எழுத்தாளர் ஷோபசக்திதற்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஷோபா சக்தியின் எழுத்து மிகவும் வலிமையானது. ஷோபாசக்தி சிறந்த கதைசொல்லி என்றாலும், அவரது படைப்புகளில் பாவிக்கப்படும் மொழியே அக்கதை சொல்லலில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்த வலிமையான மொழியே அப்படைப்புகளில் வரும் பாத்திரங்களை முதல் வாசிப்பிலேயே நீண்ட காலத்துக்கு மறக்க முடியாதபடி செய்து விடுகின்றது. தனிப்பட்டரீதியில் நான் இவ்வகை மொழியின் உபாசகனல்லன். எனக்குத் தெளிந்த நீரோடை போன்ற , சிக்கலான விடயங்களையும் சிந்திக்க வைக்கின்ற எழுத்து நடையே விருப்பத்துக்குரியது. டால்ஸ்டாய், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள மொழி எனக்கு விருப்புக்குரியது. ஷோபா சக்தியின் மொழி எனக்கு யூதரான ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்', வால்டேயரின் 'கண்டிட்', ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' போன்ற நாவல்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழியினை நினைவு படுத்தும்.

இவர்களது படைப்புகளிலெல்லாம் பாத்திரங்கள் அடையும் அனுபவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டிருக்கும், பாத்திரங்கள் அடையும் வேதனை , வலி வாசிக்கும் வாசகர்களையும் நீண்ட நாட்கள் ஆட்கொண்டிருக்கும், அந்த வேதனை, வலியை நான் விரும்புவனல்லன். அதனால்தான் இவ்விதமான வலியினைத் தரும் படைப்புகள் சிறந்த படைப்புகளாகவிருந்தபோதும் நான் அவற்றின் உபாசகன் அல்லன். என் அபிமான எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பது போல் என்னால் இவ்வகையான , வலியினைத்தரும் படைப்புகளை வாசிக்க முடிவதில்லை. மீண்டும் வாசித்தால் ஏற்படும் வலி நீங்க மேலும் பல நாட்கள் எடுக்கும் என்னும் அச்சமே அதற்கு முக்கிய காரணம். அண்மையில் ஷோபா சக்தியின் 'BOX கதைப்புத்தகம் வாசித்தபோது இதனை மீண்டுமுணர்ந்தேன். இதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி வலி தருவது. ஆனால் அந்த மொழியே ஷோபாசக்தி என்னும் கதைசொல்லியின் பலம்.

ஷோபாசக்தியின் 'பொக்ஸ்'

சாதாரணமாக வானில் பவனி வந்து போகும் ,மனத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் நிலவைக்கூட மறக்க முடியாத வகையில் செய்து விடுகின்றது ஷோபாசக்தியின் மொழி. எல்லோரும் வெண்ணிலவின் பேரழகை, தண்ணிலவைப் பார்த்திருக்க , ஷோபாசக்தியோ நிலவை இன்னுமொரு கோணத்தில் அணுகுகின்றார். தன்னைச்சுற்றி நடைபெறும் நிகழ்வுகளுக்குச் சாட்சியாக நிற்கும் நோக்கில் அதனை அணுகுகின்றார். நிலவே நீ சாட்சி என்றொரு தமிழ்த்திரைப்படப்பாடலுண்டு. ஆனால் அந்நிலவு எதற்கெல்லாம் சாட்சியாக நிற்கிறது? அதன் சாட்சியாக விரிவதுதான் ஷோபாசக்தியின் பொக்ஸ்.

நாவலின் ஆரம்பத்திலிருந்து சில வரிகள்:
'நிர்வாணம் மீது நிலவு தனது ஒளியை பாய்ச்சி நீர்மேல் நிற்கலாயிற்று. குளத்தின் மையத்தில் அமையாள் கிழவி பிறந்த மேனியாக மல்லாக்க நீந்திக்கொண்டிருந்தார்.  அப்போது பெரிய பள்ளன் குளத்தில் கார்த்திகை மாதச் சாமமாயிருந்தது.' இவ்விதம் தொடங்கும் ஆரம்பமான 'மய்யக்கதை' பின்வருமாறு முடிகின்றது: " அப்போது 'அம்மா' என்றொரு ஓலத்தை நிலவு கேட்டது. அந்த ஓலம் சாவின் ஓலமென நிலவு அறிந்தது. அது தனது ஒளியை எடுத்துக்கொண்டு சாவை நோக்கி நகரலாயிற்று.'

நாவலின் ஆரம்பமான   'மய்யக்கதை'யில் நிலவு சாட்சியாகவிருக்கின்றது. நாவல் முழுவதும் நிலவு சாட்சியாக வருகின்றது. அந்நிலவின் சாட்சியமே ஷோபா சக்தியின் 'பொக்ஸ்'. சாவின் ஓலத்தின் சாட்சியம் அது.     

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.