இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மு.தளையசிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. எழுத்தாளராக, சமூக, அரசியற் செயற்பாட்டாளராகச் செயற்பட்டவர்களில் அவருமொருவர். டானியல், அ.ந.கந்தசாமி, மு.தளையசிங்கம் போன்றவர்கள் எழுத்தாளர்களாக இருந்த அதே சமயம் தாம் நம்பிய அரசியல் கோட்பாடுகளுக்காக மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட்டவர்களும் கூட.

மு.தளையசிங்கம் என்னும் ஆளுமையை அறிவதற்கு அவரது நூல்கள் பெரிதும் உதவும். 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்னும் சிந்தனையைத் தனது மானுட விடுதலைக்கான தீர்வாக உருவாக்கியவர் மு.பொ.  கருத்துமுதல்வாதியான ஹெகலின் சிந்தனைகளை உள்வாங்கி மார்க்சியத்தை உருவாக்கினார் கார்ல் மார்க்ஸ். கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளின் நல்ல அம்சங்கள் என்று தான் கருதியவற்றை உள்வாங்கி, அவற்றை ஏற்று , மீண்டும் மார்க்ஸ் ஏற்காத கருத்து முதல்வாதத்தை ஏற்று, ஹெகலியக்கருத்து முதல்வாதச் சிந்தனையை அதிலேற்றி, மானுட விடுதலைக்கு மார்க்சின் புறவிடுதலை  மட்டும் போதாது , அக விடுதலையும் அவசியம் என்று தனது பிரபஞ்ச யதார்த்த வாதச் சிந்தனையை உருவாக்கியவர் மு.த.

அவரது போர்ப்பறை நூலிலுள்ள 'புதிய வார்ப்புகள்' கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி அதனை  ஆணித்தரமாக எடுத்துரைக்கும்.

"கருத்தை முதலாகக் கொண்டு சிந்தனை மாற்றத்தின் அடிப்படையில் யுகப் பிரிவை வகுக்கும்போது மார்க்ஸைத் திரும்பவும் எகலிடம் (Hegel) கொண்டுபோகிறோம். எகலின் கருத்து முதல் வாதம்! ஆனால் எகலிலிருந்து பிரிந்து மார்க்ஸ் சென்ற பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய உண்மைகளை விட்டுக் கொடுக்காமலும் இழந்துவிடாமலும் திரும்பிப் போகிறோம். பொருளாதார சமூக அடிப்படையில் மார்க்ஸ் சரித்திரத்துக்குக் கொடுத்த வியாக்கியானங்கள் மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன. அவற்றை மனிதகுலம் சதா பேணிக்காக்கவே செய்யும். ஆனால் பொருளாதார சமத்துவம் பொதுவுடமைப் பொருளாதாரமும் மிக அவசியம் எனற அளவோடேயே அவை நின்றுவிடும். அவற்றை உணர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை அடைவதில் ஓரளவுக்கு வெற்றியும் கிட்டும் சமயத்தில் மனிதனின் தேவைகள் அவற்றுக்கு அப்பாலும் போவதை உணரும் சூழலும் அந்த அப்பாலான நிலையில் நின்றே பொருளாதார சமத்துவத்தையும் பூரணமாக அடையலாம் என்ற உண்மையை உணரும் புதிய நம்பிக்கையும் சிந்தனை மாற்றமும் உருவாகி விடுகின்றன. இன்றைய உலக சூழல் அதுதான்."

போர்ப்பறை நூலை முழுமையாக வாசிக்க: மு.தளையசிங்கத்தின் 'போர்ப்பறை'!


எழுத்தாளர் மு.தளையசிங்கம் மார்க்சிய மறுப்பாளர் அல்லர். மு.த வலியுறுத்தும் சர்வோதயக் கோட்பாடு 'பொதுவுடமைப் பொருளாதாரமும், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பொருளாதார அரசியலும், பிரதேச சுயாட்சியும்' வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. இன, மொழி, எல்லைகளைக்கடந்த சகோதரத்தும், வர்க்கம் கடந்த சமூக சமத்துவம்' என்பவற்றை வலியுறுத்துகின்றது. அவரது சர்வோதய அமைப்பின் தாரக மந்திரம் 'சர்வோதயம் பொதுவுடமைக் குரல்' . இவை காட்டுவதென்ன? அவர் மார்க்சியத்தை உள்வாங்கியவர் என்பதைத்தானே . அவர் மார்க்சியத்தை மறுக்கவில்லை. அதனை உள்வாங்கி அதில் திருத்தங்கள் செய்தவர் என்று கூறுவதே சரியானதென்பதென் நிலைப்பாடு. ஹெகலின் கருத்துமுதல்வாதச் சிந்தனையைத்தள்ளி, உள்வாங்கி மார்க்சியத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். மார்க்சியத்தை உள்வாங்கி, அதில் மீண்டும் கருத்துமுதல் வாதச்சிந்தனையைப் புகுத்திப் 'பிரபஞ்ச யதார்த்தவாதத்தை' அறிமுகப்படுத்தியவர் மு.த ஆனால் அவர் மார்க்சியக் கட்சி அரசியலை மறுத்தவர். சத்தியம் (ஆகஸ்ட் 15, 1970) : https://noolaham.net/project/347/34623/34623.pdf
 
மு.தளையசிங்கத்தின் சர்வோதயக் கோட்பாடுகள் கூறுவதென்ன?
 
இதை அறிவதற்கு அவர் வெளியிட்ட சத்தியம் பத்திரிகையின் பின்வருமாறு கூறுகின்றது: