பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் பற்றி அண்மையில்தான் சரியாக அறிந்துகொண்டேன். பேராசிரியர்கள் கைலாசபதி, கா,சிவத்தம்பி, மெளனகுரு, பாலசுந்தரம், நா.சுப்பிரமணியன், சபா.ஜெயராசா, எம்.ஏ. நுஃமான் போன்றோரை அறிந்த அளவுக்கு இவரை நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  பல்கலைக்கழக மட்டத்தில் அறிந்திருந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் இவரை அதிகமாக அறிந்திருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இதற்கு  முக்கிய காரணங்கள் இவருடன் பழகிய சக பேராசிரியர்கள் போதுமான அளவில் ஊடகங்களில் இவரைப்பற்றி அதிகம் எழுதாததும், இவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் அதிக அள்வில் வெளிவராததும் என்று  கருத வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மண்டூரைச் சேர்ந்த பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் கல்வியியற் துறையில் முக்கியமான பங்களிப்பு செய்தவர். இவருடன் கூட சபா ஜெயராசா அவர்களும் நினைவுக்கு வருகின்றார். இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கித் அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த,  எழுதிய ஒருவராக இனங்காண்பேன்.  இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார்.

இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கி, அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த, எழுதிய ஒருவராக இனங்காண்பேன். இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார். இவரைப்பற்றிய பேராசிரியர் சி.மெளனகுருவின் கட்டுரையைப் படிக்கையில் இவர் மார்க்சியக்கோட்பாடான பொதுவுடமைத்தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரென்பதை அறிய முடிகின்றது. அதேசமயம் இவரது கட்டுரைகளைப் படிக்கையில் இவர் முற்று முழுதாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையில் மூழ்கிய மார்க்சியவாதியாகவும் தெரியவில்லை.  ஆன்மாவே அனைத்துக்கும் அடிப்படை என்னும் கருத்துமுதல்வாதச் சிந்தனை மிக்க ஒருவராகவே இவரை அறிய முடிகின்றது. இவ்விடயத்தில் இவரை நான் 'காண்பது சக்தியாம். இக்காட்சி நித்தியமாம்' என்று பொருளையும் ,சக்தியையும் ஒன்றாகக் காணும்  மகாகவி பாரதியாருடன் வைத்து இனங்காண்பேன். உண்மையில் நவீன அறிவியலும் அதைத்தானே (பொருளும் சக்தியும் ஒன்று) எடுத்துக்காட்டுகின்றது. சக்தியையும் பொருளையும் ஒன்றாகக் காணும் ஆதிசங்கரரின் கோட்பாடுகளையொட்டிய அத்துவைதவாதியாகவும் இனங்காண்பேன். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு தத்துவப்போக்குகளையும் உள்வாங்கிய , இரண்டுக்குமிடையில் ஒருவித சமரசத்தைக்கண்ட கல்வியியற் சிந்தனையாளராக இவரை நான் காண்பேன்.

இவரது கட்டுரையான 'கல்வித்தத்துவமும், இலட்சியவாதமும்' கட்டுரை 'ஆசிரியம்' சஞ்சிகையில் அதன் 55-56 ஆவது இதழில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு: https://noolaham.net/project/367/36608/36608.pdf
இவரது மணிவிழா மலர்: https://noolaham.net/project/739/73817/73817.pdf

இவரது நூல்களான கல்வித்தத்துவம் , கல்வியியற் சிந்தனைகள் ஆகிய நூல்களைச் சேமமடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவை பற்றிய விபரங்களைத் தரும் இணைய இணைப்புகள்:

1.கல்வியியற் சிந்தனைகள் - http://www.chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000036
2. கல்வித்தத்துவம் -  http://www.chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000045

கல்வியியற் சிந்தனைகள் நூலின் உள்ளடக்கம்:

    இராமகிருஷ்ண வேதாந்தக் கல்வி மரபு
    தவத்திரு விபுலாநந்த அடிகளின் பல்கலைக்கழகக் கல்விச் சிந்தனைகள்
    ஞானி தோல்ஸ்தோயின் கல்விமுறை
    மொந்தெஸ்ஸோரி அம்மையாரின் கல்விச் சிந்தனைகள்
    குழந்தைக் கல்வி நெறியாளர் பெஸ்டலோசி
    பிறெட்டிக் புரோபல் தரும்  குழந்தைக் கல்வி நெறி
    ஜோன் அமொஸ் கொமெனியஸ் அளித்த கல்வி அனைத்தறிவுக் கொள்கை
    கிறிஸ்தவக் கல்வி மரபு
    இஸ்லாமியக்  கல்வி மரபு
    முன் பள்ளிக்கூட நிலைக் கல்வித்தத்துவம்
    காந்திக் கிராமக் கிராமியப் பல்கலைக்கழகம்
    கல்வியும் மெய்யியலும்
    கல்வி இயலில் அறநோக்குச் சிந்தனை
    பள்ளிக்கூடச் சமூகமும் அதன் பணிகளும்
    பண்பாட்டுக் கல்வி
    சமகால உலகம் வேண்டி நிற்கும் கல்வி நெறியும் கல்வி முறையும்
    பிரெஞ்சு நாட்டின் கல்விச் செயற்பாடுகள்
    ஆசிரியத்துவ உளமாட்சி
    மாற்று வகைக் கல்வித் தத்துவங்கள்

கல்வித்தத்துவம் நூலின் உள்ளடக்கம்:

    கல்வியின் வரையறை
    கல்வியும், மரபும், மாற்றமும்
    பிளேட்டோ கண்ட கல்வித் தத்துவம்
    ரூசோ போற்றிய கல்விநெறி
    கார்ல்மார்க்ஸ் கொண்ட கல்விச் சிந்தனை
    ஜோன்டூயி வழங்கிய கல்விமுறை
    காந்தியடிகள் கற்பித்த கல்வித் திட்டம்
    தாகூர் தந்த கல்விக் கருத்து
    ஈழத்துச் சிந்தனைக் கதிர்கள்
    கல்வியும் அரசியலும்
    கல்வியும் பொருளாதார விருத்தியும்
    சமூகக் கல்வி
    சமூகக் கல்விசார் சாதனங்கள்

இவரைப்பற்றிய நல்லதோர் அறிமுகத்தைப் பேராசிரியர் சி.மெளனகுருவின் 'பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் நினைவுகள்!    கல்விப் புலத்தில் ஓர் இல்லறக் கல்வி முனிவர்!' என்னும் கட்டுரை தருகின்றது. இதனை 'நேர்மை என்றும்' வலைப்பதிவில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: https://www.nermai-endrum.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.