- இதுவரை 'மனப்பெண்' என்னும் பெயரில் வெளியான தொடர்நாவலின் பெயர் 'பால்ய காலத்துச் சிநேகிதி' என்று மாற்றப்பட்டுள்ளது. - பதிவுகள்.


மறுநாள் அதிகாலையில் நேரத்துடனேயே விழித்து விட்டான் மணிவண்ணன். சந்திரமதி என்ன பதிலைத்தரப்போகின்றாளோ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அவள் மட்டும் எதிர்மறையானப் பதிலைத்தந்தால் என்ன செய்வது என்றும் சிந்தித்துப்பார்த்தான். பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதே சரியானது என்றும் முடிவு செய்தான். அவள் மட்டும் சம்மதிக்காவிட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமாகத்தானிருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்திக்கொண்டே செல்ல வேண்டியதுதான். இவ்விதமாகத் தன் மனத்தைத் திடமாக்கிகொண்டான் மணிவண்ணன். மகாகவி பாரதியாருக்கே காதல் கை கூடவில்லை. அதற்காக அவர் துவண்டா போய்விட்டார் என்று எண்ணினான். இவ்விதமாக மனோதிடத்தை வளர்த்துக்கொண்டு டியூசன் வகுப்புக்குச் சென்றான். அவன் சென்றபோது யாருமே வந்திருக்கவில்லை. வாசலில் காத்திருந்தான். வழக்கமாகச் சந்திரமதி முதலாவதாக வருவாள். வந்ததும் வீட்டின் பிரதான வாசலினூடு உள்ளே சென்று டியூசன் வகுப்பு மாணவர்கள் செல்வதற்கான வாசற் கதவைத் திறந்துவிடுவாள். இன்று இன்னும் அவளையும் காணவில்லை. இவ்விதமாகக் காத்துநிற்கையில் தூரத்தில் சந்திரமதி ஆடி, அசைந்து வருவது தெரிந்தது. மணிவண்ணனுக்கு நெஞ்சு படக்படக்கென்று அடிப்பதும் தெளிவாகக் கேட்டது. அதுவரையிருந்த மனோதிடம் அவனை விட்டுப் பறக்கச் சிறகடிக்கத்தொடங்கியது. இதற்கிடையில் சந்திரமதி அருகில் வந்துவிட்டாள். அவனை  ஓரக்கண்களால் நோக்கியபடியே மெலிதாகப்புன்னகையினைத் தவளவிட்டாள். எதுவுமே நடக்காததுமாதிரி உள்ளே சென்றாள். அவள் அவனுக்கு முதுகைக்காட்டியபடி உள்ளே சென்றபோது அவன் அவளது கூந்தலை ஆவலுடன் நோக்கினான். அது மல்லிகையற்று வெறுமையாகக்கிடந்தது. அவனது மனத்தில் ஒருவித ஏமாற்ற உணர்வு மேலெழுந்தது. இதற்கென்ன அர்த்தமென்று ஒருவித நப்பாசையுடன் மனம் கேட்டது. இன்னுமா உனக்கு நப்பாசை. அவள்தான் தெளிவாக உனக்குப் பதிலைக் கூறிவிட்டாளேயென்றும் கூடவே அதே மனம் கேட்டது.

மணிவண்ணனுக்கு இனியும் டியூசன் வகுப்புக்குச் செல்வதா என்றோர் உணர்வு எழுந்தது. அவளே மிகவும் இயல்பாக அவனது செயலை உள்வாங்கி, புன்னகைத்தபடி செல்கையில் தான் ஏன் எதற்குக் கலங்க வேண்டுமென்று எண்ணினான். நடந்ததைக் கனவாக எண்ணி மறந்துவிட வேண்டியதுதான் என்று திடமாக முடிவு செய்தா. இச்சமயத்தில் உள்ளிருந்து சந்திரமதி வந்து கதவைத்திறந்து விட்டாள். அவளுக்கு நன்றி கூறியவாறே அவளைத்தொடர்ந்தான். வகுப்பில் அவனும் , அவளும் மட்டுமே இருந்தார்கள். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கடைசி நேரத்தில்தான் மற்றவர்கள் அரக்கப் பரக்க வருவார்கள். சேவற்கொடியோன் மாஸ்ட்டரும் சரியான நேரத்துக்குத்தான் வருவார்.

மணிவண்ணனின் மனத்தில் பல்வகை எண்ணங்களும் தலைவிரித்தாடின. அவள் தனியாகவிருக்கின்றாள். வேறு மாணவர்களும் இன்னும் வந்திருக்கவில்லை. அவளிடமே கேட்டுப்பார்க்கலாமா என்று எண்ணினான். மனத்தில் திடத்தை வரவழைத்துக்கொண்டு மெல்லிய குரலில் அவளை நோக்கிக் கூறினான்:

"சந்திரமதி, என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள்"

அவள் சடாரென்று திரும்பினாள்.

