வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

நேற்று குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூல் வெளியீடு நிகழ்வுக்குத். தவிர்க்க முடியாத காரணங்களினால் செல்ல முடியவில்லை. நண்பரும் எழுத்தாளருமான தேவகாந்தன் சென்றிருந்தார். எனக்கும் ஒரு பிரதி வாங்கி வருமபடி கூறியிருந்தேன். அதனைப்பெற்றுக்கொள்ள நேற்றிரவு அவர் இருப்பிடம் சென்றிருந்தேன். சிறிது நேரம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். நூல் வெளியீடு, முகநூல், தமிழகத்தில் அவரது அனுபவங்கள் என்று பல்வேறு விடயங்கள் உரையாடலில் வந்து போயின.

நா.பா.வின் மணிபல்லவம் நாவலைச் சுருக்கி வைத்திருப்பதாகக் கூறினார். தனக்கு ஒரு காலத்தில் பிடித்த நாவலது என்றார். இப்பொழுது வாசிக்கும்போது அன்றிருந்த பிடிப்பு ஏற்படுவதில்லை என்றார். சிலப்பதிகாரம் போல் மணிபல்லவம் நாவலுக்கு ஒரு சிறப்புண்டு. அக்காலத்து மக்களை மையமாக வைத்து உருவான நாவலது. எனக்கு நா.பா.வின் தமிழ் பிடிக்கும். அக்காலகட்டத்தில் அவரது பொன்விலங்கு நாவலின் 'பைண்டு' செய்யப்பட்ட பிரதியொன்று என்னிடமிருந்தது. இலட்சிய வேட்கை கொண்ட நாயகனான சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் கிராமத்து ஆசிரியர் வேலைக்கான நேர்முகப்பரீட்சைக்காகச் செல்வதுடன் ஆரம்பமாகும் நாவலின் இடையில் வரும் கருத்தாழம் மிக்க வசனங்களை அப்போது விரும்பி வாசிப்பதுண்டு. இன்று அக்காலகட்டத்தில் வாழ்வில் இன்பமேற்றிய நினைவுச்சின்னங்களாக அன்று வாசிப்பில் இன்பம் தந்த நூல்கள் விளங்குகின்றன.

மானுட வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் பல்வேறு  வகையான விருப்பங்கள், உணர்வுகள். அவற்றுக்கேற்ப பல்வேறு வகையான நூல்கள் அப்பருவங்களில் பிடித்துப்போவதுண்டு. காமிக்ஸ் உலகில் மூழ்கிக் கிடந்ததுண்டு; மர்ம நாவல்களில் மெய்ம்மறந்திருந்ததுண்டு; வெகுசனப் படைப்புகளில் ஆழ்ந்திருந்ததுண்டு. பின்னர் வாசிப்பின் பரிணாமத்திற்கேற்ப பிடிக்கும் நூல்களின் தன்மை மாறிவிட்டபோதும் அவ்வப்போது அழியாத கோலங்களாகக்கடந்தகால வாசிப்புக்குத் தீனி போட்ட நூல்கள் சிந்தையில் தோன்றி இனிப்பதுண்டு. அதனால்தான் எல்லாவகையான எழுத்துகளுக்கும் மானுட வாசிப்ப்பில் இடமுண்டு என்பதென் கருத்தாக இருக்கின்றது.

இன்னுமொரு விடயத்தையும் தேவகாந்தன் குறிப்பிட்டார். அவர் ஒரு புனைவினை அதன் மொழியினை மையமாக வைத்தே அணுகுவதாக. இந்த விடயத்தில் என் அணுகு முறை வேறானது. ஒரு படைப்பின் சிறப்புக்கு மொழி, பாத்திரப்படைப்பு, கூறும் பொருள், உரையாடல், கதைப்பின்னல் போன்ற பல அம்சங்களே முக்கியமானவையென்பதென் எண்ணம். சில படைப்புகள் மொழியில் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் ஏனைய விடயங்களில் மிகவும் சிறப்பாக இருக்கலாம்.  சில படைப்புகள் கூறும் பொருளுக்காக எனக்குப் பிடிப்பதுண்டு; இன்னும் சில கதைப்பின்னலுக்காகப்பிடிப்பதுண்டு; வேறு சிலவோ பாத்திரப்படைப்புக்காக நெஞ்சினைக்கவர்வதுண்டு.

குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூலினை மேலோட்டமாக வாசித்தேன். ஒரு படைப்பினை முதலில் மேலோட்டமாக வாசிப்பேன்; பின்னர் ஆறுதலாக வாசிப்பேன். இது என்னுடைய வாசிப்புப் பழக்கம். முதல் வாசிப்பில் 'விடமேறிய கனவு' முள்ளிவாய்க்கால் அழிவுக்குப்பின் கைது செய்யப்பட்டு விசாரணக்குட்பட்டிருந்த முன்னாள் போராளிகளின் வாழ்வை விபரிப்பது என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. விசாரணை பல்வேறு பிரிவுகளால (இராணுவ அதிகாரிகளால், புலனாய்வுப்பிரிவினரால் என) நடைபெற்றதையும், அவை மேற்கொண்ட விதத்தையும், பிரயோகிக்கப்பட்ட வதைகளின் தன்மையினையும் எனப்பல்வேறு விடயங்களைப்பதிவு செய்கின்றது 'விடமேறிய கனவு'.

ஆனால் வாசிக்கும்போது ஒரு சந்தேகம் தோன்றியது. அன்று கதை சொல்லிக்கு ஏற்பட்ட அனுபவங்களை இன்று பதிவு செய்யும்பொழுது, தேவைக்கதிகமாக நாவலின் இடையிடையே கதைசொல்லி தனது இன்றைய அக்காலம் பற்றிய கருத்துகளையும் சேர்த்துப்பதிவு செய்திருக்கின்றாரோ என்ற சந்தேகமே அது. நாவலின் அடுத்தகட்ட வாசிப்பின் பின்னரே இதுபற்றியொரு தீர்மானத்துக்கு வரமுடியும்.

எழுத்தாளர் தேவகாந்தன் அயராது தொடர்ந்தும் எழுதியும் , வாசித்தும் வருகின்றார். அவருடன் கலந்துரையாடுவது ஆரோக்கியமானது. அவரது இலக்கியப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.