மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் யோ.புரட்சி அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்தார். பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் வே.ம.அருச்சுணன். அவரது படைப்புகள் பல 'பதிவுகள்' இதழில் வெளியாகியுள்ளன. சமுதாயப்பிரக்ஞை அவரது எழுத்துகளில் படர்ந்திருக்கும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்காய் அவை குரல்கொடுக்கும். மலேசியத் தமிழர்கள்தம் வரலாற்றை அவை பதிவு செய்யும், அவரது 'வேர் மறந்த தளிர்கள்' என்னும் நாவலும் பதிவுகள் இதழில் தொடராக வெளியாகியுள்ளது. அந்நாவலுக்கு முன்னுரையொன்றும் கேட்டு அனுப்பியிருந்தேன். நூல் வெளியானதா என்பது தெரியவில்லை. அவரது மறைவு பற்றிய மேலதிகத்தகவல்களைப் பெற இணையத்தில் தேடிப்பார்த்தேன். எவையும் அகப்படவில்லை. அருச்சுணனின் மறைவு பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த மலேசிய நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.  எனது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  அவரது மறைவு பற்றி எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவினைக் கீழே தருகின்றேன். அவரது மறைவால் வாடும் அனைவர்தம் துயரிலும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. தனிப்பட்டரீதியில் நானும் பங்குகொள்கின்றேன். 

எழுத்தாளர் யோ புரட்சியின் முகநூற் பதிவு:

"மலேசியா வே.ம.அருச்சுணன் அவர்கள் காலமான துயரச்சேதி. ('1000 கவிஞர்கள் கவிஞர்கள்' படைப்பாளி). நேரே கண்டதில்லை, உள்ளத்தால் தள்ளி இருந்ததில்லை. எமது பெயரைச் சொல்லிச்சொல்லி தினம் வாழ்த்துவார். எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெயரைச்சொல்லியும் வாழ்த்துவார். அவருக்கு இருந்த முக்கியமான ஆவல் '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலினை பார்த்துவிட என்பது. முகநூலில் வெளிப்படையாகவே இது பற்றி அடிக்கடி  எழுதியிருந்தார். அவரது தொலைபேசியூடாக தொடர்பு கிட்டிய பின்பு பெருநூலினை மலேசியா அனுப்பி இருந்தோம். அதனைப் பற்றி வலையொளியில்(யூ டியூப்பில்) பதிவு ஒன்றினையும் செய்திருந்தார். இந்த நூல்தான் அவருக்கும், எமக்கும் உறவுப்பாலமாகி நின்றது. குடும்பமாகச் சேர்ந்து அந்நூலினை கொண்டாடி இருந்தார். அந்தப் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார். குடும்பப் புகைப்படங்கள் வெளியே இட வேண்டாம் என்றார்.  அவரிடம் பெருநூல் சென்று சேர்ந்த திகதியான 23.02.2021இல் அவர் இந்தச் செய்தியை அனுப்பினார்.  வணக்கமும் வாழ்த்துகளும் யோ புரட்சி! தாங்கள் எனக்கு அன்புடன் அனுப்பி வைத்த '1000 கவிஞர்கள்' நூல் நேற்று 22.2.2021 திங்கள் மதியம் இனிதே கிடைக்கப் பெற்றேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் அயரா முயற்சியில் மலர்ந்த அந்த நூலின் பக்கங்களைப் புரட்டும் போது பரவசமடைந்தேன்! உங்கள் உழைப்பைக் கண்டு அதிசயப்பட்டேன்.வாழ்த்துகள். தங்களது சார்பில் எனது துணைவியார் அந்நூலை எனக்கு அன்புடன் பரிசாக வழங்கி வாழ்த்தினார். அந்நூல் குறித்து எனது எண்ணப்பதிவைத் தங்களுக்குப் பின்னர் அனுப்பி வைக்கிறேன். தாங்கள் சொன்னது போல் மனமுவந்து  நூலை அன்புடன் எனக்கு அனுப்பியமைக்கு மிக்க நன்றி. அன்புடன், கவிஞர் வே.ம.அருச்சுணன்,மலேசியா. 23.2.2021.
வே.ம.அருச்சுணன் அவர்களே! மாயமாக கரைந்துகொண்டிருக்கும் இந்தப் பூவலக வாழ்வில் வஞ்சகமின்றி எம்மை நேசித்த பண்பாளர்களில் தாங்கள் முக்கியமானவர். உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பும் சேர்ந்திருக்கும். உங்களோடு சில நிமிடங்களாவது பேச்சிலே உரையாடியமை மறக்கவியலா துளிகள். வருடக்கணக்காய் எழுத்தூடே இதயம் இணைந்திருந்தது. வே.ம.அருச்சுணன் அவர்களின் இழப்பினாலே துயருற்றிருக்கும் உறவுகளோடு எமது துயரினை பகிர்ந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்."

