* பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10!

பேராசிரியர் கா.சிவத்தம்பியை நான்  முதன் முதலில் அறிந்துகொண்டது அவரது 'தமிழில் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' ஆய்வு நூல் மூலம்தான்.  தினகரன் வாரமஞ்சரியில்  அவர் எழுதி வெளியான கட்டுரைகளின் தொகுப்பே அந்நூல். தமிழ்ப்புத்தகாலய வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது. அவ்விதம் தமிழகத்தில் மேற்படி நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் என்பதை நூலுக்கான முன்னுரையில் பேராசிரியரே கூறியுள்ளார்.

இந்நூல் எனக்கு எவ்விதம் கிடைத்தது என்பதும் என் வாழ்வில் சுவையானதோர் அம்சம். ஏழாம் வகுப்பு மாணவனாக , மட்டக்களப்பில் நடந்த அகில இலங்கைத் தமிழ்த்தின விழாவில் கட்டுரை எழுத வவுனியா மகா வித்தியாலய மாணவனாகச் சென்றிருந்தேன். அதில் எனக்குக் கிடைத்த முதற் பரிசுக்காகக் கிடைத்த நூல்களிலொன்றுதான் மேற்படி நூல்.

அக்காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் எழுதிய பலரும் தவறாது பாவித்த நூல்களிலொன்று இந்த நூல்.

இதன் பின்னர் என் வாசிப்பின் வளர்ச்சியினூடு இவரது கட்டுரைகள், நூல்களை வாசித்து வந்துள்ளேன். இவரது அறிவாற்றலில் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் இவரது பிற்காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் இவரது நிலை தளும்பியதையும், சிலவற்றில் சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன். முழுமதிக்கறைகளாக அவற்றை நான் அணுகுவேன்.

இவரை நான் ஒரு தடவை நேரில் சந்தித்துள்ளேன். நண்பர் ஒருவருடன் எண்பதுகளின் ஆரம்பத்தில் 'நுட்பம்' சஞ்சிகைக்காகக் கட்டுரை பெறுவதற்காகச் சந்தித்துள்ளேன். கட்டுரை தருவதாக உறுதியளித்தார். அச்சமயம் பேராசிரியர் கைலாசபதியையும் சந்தித்தேன். அவரும் குறிப்பிட்டதொரு தினத்தில் தருவதாக உறுதியளித்ததுடன் அத்தினத்தையும் தனது குறிப்பேட்டில் எம் முன்னால் வைத்தே குறித்துக்கொண்டதையும் அவதானித்தேன். குறித்த தினத்தில் பேராசிரியர் கைலாசபதி கட்டுரையினைத்தந்தார். பேராசிரியர் சிவத்தம்பியின் கட்டுரை கிடைக்கவேயில்லை.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் புகழ்பெற்ற நாடகமான 'மதமாற்றம்' உண்மையில் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில் 1967இல் கொழும்பில் மேடையேறியபோதே பெரும் புகழடைந்தது. மூன்று தடவைகள் மேடையேறியது. ஆனால் அதே நாடகம் பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் சிவத்தம்பியின் இயக்கத்தில் 1962 காலகட்டத்தில் மேடையேறியபோது உரிய கவனத்தைப்பெறவில்லையென்பதையும் அறிகின்றேன். அதில் எழுத்தாளர் குலேந்திரனும் நடித்திருப்பதை அவரே ஒரு தடவை அறியத்தந்திருந்தார்.

உலகத்தமிழுலகம் நன்கறிந்த ஆளுமைகளில் ஒருவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி.  தமிழ்  இலக்கியத்திறனாய்வில் முக்கியமான ஆளுமைகளிலொருவர். அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினை வாசிக்க:  https://ta.wikipedia.org/s/2ri

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் - பேராசிரியர் கா.சிவத்தம்பி - https://noolaham.net/project/43/4208/4208.pdf

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.