நவீன இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களிலொருவர் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞர் என்று அறியப்பட்டாலும் இவர் கவிதை, கதை, கட்டுரையென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர். சிறப்பான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி கவிதைகளைப் படைக்கும்  பலர் விடும் முக்கிய தவறு: அவர்கள் தம் உணர்வுகளைக் கவிதைகளாக்குவதில்லை. தம் அறிவினை, புலமையினை வெளிப்படுத்தவே கவிதைகள் எழுதுகின்றார்கள். உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்கள்தம் கவிதைகள் இல்லாததனால்தான் அவர்கள்தம் கவிதைகள் வாசகர்களின் இதயங்களைத் தொட்டு அவர்கள்தம் இதயங்களில் இடம் பிடிப்பதில்லை. இவர்கள் தம் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையெழுதுதலைப் பார்க்கும் போக்கினைக் கைவிட வேண்டும்.

இவ்விதம் கவிதை எழுதுபவர்களுக்கும், அன்று தம் மேதாவிலாசத்தைக் காட்ட மரபுச்சூத்திரத்துக்குள் கவிதைகள் படைத்தவர்களுக்குமிடையில்  வித்தியாசமில்லை. சிறந்த மரபுக் கவிஞர்கள் உள்ளனர்.அவர்கள்தம் கவிதைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. மரபுக்கவிதையின் எதிரியும் நானல்லன். மரபுக்கவிதை படைப்பதாக எண்ணித் தம் புலமையினை வெளிக்காட்டுவதற்காகக் கவிதைகள் படைத்தவர்களையே குறிப்பிடுகின்றேன். அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதில், புலமையினை வெளிப்படுத்தியவர்கள் அவர்கள். அவர்களைப்போன்றே இன்று வாழும் கவிஞர்கள் பலர் உள்ளனர். இவர்கள் புலமையினைக் காட்ட எழுதும் கவிதைகளைக் குறிப்பிடுகின்றேன். இவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்கள் விளைவாக எழுந்த, எழக்கூடிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையினைக் கருத வேண்டும். அவ்விதம் கருதியே கவிதைகளை எழுத வேண்டும். அவ்விதம் எழுதினால் இவர்கள்தம் கவிதைகளும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இவ்விடயத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் வித்தியாசமானவர். தன் வாழ்க்கை அனுபவங்கள் தந்த உணர்வுகளையே கவிதைகளாகப் படைக்கின்றார். அதனால்தான் அவற்றைக் கேட்கையில்யே சிந்தையில் இன்பம் பொங்குகின்றது. எம்மை அவரது கவிதை வரிகள் ஈர்க்கின்றன.

அவரது புகழ்பெற்ற கவிதைகளிலொன்று 'இலையுதிர்கால நினைவுகள்'. முக்கியமான புகலிட அனுபவங்களை விபரிக்கும் கவிதை. கனவு (தமிழகம்) சஞ்சிகையின் 'இலங்கைச் சிறப்பிதழ்' (ஆகஸ்ட் 1991) மலரில் வெளியான கவிதை. இக்கவிதையில் வரும் படிமங்கள் (உருவகங்கள் மற்றும் உவமைகள்) என்னை மிகவும் கவர்ந்தவை. காற்றுக் குதிரைகள், வானிலோர் அகதியான சூரியன், புது அகதி போல் தரையிறங்கும் பழுத்த பேர்ச் இலை, வாழ்விழந்து வசதி பெருக்குகின்ற மனிதச் சருகுகள், ஓயாது இலை உதிர்க்கும் முதுமரமான தாய் நாடு, 'காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையான புகலிடத் தமிழ்க் குடும்பங்கள்.. இவ்விதம் படிமங்கள் மலிந்த நல்லதொரு கவிதை 'இலையுதிர்கால நினைவுகள்'. கவிதையில் வரும் மக்பை என்னும் காக்கையினப் பறவை குளிர்காலம் வந்தபோதும் ஏனைய துருவப் பறவைகளைப்போல் வெப்ப நாடுகள் நாடி மிண்டும் பறக்கவில்லை. கவிஞனோ தன் உயிர் காப்பதற்காக வெப்ப நாட்டிகிருந்து துருவத்துக்கு ஓடி வந்துள்ளான். ஆனால் மக்பை பறவையோ குளிர் வந்தபோதும் ஏனைய பறவைகளைப்போல் வெப்பநாடுகள் நோக்கிப் படையெடுக்காமல் இருக்குமிடத்திலேயே வாழுமொரு பறவை.  அதனால்தான் அப்பறவை இழிவாகக் கவிஞனை நோக்குகின்றது. இக்கவிதையில் வரும் பின்வரும் வரிகள் என்னை மட்டுமல்ல பலரையும் கவர்ந்தவை:

"யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்"

"பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழியவிட்டு
தொலை தேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத் தோட்டம்."