இவரது 'வேர் மறந்த தளிர்கள்' நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையின் இறுதியில் கூறியவற்றை இத்தருணத்தில் மீண்டுமிங்கு நினைவு கூர்கின்றேன்:

"இவ்விதமாக மலேசியத் தமிழர்களின் அரசியல் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் நாவலினை ஆசிரியர் தனது இலட்சிய வேட்கையினைப் பூர்த்தி செய்யும் வகையில் பாத்திரங்களை உருவாக்கிப் படைத்துள்ளார். பார்த்திபனின் தாயாரின் சித்தப்பா அறிவுமதி, அம்பிகையின் முதலாம் வகுப்பு ஆசிரியை திருமதி அழகம்மா, பட்டணத்தில் தனது சொந்த நிலத்தில் 'அன்பு இல்லம்' என்னும் அநாதை விடுதி நடாத்தும் ரீத்தா அம்மையார் ஆகிய பாத்திரங்களின் வாயிலாகத் தனது சமுதாய மேம்பாட்டுக்கான கருத்துகளை ஆசிரியர் முன்வைக்கின்றார். உதாரணமாகச் சித்தப்பா அறிவுமதி தனது சகோதரரின் புதல்வியான அம்பிகைக்கு கல்வி, தொடக்கம் சகல உதவிகளையும் வழங்கி உதவுகின்றார். நூல்களை வாங்கி எழுத்தாளர்களை ஆதரிக்கின்றார். ஆசிரியை அழகம்மாவோ சிறப்பாக, பொறுப்பாகக் கற்பித்து மாணவர்கள் தம்நிலையில் உயர உதவுகின்றார்.

இவற்றுடன் ஆசிரியர் இன்னுமொரு விடயத்தையும் பார்த்திபன் என்னும் பாத்திரத்திக்கு ஏற்பட்ட நிலையினூடு வெளிப்படுத்துவார். சந்தர்ப்ப சூழ்நிலையால் போதை மருந்துக்கு அடிமையாகிச் சிறைசென்று, மீண்டுவரும் பார்த்திபனை அவனது உறவினர்களே ஒதுக்குகின்றனர்.அது பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் 'ஒரு முறை எதிர்ப்பாராமல் செய்துவிட்ட தவற்றுக்கு மன்னிப்பே கிடையாதா? மனிதன் திருந்துவதற்கு வாய்பே தராத மனிதர்கள் என்ன மனிதர்கள்? சந்தர்ப்பச் சுழ்நிலை ஒரு நல்ல மனிதனையும் கெட்டவனாக்கிவிடலாம் அல்லவா?' என்று கேள்வி எழுப்புவார்.

முன்பே குறிப்பிட்டதுபோல் நூலாசிரியர் மேற்படி 'வேர் மறந்த தளிர்கள்' நாவலினைத் தனது சமுதாய முன்னேற்றத்துக்குரியதொரு சாதனாமாகவே படைத்துள்ளார். தனது கருத்தான மலேசியத் தமிழர்களின் முன்னேற்றத்தை வலியுறுத்துவதற்காக இந்நாவலை ஆசிரியர் படைத்துள்ளார். அதே சமயம் மலேசியத் தமிழர்களின் அரசியல் வரலாற்றுத் தகவல்களையும் நாவல் வெளிப்படுத்திக் கேள்விகள் எழுப்பும்வகையில் கதைப்பின்னலை, மிகவும் சரளமானதொரு நடையில் அமைத்துள்ள ஆசிரியரின் முயற்சி வெற்றியளித்துள்ளதென்பதையே நாவலை வாசித்து முடிக்கும் சமயத்தில் உணரமுடிகின்றது. அத்துடன் மலேசியத் தமிழர்கள் பற்றிய நல்லதொரு புரிதலையும் நாவல் ஏற்படுத்துகிறது. ஆவணமாகவும் விளங்குகின்றது. இவ்விதமாகக் கூறும் பொருளின் அடிப்படையில் நாவல் முக்கியத்துவமுள்ளதாகவிருக்கிறது."


எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'பதிவுகள்' இதழில் வெளியான கவிதைகள் சிலவற்றை அவரது நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்:

1. கவிதை: வெளிநாட்டார் நாடாளுமன்றம்! -  வே.ம.அருச்சுணன் -  மலேசியா  

இன்றைய  நடப்புகள்
நாளைய வரலாறு அல்லவா
மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
வியப்பில் நிழலாடுகின்றன சில
செவிகளுக்குத் தேனாகவும் பல
குளவிகளாய் காதில் புதுமனைப் புகுவிழாவை
விமரிசையாகவும் நடத்துகின்றன..........!
 
அருவியாய்த் தவழ்ந்த பூமி
அன்னியரின் படையெடுப்பால்
தடமாறிப் போனதேனோ......?
 
மூவினமும் சேர்ந்த பெற்ற
சுதந்திரத்தை நடுவீதியில்
தாரைவார்த்தல் முறையா……?
 
மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
வானுர்ந்த சொகுசு வாழ்வு
சீனருக்குத் தனிவழி
எதிலும் போதாதென்ற சுயநலப்போக்கு
தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்தானா ?
 
என்ன கொடுமை இது
பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா......?
 
ஆதியிலே வந்தகுடி
காட்டையும் மேட்டையும் அழித்து
தன்னையும் இலட்சம் இலட்சமாய்
அழித்துக் கொண்ட  தமிழனுக்குத் திருவோடு
நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு........!
 
கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை இன்னும்
கணக்கில்லா கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி
வியாபாரம் தூள்பறக்குது
வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
தட்டிக்கேட்க ஆளில்லை
தமிழனுக்கோ நாதியில்லை.........!
 
வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
ஜாமினில் எடுக்க
கர்பாலுக்கு அவசர அழைப்பு
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
குலசேகரன் தலைமையில்
பலம் பொருந்தியக் குழுவமைப்பு.....!
 
வெளிநாட்டார் தர்பார்
விரைவில் முடியட்டும் நாட்டில்
மூவினத்தின் மாண்பு  நாடெல்லாம்
மீண்டும் ஜொலிக்கட்டும் ஒன்றுபட்ட
மலேசியர்கள் நாமென்றே கைகோர்த்திடுவோம்
அயல்நாட்டார் நம்மை வாழ்த்தி விடை பெறட்டும்
தன்மானச் சிங்கங்களாய்த் தமிழர்வாழ்வு
மறுபடியும் ஓங்கி வளரட்டும்...........!
 
வெளிநாட்டார் நாட்டாமைக்கு எதிராக
'நம்பிக்கை வை' பிரதமரின் முதல்
ஓட்டு தவறாமல் விழட்டும் நாட்டில்
தமிழர்  வாழ்வு சிறக்கட்டும்......!
 
பதிவுகள் -ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

2. அரசியல் கொக்குகள்  - வே.ம.அருச்சுணன் – மலேசியா -

அழகிய நாடு
அற்புத வளங்கள்
கல்வி குறைவென்றாலும்
அறிவான மக்கள்                                                        
பேதம் அறியா
அன்பு தெய்வங்கள்
மாறா குணங்கள்
அமைதியான வாழ்க்கை
பொது நலம்
கடந்து நூற்றாண்டில்……!
 
புதிய மனிதர்கள்
விநோத சிந்தனைகள்
சுய கௌரவம்
பொது வாழ்வில்
சுரங்கம் அமைத்து
நாட்டை  மறந்து
வீட்டை  வளர்க்க
சித்து விளையாட்டு
சுயநலம்
இந்த நூற்றாண்டில்......!
மகாத்மாக்கள்
சென்ற நூற்றாண்டு முதலே
பயணித்துவிட்டார்கள்......!
 