"மணிவண்ணன், இந்த வயசிலை மனத்தைப்போட்டிக் குழப்பிக்கொள்ளாதீங்க. எங்களுக்குச் செய்ய வேண்டியவை நிறைய இருக்கு. படிப்பிலை கவனத்தைச் செலுத்துங்கோ. கெட்ட கனவாக நினைச்சு மறந்திடுங்கோ. நான் அதைத் தவறாக நினைக்கேலை."

இவ்விதம் அவள் கூறி முடித்தாள். மணிவண்ணன் ஒருகணம் திகைத்தே போனான். அவன் நிச்சயமாக இவ்விதமாகச் சந்திரமதி கூறுவாளென்று நினைத்தே பார்த்திருக்கவில்லை. எப்பொழுதும் அமைதியாக வந்து போகும் சந்திரமதியா இவ்விதம் தெளிவாக, நிதானமாகக் கதைக்கின்றாள் என்று வியந்து போனான். வேறொரு பெண்ணென்றால் இவ்விடயத்தைப் பெரிதாக்கி அவனைத்  தலைகுனியச் செய்திருக்கக் கூடும். ஆனால் சந்திரமதி அவ்விதம் செயற்படவில்லை. அதுவே ஒருவித நிம்மதியைத்தந்தது.

"சந்திரமதி, உங்களுக்கு நல்ல மனசு. தாங்ஸ்" என்றான். இச்சமயம் அவள் அவனிடம் அவன் எழுதிக்கொடுத்திருந்த கடிதத்தைக் கொடுத்தாள்.  கூடவே கூறினாள்: "உங்களுக்கு நன்றாக எழுத வருகுது. நிறைய எழுதலாமே"

அவன் அக்கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டான். இச்சமயத்தில் ஏனைய மாணவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

அன்று முழுவதும் அவனது சிந்தனையில் சந்திரமதியே வலம் வந்துகொண்டிருந்தாள். அவள் இறுதியாக கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தன. "உங்களுக்கு நன்றாக எழுத வருகுது, நிறைய எழுதலாமே". அதுவரையில் அவன் கதைகள் என்று ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் அவன் தீவிர வாசிப்பாளன். அவனுக்குள் ஒரு சிந்தனை எழுந்தது. ஏன் அவள் கூறுவதுபோல் எழுதக்கூடாது? என்று எண்ணமொன்றும் எழுந்தது. அன்றிரவே அச்சம்பவத்தை மையமாக வைத்துச் சிறுகதையொன்றினை எழுதினான். 'முதற்காதல்'என்றும் தலைப்பும் வைத்தான். அதனை  யாழ்ப்பாணத்தில் அப்போது வெளியாகிகொண்டிருந்த 'வாரச்சுடர்' என்னும் வாரப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான். அக்கதையில் அவன் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டி வைத்தான். அக்கதையின் நாயகனான பதின்ம வயதுச் சிறுவனின்  காதல் கடிதத்தைப் பதின்ம வயதுப்பெண்ணொருத்தி எவ்விதம் கையாளுகின்றாள் என்பதையொட்டியே அச்சிறுகதை அமைந்திருந்தது. அச்சிறுகதையை எழுதி முடித்தபோது அவனது நெஞ்சிலோர் இன்பகரமான உணர்வு மேலெழுந்தது. அவனுக்கு நிஜத்திலேற்பட்ட ஏமாற்ற உணர்வுகள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. சந்திரமதி அவனுள்ளத்தை வியாபித்திருந்தாள். ஆனால் அவள் மீதான அவனது காதல் அழிந்துவிடுமென்று அவன் நினைக்கவில்லை. அது தன்பாட்டில் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டுமென்று எண்ணினான். ஆனால் அந்தக் காதல் அனுபவம் அவனுக்குத்தந்த உணர்வுகள் முக்கியமாக அவனுக்குப் பட்டது.  மனித வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்களும், உணர்வுகளும் தேவை என்றெண்ணினான். இவையுமில்லையென்றால் வாழ்க்கை வெறுமையாகவிருந்து விடுமென்றும் எண்ணினான். மீண்டுமொருமுறை தன்னை எண்ணிப்பார்த்தான். இந்த அனுபவத்தால் உண்மையில் நன்மையே விளைந்திருந்தது என்றே அவனுக்குத் தோன்றியது. அவனிடமிருந்த எழுத்துத்திறமையினை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. எழுதுகையில் ஏற்படும் இன்பத்தை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. அவற்றை உணர்த்தி வைத்தது அந்தக் கடிதமும், அவள் அதை எதிர்கொண்டு செயற்பட்ட விதமும்தான். அந்தச்சிறிய பெண் எவ்வளவு பெருந்தன்மையுடன் அச்சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு , மிகவும் இயல்பாக அதனைக் கையாண்டிருக்கின்றாள்! கூடவே அவனுக்குமொரு வழியினைக் காட்டியிருக்கின்றாள். ஆக்கபூர்வமான வழியது. அவனிடமிருந்த திறமையினை அறிந்து அவனுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றாள். அவனுக்கு உண்மையில் மகிழ்ச்சியாகவிருந்தது.

