தர்க்கம் செய்வோம் வாருங்கள்!- அண்மையில் முகநூலில் நானிட்ட தனித்தமிழ் பற்றியதொரு பதிவும், அதற்கான எதிர்வினைகளும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. தர்க்கம் ஆக்கபூர்வமாக இருந்ததால் இந்த முடிவு. -


எனது முகநூற் பதிவு: தனித்தமிழ் பற்றி..

தனித்தமிழ் என்பதில் எனக்குப் பூரண உடன்பாடில்லை. பல் திசைகளிலிருந்தும் வரும் மொழிகளிலிருந்து புதிய சொற்களை உள்வாங்குதலென்பது மொழியொன்றின் தவிர்க்க முடியாத அம்சங்களிலொன்று. அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். இவ்விதம் ஏனைய மொழிச் சொற்களை உள்வாங்குவதால் மொழியானது வளமடைகின்றது என்பதை நம்புவன் நான். எவ்விதம் பிறநாட்டுத் தொழில்நுட்பங்களை, அறிவியலை எல்லாம் உள்வாங்குகின்றோமோ , எவ்விதம் அவ்விதம் உள்வாங்குவதால் நாம் பெரும்பயன் அடைகின்றோமோ அவ்விதமே மொழி விடயத்திலும் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். இதனையுணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் தமிழ் இலக்கணத்தில் திசைச்சொற்கள் என்னும் பிரிவையே ஏற்படுத்தி வைத்தார்கள்.

அதனால்தான் தமிழில் ஏற்கனவே கலந்துள்ள பிறமொழிச் சொற்களை ஏற்பதில் தவறொன்றுமில்லை என்று உறுதியாக நம்புகின்றேன்.  ஆங்கிலம் , தமிழ் உட்பட உலகின் பல மொழிகள் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளமடைந்துள்ளன. தமிழில் வடமொழிச் சொற்களை ஒதுக்க வேண்டுமென்றால் மகாகவி பாரதியாரின் கவிதைகளை, கம்ப ராமாயணத்தையெல்லாம் படிப்பதை நிறுத்த வேண்டி வரும். என்னால் இதனை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. சரி சரி நடந்தது நடந்து விட்டது. இனியாவது வடமொழிச் சொற்களைப் பாவிக்காமல் விட்டு விடுவோம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதெவ்விதம் சாத்தியம்?  நாம் பாரதியாரின் கவிதைகளை, கம்பரின் காப்பியத்தை மேலும் பல பழந்தமிழ்  இலக்கியங்களை கையாளும்போதும் அவற்றிலுள்ள வடமொழிச்சொற்களை ஒதுக்கி எவ்விதம் கையாள முடியும்?

"சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து" என்று பாடுகின்றோம். சுந்தரம் வடமொழியல்லவா. "வீர சுதந்திரம் வேண்டி நின்றோம்" என்கின்றோம். சுதந்திரம் வடமொழியல்லவா. இப்படிப்பார்த்தால் கவிதைகளையே மாற்றி எழுத வேண்டிய நிலை ஏற்படும். எம் சங்கக்கவியொருவன் பாடினான்: "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"   குறுகிய வட்டத்துக்குள் இருப்பதைப்பெருமையாக கருதும் போக்கிலிருந்து விடுபட்டு, அவனைப்போல் வட்டத்துக்கு வெளியிலிருந்து சிந்திக்கப்பழகிக்கொள்வோம். அப்போது எம்மைச்சுற்றிலும் உலகம் இன்பத்துடன் இருப்பதைப் புரிந்துகொள்வோம்!