இன்று,
அரசியல் வானில்
அநீதிகளுக்கு மகுடம்
அறப்போர்
ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது
அடாவடிகள்
தலையெடுப்பால்
நதிகள் நாசமாயின
நீர்வாழ் அழிந்தன.......!
 
பொய்யான
அரசியல் சுனாமியால்
மக்கள் சிரச்சேதம்
கூடி வாழ்ந்த மூவினம்      
மண்ணாகியது
வம்பும் வழக்கும்
தொடராகின.....!
 
நாட்டின் அமைதி
அவர்கள் விரும்பாதது
கலங்கி குட்டையில்
மீன் பிடிக்கும்
அரசியல் கொக்குகள்......!
மக்களை
மாக்களாக்கும்
அரசியலாரிடம் எச்சரிக்கை
துஸ்டனைக் கண்டால் தூரவிலகு
பெரியோர் சொன்னது தப்பாகா......!
 
நாட்டு நலம்
முன்னெடுத்து
சபதம் எடுத்திடு
மக்கள்
அரசியலாரிடமிருந்து
நாட்டைக் காக்திடு......!
 
நாடு
இடுகாடாய் மாறு முன்னே
சுதந்திரத்தைக் காத்திடு
சிம்மாசனத்தில் அமர்ந்து
எக்காளமிடும் அரசியலார்
திமிரினை அடியோடு
வீழ்த்திடுவீர்......!
 
நாட்டைக் காக்கும்
வீரத்திருமகனே
நாளைய பொழுது
நலமாய் இருக்கட்டும்
வெற்றிமுரசு வேகமாய் ஒலிக்கட்டும்………!

பதிவுகள் கவிதைகள்_யூன்2013

3. கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை ( 25.6.2014):  மனிதம் வாழ்விக்க வந்தவனே!  - வே.ம.அருச்சுணன்,  மலேசியா -

இந்த யுகத்தில்
நீ  வாழ்ந்ததில்
பெருமையும் பேறும் பெற்றது
உலகம்...........!

பிறவிக்கவிஞனே
உன் அருட்கொடையால்
உலகம் வாழ்ந்தது
மனிதம் உச்சத்தில் கோலாட்சி செய்தது.........!

உன் அமர காவியங்களால்
தமிழின் பெருமை
விண்ணை முத்தமிட்டது
உன் கவிதை வரிகள்
மனிதரின் வாழ்வை நீட்டியது
கயவனைப் புத்தனாக்கியது.........!

களவையும் கற்று மறந்தவன் நீ
கபோதிகளுக்கு
வழுக்கும் சேற்றில் ஊன்றுகோல்
தந்தவன் நீ
தாயை மறந்தாலும்
உன் தர்மத்தை இகழ்ந்திட
யாரும் முயன்றதில்லை

உடைந்துபோன மனங்களுக்கு
மருந்தானது உன் பேச்சு
வறியவர் வாழ்வை வசப்பட வைத்தாய்
வாழும் கலைகளை அள்ளித்தந்தாய்
குன்றி வாழ்ந்தோர்
செழித்தே வாழ்ந்தார்..........!
உன் சொல்லால்
வாழ்ந்தவர் பலகோடி
இது மிகையில்லை உண்மை
என்றும் மறைவதில்லை.........!

மனிதனாகப் பிறந்து
மக்கள் மனங்களில்
வணங்கும் தெய்வமானாய் அது
கண்ணன் காட்டிய வழி..........!
உலகம் அழியுமட்டும்
தமிழர்களின் மனங்களில் நீ
சிம்மாசனமிட்டே கர்சனை செய்வாய்
மக்கள் நலம்  மீண்டிட
தமிழர் இனம் உயர்தல் வேண்டி நீ
மீண்டும் பிறக்க வேண்டும்
கண்ணதாசனே வாழ்க நீ
பல்லாண்டு..........!


அவர் பதிவுகள் இதழில் எழுதிய 'வேர் மறந்த தளிர்கள்' தொடர் நாவலைப் பதிவுகள் இதழின் நாவற் பிரிவில் வாசிக்கலாம்: https://www.geotamil.com/index.php/2021-02-14-03-00-53
அந்நாவலுக்கு நான் எழுதுய முன்னுரையினை வாசிக்க: https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/1447-2013-04-10-23-07-58