மறுநாள் இதுபற்றிக் கேசவனிடமும் கூறினான். அதற்கு அவனும் அவளது ஆரோக்கியமான எதிர்வினையை எண்ணி வியந்தான்.

"மணி, உண்மையில் நான் பயந்துகொண்டிருந்தன் ஒருவேளை அவள் உனது கடித்தத்தை ஏற்காவிட்டால்  நீ என்ன செய்யப்போகின்றாயோ என்று. ஆனால் அவளும் தெளிவாக இதைக் கையாண்டிருக்கிறாள். நீயும் அதை இயல்பாக ஏற்றிருக்கின்றாய். உனது எழுத்துத்திறமையையும் அவள் உனக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றாள். மொத்தத்திலை இதாலை நல்லதுதான் கிடைச்சிருக்கு"

"உண்மைதான் கேசவன். இந்தக்கடிதத்தை நான் எழுதியிருக்காவிட்டால் எனக்கே என் எழுத்துத்திறமையிலை நம்பிக்கை வந்திருக்குமோ தெரியாது. நேற்று ராத்திரியே இச்சந்தர்ப்பத்தை வைத்துச் சிறுகதையொன்றும் எழுதி வாரச்சுடருக்கு அனுப்பியிருக்கிறன். அது மட்டும்  பிரசுரமானால் தொடர்ந்தும் எழுதுவதாகப் பிளான் இருக்கு."

"மணி இந்த விடயத்தை நீ ஏற்றுக்கொண்ட விதம் எனக்குப் பிடிச்சிருக்கு. பொசிட்டிவாக நடந்துகொண்டிருக்கிறாய். இன்னுமொன்று உனக்குச் சொல்ல வேண்டுமென்று இருந்தனான். இப்பத்தான் நினைவுக்கு வந்தது."

"என்ன? என்ன விசயம்?  சொல்லுடா?"

"வன்னியிலை , நெடுங்கேணிப்பக்கம் , எல்லையிலை எங்களுக்கு காணியொன்று இருக்கு. நாங்களும் இதுவரையில் அதை முறையாகப் பாவித்ததில்லை. ஏ.லெவல் டெஸ்ட் எடுத்தபிறகு , ரிசல்ட் வந்து ஒரு வேளை யுனிவெர்சிட்டி கிடைச்சாலும் அதற்கு ஒன்றரை வருசம் இருக்கு, அதுவரையில் என்ன செய்யுறது. சும்மாத்தானே இருக்கப்போறம். அப்பா சொன்னவர் ஏன் அந்தக்காணியைத் துப்புரவு செய்து வயலுக்கு அல்லது ஏதாவது விசயத்துக்குப் பாவிக்கக் கூடாது என்று. மற்றது அப்பா சொன்னவர் எல்லையிலை இருக்கிற எங்கட மண்ணைப்பாவிக்காமல் விட்டால் , அதையெல்லாம் காலப்போக்கில் இழந்துவிடலாம். சும்மா இருக்கிற உங்கட பொழுதையும் பிரயோசனமாக்கலாம்தானே என்று. எனக்கும் அது சரியென்றுதான் பட்டது. நீ என்ன சொல்லுறாய் மணி"

இயற்கை வளம் கொழிக்கும் சூழல் எப்போதுமே மணிவண்ணனுக்குப் பிடித்தமானது. அவனுக்கும் கேசவன் கூறியது சரியாகவே பட்டது.

"எனக்கும் நீ சொல்லுவது சரியாகவே படுகிறதடாம் கேசவா. உங்கள் அப்பா சொல்லுறதுதான் சரி"

இவ்விதம் மணிவண்ணன் கூறவும் கேசவனுக்கும் அது மகிழ்ச்சியைத்தந்தது.

"நீயும் சும்மாத்தான் இருக்கப்போகிறாய். விருப்பமென்றால் நீயும் என்னோடை அங்கு வரலாமே. இரண்டும் பெருமாகச் சேர்ந்து காணியைப்பாவித்து ஏதாவது உழைக்கப்பார்க்கலாமே."