உதாரணத்துக்கு ஒரு கேள்வி... நீங்கள் தமிழர். மேனாட்டாரின் வருகையால் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், ஆடை வகைகள், உணவு வகைகள் போன்றவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இவ்விதமிருக்கையில் மொழி விடயத்தில் மட்டும் ஏனிந்த கட்டுப்பாடுகள். 'பான்ட்ஸ்' , 'சேர்ட்' எல்லாம் தமிழர்தம் அடையாளங்கள் அல்லவே. தமிழர் அடையாளங்களைத் தக்க வைக்க இவற்றைத் துறக்க உங்களால் முடியுமா? மேலும் கிரிதரன் என்னும் பெயர் என் தாய், தந்தையரால் எனக்கு வைக்கப்பட்டது. அது வடசொல் என்பதால் மாற்றுவது எனக்கு ஏற்ற கருத்தல்ல. அத்துடன் தமிழ் மொழி என்னும்போது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ் மொழியையே நான் கருதுகின்றேன். இதுவரை காலமும் தமிழானது பல்வேறு திக்குகளிலிருந்தும் வந்த பிறமொழிச் சொற்களை உள் வாங்கியே வளமடைந்து வந்துள்ளதாக நான் கருதுகின்றேன். அச்சொற்களையுள்ளடக்கிய , பாவிக்கப்படும் தமிழையே நான் தமிழ் மொழியாகக் கருதுகின்றேன்.

மேலும்  அனைத்து அறிவியல் துறைகளையும் தற்போதுள்ள தமிழில் படிக்கும் வகையிலான நிலையினை நாம் உருவாக்க வேண்டும்.  அது தற்போதுள்ள தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்கு வழி வகுக்கும். அதனைத்தான் பல நாடுகள் (ருஷ்யா, சீனா, யப்பான், ஜேர்மன், நோர்வே போன்ற) நடைமுறைப்படுத்துகின்றன. அவற்றையெல்லாம் அவை தூய ஜேர்மன், தூய சீன, தூய யப்பானிய மொழிகளில் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது அங்கு நிலைத்து நிற்கும் அந்நாட்டு மொழிகளில் நடைமுறைப்படுத்துகின்றன.


எதிர்வினைகள்:

Tham Indralingam
Thani Thamil is not a progressive idea! All languages borrow words from other languages! Tamil is no exception!

Gopal Arumugam
நீங்கள் சொல்லியல் அறிஞராக இருக்கின்றீர்களா? ஜெர்மனி சட்டதிட்டங்களை படியுங்கள், நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி, தூய மொழிக் காப்பு என்ற விடயம் புதிய விடயம் அல்ல. தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் மொழியியல் அறிஞர்கள் அல்ல

Giritharan Navaratnam
//நீங்கள் சொல்லியல் அறிஞராக இருக்கின்றீர்களா?// எனக்குச் சரியென்று பட்டதைக் கூற , எழுத நான் சொல்லியல் அறிஞராக இருக்க வேண்டியதில்லை. இதனை யாருமே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று நான் வற்புறுத்தவில்லை. இதற்குப்பதிலாகக் கேள்வி கேட்பதை விட்டு, நீங்கள் படித்த ஜேர்மனி சட்டதிட்டங்களை உதாரணங்களாக வைத்து, ஏன் மொழித்தூய்மை அவசியம் என்பதை உங்கள் நோக்கில் ஆதாரங்களுடன் முன் வையுங்கள். அறிந்ததைப் பகிர்ந்துகொள்வதும், அறியாததைப்
புரிந்துகொள்ளவும்தான் இவ்வகையான பதிவுகள். இதற்கு மாற்றான உங்கள் எதிர்வினை மூலம் ஒருவேளை நான் என் எண்ணத்தை மாற்றவும் கூடும். அதே சமயம் பாரதியாரின் , கம்பரின் கவிதைகளிலுள்ள வடமொழிச் சொற்களைப்பற்றிய உங்கள் எண்ணங்களையும் முன் வையுங்கள். நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்கின்றீர்களா இல்லையா என்பதையும் எடுத்துரையுங்கள்.

Giritharan Navaratnam
//தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் மொழியியல் அறிஞர்கள் அல்ல// அப்படியிருந்தால் எழுத்தாளர்கள், மொழியியல் அறிஞர்கள் என்னும் பிரிவுகளே இல்லாமல் போய்விடுமே. எழுத்தாளர்கள் மொழியியல் அறிஞர்களாக இருக்க வேண்டியதில்லை. சாதாரண வழக்கிலுள்ள, பேச்சிலுள்ள சொற்களைக் கையாளத் தெரிந்தவர்களாக இருந்தாலே போதுமானது. ஆனால் பொதுவான அடிப்படை இலக்கணம் தெரிந்தவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். இலக்கணத்தில் ஆய்வு செய்தவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை.

