பிரபல்யப்படுத்தியிருந்த போக்கினைக் கண்டு வியப்பினையே அடைந்தேன்.

அண்மைக்காலமாகவே 'காலம்' செல்வம் ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு அதிக பங்களிப்பு செய்த கவிஞராக அடையாளம் காணப்பட்டு தொகுப்புகளில் இடம்பெற்று வருகின்றார். இந்தத்தொகுப்பிலும் அவரது கவிதையொன்று இடம் பெற்றிருக்கின்றது.

இத்தொகுப்பின் தொகுப்பாளர்கள்:

Kannan M.

Rebevcca Whittington

D.Senthil Babu

David C.Buck

தொகுப்பாளர்களே 'இலகுவாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வருவது எவ்விதம்?' என்பதை இத்தொகுப்பின் மூலம் அறியத்தந்ததற்கு நன்றி.