கனவு இலங்கைச் சிறப்பிதழை வாசிக்க: https://noolaham.net/project/08/788/788.pdf


கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'வசந்த காலம் 1971

ரோகண விஜேவீராசுதந்திரமடைந்த இலங்கையில் தென்னிலங்கையில் நிகழ்ந்த முதல் புரட்சி 71இல் நடைபெற்ற ரோகண விஜேவீரா தலைமையிலான ஜேவியினரின் 'சேகுவேராப் புரட்சி' என்று  கூறப்பட்ட புரட்சி. புரட்சி தோல்வியில் முடிந்தாலும் முக்கியமானதொரு நிகழ்வு.  ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களைப் பலியெடுத்த புரட்சி. அப்புரட்சியின் குறியீடுகளிலொன்றாக நிற்பது  கதிர்காம அழகி மன்னம்பெரியின் மரணம். 2009இல் நடைபெற்ற யுத்தத்தின் குறீயீடுகளிலொன்றாக எவ்விதம் இசைப்பிரியாவின் மரணம் உள்ளதோ அத்தகையது மன்னம்பெரியாவின் மரணம். மன்னம்பெரியாவின் மரணத்துக்குப் பின்னர் நீதி கிடைத்தது. இசைப்பிரியாவின் மரணத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ஜேவியினரின் புரட்சி நடைபெற்ற காலத்தில் நான் எட்டாம் வகுப்பு  மாணவனாக யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். உடனடியாக விடுமுறை விட்டார்கள். நீண்டகால விடுமுறை. உடனடியாக வவுனியா திரும்பி விட்டேன். அப்பொழுது வவுனியாவில் வசித்துக் கொண்டிருந்தோம். முதன் முதலாக இராணுவத்தினரைச் சுழல் துப்பாக்கிகளுடன் கண்டது அப்போதுதான். யாழ் நகரசபை மைதானத்தில் வந்திறங்கும் இந்தியக் ஹெலிகாப்டர்களைப் பார்த்திருக்கின்றேன். அவற்றிலிருந்து மடுக்கந்தைப் பகுதியில் மறைந்திருந்த போராளிகள் மீது குண்டுகள் போடுவார்கள். காற்றினூடு அவ்வோசை கேட்பதுண்டு. நாம் எண்ணுவதுண்டு. நினைவிலுள்ளது. புரட்சி தோற்று, நாளுக்குநாள் சரணடையும் இளைஞர்களைப்பற்றிய விபரங்களைத் தாங்கிப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. வாசித்திருக்கின்றோம்.

அப்புரட்சியினைப்பற்றி கவிஞர் ஜெயபாலன் தனது வசந்த காலம் 71 கவிதையினைப் பகிர்ந்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அக்கவிதையில் வரும் பின்வரும் வரிகள் இலங்கைத் தமிழர்களின் ஆயுதபோராட்டக் காலகட்டத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தன:

"எனினும் இலங்கைத் தீவில்
சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும்
இளைஞர்கள் சில பேர் ஒருவரை ஒருவர்
இரகசியமாகத் தட்டி எழுப்பினர்.
நீண்ட நீண்ட இரவுகள் விழித்து
இருளில் தூங்கும் மக்களுக்காக
மலைகளை அகற்றும்
பரம ரகசியம் பேசிக் கொண்டனர்.
திடீரென அந்த வசந்த நாட்களில்
தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம்
குடியானவரைத் திடுக்கிட வைத்தது.
வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள்"

வசந்த காலம் 1971 (71, වසන්තය )  -  வ.ஐ.ச.ஜெயபாலன் -

காடுகள் பூத்தன,
குயில்கள் பாடின,
எந்த வசந்தமும் போலவே இனிதாய்
எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது.

*
இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
ஊர் ஊராக என்றும் போலவே
எந்த ஓரு பெரிய சவால்களுமின்றி
அதே அதே பெரிய குடும்ப ஆதிக்கம்
அந்த வசந்த நாளிலும் தொடர்ந்தது.
சேற்றில் உழல்வதை இயல்பாய்க் கொள்ளும்
எருமைகள் போலச் சொரணைகள் செத்த
விதியே என்னும் கிராமியப் பண்பை
அந்த வசந்த நாட்களில் புதிதாய்
எந்த ஓர் விசயமும் உடலுப்பிடவில்லை
எந்த வசந்த நாட்களும் போலவே
அந்த வசந்த நாட்களும் நடந்தன.

*
எனினும் எனினும் இலங்கைத் தீவில்
சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும்
இளைஞர்கள் சில பேர் ஒருவரை ஒருவர்
இரகசியமாகத் தட்டி எழுப்பினர்.
நீண்ட நீண்ட இரவுகள் விழித்து
இருளில் தூங்கும் மக்களுக்காக
மலைகளை அகற்றும்
பரம ரகசியம் பேசிக் கொண்டனர்.
திடீரென அந்த வசந்த நாட்களில்
தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம்
குடியானவரைத் திடுக்கிட வைத்தது.
வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள்,

*
இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும்
எத்தனை எத்தனை இள ஞாயிறுகள்
கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன.

*
குயில்கள் பாட
திருமண ஊர்வலம் போல வந்த
எழுபத் தொன்றின் வசந்த காலம்
ஆந்தைகள் அலற
மரண ஊர்வலமாகக் கழிந்தது.

*
எங்கள் கிராமங்கள்
மண்வளம் மிகுந்தவை
எதைப் புதைத்தாலும்
தோப்பாய் நிறையும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.