Gopal Arumugam
தமிழ்த் துறை என்பது,மிக,மிக, ஆழமானது., " கற்றது கை மண்ணளவு,கல்லாதது உலகளவு. தமிழ் மொழி பற்றி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வு செய்கின்றனர் ..தூய தமிழ் அகராதியை ,தமிழ்மொழி சொல்லியல் அறிஞர் அருளி தமிழ் நாட்டில் பல வருட ஆய்வின் பின் வெளியிட்டுள்ளார், இன்னும் முடியவில்லை.

Giritharan Navaratnam
Gopal Arumugam அதற்கும் மேலுள்ள பதிவுக்கும் என்ன சம்பந்தம். யார் மொழி ஆராய்ச்சியை எதிர்த்தது? பதிவுகள் தனித் தமிழ் பாவிப்பது பற்றியது

Yoga Valavan Thiya
முழுமையாக உடன்படுகின்றேன். பதிவில் கடைசிக்கு முதல் பந்தியில் “ அவனை போல் “ ஒரு , (கமா) போட்டுவிடுங்கள் அர்த்தம் மயக்கம் தருகின்றது.

Sreeno Sri Sreesu
Yoga Valavan Thiya அட.., நானுங்கூட, கிரி ஏன் கணியன் பூங்குன்றனாரை குறுகிய வட்டக்காரன், என்று குறிப்பிடுகிறார், என்று, யோசித்தேன்.

Giritharan Navaratnam
Yoga Valavan Thiya தமிழில் இது போல் இரு வேறு அர்த்தங்களைத்தரும் வசனங்கள் பலவுண்டு. நீங்கள் குறிப்பிடுவதுபோல் கருத்து மயக்கமுண்டு. அதனால் தெளிவு கருதி சிறிது மாற்றியுள்ளேன். அண்மையில் கூட இதுபோன்ற வசனங்களைப்பற்றியொரு தர்க்கம் முகநூலில் நடந்தது நினைவுக்கு வருகின்றது.

Muralitharan Sundaram
மிகவும் சரியான வியாக்கியானம், எந்த மொழியும் பிற மொழி சொல்களை உள்வாங்காமல் இல்லை, தவிர்க்க முடியாதது. தூய மொழி என்று சொல்வது என்றுமே நடைமுறைக்கு உதவாத வீம்பு வாதமும்... உலகமயமாதலில் தமிழனும் இணையும்
போது..... மொழியும் இணைகிறது.... உலக விஞ்ஞான தொழில்னுட்ப... கலாச்சார பிற மொழி சொல்களில் நாமும் இணைந்து வளர்க்கிறோம்... நம்மில் மற்ற மொழிகளும் வளர்கின்றன.

Gv Venkatesan
தமிழகம் எங்கும்.சுடிதார் மயம் தான்.... அதை ஏற்றுக் கொள்கிறோம்.... இலக்கிய வாதிகள் தான் மொழியை பார்கிறார்கள்....

Vickneaswaran Sk
தமிழில் பேசுங்கள் என்பதும் தனித்தமிழில் பேசுங்கள் என்பதும் ஒன்றல்ல. முடிந்தளவுக்கு, தமிழில் பேசும்போது, தமிழிலேயே பேசுமாறும், பிறமொழிக்கலப்பு இன்றிப் பேசும்படி ஊக்குவிப்பதும் சரியென்றே நான் நினைக்கிறேன். தமிழக, தற்போது
இலங்கையிலும், தொலைக்காட்சிகளில் வரும் பல உரையாடல்களை நீங்கள் கேட்டால் தமிழில் பேசுமாறு கூறுவதன் அடிப்படை புரியும். பாரதியும் கம்பனும் வடமொழிச்சொற்களைப் பயன்படுத்தியது போல அல்ல இது. இவை அவைபோல தமிழுக்கு
வளம் சேர்ப்பவை அல்ல. தமிழுக்கு வளம் சேர்க்க எத்தனை சொற்களையும் தமிழுக்கு எங்கிருந்தும் கொண்டுவரலாம். ஆனால் இருக்கும் அழகிய தமிழ் சொற்களை விட்டு வேறு மொழிச் சொற்களை பிரக்ஞையின்றி பொது ஊடகங்களில் பாவிப்பது மிக
மோசமான நடைமுறை. அதுவே கவனப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன்.

