இன்று செம்மொழியான தமிழ் தொடர்ந்து வாழ்கின்றதென்றால் காரணம் என்ன? நான் குறிப்பிடும் தமிழ் காப்பியங்களில், இலக்கியத்திலுள்ள தமிழ். பிறமொழிச்சொற்களை உள்வாங்கி ,வளமுடன் திகழும் தமிழ். இந்தத்தமிழ் இன்றும் நிலைத்து நிற்கின்றதென்றால் காரணம்..

தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தமிழர்களால்தாம். இவர்களில் அதிகப்பங்களிப்பு வழங்கியவர்கள் என்ற பெருமையைத்  தமிழகத்தமிழர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இந்நாடுகளில் வாழ்ந்த, வாழும் தமிழர்கள்தாம் பிறநாடுகளில் குடியேறி அங்கும் தமிழுக்குப் பங்காற்றுகின்றார்கள்.

அண்மைக்காலமாக மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்நாடுகளில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்காகச் செயலாற்றி வருகின்றார்கள். முக்கிய காரணங்களில் ஒன்று உலகளாவியரீதியில் தமிழுக்கான அங்கீகாரம் இதன் மூலம் கிடைக்கும் என்பதுதான். தமிழகப்பிரபலங்கள் தொடக்கம் தமிழக அரசு வரைக்கும் நிதியுதவியை அளித்து வருகின்றார்கள். மொழி வளர்ச்சிக்கு இத்தகைய உதவிகள் அவசியமே. ஆனால் தற்போதுள்ள சூழலில் இதற்கான முக்கியத்துவமென்ன?தேவையென்ன?

தமிழை இதுவரை காலமும் பேணிப்பாதுகாத்து வந்த தமிழர்கள் வாழும் தமிழகம், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை உள்ளது . அங்குள்ள பல்கலைக்கழகங்கள் போதிய நிதியுதவியின்றி மொழி ஆராய்ச்சிகளில் அதிக அளவில் ஈடுபடுவதற்கு முடியாமல் சிரமப்படுகின்றன. தமிழ் மொழியை வளர்ப்பவர்கள் தமிழில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் மட்டுமல்லர். கவிதை, சிறுகதை, நாடகம், நாவல்,  மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் எழுதி மொழிக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களும்தாம்.

இளங்கோ, வள்ளுவர், கம்பர், பாரதி என்று பலர் தமிழ் மொழியைத் தம் படைப்புகளால் வளப்படுத்தினார்கள். இன்றும் படைப்பாளிகள் பலர் வளப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தம் படைப்புகளை நூலாக்கப் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். தம் படைப்புகள் மூலம் வாழ்வதற்குரிய வருமானத்தை ஈட்டப் பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் மேனாட்டுப்  பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக அதிக அளவில் நிதியைத் திரட்டிச் செலவழிப்பதற்குப் பதில் .இவ்விடயத்தில் முன்னுரிமை முதலில் கொடுக்கப்பட வேண்டியது இலங்கை , இந்தியத் தமிழர்களுக்குத்தாம்.  

தமிழ்ப்பல்கலைக்கழகங்களில் ஆக்கபூர்வமான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு நிதி தேவை. தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கு நிதி உதவிகள் தேவை. அவர்களது படைப்புகளை நூலகங்கள் வாங்குவதை இலகுவாக்குவதற்கு உதவலாம்.  எழுத்தாளர்கள் தம் எழுத்தை நம்பி வாழும் நிலையை உருவாக்குவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்  அமைப்பதில் அதிகக் கவனத்தைச் செலுத்தலாம்.

மேலும்  தமிழ் இருக்கை என்பது பேராசிரியர் ஒருவரின் கீழ் மாணவர்களை ஆய்வுகளில் ஈடுபட வைப்பதைப் பிரதானமாகக் குறிக்கும். இதற்காக இவ்வளவு பணத்தைச் செலவழிக்க வேண்டுமா? அதற்குப் பதில் தமிழ் இலக்கியப்படைப்புகளை (பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத்தமிழ் இலக்கியங்கள்) இவற்றையெல்லாம் பிறமொழிகளில், தரமான , புலமை மிகுந்த மொழிபெயர்ப்பாளர்கள் மூலம்  மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு வசதிகள் செய்து கொடுத்தால் உண்மையில் தமிழ் உலகமெங்கும் ஒலிக்கும் என்று கருதுகின்றேன். அதன் மூலம் தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள்  என்று பலர் பயன் அடைவார்கள்

இது என் தனிப்பட்ட கருத்து. மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான முன்னுரிமையினைக் கொடுக்கும் சூழல் தற்போது நிலவவில்லை. தமிழகத்திலுள்ள , இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள தமிழ் இருக்கைகள் முதலில் தொடர்ந்தும் இயங்குவதற்கு உதவிகள் தேவை.  அதற்குத்தான்  முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதுதான் என் கருத்து.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.