கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொரோனா காலகட்டமாதலால் ஆரவாரமின்றி கடந்து சென்றிருக்கின்றது. திமுகவினர் ஆட்சியிலிருக்கும் இச்சமயத்தில் வழக்கமான சூழல் நிலவியிருக்குமென்றால் இடம்பெற்றிருக்கக் கூடிய ஆரவாரத்தை நினைத்துப்பார்க்க முடிகின்றது.

அரசியலுக்கு அப்பால் கலைஞரின் முக்கிய பங்களிப்புகளாக நான் கருதுவது தமிழ் இலக்கியப்பங்களிப்பு மற்றும் அவரது திரையுலகப்பங்களிப்பு. இலக்கியப்பங்களிப்பு என்னும்போது அவரது  ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கியரீதியிலான திட்டங்களையும் குறிப்பிடலாம்.

கன்னியாகுமரியில் அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை இன்று முக்கியமான நில அடையாளச் சின்னமாக மாறியிருக்கின்றது. அவரை எப்பொழுதும் அச்சிலை நினைவு கூர வைக்கும்.

என் பால்ய பருவத்தில் நான் கலைஞரை அறிந்துகொள்ள வைத்த படைப்புகளிலொன்று 'குமுதம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'ரோமாபுரிப்பாண்டியன்' சரித்திர நாவல். வாசிக்கத்தொடங்கியிருந்த என்னை மிகவும் கவர்ந்த மொழி நடையில் அமைந்திருந்த தொடர்நாவல். ராணிமுத்து  பிரசுரமாகவும் அவரது நாவலான 'வெள்ளிக்கிழமை' வெளியாகியிருந்தது. சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு மலரில் வெளியான அவரது 'பூம்புகார்' நாடகத்தையும் குறிப்பிடலாம்.  இவைதாம் கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்தின.  

சிலப்பதிகாரத்தைத் தனது எழுத்துகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றவர் கலைஞர். 'பூம்புகார்' திரைப்படம் முக்கியமான திரையுலகப்பங்களிப்பு. அவரது 'சங்கத்தமிழ்', 'தொல்காப்பியப்பூங்கா', குறளோவியம்' ஆகியவை முக்கியமான அவரது படைப்புகள். அவர் ஆட்சியில் அவரமைத்த வள்ளுவர் கோட்ட'மும் முக்கியமான பங்களிப்புகளிலொன்று.

ஐம்பதுகளில் தமிழ்த்திரையுலகில் கலைஞரின் வசனங்கள் கோலோச்சிக்கொண்டிருந்தன. அவரது அரசியல், கலையுலகப்பங்களிப்பு, இலக்கியப்பங்களிப்பு ஆகியவை சமகாலத்தில் ஒன்றுக்கொன்று துணைபுரியும் வகையில் அமைந்திருந்தன.
கலைஞரைப்பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை. அவர்கள் தம் எழுத்துகள் மூலம் , திரைப்படங்கள் மூலம், நாடகங்கள் மூலம் ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சியினை ஏற்படுத்தினார்கள்.

அவரது இளமைக்காலத்தில் அவர் பங்குபற்றிய 'கல்லடிப்போராட்டம்', 'இந்தி எதிர்ப்புப் போராட்டம்' ஆகியவையும் முக்கிய நிகழ்வுகள்.

அவரைப்பற்றிய விரிவான விளக்கங்களை விக்கிபீடியாக் கட்டுரை தருகின்றது. அதற்கான இணைய இணைப்பு: https://ta.wikipedia.org/s/iu

வேறு..

திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு கழிந்த நிலையில் நடைபெற்ற  உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு சென்னையில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மகாநாடு அதுவென்பேன்.  அதனையொட்டி மிகவும் சிறப்பாக மலரொன்றை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த மலர் என்னிடமிருந்தது. அப்பா வாங்கியிருந்தார். திறந்ததும் உள் அட்டையில் தாமரை மலர்கள் விரிவதுபோல் அமைந்திருக்கும் அழகான , கண்ணைக்கவரும் வடிவமைப்புடன் விளங்கியது. மலர்க்குழுவின் தலைவராக மா.முத்துசாமியும், மலர் அமைப்புக்குழுத்தலைவராக எம்ஜிஆருமிருந்தனர். மலரை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

இம்மலரில் கலைஞர் சிலப்பதிகாரத்தை மையமாகக்கொண்டு 'பூம்புகார்க் காட்சிகள்' என்னுமொரு நாடகத்தையும் எழுதியிருந்தார். அதனையும் மேற்படி மாநாட்டு  மலரில் வாசிக்கலாம். மாநாட்டு மலரை வாசிக்க: https://noolaham.net/project/119/11856/11856.pdf


எனக்குக் கலைஞரை அறிமுகப்படுத்திய கலைஞர் கருணாநிதியின் படைப்புகளில் ஒன்றான குமுதம் சஞ்சிகையில் அவர் எழுதிய 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடர்நாவல் சங்ககாலப்பாண்டியன் ஒருவனை வைத்து  அவனே ரோமாபுரியுடன் தொடர்பினை ஏற்படுத்திய பாண்டியன் என்னும் ஆய்வு முடிவினை ஆதாரமாக வைத்து அவர் எழுதிய நாவல்.

'ரோமாபுரிப்பாண்டியன்' கலைஞர் தொலைக்காட்சியில் 'சீரியலா'கவும் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=Vzr6ccY4CV8

இவரது 'தென்பாண்டிச்சிங்கம்' நாவலும் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=sm_f1I5uDoY
இவரது 'பொன்னர் சங்கர்' நாவல் நடிகர் பிரசாந்தின் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது. அதனைப்பார்க்க: https://www.youtube.com/watch?v=IC8alMz98Og