Yoga Valavan Thiya
Vickneaswaran Sk தமிழக, இலங்கை தொலை காட்சிகள் தொடர்பாக நீங்கள் கூறிவது உண்மைதான். ஆனால் Giritharan Navaratnam ல் பதிவில், வடமொழி ( சமஸ்கிரித ) சொற்கள் பாவிக்கப்படுவதை சிலர் எதிர்பதை குறிப்பிட்டே பிரஸ்தாபிக்கின்றார். தமிழ் இலக்கியத்தில் சமஸ்கிருத சொற்கள் அதிகம் நிறைந்த மணிபிரவாள மொழி நடை ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான். அப்போது தனிதமிழ் இயக்கத்தின் தேவையும் இருந்தது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இன்று குறித்த சில உச்சரிப்புகளுக்கு சமஸ்கிருத எழுத்துக்கள் தமிழுக்கு அவசியமாக இருக்கின்றது. அதையே கிரிதரன் குறிப்பிடுகின்றார்.

Vickneaswaran Sk
தமிழில் சமஸ்கிருத சொற்களை தவிர்க்கும்படி சொல்வதில் நியாயமில்லாமல் இல்லை. அவையும் மணிப்பிரவாளத்தின் எச்ச சொச்சங்கள். தமிழுக்கு வந்தசமஸ்கிருத எழுத்துக்கள் அவசியமில்லை. ஏற்கனவே தமிழுக்காக உருவாக்கப்பட்ட கிரந்த
எழுத்துக்கள் போதும். ஆனால் பலர் அவற்றை சமஸ்கிருத எழுத்து என்று நினைக்கின்றனர்.

Yoga Valavan Thiya
Vickneaswaran Sk சமஸ்கிருத சொற்கள் என்று நான் சொல்லவில்லை ஓசையுடன் கூடிய எழுத்துக்கள் என்றே சொன்னேன். அதுவே கிரந்த எழுத்துக்கள். “பாஷை “ என்ற சொல்லில் வரும் ஷ என்ற எழுத்து கிரந்த எழுத்து அதன் மூலம் சமஸ்கிருதம் .....கிரிதரன் குறிப்பிட்டு சொன்னது இவற்றையே என்பது எனது புரிதல்

Vickneaswaran Sk
Yoga Valavan Thiya உங்கள் கருத்து சரியே. புரிதலும்சரியே. நான் சொல்லவந்தது தேவயற்றுச் செய்வதை.பாஷை இப்போது தமிழில் பாசை என தமிழ்மயம் ஆகிவிட்டது. விஷேஷம் விசேடம் அல்லது விசேசம் ஆகிவிட்டது. ஒல்லாந்தர் காலச் சொற்கள்போல எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் வடிவு பெற்றுவிடும். வலிந்து பிறமொழி சொற்களைத் திணித்து எழுதுவதே தவறு என்பதே எனது கருத்து. ஒட்சிசன் என்றும் பிராணவாயு என்றும் எழுதுகிறோம். அவை இரண்டும் பாவனையிலுள்ளன. அது சிறப்பு. ஆனால் தேவையின்றி வலிந்து பிறமொழி சொற்களை சேர்த்தல் தவறு. அதே வேளை புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழ் சொற்களை உருவாக்குவதும் அவசியம்

Giritharan Navaratnam
Vickneaswaran Sk //தமிழில் பேசுங்கள் என்பதும் தனித்தமிழில் பேசுங்கள் என்பதும் ஒன்றல்ல. முடிந்தளவுக்கு, தமிழில் பேசும்போது, தமிழிலேயே பேசுமாறும், பிறமொழிக்கலப்பு இன்றிப் பேசும்படி ஊக்குவிப்பதும் சரியென்றே நான் நினைக்கிறேன்.// விக்கி இங்குள்ள பதிவு தனித்தமிழ் பற்றியது. தமிழில் பேசுவது பற்றியதல்ல. மேலும் தமிழ் என்பதை நடைமுறையில் இருக்கும் தமிழாகவே (ஏற்கனவே தமிழ் உள்வாங்கிய அனைத்துமொழிச்சொற்களையும் உள்ளடக்கிய தமிழையே தமிழ் என்று நான் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். எனவே அத்தமிழில் பேசுவது வரவேற்கத்தக்கதே.) நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.