மணிவண்ணன் கேசவன் இவ்விதம்  கூறவும் அதுபற்றிச் சிறிது நேரம் சிந்தித்துப்பார்த்தான். அவன் கூறுவதுபோல் ஏன் அவனும் கேசவனுடன் அவனது வன்னிக் காணிக்குச் செல்லக்கூடாது என்றும் எண்ணினான்.

"கேசவா, எனக்கும் உன்னுடன் வர விருப்பம்தான். எதுக்கும் அம்மாவிடம் கேட்டுப்பார்க்கிறன். இங்கை அம்மாவும் தங்கச்சியும் தனிய இருக்கினம். அப்பாவும் வவுனியாவிலை வேலை. நானும் அங்கு வந்தாலும், அவ்வப்போது இங்கை வந்து வந்து  போகலாம்தானே.. "

"நீ விரும்பின நேரத்திலை வந்து வந்து போகலாம். பெரிய தூரமில்லைதானே. எதுக்கும் அம்மாவிட்ட கேட்டுச் சொல்லு"

மேலும் சில நாட்கள் ஓடி மறைந்தன. அடுத்த வார வாரச்சுடரில் அவனது சிறுகதை 'காதற் கடிதம்' வெளியாகியிருந்தது. அவனுக்கு மகிழ்ச்சியைத் தாள முடியவில்லை. துள்ளிக்குதிக்கவேண்டும் என்பது போலோர் உணர்வு. முதன் முதலாக அவனது உணர்வுகளை வடித்தெழுதிய சிறுகதையை ஓவியத்துடன் அச்சில் காண்கையிலுள்ள இன்பமே தனி என்று தோன்றியது.  'காதற்கடிதம் இப்படியுமொரு வழியைக் காட்டுமா?' என்று திகைப்பும் ,களிப்புமடைந்தான். அக்கதையில் காதற்கடிதம் எழுதித்தோல்வியுற்ற ஒருவன் எழுத்தாளனாக உருவாகின்றான் என்பது விபரிக்கப்பட்டிருந்தது. காதல் கடிதத்தை நிராகரித்த அப்பெண்,  அக்கடிதத்தின் எழுத்து வளமையைச் சுட்டிக்காட்டி, எழுதுபவனை எழுத்தாளனாக்கியதாகக் கதை பின்னப்பட்டிருந்தது. அவனது கதையில் மட்டுமல்ல , நிஜ வாழ்க்கையிலும் அவனது காதற்கடிதம் அவனை எழுத்தாளனாகவும் உருவாக்கியுள்ளது. அந்தக் கதையே அந்த நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தானே. எழுத்தாளர்கள் பலரின் நாவல்களில் அவர்களின் சொந்தக் வாழ்க்கைக்கூறுகளிருப்பதை அவன் அவை பற்றிய திறனாய்வுகள் மூலம் அறிந்திருக்கின்றான். சொந்த வாழ்க்கை அனுபவங்களையொட்டிப் புனைகதையைப் பின்னுகையில் எழுதுபவனால் நிஜ வாழ்வின் ஏமாற்றங்களையெல்லாம் எழுத்தின்பமாக மாற்றிவிட முடிகின்றது என்றோர் எண்ணமும் கூடவே எழுந்தது.

இதற்கிடையில் அவன் கேசவனுடன் சிறிது காலம் வன்னிக்குச் சென்று வாழ்ந்திட முடிவு செய்தான். உயர்தர வகுப்புப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வர இன்னும் காலமிருந்தது. அதற்குள் கேசவனுடன் செல்வது பயனுள்ளதாக அமையுமென்ற எண்ணமும் அவனது முடிவுக்கு வலுச்சேர்த்தது. அவனது காதல் உணர்வுகள் அவனை எழுத்தாளனாக்கின. அது போல் கேசவனுடனான் வன்னி வாழ் அனுபவங்களும் அவனுக்கு மிகுந்த பயனைத் தருமென்ற எண்ணத்தில் அவனுக்கு நம்பிக்கை மிகுந்திருந்தது. அந்த நம்பிக்கையுடன் அவன் தன் வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கத்தயாரானான்.

- முதற்பாகம் முடிந்தது. அடுத்த பாகம் விரைவில் தொடங்கும். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இதுவரை வெளியானவை:

அத்தியாயம் 1 - அதிகாலையில் பூத்த மலர்! : https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6121--q-q-

அத்தியாயம் 2 - காதல் கடிதம்! : https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6137--2-sp-1055003491

அத்தியாயம் 3 - நித்திராதேவியின் தழுவலில் தன்னை  மறந்த காளை! . https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6175-3-sp-650409439

அத்தியாயம் 4 - காளையின்  காதல் உணர்வுகள்! : https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6220-4-sp-618737437

அத்தியாயம் 5 - நினைவில் நிறைந்தவள்! : https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6236-5-sp-632278395