Giritharan Navaratnam
Vickneaswaran Sk //தமிழக, தற்போது இலங்கையிலும், தொலைக்காட்சிகளில் வரும் பல உரையாடல்களை நீங்கள் கேட்டால் தமிழில் பேசுமாறு கூறுவதன் அடிப்படை புரியும். // விக்கி அவர்கள் தமிங்கிலிஸில் பேசுவதைக் கேட்டிருக்கின்றேன். அதனைத்தவிர்த்துத் தமிழில் (ஏற்கனவே தமிழ் உள்வாங்கிய அனைத்துமொழிச்சொற்களையும் உள்ளடக்கிய தமிழையே தமிழ் என்று நான் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். எனவே அத்தமிழில் பேசுவது வரவேற்கத்தக்கதே.) பேசுவதை நானும் ஆதரிக்கின்றேன்.

Giritharan Navaratnam
Vickneaswaran Sk //தமிழுக்கு வளம் சேர்க்க எத்தனை சொற்களையும் தமிழுக்கு எங்கிருந்தும் கொண்டுவரலாம்// எத்தனை சொற்களையும், அவற்றுக்கான நியாயமிருப்பின் ஏற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு கார், கம்யூட்டர் போன்ற
சொற்களைக் கூறலாம். கம்யூட்டருக்குத் தமிழில் கணினி அல்லது கணனி என்று சொற்கள் இருப்பினும் பேச்சு வழக்கில் யாருமே கணனி வாங்கினீர்களா? என்று பாவிப்பதில்லை. எழுதுவதற்கு மட்டுமே பாவிக்கின்றோம்.

Sarvachitthan Kumar
Vickneaswaran Sk தங்கள் கருத்தினை முர்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காரணம்...பிறமொழிச் சொல் ஒன்றினை நாம் தமிழ்ப்படுத்தும் போது அதில் உள்ள ஜீவன்..அல்லது உயிரான அதன் “தொனி’ மறைக்கப்படுகிறது! உதாரணத்திற்கு... ’விசேஷம்’ என்னும் வ்ட மொழி மருவிய சொல்லை நாம் ‘விசேசம்’ எனவும் ‘விசேடம்’ எனவும் மொழிமாற்றம் செய்வதைவிடவும்...அதற்கு ஒப்பான தூய தமிழ்ச் சொல்லொன்றினை உருவாக்குவதே சிறப்பானதாகும்.

இல்லையேல் அதனை அவ்வாறே பயன்படுத்துவது நல்லது என நினைக்கிறேன். இந்த வடமொழிச் சொற்களைத் தமிழ் மயமாக்குவதைக் கண்டித்து.....எனது மாணவப் பருவத்தில் புழக்கத்தில் இருந்த விடயம் ஒன்றினை இங்கு குறிப்பிடலாம் என
நினைக்கிறேன். “ ஆஷ்ஷுக் குஷ்ஷி வேஷ்ஷி சாலவையைக் கஷிக்குது ஓஷிவா ஓஷிவா “ என்றானாம் ஒரு மாணவன்.... அனது ஆசிரியர்..வடமொழிச் சொல்லான ‘ஷ’ வுக்குப் பதில் ‘ட’ வைப் பயன்படுத்தலாம் எனச் சொன்னதால் வந்த
விபரீதம் இது என்பது இதன் சாராம்சம்மாகும். ‘ஆட்டுக் குட்டி வேட்டி சால்வையைக் கடிக்குது ஓடிவா ஓடிவா..” என்பதில் உள்ள ’ட்’டுக்குப் பதிலாக அந்த மாணவனன் ’ஷ்’ஐப் பயன்படுத்தியிருக்கிறான். அவ்வளவுதான்!? ட்+அ= ட; ஷ்+அ=ஷ
என்பது தெரிந்ததே !

Vickneaswaran Sk
Sarvachitthan Kumar பிறமொழி சொல்லின் அர்த்தத்துக்காகவே அதை இணைக்கும் தேவை வருகிறது. அதன் தொனிக்காக அல்ல. தொனியில் கவனம் செலுத்துவது அந்த மொழியின் அதிகாரத்தை காட்டும் பாவனையாகவே இருக்க முடியும்.
இது சமஸ்கிருதம், ஆங்கிலம் இரண்டுக்கும் பொருந்தும் நாம் பாவிக்கும் கார், மோட்டர், எஞ்சின், யன்னல், டெலிபோன், கொம்பியூட்டர் என்று எவையும் தொனியோடு சார்ந்த மொழிபெயர்ப்பு அல்ல.

Sarvachitthan Kumar
இடங்கள் , மனிதரது பெயர்கள் என்பனவற்ரைத் தமிழ்ப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவற்றை நாங்கள் படுத்தும் பாடு அப்பப்பா...... அதனை அம் மொழி பேசுபவர்கள் கேட்க நேரிட்டால் அவர்களை அது எவ்வாறு துன்பமடையச் செய்யும் என்பதை
உணர்தல் அவசியம் அல்லவா ? இவையனைத்தையும் சேர்த்தே அவ்வாறு குறிப்பிட்டேன்..... தொனியினால் சொல்லின் பொருளும் வேறுபடுவதுண்டு அன்பரே... ”பாவம்” என்பதை அதற்குரிய ‘தொனி’யோடு அழுத்திச் சொல்லும்போது அதன்
கருத்தும் வெளிப்படுத்தும் உணர்வும் வேறுபட்டவை... இதனி ஒட்டி மிக விரிவான தளத்தில் விவாதிக்க இயலும்..ஆனால்..அதனை இதில் தொடர்வது ஏற்புடையதல்ல என்பதே என் எண்ணம்.

Magudeswaran Govindarajan
திசைச்சொற்கள் என்பவை பிறமொழிச் சொற்களல்ல. பிற பகுதியில் வழங்கப்படும் தமிழ்ச்சொற்கள். கொங்குநாட்டில் முறம். பாண்டிய நாட்டில் அது சுளகு. இவ்விரு நாட்டிற்கும் இவ்விரு புதுச்சொற்களும் திசைச்சொற்கள்.

Giritharan Navaratnam
Magudeswaran Govindarajan //திசைச்சொற்கள் என்பவை பிறமொழிச் சொற்களல்ல. பிற பகுதியில் வழங்கப்படும் தமிழ்ச்சொற்கள். // மகுடேஸ்வரன் , நீங்கள் தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய இளம்பூரணர் கருத்தின்படி அம்முடிவுக்கு வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் தொல்காப்பியர் குறிப்பிடும் 'செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும், தங்குறிப்பினவே திசைச்சொற்கிளவி' என்னும் கூற்றில் வரும் பன்னிரு நிலத்தையும் இளம்பூரணர் நீங்கள் கருதும் தமிழகத்தின் பகுதிகளாகக் கருதியதால்தான் அவ்விதம் கூறினார். ஆனால் தெய்வச்சிலையார் வடவேங்கடத்துக்குத் தெற்கிலுள்ள அனைத்து நிலப்பகுதியையும் பன்னிரு நிலமாகக் குறிப்பிடுவார். அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். தொல்காப்பியரே செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமென்றுதான் குறிப்பிடுகின்றார். அதாவது செந்தமிழ் வழங்கும் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நிலம். நீங்கள் கருதும் பன்னிரு நிலங்களும் செந்தமிழ் நிலத்திலுள்ள பன்னிரு நிலங்கள். அதனால் தெய்வச்சிலையாரின் தொல்காப்பிய உரையினை நான் ஏற்றுக்கொள்கின்றேன். தெய்வச்சிலையார் குறிப்பிடும் பன்னிரு நிலங்களும் வருமாறு:

கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்
கொல்லம்
கூபகம்
சிங்களம் – ஐயோ என்பதை அந்தோ என்பர்
கன்னடம் – ‘யான் தற் கரைய’ – விளித்தலைக் கரைதல் என்பர்
வடுகம் – சொல் என்பதைச் செப்பு என்பர்
கலிங்கம்
தெலிங்கம் – பசுவையும், எருதினையும் பாண்டில் என்பர்
கொங்கணம்
துளுவம் – குதிரையை உணர்த்தும் மா என்னும் சொல்லைக் கொக்கு என வழங்குவர்
குடகம் – குடாவடி உளியம் என்னும் பெயரைப் பிள்ளைகளுக்கு இட்டு வழங்குவர்
குன்றகம்

Sarvachitthan Kumar
மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தையும் வாசிக்கும்போது... இன்று தமிழுக்குத் தேவை ‘தூய்மை’அல்ல..மாறாக சில புதிய எழுத்துகள் என்றே படுகிறது. காரணம் புழக்கத்தில் இருக்கும் நவீன தொழில் நுட்ப விடயங்களை... கருவிகளின்,பொருட்களின், பெயர்கள் உடபட... எழுதவும் அதனைப் பிழையின்றி உச்சரிக்கவும்... இப்போது எம் வசமுள்ள எழுத்துகள் போதாது என்பது எனது கருத்து. ’கிரி’யின் கூற்றினை ஏற்றுகொள்வதில் தவறில்லை எனபதே எனது நிலைப்பாடு !

Thiruchchelvam Kathiravelippillai
தவறான புரிதலுடன் இருக்கின்றீர்கள்.

Giritharan Navaratnam
Thiruchchelvam Kathiravelippillai நீங்கள் தேவையில்லாமல் பயப்படுகின்றீர்கள் என்று தோன்றுகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாத தமிழ் இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அழியாது. ஏற்கனவே பிற திக்குகளிலிருந்து வந்த பிறமொழிச் சொற்களை உள்வாங்கிய தமிழ் அழிந்து போய்விடவில்லை. இனியும் அழிந்து போய்விடாது.

Thiruchchelvam Kathiravelippillai
Giritharan Navaratnam தவறு. கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகள் பேசும் அனைவரும் தமிழர்களே. பிற மொழிக் கலப்பால் புதிய மொழியுடன் புதிய இனமான மாறியதனால் தமிழின் பலமும் குறைந்து தமிழரின் பலமும் குறைந்தது. இது நம் முன் உள்ள வரலாறு. புரிந்து கொள்ளுங்கள் வை திஸ் கொலவெறி பாடல் போன்ற நம் மொழி ஆகிவிடக்கூடாது என்பதே ஆதங்கம்.

Giritharan Navaratnam
Thiruchchelvam Kathiravelippillai //வை திஸ் கொலவெறி பாடல் போன்ற நம் மொழி ஆகிவிடக்கூடாது என்பதே ஆதங்கம்.// இக்கூற்றிலிருந்து மேலுள்ள என் பதிவைத் தவறாகப் புரிந்துள்ளீர்கள் என்று தெரிகின்றது. நான் பிறமொழியைத் தமிழில் எழுதிக் கதைப்பதைக்குறிப்பிடவில்லை. //பிற மொழிக் கலப்பால் புதிய மொழியுடன் புதிய இனமான மாறியதனால் தமிழின் பலமும் குறைந்து தமிழரின் பலமும் குறைந்தது. // ஆங்கிலம் ஜேர்மனிய, பிரெஞ்சு & லத்தீன் மொழிகளிலிருந்து உருவான மொழி. இவ்விதம் மொழிகள் உருவாவது தவிர்க்க முடியாததொன்று. இதனையிட்டுப் பயப்படத்தேவையில்லை. இதற்குப்பதிலாக அனைத்து அறிவியல் துறைகளையும் தற்போதுள்ள தமிழில் படிக்கும் வகையில் வற்புறுத்துங்கள். அது தற்போதுள்ள தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்கு வழி வகுக்கும். அதனைத்தான் பல நாடுகள் (ருஷ்யா, சீனா, யப்பான், ஜேர்மன், நோர்வே போன்ற) நடைமுறைப்படுத்துகின்றன. அவற்றையெல்லாம் அவை தூய ஜேர்மன், தூய சீன, தூய யப்பானிய மொழிகளில் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது அங்கு நிலைத்து நிற்கும் அந்நாட்டு மொழிகளில் நடைமுறைப்படுத்துகின்றன.

Thiruchchelvam Kathiravelippillai
Giritharan Navaratnam தமிழை தமிழாக பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலத்தை மேலதிகமாக கற்பதே சிறந்த்து. பிறமொழிகளை நமது மொழியினுள் கலக்கத் தேவையில்லை என்பதே என் போன்றோரின் கருத்து.

Giritharan Navaratnam
Thiruchchelvam Kathiravelippillai அப்படியென்றால் உரையாடுகையில் , எழுதுகையில் நீங்கள் கார் என்பதற்குப் பதில் மகிழுந்து என்ற சொல்லையா பாவிக்கின்றீர்கள். அல்லது இனி பாவிக்கப்போகின்றீர்களா? அதுபோல் ஸ்கூட்டர் என்பதற்குப் பதில் உந்துருளி, கம்யூட்டருக்குப் பதில் கணனி என்றா பாவிக்கின்றீர்கள்?

Giritharan Navaratnam
//பிறமொழிகளை நமது மொழியினுள் கலக்கத் தேவையில்லை என்பதே என் போன்றோரின் கருத்து.// நான் கூற வருவதென்னவென்றால்.. பிறமொழிச் சொற்களை மொழியொன்று உள்வாங்குவது இயல்பானது. ஆரோக்கியமானது என்றே கூறுகின்றேன்.

Thiruchchelvam Kathiravelippillai
Giritharan Navaratnam ஓம். அதனுடன் கைப்பேசி என்றுதான் பயன்படுத்துகிறேன். எனது பிள்ளைகளும் அப்படித்தான்.

Giritharan Navaratnam
Thiruchchelvam Kathiravelippillai பாரதியார் கவிதைகள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவற்றை வாசிப்பதுண்டா? அப்படி வாசிக்கையில் அவற்றிலுள்ள வடமொழிச் சொற்களைத் தவிர்த்து அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்களைப்பாவிக்கின்றீர்களா?

Thiruchchelvam Kathiravelippillai
Giritharan Navaratnam முயற்சிக்கின்றேன்.

Giritharan Navaratnam
Thiruchchelvam Kathiravelippillai அப்படிச் சொற்களை மாற்றும்போது கவிதைகளின் யாப்பு குழம்பி விடுகின்றதே.. குழம்பாமல் வேறு தூய தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் சாத்தியமுள்ளது.

Balachandran Muthaiah
மிக சரியான கருத்துக்கள். சங்கத்தமிழ், பொழிப்புரை இன்றி யாருக்கு புரியும்? கிரியை முற்று முழுதாக ஆதரிக்கிறேன்!

Sinnakuddy Mithu
நல்ல பழம் தமிழ் சொற்களை கொண்டிருக்கும் சேர தமிழ் அதிகாரத்துடனும் வஞ்சத்துடனும் சமஸ்கிருதம் கலக்கப்பட்டதனாலேயே இன்று வேற்று மொழியாகவும் மலையாளமாகவும் மாறியுள்ளது?

Giritharan Navaratnam
Sinnakuddy அது தவறென்று கூறுகின்றீர்களா? மொழிகள் இவ்விதமே தோன்றுகின்றன. ஆங்கிலம் ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலிருந்து (பிரெஞ்சு, ஜேர்மானிய மொழி & லத்தீன் மொழி) உருவானதுதானே. மேலும் தமிழில் இல்லாத சிறப்பான
புனைகதைகள் பல மலையாளத்திலுள்ளன. அதுவும் சிறப்புத்தானே. மாறாத தமிழ் உருவாக்காத அற்புதமான படைப்புகளை மாறிய தமிழ் (மலையாளம்) உருவாக்கியுள்ளதே. எனவே இவ்விதம் புதிய மொழிகள் உருவாவது பற்றிக் கவலைப்படத்
தேவையில்லை. அது மொழிகளின் வரலாற்றில் இயல்பானதொன்று. சிங்கள மொழிகூட சமஸ்கிருதம், பாளி & தமிழ் போன்ற மொழிகளின் கலவைதானே.

எம் எம் நெளஷாத்
நான் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அதேவேளை இந்த தொலைக்காட்சி வானொலி மேடை அறிவிப்பாளர்களால் தமிழ் அழிகிறது என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். விதி விலக்கு ஓரிரண்டு உண்டு. அவர்கள் ஆங்கிலத்தை பைத்தியகாரத்தனமாக கலந்து பேசுகிறார்கள். அதாவது, 'இங்கிலீஷ லூசுத்தனமா மிக்ஸ் பண்ணி அனவுன்ஸ் பண்றாங்க'